Monday, April 27, 2015

அம்பேத்காரின் "இந்து மதத்தின் புதிர்" - எதிர்வினை 2

அம்பேத்காரின் கேள்விக்கு எதிர்வினையாக அவர் எதை வைத்து மதம் என்ற ஒன்றை வரையரை செய்கிறார் என்று கேட்கலாம். அவர் பிற மதங்களிடம் ஓப்பீடு செய்தே இந்து மதத்தின் மீது கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்தந்த மதங்களில் அவர் குறிப்பிடும் அம்சம் எப்படி நிலையின்மை பெற்றிருக்கிறது என்று சுட்டிக்காட்டுவதே போதும். இருந்தாலும் இந்த கேள்வியின் வழியாக நாம் உன்மையிலேயே இந்து மதம் இத்தனை பிரிவுகளையும் தன்னில் அடக்கி எப்படி இயங்குகிறது என்று பார்க்க வேண்டும்.

இந்து மதம் ஒரு தொகுப்பு தன்மை உடையதாக உள்ளது. அந்த தன்மையே பிற மதங்களிடமிருந்து இதை பிரித்துக்காட்டுகிறது. இந்து மதத்தை ஒரு தொகுப்பு மதம் என்று கூறலாம். இந்த தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு மதமும் அதனதன் பிரிவுகளுக்குள் அவர்களுக்கு ஏற்றப்படி நம்பிக்கையையும் சடங்குகளையும் நடத்தி கொள்ள சுதந்திரம் அளிக்கிறது. இந்த தன்மையினாலேயே தனிப்பட்ட முறையில் இந்து மக்கள் இந்து மதத்தில்லாத கடவுள்களையும் வணங்க தயங்குவதில்லை. இதை அம்பேத்காரும் சுட்டிக்காட்டுகிறார். நானும் என் வீட்டில் பார்த்துதான். சர்ச்சில் ஏசுவை, மாதாவை வணங்குவதற்கு என் அம்மா தயங்கியதில்லை. நோயுற்றால் மசூதீயின் எதிரிருக்கும் ஒரு முஸ்லிம் முதியவரிடம் தான் என்னை மந்திரிக்க எடுத்து செல்வாள்.

இப்படிபட்ட தொகுப்பு மதம் எப்படி தொகுக்கப்பட்டது எதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டது? இந்த கேள்விக்கு பதில் சொல்ல போனால் அரசர்களுக்கு ஏன் மதமும் அதன் குருக்களும் முக்கியமாக இருந்தார்கள் என்று சொல்லிவிட முடியும். இன்றும் இந்த விடை உலகிற்கு பொருந்தும்.

இந்தியா என்பது பல குலங்களாக பிரிந்து பிரிந்து பல்லாயிரம் வருடங்களுக்கு முன் இருந்தது. அது இயற்கையாக மனித சமூக பரினாமத்தில் அவன் சமூகமாக வாழ ஆரம்பித்திருந்த காலம். இந்த சமூக வளர்ச்சியின் அடுத்தக்கட்டம் என்பது. குல குழுவாக இணைக்கப்பட்டு ஒரு அரசை, அரசாட்சியை நிறுவுவது. இப்படி சிறு குல குழுக்களாக இருக்கும் போது ஒவ்வொரு குலத்திற்கும் அதற்குரிய வழிப்பாட்டு முறை மற்றும் தெய்வங்கள் இருந்தது. ஏதோ ஒரு தருணத்தில் ஒரு சில குலங்கள் இதில் வளர்ச்சி பெற்று வலிமை பெற ஆரம்பிக்கிறது. அவை பிற குலங்களை அடக்கி ஆக்கிரமித்து அங்கு ஒரு சிற்றரசை நிறுவுகிறது.

இப்படிப்பட்ட சிற்றரசுகள் தங்களை பேரரசுகளாக வளர்த்து கொள்வதற்கு மதம் ஒரு கருவியாக இருந்தது. இந்த மதம் எனும் கருவியை இயக்க தெரிந்தவர்கள் மத குருக்கள், மத துறவிகள். இந்து மதத்தில் இவர்கள் வைதீகர்கள் - பிரமானர்கள். ஒரு அரசு தன்னோடு இணைக்க நினைக்கும் ஒரு தனி குலத்தை  அனுகுவதற்கு அவன் முதலில் எடுக்கும் ஒரு முயற்சி ஒரு வைதிகரையோ அல்லது துறவியையோ அந்த குலத்திடம் அனுப்புவது. அந்த வைதீகர் அந்த குலத்திடம் நன்மதிப்பு பெற்று அந்த குலம் அவரை ஒரு துறவியாக அல்லது குருவாக ஏற்று கொள்ளும் பொழுது அந்த வைதீகர் அவர்களது கடவுளை அந்த அரசனின் மதமான இந்து மதத்துடன் இணைப்பார். அந்த குல மக்கள் வணங்கி வந்த தெய்வம் இந்து மதத்தில் ஒரு கடவுளாக மாற்றப்படும்.

இப்படியாக அந்த குலம் முதலில் இந்து மதத்தில் இணையும். அதன் பிறகு இந்து மத ஆதரவோடு ஆட்சி நடத்தும் மன்னனுடன் இணையும். இப்படி தான் பேரரசுகள் உருவாகி வந்தது. இப்படி ஒரு அரசுடன் இணையாத குலங்களை தான் நாம் இன்று பழங்குடியினர் என்றும் பட்டியலிடப்பட்ட குலங்கள் என்றும் கூறுகிறோம், அவர்கள் வாழ்க்கை மேம்பட அரசு சலுகைகளை அளிக்கிறது. ஆகவே குலங்கள் அரசிடம் சேர்வது இரண்டு தரப்புக்குமே அவசியமான ஒன்று. அதை வன்முறை இன்று நடத்த மதம் ஒரு கருவியாகும். இந்த காரணத்தால் தான் இந்து மதத்தில் இத்தனை விதமான கடவுள்கள் வழிப்பாட்டு முறைகள்.

இப்படி இந்து மதம் வளர்ந்திருந்தாலும் இதை காலத்தால் சிதறிவிடாமல் கட்டி இறுத்தியது எது. இவைகளின் மையப்புள்ளி எது. இதுவே அம்பேத்காரின் முக்கியமான கேள்வி. இதற்கு பதில் இந்து மதத்தை மேலோட்டமாக பார்த்தால் கிடைக்காது.

எந்த ஒரு மதத்திற்க்குமே அதில் இருவகை தளங்கள் இருக்கும் என்று சொல்லலாம். ஒன்று அதன் வழிப்பாடு மற்றும் சடங்குள் சார்ந்து ஒரு தளம். இது எந்த ஒரு எளிய மனிதனுக்கும் புரிய கூடியதாய், மிகவும் அத்தியாவசியமனதாய் இருக்கும். இன்னொரு தளம், அந்த மதத்தின் தத்துவ சார்ந்தது.  இந்த மதத்தின் மைய புள்ளி அதன் சடங்குகளிலும் வழிப்பாட்டு முறைகளிலும் இல்லை, அது தத்துவ தளத்திலு இருக்கிறது.

இந்த மதத்தின் தத்துவ தளம் என்பது பல நூற்றாண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்டது. தொடர்ந்து பிற மதங்களான் பௌத்தம் சமஞம் ஆகியவைகளுடன் விவாதித்து வளர்ந்து வந்தது. இந்த தத்துவ தளத்தின் தொடக்கம் வேதங்களிலிருந்தே ஆரம்பமாகிறது. பிறகு அது வேதாந்தமாக வளர்ச்சி பெறுகிறது. அதிலிருந்து அத்வைதம் த்வைதம் போன்ற பல வேதாந்த தளங்கள் உருவாகி வந்திருக்கிறது.

இன்று நாம் காணும் எந்த இந்து பிரிவுக்குள்ளும் அதன் புரணங்களிலும் இந்த தத்துவங்களின் ஆதிக்கம் இல்லாமல் இருக்காது. இன்று மதங்கள் முன்பு ஆறு பிரிவுகளாக இருந்தது. சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணப்பத்யம், சௌர்யம். இது காலபோக்கில் ஒன்றுடன் ஒன்று இணைந்து இன்று சைவமும் வைணவமும் நம்மிடையே இருக்கிறது ஓரளவு சாக்தமும்.

இன்று நம்மிடையே இருக்கும் இந்த சைவம் வைணவம் போன்ற பெருமதங்களில் இந்த தத்துவங்களின் கருதுகோள்கள் வலுவாக ஊடுருவியிருக்கிறது. அந்த தெய்வங்கள் இந்த தத்துவங்களை கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது. 'மகமாயி' என்று நாம் சொல்வதில் மாயி என்பது மாயை என்ற வேதாந்த சொல்லாகும்.
'என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க' என்ற பாடலில் வரும் பிரம்மம் என்ற வார்த்தை வேதாந்தாம் கூறும் முழுமுதல் நிலையாகும். சைவ சித்தாந்தத்தில் கூறப்படும் மும்மலங்களான ஆணவம், கன்ம்ம், மாயை எனப்படுவது அகங்காரம், கர்மா, மாயை என்ற வேதாந்த கருதுகோள்களாகும்.

இப்படி இன்று இந்து மதமானது அதன் தத்துவ தளத்தின் மூலம் சடங்கு மற்றும் வழிப்பாட்டு தளத்தில் இருக்கும் பிரிவுகளை வலுவாக பினைத்து வைத்திருக்கிறது. அம்பேத்கார் தளுவிய புத்த மதமே கூட வேதாந்தத்திலிருந்து எடுத்து கொண்டு மேலே வளர்ந்த தத்துவம் மதம். புத்த தத்துவங்களிலுருந்து எடுத்துகொண்டு இந்து மதத்தில் வளர்ந்து அத்வைதம். இப்படி பல நூறு ஆண்டுகளாக அறிவான விவாதங்களாலும் அஹிம்ஸை வழிகளாலும் வளர்ந்து வந்தது இந்து மதம். இதுவே இந்தியாவில் பிறந்த மற்ற அவைதிக மதங்களான புத்த மதத்திற்கும், சமன மதத்திற்கும் பொருந்தும். கிறித்துவம், இஸ்லாம் போன்ற ஆப்ரஹாமிய மதங்கள் இங்கு கற்றுகொள்வதற்கு நிறையவே உள்ளது.

Sunday, April 19, 2015

ஞான யோகமும் விவாதமும்

அன்புள்ள ஜெ,
ஞான யோகத்தை பின்பற்றுபவர்களுக்கு பிற தரிசனங்கள் உள்ளவர்களுடன் விவாதிப்பது அவசியம் இல்லையா? விவாதிப்பது அறிதலின் ஒரு வழியாக அது சொல்லவில்லையா?
அவசரமான கேள்வி. ஒரு வரி பதில் கூட போதும், இப்போதைக்கு.
நன்றி,
ஹரீஷ்

அன்புள்ள ஹரீஷ்,
ஞானநூல்களை தத்துவத்தை விவாதிப்பது வேறு ஞானத்தை விவாதிப்பது வேறு. ஞானநூல்களை விவாதிக்காமல் கற்கமுடியாது. நூல்களிலிருந்து மேலே சென்று அடையும் ஞானத்தை விவாதிப்பதன் மூலம் நிறுவவோ மறுக்கவோ முடியாது.
தத்துவப்பயிற்சியின் ஆரம்பநிலையில் இருக்கும் ஒருவர் ஒரு ஞானநூல்களை பயிலும்போது விவாதம் இன்றியமையாதது. இது எல்லா குருகுலங்களிலும் உள்ள ஒன்றுதான். இதன் மூலம் பலகோணங்கள் திறக்கின்றன. ஒரு கருத்தை ஐந்துபேர் அமர்ந்து விவாதித்தால் ஐந்துமடங்கு அறிவு அந்தக்கருத்தை ஆராயகுடிகிறது.

ஆனால் இந்த விவாதம் ஏறத்தாழ இணையான அறிவுத்திறனும் இணையான அறிதல் ஆர்வமும் கொண்டவர்கள் நடுவே நிகழவேண்டும். நோக்கம் அறிபடுபொருளை மேலும் கூர்மைப்படுத்துவதாக மட்டுமே இருக்கவேண்டும். ஆகவே உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் ஏதாவது ஒரு தரப்பைச் சார்ந்து நின்று விவாதிப்பது தீங்கிழைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அந்தவிவாதம் புறவயமான விவாதமுறைமையைச் சார்ந்ததாக மட்டுமே நிகழவேண்டும் என்று சொல்லப்படுவது த உணர்ச்சிகரமான விவாதம் நிகழாமலிருக்கும்பொருட்டு மட்டுமே. அதில் அகங்காரம் கலக்கலாகாது. வெற்றிதோல்வியல்ல உண்மை விளங்குவதே முதன்மையாக இருக்கவேண்டும். இல்லையேல் அது வீண்சொற்களாகவே முடியும்.

அந்தக் கல்விமூலம் தத்துவத்தை அறியும் ஒருவர் அதை கற்பனையாலும் உள்ளுணர்வாலும் முன்னெடுத்துச்சென்று தன் அந்தரங்க தரிசனத்தை அடைகிறார். அதையே ஞானம் என்கிறோம். அது கடல்போல, முகில் போல, மழைபோல, நிலத்தடி நீர் போல எங்குமுள்ள நீர். அதை அவர் தன் நிலத்தில் ஊற்றாக அடைகிறார். ஞானம் அவ்வகையில் முழுமையில் பொதுமையும் அறிதலில் அந்தரங்கத்தன்மையும் ஒருங்கே கொண்டதாகும்

அந்த ஞானத்தை அடைந்தவர்களில் குரு என்னும் நிலையை அடைந்தவர் அதை தகுதிகொண்ட மாணவர்களிடம் மட்டும் பகிரலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. குருநாதர்கள் பொதுவாக விவாதிப்பதில்லை.ஆனால் தன் மாணவர்களை வழிநடத்தவும் தன் ஞானத்தை முழுமைசெய்துகொள்ளவும் விவாதிக்கலாம்

அவர்களுக்கும் அப்பால் செல்பவர்கள் உலககுருநாதர்கள். மானுடத்தை நோக்கிப் பேசுபவர்கள். மகாவீரர் போல புத்தர் போல சங்கரர் போல.ஏசு போல. அவர்கள் ஞானத்தை அடைந்தவர்கள் மட்டும் அல்ல. ஞானமேயாக ஆனவர்கள். அதை சாக்‌ஷாத்காரம் என நம் மரபு சொல்கிறது. ஞானத்தை நிகழ்த்தியவர்கள். அவர்களில் விவாதிப்பவர்களும் விவாதிக்காதவர்களும் உண்டு. அவர்களின் வழியை அவர்களே கண்டடைகிறார்கள்

ஜெ

http://www.jeyamohan.in/74235#.VTRXE010z3g

அம்பேத்காரின் "இந்து மதத்தின் புதிர்" - எதிர்வினை 1

எனது நண்பர் ஒருவர் இந்து மதத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்து மதம் சுத்தமாக அழித்தொழிக்கப்பட வேண்டியது என வாதிட்டார். திராவிட இயக்க சார்புடையவர். நான் இந்து மதத்தில் திருத்தப்பட வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. ஆனால் மொத்தமாகவே தூக்கி போட எந்த தேவையும் இல்லை என்றேன். நமது வாகனத்தில் ஒரு பழுது ஏற்பட்டால் எப்படி சரி செய்து உபயோகித்து கொள்கிறோமோ அதை போலவே இந்து மதத்திலும் உன்மையாகவே பிழைகளாக இருப்பதை சரி செய்யவேண்டும் என்றேன். அதற்கு அவர் இந்து மதத்தின் வேரிலேயே பழுது என்றார். இப்படி விவாதம் இரண்டு மூன்று நாட்கள் விட்டு விட்டு தொடர்ந்தது.


கடைசியில் இந்து மதத்தை பற்றி விமர்சிப்பவர்கள் இந்து மதத்தை பற்றி முழுதாக அல்லது மதிக்கதக்க அளவிலாவது தெரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும். அப்படியில்லாமல் காதில் கேட்ட விஷயங்களை வைத்து கொண்டெல்லாம் அவதூறு சொல்ல கூடாது என்றேன். மேலும் விவாதம் தொடர்ந்து ஒரு இடத்தில் அம்பேத்காரிடம் வந்து நின்றது. அம்பேத்கார் சாட்டிய குற்றங்களை பற்றி சொன்னார். அந்த புத்தகத்தையும் எடுத்துக்காட்டினார். அதன்படி அந்த புத்தகத்தை, அல்லது சில அத்தியாயங்களையாவது படித்துவிட்டு வருகிறேன். பின்பு அவரது இந்து மதத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலுரைக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். அதன்படி முதல் அத்தியாயத்தை படித்துவிட்டு அதற்கு எதிர்வினையாக இதை எழுதுகிறேன்.


இந்து மதத்தின் மீது அம்பேத்கார் "Riddle in  hinduism" என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் அல்லது முதல் புதிரில் இந்து மதத்தின் மீது எழுப்பும் கேள்விகள் என்று இவைகளை சொல்லலாம். இந்துக்கள் அனைவரும் தங்கள் கடவுள் என்று சொல்லி கொள்வது ஒற்றை கடவுள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபடுகிறார்கள். சிலர் எல்லா தெய்வத்தையும் வழிபடுகிறார்கள் - பலதெய்வமுறை வழிபாடு. பலர் மரம், மாடு, நதி ஆகியவைகளை வணங்குகிறார்கள் - பிரபஞ்ச தெய்வ முறை(pantheism). பலர் தங்களது கடவுளை தவிர மற்ற எந்த கடவுளையும் வணங்க மறுக்கிறார்கள் - ஒருதெய்வமுறை. இப்படி இருக்கும் போது ஒரு இந்துவை நீ எதனால் இந்துவாக இருக்கிறாய் என்று கேட்டால் அவன் பதில் சொல்ல முடியாமல் தினறுவான் என்கிறார்.


ஆனால் இந்த பிரச்சனை இந்தியாவில் வாழும் ஒரு கிறித்துவருக்கோ, இஸ்லாமியருக்கோ, பார்ஸிக்கோ கிடையாது என்கிறார். அவர்கள் முறையே கிறித்து, அல்லா, ஜரதுஷ்டரர் என்று சொல்லிவிடுவார்கள் ஆனால் இந்து அப்படி சொல்ல குழம்புவான் என்கிறார். மேலும் இந்துக்களுக்கு என்று பொதுவான ஒரு நூல் கிடையாது என்கிறார். சிலர் வேதங்களையே அவர்களின் புனித நூல்கள் என்பார்கள். சிலர் தாந்திரீக நூல்களை சொல்வர். சிலர் பாகவதத்தை சுட்டுவர்.


மூன்று, இந்து மதத்தினர் ஒரே பண்பாட்டை சார்ந்தவர்கள் அல்ல. பெண்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரம் மற்றும் கல்யானம் செய்ய கூடாத உறவுகள் என்பவை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. மேலும் இந்து மத சாதிகளில் ஒருவராக ஒருவர் இருந்தால் தான் அவர் இந்துவாகிறார். இது இந்து மதத்தின் முக்கிய பண்பு. ஒவ்வொரு இந்துவுக்கும் தனக்கு நிகரான சாதியில்லாதவருடன் சாப்பிடுவதோ, திருமண பந்தம் வைத்து கொள்வதோ கூடாது என்று கண்டிப்பாக இருக்கிறார்கள். இந்த நான்கு வாதங்களையும் தான் அவர் முதல் புதிராக இந்து மதத்தின் மீது வைக்கிறார்.

முதலில் தெய்வ வழிபாடு பற்றிய வாதத்தை எடுத்து கொள்வோம். ஒரு மதம் ஒரு தெய்வத்தை தான் கொண்டிருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்? அதிலும் ஒரு மதத்தில் ஒரு தெய்வ வழிபாடு, பல தெய்வ வழிபாடும் சேர்ந்திருந்தால் அது ஒரு மதமென ஏன் இருக்ககூடாது. ஒரு மதம் அதற்குள் எவ்வளவு பாகுபாடுகளை அனுமதிக்கிறதோ அது அத்தனை மதிப்பை மற்ற நம்பிக்கைகளுக்கு கொடுக்கிறது என்று அர்த்தம். அது அத்தனை வழிபாட்டு முறைகளையும் வன்முறையில்லாமல் ஏதோ ஒரு தருனத்தில் தன்னுடன் இணைத்திருக்கிறது என்று அர்த்தம்.


அவர் சுட்டிக்காட்டும் மதங்களில் பார்ஸி மதத்தை பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. ஆனால அந்த மதம் இன்று இரானில் கிட்டத்தட்ட முழுதும் இஸ்லாமியர்களால் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. இன்று அந்த மதத்தில் இருக்கும் உலக அளவிலான மக்களில் இந்தியாவில் தான் கணிசமானவர்கள் உள்ளார்கள். அவர் சுட்டிக்காட்டும் மற்ற இரண்டு மதங்களை பற்றி சொல்லவே தேவையில்லை. வரலாற்றில் ரத்த ஆற்றை ஓட விட்டவர்கள்.


கிறித்துவ மதம் ஐரோப்பாவின் ஆயிரம் மதங்களில் ஒரு மதமாக இருந்த காலகட்டம் ஒன்றுண்டு. ஒரு காலகட்டத்தில் அந்த மத குருக்கள் ரோம மன்னனை சம்மதிக்க வைத்து மதமாற்றினார்கள். அதன் பின் அது அரச மதமானது. அதற்கு அரசு அங்கிகாரம் வந்தவுடன் ஐரோப்பாவில் உள்ள தாய் தெய்வ வழிபாட்டு மதங்கள் மற்றும் பல மதங்களை அழித்தார்கள். வற்புறுத்தி வன்முறையினால் கிறித்துவதத்திற்கு மாற்றினார்கள். அவ்வாறு தான் இன்று ஐரோப்பா முழுவதும் இன்று கிறித்துவமாக இருக்கிறது. இன்று கிறித்துவத்தில் இருக்கும் பல மத சடங்குகளுக்கு பூர்விக ஐரோப்ப மதத்தில் வேர்கள் உண்டு அதற்கு கிறித்துவ சாயம் பூசப்பட்டு இன்றும் கொண்டாடுகிறார்கள்.


அதே போல கிறித்துவ மதத்தின் தெய்வ கோட்பாடு. கிறித்துவர்கள் கிறித்துவை தவிர யாரையும் வழிபடகூடாது என்று திட்டவட்டமாக எழுதப்பட்டிருக்கிறது. கிறித்து ஒருவனே உங்களை பாவத்தில் இருந்து விடுவிப்பவர். அவர் ஒருவரே கடவுளின் மகன். அவரிடம் வராமல் போனால் நரகம் நிச்சயம் என்று ஒரு அச்சத்தினூடாக கிறித்துவர்கள் அனைவரும் ஒற்றை வழிப்பாட்டு முறைக்குள்ளானார்கள். Inquisition என்ற முறையை வைத்து கொண்டு காலனியாக்கம் நடந்த நாடுகளில் எல்லாம் பல மக்கள் சித்ர வதைக்கும் மரணத்திற்கும் ஆளாகியிருக்கிறார்கள். அமெரிக்க பூர்வ குடிகளான செவ்விந்தியர்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்தொழிக்கபட்டதர்கான காரணங்களில் இந்த மதமாற்ற நிபந்தனையும் ஒன்று.


இஸ்லாம் மதம் உன்டான போதிலிருந்து வன்முறையால் பல மக்கள் மாற்றம் செய்யபட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து பிற நாட்டுக்கு படையுடன் சென்று மதமாற்றி அந்த நாடுகளில் ஆட்சியை நிறுவியிருக்கிறார்கள். தொடர்ந்து வன்முறையையே வழியாக கொண்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அல்லாவை தவிர வேறு ஒரு கடவுளை தொழுபவன் காஃபிர் என்று கூறுகிறது. இஸ்லாமிய மதத்தை பரப்ப அவன் மீது போர்தொடுப்பதையும் ஒரு வழியாக சொல்கிறது. இன்றும் இந்த விவகாரங்கள் ஓய்ந்தபாடில்லை.


இப்படி மற்ற மதங்கள் எல்லாம் அதை தவிர பிற மதங்கள் மீது கடும் வன்முறை செலுத்தியிருக்கும் போது. இன்றும் இந்து மதத்தில் இத்தனை வேறுபாடுகளுடன் பல பிரிவுகள் இருக்கிறதென்றால். உன்மையில் அது நல்ல விஷயம். இத்தனை பிரிவுகளையும் இந்து மதம் ஒருங்கினைத்திருக்கிறது. வன்முறையில்லாமல். ஒரு வேளை வன்முறை உபயோகிப்பட்டிருந்தால் நாம் இந்த வித்தியாசங்களை பார்க்க மாட்டோம். அப்ராஹமிய மதங்களை போல் ஓரே கடவுள் என்ற முறையில் இருந்திருக்கும். ஆனால் அப்படி வன்முறை ஏதும் நிகழவில்லை என்பதற்கு அதில் உள்ள இத்தனை பிரிவுகளும் அதில் உள்ள வித்தியாசங்களுமே காரணம். இந்து மதத்துக்குள் இருக்கும் உட்பிரிவுகளை பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.


இரண்டாவது காரணமாக அம்பேத்கார் சொல்லுவது இந்து மதத்தில் பொதுவான ஒரு நூலோ, வழிமுறைகளோ இல்லை என்று. எந்த மதத்தில் தான் இருக்கிறது. கிறித்துவம் என்று எடுத்து கொண்டால் அதில் எத்தனை கிளைகள். ரோமன் கத்தோலிக்க மதம், ப்ரோடஸ்டான்டுகள், ஓரியின்டல் ஆர்த்தடக்ஸ், பென்டா கொஸ்டுகள் என்று எத்தனையோ உட்பிறிவுகள். உலகம் முழுதும் பரவியிருக்கும் கிறித்துவ மதத்தினர் எல்லாம் ஒரே முறையை பின்பற்றுகிறார்கள் என்று சொல்ல முடியாது. இந்தியாவில் இருக்கும் கிறித்துவர்கள் பலர் இந்திய பழக்க வழக்கங்களை கடைபிடிக்கிறார்கள் சாதி உட்பட. அது கண்டிப்பாக அமெரிக்க கிறித்துவனிடம் இருந்து மாறுபடும். அதற்காக கிறித்துவம் ஒரு மதம் இல்லை  என்று சொல்லி விட முடியுமா.


அதே போல் இஸ்லாமியத்திலும் சுன்னி, ஷியா, சூஃபி, அஹமதியர் என்று பல பிரிவுகள் உள்ளது. இன்று மத்திய அரபு நாடுகளில் நடக்கும் கொலைகள் எல்லாம் சுன்னி பிரிவினர் ஷியாக்களின் மீது நடத்துவது தானே? கொலை செய்யும் அளவுக்கு போகிறது என்றால் அவை இரண்டுக்கும் இடையிலிருக்கும் வித்தியாசம் எவ்வளவு. இல்லை ஆக்கிரமிப்பு செலுத்தும் பிரிவிடம் இருக்கும் சகிப்புதன்மை எவ்வளவு. ஏன் அம்பேத்கார் தழுவிய புத்தமதத்திலேயே எத்தனை பிரிவுகள். தேராவாதம், மஹாயானம், வஜ்ராயனா என்று உட்பிரிவுகளுடன் பல வகை இருக்கிறது.


அப்போது இந்து மதத்தில் மட்டும் இருந்தால் என்ன பிரச்சனை? அப்படி இல்லாமல் ஒரே பிரிவாக இருந்தால் தான் பிரச்சனை. அப்படி இருந்தால் ஒரு வழிமுறை, நூல் எல்லார் மீதும் வலுகட்டாயமாக சுமத்த பட்டிருக்கிறது. ஆனால் அப்படி நடக்கவில்லை. எல்லோரும் அவரவர் முறைகளை நூல்களை இன்றும் பேன அனுமதி இருக்கிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். இருந்தாலும் பெரும்பாலான இந்து மதம் இந்த முறையிலேயே வேலை செய்கிறது.


மூன்றாவதாக அவர் காரணத்துக்கும் மேலே சொன்ன பதில் தான். இன்று உலகம் முழுதும் பரவி வரும் கிறித்துவ மதத்துக்கு ஒரே பண்பாட்டு அடித்தளம் இருக்கிறதா? ஜெர்மனியில் இருக்கும் ஒரு கிறித்துவுக்கும், கோயம்புத்துரில் இருக்கும் ஒரு கிறித்துவுக்கும் எப்படி ஒரு பொது பண்பாடு இருக்க முடியும். என்ன தான் வலுகட்டாயமாக அவன் அந்த மதத்தை பின் பற்றினாலும் அவன் அன்றாடம் வாழும் சமுகம் அல்லவா அவன் பண்பாட்டை கட்டமைக்கிறது. மஹாபாரத கதை சொல்லி குழந்தைகளை தூங்க வைக்கும் பல கிறித்துவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஏன் என்றால் இந்து கதை என்பதை விட இந்தியாவின் கதை. அதை விட்டு விட்டு அவர் ஹெர்குலஸ் கதை சொல்ல முடியுமா? சொன்னால் சற்று செயற்கையாக இருக்கும்.


நான்காவதாக சாதி. சாதி இந்தியாவிலிருந்து மறைய வேண்டும் என்பது என் கருத்து. அது தானாகவே நடக்கும் என்று தான் நான் நினைக்கிறேன். கல்வியும், நவினமயமும் அதை தானாக இந்தியாவிற்கு ஓரிரு நூற்றாண்டுகளில் முழுமையாக கொண்டு வரும். எந்த இந்துவும் நான் இந்த சாதியில் இருப்பதால் நான் இந்து என்று சொல்வானா என்று தெரியாது. இந்து மதம் சாதி சார்ந்த தனது கோட்பாடுகளை மறுபரிசிலனை செய்து சமத்துவம் நிலைக்குமாறு மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் இந்து மதம் மாற்றினால் சாதி பிடிப்புள்ளவர்கள் கேட்பார்களா? மாட்டார்கள். ஏனேனில் அவர்கள் இந்து மதத்தில் இருந்தாலும் இல்லாவிடிலும் அவர்களுக்கு சாதி என்ற ஒரு பிடிப்பு எப்போதுமே உண்டு.


தொடரும்...