Wednesday, December 23, 2015

பரதநாட்டியம் - ஒரு சிறு விவாதம்


சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் பல தரப்பட்ட நாட்டிய கலைகளை எடுத்து பார்த்து கொண்டிருந்தேன். பரதம், கதக், ஒடிசி, குச்சுபுடி என்று பல நாட்டியங்களையும் எடுத்துபார்த்தேன். எல்லாமே வியக்க வைத்தது.

கதக்கில் சுழன்று சுழன்று ஆடும் முறை மைக்கல் ஜாக்சனின் சுழற்சிக்கு நிகரானது. ஒடிசியில் பார்த்த சில ஸ்டெப்புகளை மைக்கல் ஜாக்ஸன் போட பார்த்திருக்கிறேன்(MJவின் தீவர ரசிகன்). இப்படி பல ஸ்டெப்புகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. பரதமும் மிக கவர்ந்தது. இந்திய நாட்டியத்திலேயே பரதம் மிக கடிணமானது என்று கலை விமர்சகர் வெங்கட் சாமிநாதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் சொல்லியிருப்பார்.

இங்கு பரதத்தின் இரு கலைஞர்களின் நடன வீடியோவை கொடுத்திருக்கிறேன். பத்மா சுப்ரமணியம் மற்றும் ஜானகி ரங்கராஜன். இதில் நான் காணும் வித்தியாசம்  இது தான். பத்மா சுப்ரமணியம் உச்சமான பரதநாட்டிய கலைஞர் என்று கூறுகிறார்கள். அவரது இந்த வீடியோவிலிருக்கும் நடனத்தில் அடவுகள் நெளிவுகள் வேகம் எல்லாம் கச்சிதமாக இருக்கிறது. ஆனால் அவரது நடனத்தில் ஏதோ ஒன்று என்னை கவரவில்லை.





அது நளினம் இல்லாத தன்மையா? அல்லது அவரது உடல் வாகு நடனத்துக்கு ஏற்றவாறு இல்லையா என்று தெரியவில்லை. உடல் அமைப்பு என்பது நடனத்துக்கு மிக முக்கியமானது, இலக்கியத்திற்கு மொழி போல. மேலும் அவரது முக பாவங்களில் ஒரு சிரிப்பூட்டும் தன்மை தெரிகிறது. ஆனால் பாரம்பரிய நடன கலைகளை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆரம்ப நிலை ரசிகன். எனக்கு தெரியாத ஏதோ ஒரு அம்சம் அவரது நடனத்தில் இருக்கலாம் அதனால் அவர் பெரும் கலைஞராக அறியப்படலாம்.  பரதநாட்டியத்தை ரசிக்க தெரிந்தவர்கள் எனக்கு கொஞ்சம் விளக்க முடிந்தால் நன்று.

ஆனால் எனக்கு பரதநாட்டியத்தை ரசிக்கவே தெரியாது என்று சொல்ல முடியாது. நடனத்தை குறித்து ஒரு அடிப்படை ரசனை எனக்கிருக்கிறது. இரண்டாவது வீடியோவிலிருக்கும் ஜானகி ரங்கராஜனின் நடனம் என்னை மிக கவர்ந்தது. அவரது நடனத்தின் கச்சிதம், அற்புதமான நெளிவுகள், நேர்த்தி, பாவங்கள் அனைத்தும் வியக்க செய்கிறது. அரை மன்டி நிலையில் கையை விரித்து ஆடும் போது மயில் போல தெரிகிறார். இவர் பத்மா சுப்ரமணியத்தின் மானவி தான். இருந்தாலும் நிறைய வேறுபாடு தெரிகிறது.



இதை ஒரு நண்பருடன் இணையம் வழியாக விவாதித்த போது அவர் பரத நாட்டியத்தில் பல்வேறு நடன பாணிகள் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.  நடன பள்ளிகளுக்கு ஏற்றவாறு பாணிகள் வேறுபடுகிறது. பந்தநல்லார் பாணி, வழுவுர் பாணி, கலாக்ஷேத்ரா பாணி போன்றவைகளை அறிமுகம் செய்தார்.

மேலும் நண்பர் பல விஷயங்களை சொன்னார். பத்மா சுப்ரமணியம் அவர்கள் இங்கு முயன்றிருப்பது கோயில் சிற்பங்களில் இருக்கும் கரணங்களை நடனத்தில் மீளுருவாக்கம் செய்வது. இதே ஒரு முக்கிய முன்னேடுப்பு. நாம் இழந்துவிட்ட பல நடன கரணங்களை சிற்பங்களின் உதவியோடும் நாட்டிய சாஸ்திர நூல்களின் உதவியோடும் அவர் மீட்டெடுத்திருப்பது பெரு உதவியே. இந்த வீடியோவிலும் அவர் கரணங்களையே ஆடிக்காட்டுகிறார். அந்த ஆடல் முறையை அவர் பரத நிர்த்யம் என்று குறிப்பிடுகிறார் என்றார்.

ஆனால் ஜானகி செய்வது முழு மேடை நாட்டியம் - வந்தனம், வர்ணம், பதம், தில்லானா என்று பல பாகங்களை உள்ளடக்கிய ஒட்டு மொத்த நடன நிகழ்வு. அதை மார்க்கம் என்று அழைப்பார்கள் என்றார்.

இருப்பினும் நான் நண்பருக்கு இதை எழுதினேன்.

ஆனால் நான் சுட்டிக்காட்டுவது இருவரின் உடல் மொழியை பாருங்கள். ஜானகியிடம் தெரியும் அந்த நலினம் பத்மாவிடம் தெரியவில்லை எனக்கு. வெடுக் வெடுக் என்று ஒடித்துவிடுகிறார். பத்மாவின் கால்கள், இடை, torsoவின் அசைவுகளை பாருங்கள். அதில் ஒரு வேகம் தெரிகிறதே தவிர அழகு அவ்வளவாக தெரியவில்லை.

ஜானகியின் 5:28வது நிமிடத்தில் வரும் நடனத்தை பாருங்கள்.  அவரின் நடனத்திலேயே அது உச்சமான வெளிப்பாடாக இருக்கிறது. அதிலிருந்து வெளிவரமுடியவில்லை. பத்து பதினைந்து முறை திரும்ப திரும்ப பார்த்தேன். அதே இடை நெளிவு பத்மாவின் நடனத்திலும் இருக்கிறது. ஆனால் இருவரும் அதை செய்யும் விதத்திலிருக்கும் வித்தியாசத்தை தான் நான் சுட்டிகாட்டுகிறேன். ஜானகியிடம் இருக்கும் நலினமும், உடலமைதியும், கச்சிதமான செய்கையும் பத்மாவிடம்  இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் பத்மாவின் கரணங்கள் பல புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது.

நண்பர் மேலும் விளக்கினார்.

பத்மா அவர்கள் தன் நாட்டியத்தில் நாட்டியதர்மி ஆடல்முறையையும் லோகதர்மி ஆடல்முறையையும் கலந்து பயன்படுத்துகிறார். நாட்டியதர்மி ஆடல் முறையில் அபிநயங்கள் தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு வருவதனால் நன்கு மெருகேறி காட்சியளிக்கிறது. அந்த மெருக்கேற்றளையே நாம் நளினம் என்கிறோம். ஆனால் கரணங்கள் ஆடல்களை மீளுருவாக்கம் செய்வதால் அதில் அந்த நளினம் கைகூடுவதில்லை என்றார்.

ஆனால் எனக்கு நளினம் என்பது ஆடுபவரின் தனிப்பட்ட திறமை தான் என்று தோன்றியது.

****

நடன பாணிகளை பற்றி வெங்கட் சாமிநாதன்.

//உதாரணமாக, பரதத்தில் பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பரதம் சமரசம் ஏதும் இல்லாத பழமையின் இறுக்கமும் விதிகளின் பிடி வழுவாது கற்பிக்கப்படும் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. இதற்கு மாறாக, வழுவூர் பரம்பரையில் வரும் பரதம் சற்று நெகிழ்வுகளுக்கு இடம் கொடுத்து அலையோடும் இழையாக, இசையின் பாவங்களும் உணர்ச்சி வெளிப் பாடுகளும் கொண்டதாக, சொல்லப் படுகிறது. இந்த நெகிழ்வுகளின் காரணமாகவே அது, பந்தநல்லூர் மரபைப் பார்க்க அதிக வரவேற்பும் கவர்ச்சியும் கொண்டதாக கருதப்படுகிறது. ஆனால், இந்த நெகிழ்வும் உணர்ச்சி பாவங்களும், அவ்வளவாக கலைமனம் ஆழம் அற்றோர் வசத்தில், அது ஒரு கேளிக்கையாக, பொழுது போக்குக்கான ஒன்றாக மாறிவிடக்கூடும். குறிப்பாக, ஆடப்படும் பாட்டு சிருங்காரத்தையும் லாஸ்யத்தையும் வெளிப்பாட்டில் முதன்மையாகக் கொள்ளும் ஒன்றாக இருக்குமானால். அது அழகும் கம்பீரமும் கொண்ட செவ்வியல் குணங்களை இழந்து நிற்கும். இது போலவே, பந்த நல்லூர் பத்ததியிலும், அவ்வளவாக கலைஉணர்வு அற்றோர் வசத்தில் அந்த பரதம் இறுக்கம் கொண்டதாக, விதிகளை, இலக்கணங்கள்மீறி எழும் கலையாக மாறும் திறனற்றுப் போகும். இதை அங்க சுத்தி என்று பெரிய வார்த்தைகளில் சொல்லி நியாயப் படுத்தக் கூடும்//

http://solvanam.com/?p=35907

No comments:

Post a Comment