Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, August 25, 2015

இரவெனும் கடல்

எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயிவன்
எவன்கொல் வாழி தோழி 
கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே



இந்த சங்க பாடல் குறிப்பிடும் நிலைக்கு நேரெதிரான உணர்வை அடைந்திருக்கிறேன். பலரும் அடைந்திருக்கலாம், இரவு கரைகிறேதே என்று ஏங்க வைத்திருக்கிறது. பகல் - அதை நான் வெறுக்கிறேன். எங்கும் இடம். எதை வைத்து அடைப்பது இந்த இடங்களை. எவ்வளவு நிறைத்தாலும் நிறைவதில்லை. இங்கு என் முன்னே எத்தனையோ தோன்றி நிற்கின்றன. எத்தனை குழப்பங்கள் எத்தனை தடுமாற்றங்கள் எத்தனை பாவனைகள்.

ஆனால் இரவு அப்படி அல்ல. இரவெனும் இருள் பொங்கி வழியும் கடல். இருள் - அது அமிர்தமல்லவா. என்னை மூழ்கடித்து அனைத்து கொள்கிறது. எங்கும் எதுவும் இல்லை. நானே. நான் மட்டுமே. அனைத்தும் நானே. என் எண்ணங்களால் மட்டுமான நான். என் அகமே அனைத்தும். எத்தனை நிறைவு. என் அகம் விஸ்வருபம் எடுத்து எங்கும் பரவியிருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு சிறு கணத்தில் இந்த பெருங்கடல் வற்றி பாலையாகிறது. பாலையில் விழுந்த மீனாய் துடிக்கிறேன். அந்த கடலில் இரு கைபிடி இருளை எடுத்து வைத்துகொள்ள முடியாதா? என் கண்களில் நான் விரும்பும் போது வைத்துகொள்ள.

ஒருவேளை இரவில் நம் அகமே அனைத்தும் ஆவதால் அகத்தில் ஊற்றெடுப்பது நம்மை அழுத்திவிடுகிறது. பகலில் நம் அகம் ஒரு சிறு பறவை என அங்கங்கு பறந்து கொண்டிருக்கிறது. 'சூ' என்று விரட்டிவிட்டு நம் வேலையை பார்க்கக முடிகிறது. ஆனால் இருளில் அதுவே பெருங்கடலாகி நம்மை மூழ்கடிக்கிறது. அதில் ஏற்படும் ஒரு சிறு சலனம் இரவில் பேரலையாய் நம்மை அழுத்திவிடுகிறது. அதில் கசியும் விஷம் பெரும் ஊற்றென பொங்கி பாய்ந்து கடலையே நஞ்சாக்கிவிடுகிறது.

Tuesday, August 18, 2015

சங்க இலக்கியத் தாவரங்கள்

கவிதையில் கூறப்படும் உவமைகளின் இயல்புகளை வைத்துதான் அந்த கவிதையின் அனுபவத்தை நாம் அடைய முடியும் என்பது நான் சமீபமாக அறிந்து கொண்டது. உதாரணத்துக்கு மேலே சித்தார்த் கொடுத்த கவிதையில் குவளை மலரையும் அதன் இயல்புகளும் ஓரளவுக்கு தெரிந்தால் தான் அந்த கவிதையை உள்வாங்க முடியும். சங்க இலக்கியம் பற்றிய ஜெவின் உரையில் இதை சொல்லியிருப்பார்.

அதனால் சங்கபாடல்களில் சொல்லப்படும் மலர்கள் தாவரங்கள் ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வது அந்த பாடலை உள்வாங்குவது உதவியாக இருக்கும். 'சங்க இலக்கியத் தாவரங்கள்' என்ற இந்த புத்தகம் அந்த வகையில் முக்கியமாகிறது.

https://archive.org/details/SangaIlakkiyaThavarangal

இந்த புத்தகத்தை பற்றி நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரை.

Thursday, September 18, 2014

ஒளியின் இருள்



ஒளியின் இருள்

என் வீட்டின் கூரையில்
ஒரு சிலந்தி வலையின் அறுந்த கீற்று
காற்றை குறிகாட்டி அசைந்தாடுகிறது
ஆனால் அன்றொரு நாள்,

விளக்கினொளி வீடு முழுதும் பரவியிருந்தது
அந்த கீற்றுக்கு பின்னால் விழும் நிழலை
இந்த ஒளி வெள்ளம் கரைத்துவிட்டது
இருப்பினும் அந்த கீற்றுக்கு பின்னால் ஒரு நுண்ணிய நிழல்.

இருளாலான அந்த நிழல்
ஒளி வெள்ளத்தில் மிதக்கும் ஓர் இருள் தீவு
அந்த தீவில் கிடந்தது ஒரு நீண்ட முள்
அதுவரை அதிர்ஷ்டத்தால் தப்பிய நான்
அன்று அதை ஏற்றி கொண்டேன் என் உடலில்.

இருளை மறைக்கும் இருள் கொண்டது ஒளி
ஒளி ஏதோ ஒன்றின் மேல் பூசப்பட்ட ஒரு பொய் பூச்சு
ஒளி மறைக்கும் வெளி ஒன்று உள்ளது
அதை எப்படி பார்ப்பது?

*******************************************************************

Thursday, August 28, 2014

தண்டவாளம்

தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் (Tomas Tranströmer) கவிதை ஒன்று,

தன்டவாளம் (Tracks)

இரவு 2 மணி, ரயில் ஒரு வயக்காட்டில் நின்றது
தொலைவில் ஒரு சிறு நகரத்தில் இருந்து ஒளி பொறிகள்,
வின் விளிம்பில் உணர்வின்றி சிதறுகிறது.

ஒரு மனிதன் கனவின் ஆழத்திற்கு செல்லும் போது
அவன் அங்கு இருந்தது,
அவன் அறைக்கு அவன் மீன்டும் திரும்பும் போது நினைவிருக்காது.

அல்லது ஒரு நபர் நோயின் ஆழத்திற்கு செல்லும் போது
அவனது எல்லா நாட்களும் சிதறும் பொறிகளாய், பறவை கூட்டமாய்
வலுவிழந்து, உனர்வற்றதாய் மாறிவிடுகிறது.

ரயில் முற்றிலும் நகர்வற்று போயிற்று
இரன்டு மணி, திடமான நிலவு, சில நட்சத்திரங்கள்.


இந்த கவிதை ரயில் பயனத்தை ஒரு படிமமாக வைக்கிறது. 

ஒரு வயலில் நின்று விட்ட ரயிலில் இருந்து தொலைவில் தெரியும் ஒரு காட்சி, ஓளி சிதறல்கள், என்று கவிதை தொடங்குகிறது. அந்த ஒளி சிதறல்கள் உணர்வின்றி சிதறுகிறது என்கிறார். ஒளிக்கு உணர்வு உண்டா என்ன? ஒளியின் உணர்வு அது பிரதிபலிக்கும் மனிதனின் மனதில் உண்டாவது. ஒரு வாண வேடிக்கை கண்டால் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் ஒரு ஆனந்தம், ஒரு ஆச்சரியம் எழும். அதுவே அந்த ஒளியின் உணர்வு. ஆனால் இங்கு உணர்வில்லா ஒளி, அந்த ஒளி பயணியின் உள்ளத்தையே பிரதிபலிக்கிறது. எப்படி அந்த ஒளி சிதறல் பயணியின் உள்ளத்தில் எந்த ஒரு உணர்வையும் தோற்றுவிக்கவில்லை என்று காட்டுகிறது. ஏதோ துயரத்தில், இக்கட்டில் ஆழ்ந்த ஒரு பயணி. அதே சமயம் அதே காட்சியை வேறு ஒரு மூலையில் இருந்து பார்க்கும் ஒருவனுக்கு அது உவகையை அளித்திருக்கும். மகிழ்ச்சி தான் எத்தனை சார்ப்புடையது. அது எதை சார்ந்திருக்கிறது?

கனவில் ஆழ்ந்த ஒருவன் கனவில் இருந்து வெளிவந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் போது, அந்த கனவு நினைவில் இருக்கபோவதில்லை. கனவு - அதை வெறுப்பவர்கள் யாராவது இருக்கமுடியுமா? நம் உன்மை வாழ்க்கையில் கனவு காண்பதன் மூலம் தான் எத்தனை உவகை கொள்கிறோம். அகத்தளத்தில் நாமே நம்மை நிகழ்த்தி கொள்ளும் ஒரு வாழ்க்கை, ஒரு சில மனி துளிகளில் தொடங்கி முடியும் ஒரு வாழ்க்கை. அந்த வாழ்க்கை முடிந்தவுடன் ஒரு பெருமூச்சுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம். அந்த கனவளித்த மகிழ்ச்சியை நம் அன்றாட உலைச்சல்கள் மூழ்கடித்துவிடும்.

நோயில் மூழ்கிய ஒருவனுக்கு தன் மொத்த வாழ்நாளும் ஒரு கனவாய் தான் தெரியும். மகிழ்ச்சியான ஒரு நினைவு, ஆனால் அது இந்த தருணத்தின் வேதனையில் பொருளிழந்தது, வலுவிழந்தது, உணர்விழந்தது. மிஞ்சினால் ஒரு சோர்ந்த புன்னகையை எழுப்ப கூடியது. நமது மகிழ்ச்சி ஒரு தருணத்தில் நாம் வாழும் சூழ்நிலைக்குட்பட்டது. அந்த சூழ்நிலைகள் நமது வாழ்க்கை பயணத்தில் காணும் காட்சிகள். நமது பயணமோ ரயில் வண்டியில், தண்டவாளங்களுக்கு உட்பட்டது. ஆனால் தண்டவாளங்களை தாண்டியும் நம் கனவுகள் ஓட கூடியது. அது கனவு மட்டுமே. அதை ஏற்பத்தும் மறுப்பதும் இந்த சிறைப்பட்ட பயணியே.

Friday, June 13, 2014

கவிதை வாசிப்பு

கவிதை வாசிப்பு குறித்த என் கேள்விக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் பதில். படிமம், கவிதையின் மொழி குறித்த எனது ஐயத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

Thursday, May 8, 2014

இரு பறவைகள்




அடுக்காக அடுக்காக வாகனங்கள்,
நிமிடத்திற்கு பத்து பேர் உள்ளும் வெளியும் செல்கிறார்கள்,
அந்த பெருங்கடைக்குள்.

வாசனை திரவியம், ஆடை, அழகு சாதனங்கள்
மின்னனு உபகரனங்கள், தீனி, என இதர பல பொருட்களும்
அந்த பெருங்கடையில் விற்கிறார்கள்.

அழகு முகமூடியுடன் பெண்களும்,
போர்த்திய கம்பிரத்துடன் ஆண்களும்.
கையில் பொருட் பையும்,
முகத்தில் புன்னகையுடனும் நடந்து கொன்டிருக்கிறார்கள்.

வானில் அந்த இரு பறவைகள், பத்து நிமிடமாய்
ஒரே இடத்தில் சுற்றி சுற்றி பறந்து கொன்டிருக்கிறது.