Thursday, September 18, 2014

ஒளியின் இருள்



ஒளியின் இருள்

என் வீட்டின் கூரையில்
ஒரு சிலந்தி வலையின் அறுந்த கீற்று
காற்றை குறிகாட்டி அசைந்தாடுகிறது
ஆனால் அன்றொரு நாள்,

விளக்கினொளி வீடு முழுதும் பரவியிருந்தது
அந்த கீற்றுக்கு பின்னால் விழும் நிழலை
இந்த ஒளி வெள்ளம் கரைத்துவிட்டது
இருப்பினும் அந்த கீற்றுக்கு பின்னால் ஒரு நுண்ணிய நிழல்.

இருளாலான அந்த நிழல்
ஒளி வெள்ளத்தில் மிதக்கும் ஓர் இருள் தீவு
அந்த தீவில் கிடந்தது ஒரு நீண்ட முள்
அதுவரை அதிர்ஷ்டத்தால் தப்பிய நான்
அன்று அதை ஏற்றி கொண்டேன் என் உடலில்.

இருளை மறைக்கும் இருள் கொண்டது ஒளி
ஒளி ஏதோ ஒன்றின் மேல் பூசப்பட்ட ஒரு பொய் பூச்சு
ஒளி மறைக்கும் வெளி ஒன்று உள்ளது
அதை எப்படி பார்ப்பது?

*******************************************************************

Tuesday, September 16, 2014

தேவைக்கு மீறிய அறிவியல் வளர்ச்சி

சில நாட்களுக்கு முன்னால் மின்சாரத்தின் கண்டுபிடிப்பு பற்றி ஒரு பிபிசி டாக்குமெண்டரி யூட்யூபில் பார்த்தேன். அது படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு துறை. அதை பார்த்து முடித்து சில நாட்கள் கழித்து இந்த எண்ணம் தோன்றியது.

"Neccesity is the mother of invention" என்பது உண்மையின் ஒரு பகுதி மட்டுமே. இன்று நாம் புழங்கும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எல்லாம் தேவையின் அடிப்படையில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. அதை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

தேவை, கனவு, ஆர்வம். தேவைக்கு உதாரணமாக அனைத்து விதமான வாகனங்களையும் சொல்லலாம், காலம் காலமாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு துறை. கனவிற்கு உதாரணமாக விமானத்தை சொல்லலாம், இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இது தேவையே இல்லாதது. மோட்டார் வாகனங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் புழக்கத்தில் வர ஆரம்பித்தது, அந்த வாகனங்களின் ஆச்சரியத்தில் இருந்து மக்கள் வெளிவருவதற்கு முன்னரே பறக்கும் வாகனம் காலத்தை மீறிய கண்டுபிடிப்பு, முற்றிலும் கனவினால் உந்தப்பட்டது. ஆர்வத்திற்கு உதாரணமாக மின்சாரம், அணு அறிவியல் ஆகியவற்றை சொல்லலாம். இயற்கையில் நாம் காணும் ஒரு வெளிப்பாடு ஏன் இப்படி நடக்கிறது என்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டு கண்டுபிடிக்கபட்டவை. இந்த ஆர்வத்தின் காரணமாக தான் இன்று நாம் உபயோகிக்கும் அனைத்து அதி நவீன தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்திருக்கிறோம்.

மனிதன் தன் தேவைக்கு வேண்டிய கண்டுபிடிப்புகளை எப்போதோ கண்டுபிடித்தாகிவிட்டது என்றே நினைக்கிறேன். சராசரி மனிதனுக்கு இன்றிருக்கும் வசதிகள் மிக மிக அதிகம். இபோலா போன்ற விஷயங்கள் திடீர் தேவையை உண்டு செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இன்று அறிவியலும், விஞ்ஞான சமுகமும் மனித தேவைக்கு அதிகமான விஷயங்களை உருவாக்கவே பெரும்பாலும் உதவி வருகின்றன. இன்று தேவைகள் பல விதமான உத்திகளால் நம் மீது தினிக்கப்படுகிறது. எந்த விதமான எல்லையும் இல்லாமல் கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அவை நடக்கும் தோறும் செயற்கையை நாடி இயற்கையை அழிக்கிறோம்.

அறிவியல் இன்று முதலாளித்துவத்தின் மற்றும் அரசாங்கங்களின் கருவியாக மாறிவிட்டது. போட்டி போட்டு கொண்டு எந்த வித அற உணர்வும் இன்றி அதை பயன்படுத்துகிறார்கள். விஞ்ஞானிகள் இந்த அமைப்புகள் ஆட்டி வைக்கும் பொம்மைகளாக மாறிவிட்டனர். அவர்களின் அறிதலின் சுகமும், அடையும் புகழும் அவர்களை மறு பரிசீலனை இல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு உதவ செய்கிறது. விளைவாக இயற்கை நாள் தோறும் நாசாமாகிறது, மனிதர்கள் இயந்திரங்களுக்கு அடிமையாகி கொன்டே இருக்கிறார்கள். முன்னர் செய்த தவறுகளை எல்லாம் திருத்துவதற்காக விஞ்ஞானம் உபயோகிக்கபடாமல் மேலும் மேலும் தவறு செய்து கொண்டே போகிறோம் என்று தோன்றுகிறது. மாற்று சக்தி (alternative energy) போன்ற ஆராய்ச்சிகள் இதற்கு விதி விலக்கு.

அறிவியல் வளர்ச்சியே இருக்க கூடாது என்று சொல்ல வரவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை அறம் சார்ந்தும், உலக நன்மை சார்ந்தும் பரிசீலிக்க பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் மகத்தான கனவுகளும் ஆர்வங்களும் அர்த்தமற்று தவறுகளுக்கு துனை செல்லவே கூடும். இப்படியே நாள் தோறும் சென்றால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. மனித இனம் எப்போது இதை உணர்ந்து தன் பாதையில் இருந்து திரும்பி நடந்து இயற்கையுடன் ஒரு சமரச புள்ளியில் வந்து நிற்கும் என்றும் தெரியவில்லை.