Tuesday, November 4, 2014

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

என் அலுவலக நண்பர் ஒருவர் தினமும் மதிய உணவு உண்ணப் போகும் போது என் அருகில் நின்று நலம் விசாரித்து விட்டு செல்வார். என் அலுவலகத்தில் தினமும் நான் தமிழில் பேசக்கூடிய நண்பர் அவர் என்பதால் அடிக்கடி வந்து என்னுடன் பேசி கொண்டிருப்பார். இன்றும் அவர் மதிய உணவின் போது அருகில் வந்து நின்றார்.  எனக்கு அருகில் ஒருத்தர் வந்து நிற்கும் போது அவரை மதிக்காமல் எனது கணினி திரையையே பார்த்து கொண்டிருப்பது என்னால் முடியாது அதனால் ஒரு மரியாதைக்கு 'சொல்லுங்க' என்றேன். 'என்னத்த சொல்றது' என்றார்.

'லைஃப் எப்படி போகுது' என்றேன். கண்களை சுருக்கி கைகளை விரித்து 'லைஃப் அது பாட்டுக்கு போகுது, காலைல எழுந்தா கிளம்பி ஆபிஸ் வர, வேல செய்ய, சாயங்காலம் திரும்பி போக, வீட்டு வேல செய்ய, மறுபடியும் அடுத்த நாள் காலல வேலைக்கு வர.. இப்டி போகுது..' என்றார். நான் சொன்னேன் 'இதுக்கு தான் நீங்க எதையாவது படிக்கனும். படிக்கும் போது அந்த எழுத்து உருவாக்கும் உலகத்துல மூழ்கி போயிருவீங்க, அப்ப உங்களோட அன்றாட கவலை, போர்டம் இருக்காது. அந்த உலகத்துல ஒரு புது இடத்துல, புது காலத்துல வாழ்வீங்க அது ஒரு வித்தயாசமான அனுபவமா இருக்கும்' என்றேன். அவர் தலையை ஆட்டிகொண்டு 'உச்' என்று மறுத்தார்.

நான் மேலும் 'இப்போ, எதுக்கு விளையாடறாங்க? விளையாடும் போது ஒரு பரபரப்பான, ஸ்வரஸ்யமான அனுபவம் கிடைக்குது. நம்மளோட அன்றாட வாழ்க்கைல அந்த அனுபவம் இருக்காது நம்மளோட வாழ்க்கை ரொம்ப அலுப்பு தட்ட கூடிய சாதாரண வாழ்க்கை. கார்ல ஏறி ஆபிஸ் வருவோம், உக்காந்தாப்டி வேல பாப்போம், சாயிங்காலம் அலட்டாம வீட்டுக்கு போயிருவோம். பரபரப்பா இருந்தா கூட, அது மூளைக்கு ஸ்வாரஸ்யாமா இருக்குறதில்ல, இயந்திரத்தனமான பரபரப்பு. அதுவும் அலுப்பு தான் குடுக்கும். அதுக்கு தான் விளையாட்டு' என்றேன். அவர் 'அதான் அதான், தெரியும்' என்பது போல் தலையை ஆட்டினார்.

'அதே போல தான் ம்யூசிக்கும், அதை கேட்கும் மனம் அதுல லயிக்கரதுனால நம்மளோட தாட்ஸ் கொஞ்சம் அமைதி ஆகுது அதுனால கொஞ்சம் ரிலீஃப் கிடைக்குது' என்றேன். 'அத மாதிரி தான் வாசிப்பதும். படிக்கும் போது இந்த வாழ்க்கைல இருந்து நம்ம வேற வாழ்க்கைல கொஞ்ச நேரம் பயணம் செய்றோம். அது உங்க அலுப்ப போக்குது' என்றேன். அவர் மறுத்தப்படி தலையாட்டி கொண்டு 'என்ன தான் படிச்சாலும் மனசுல இதே எண்ணம் தான் ஓடிகிட்டே இருக்கு, பையன் படிப்பு என்னாகும், கார் ரிப்பேர் பன்னனும், டிக்கட் புக் பன்னனும், அப்டினே தான் மனசுல ஓடிட்டுருக்கு' என்றார்.


நான் 'ஆரம்பத்துல அப்டி தான் இருக்கும் போக போக தான் உங்க கவனம் படிப்புல குவியும். அப்டியே தொடர்ந்து படிச்சா வாழ்க்கை நெருக்கடிக்கு இடையில உங்களுக்கு கொஞ்ச நேரம் ஓய்வு கிடைச்சா மாதிரி இருக்கும்' என்றேன். அவுரு 'கொஞ்ச நேரம் தானே' என்றார். 'ஆமா, கொஞ்ச நேரம் நான் இருந்தாலும் அது ஒரு நல்ல ஓய்வு தானே' என்றேன். அவர் 'தண்ணி அடிச்சா கூடத்தான் அந்த கொஞ்ச நேர ஓய்வு கிடைக்குது' என்றார்.


நான் 'ஹா, ஆனா அதுல பின் விளைவுகள் இருக்கே. படிச்சா அனுபவமும், அறிவும் கூடுதே, விளையாடுனா ஸ்வாரஸ்யமும், உடல் வலிமையும் கிடைக்குதே' என்றேன். அவரிடம் அதுக்கு மேல சொல்ல எதுவுமில்லை, 'ஆர்கிவ் பன்னா பன்னிகிட்டே இருக்கலாம். உங்களுக்கு அதோட ருசி தெரில' என்று சொல்லி சிரித்துவிட்டு உணவை சூடுப்படுத்த நுண்கதிர் அடுப்புக்கு சென்றார். நானும் சிரித்து கொண்டு திரும்பி வேலை செய்ய தொடங்கிவிட்டேன்.

தமிழ்நாட்டில் டாஸ்மார்க்கில் ஏக கூட்டமிருப்பது ஏன் என்று இந்த ஒரு உரையாடல் காட்டி கொடுத்தது.