Monday, April 21, 2014

இந்து மதமும் அதன் உட்பிரிவுகளும்

இந்து மதம் என்றால் நாம் இன்று பெரும்பாலும் பக்தி விஷயங்களையே சொல்லுகிறோம். இந்து பெரும் கடவுள்கள், சடங்குகள் இவை அனைத்துக்கும் பக்தி சார்ந்த அர்த்ததையே சொல்கிறோம். இந்து மதம் இன்று நாம் அனுகுவது போல் மிக குறுகிய அளவில் ஒற்றைப்படையாக இருந்ததில்லை. அதில் பக்தி, தத்துவம், யோகம் என்று பல தளங்கள் இருக்கிறது.

இதில் பக்தி தளம் கூட இன்று பார்ப்பது போல் ஒற்றைபடையாக இருக்கவில்லை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பல் வேறு வழிபாட்டு முறைகள் இருந்திருக்கிறது. சைவம், வைனவம் என்பது இன்றும் கூட பெரும்பாலோருக்கு தெரிந்ததே. சைவம் சிவனை பிரதான தெய்வமாக கொண்ட வழிபாட்டு முறை. வைனவத்துக்கு விஷ்னுவே பிரதான தெய்வம். இந்த இரு தளங்களை கூட இன்று அவ்வளவு கட்டுபாட்டுடன் கடைபிடிக்கும் மக்கள் இல்லை. ஒரு காலத்தில் சைவ மரபை சேர்ந்தவர்கள் சைவ தெய்வங்களை தவிர வேறு தெய்வங்களை வணங்க மாட்டார்கள். அப்படியே வைனவத்திலும். நான் சொல்லும் காலம் அப்பரும், ஞான சபமந்தரும், ஆள்வார்களும் வாழ்ந்த காலம். கால போக்கில் இது கரைந்து மக்களிடையே எல்லா தெய்வங்களும் கலந்து போனது. 


வைனவ மடத்தில் படித்த ஒருவருக்கு சைவ தமிழ் இலக்கியங்கள் பற்றி அறிமுகமே இருக்காது. சைவ பள்ளியில் படித்த உ.வே.ஸ்வாமிநாத ஐயருக்கு சீவக சிந்தாமனியை பற்றி கேள்வியே பட்டிராத காலம் ஒன்று இருந்தது. அதை ஒருவர் சுட்டி காட்டிய பின்னர் தான், அவர் அப்படி பல தமிழ் இலக்கியங்களை தேடி சென்று இருக்கிறார்.இன்று இந்த வேறுபாட்டை அழுத்தமாக கடை பிடிப்பது சில சாதிகளே, வைனவத்தை ஐயங்கார்களும், சைவத்தை சைவ பிள்ளைகளும், நாட்டு கோட்டை செட்டியார்களும். 

இந்த சைவம் வைனவம் மரபுகள் தவிர வேறு மரபுகளும் இருந்தன. சாக்தம், சக்தியே இதன் பிரதான தெய்வம், பெண் தெய்வங்களாளான மரபு. கௌமாரம், முருகனை பிரதான தெய்வமாக கொன்ட மரபு.காணபத்யம், கணபதியை பிரதானமாக கொன்ட மரபு. சூரியனை பிரதான தெய்வமாக கொன்ட மரபு சௌரம். இது போக தாந்திரிகம் என்ற வழிபாட்டு முறை உண்டு, குறியிட்டு வழிபாட்டு முறை. இது சாக்த்தத்தில் பெரும்பங்கு ஆற்றியது. 

இந்த எல்லா மரபுகளும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்த பழங்குடி வழிபாட்டு முறையிலிருந்து படி படியாக வளர்க்கப்பட்டது. இந்து மதம் தவிர இன்ன பிற மதங்களான சமனம், பெளத்தம் ஆகியவையுடனும் உரையாடி வளர்ந்தது. எட்டாம் நூற்றான்றில் தொடங்கிய பக்தி இயக்கம் சைவத்தையும், வைனவத்தையும் பெருமளவில் வளர்தது. கால போக்கில் பிற மதங்கள் சைவம் மற்றும் வைனவத்தின் உள் இழுக்கப்பட்டன, அந்த பெரு மதங்களில் உள்ளிளுக்கபட்ட தெய்வங்கள் உப தெய்வங்களாகின, சடங்குகளும், சிலை அமைப்புகளும் உள் இழுக்கப்பட்டன. 


இந்த பிரதான மற்றும் உப தெய்வங்கள் எல்லாம் பெரு தெய்வங்கள். இவை போக நாட்டார் தெய்வங்கள் பல உள்ளன. நாட்டார் தெய்வங்கள் உக்கிரமான தெய்வங்கள். அவற்றின் உக்கிரத்தை தனிக்க தான் பல் வேறு சடங்குகளும், பலிகளும். அவை அருள் பாலிக்கும் தெய்வங்கள் அல்ல, பயமுறுத்தும் தெய்வங்கள். அவற்றின் வரலாற்று பாடல்களில் கோழி கறி, ஆட்டு கறி, பன்றி, மாடு, நர பலி, சூலிப் பெண்னை பலியாக கேட்பதே அதற்கு சான்று.  இப்படி எல்லா ஊருக்கும் பல நாட்டார் தெய்வங்கள் உள்ளன. சுடலை மாடன், பன்றி மாடன், கழு மாடன், இசக்கி, நீலி, சொறி முத்து, பாண்டி, அய்யனார், முனிஸ்வரன் என்று பல.


இந்து மதத்தின் ஒரு தளம் பக்தி மரபு என்றால் இன்னோரு தளம் தத்துவம். தத்துவம் அறிவு சார்ந்த தளம். தர்க்கதாலும், வியாக்யானத்தாலும் கட்டமைக்கபட்டது. 'நான் யார்?', 'உலகம் எப்படி உருவாகியது?' போன்ற அடிப்படையான ஆழமான கேள்விகளுக்கு பதில் தருவது அல்லது அது சார்ந்து சிந்திக்க செய்வது. அந்த தத்துவ தளத்தில் பல வகை உண்டு. வேதாந்தம், பூர்வ மிமாம்சம், சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம். வேதாந்தமும், பூர்வ மிமாம்சமும் வைதிக மரபுகள். பிற நான்கும் அவைதிக மரபில் அடங்கும். சார்வாகம் என்னும் கடவுளை மறுக்கும் நாத்திக மரபும் இந்து மதத்தில் அடக்கம்.

இது போக இந்து அல்லாத மதங்களான சமனம், பெளத்தம், ஆசிவகம் மற்றும் மேல சொன்ன சார்வாகமும் நாத்திக மதங்களாகும். இந்த ஆத்திக, நாத்திக தத்துவ தளங்கள் அனைத்துமே நடைமுறையில் முக்தியை உணர்வதற்கு யோக முறை பின்பற்றப்பட்டது.

இந்து மதம் பல மரபுகள், வழிப்பாட்டு முறைகளுடன் வளர்ந்து அவை அனைத்தையும் ஒருங்கினைத்து தனக்குள் அடக்கி கொன்டது. அதில் முக்தி பெருவதற்கு ஒருவன் எந்த வழியையும் தேர்ந்து எடுக்கலாம், அல்லது அவனே ஒரு புது மார்க்கத்தை கண்டடையளாம்.

இத்தனை பன்முக தன்மையுடன் இருந்த இந்து மதத்தை பற்றி இன்று மிக எளிமையான புரிதலே பெரும்பாலான இந்துகளுக்கு இருக்கின்றது. இந்த அறிவு தளங்கள் எல்லாம் கால காலமாக வளர்ச்சி பெற்றே வந்திருக்கிறது. அதன் வளர்ச்சி இப்போது பல நூற்றாண்டுகளுக்கு முன்னே முடங்கி போய்விட்டது. இப்படியே போனால் இந்ந தத்துவ மரபுகளில் இருக்கும் நம் முன்னோரின் ஞானத்தையும் அதை சார்ந்து நாம் மாற்றி அமைக்க வேண்டிய திருத்தங்களையும் நம் வருங்கால தலைமுறைக்கு இல்லாமலாக்கிவிடுவோம்.

Saturday, April 19, 2014

ஒரு புளிய மரத்தின் கதை - வாசிப்பு அனுபவம் - 2

அந்த காற்றாடி மரங்கள் எல்லாம் வெட்டி அங்கு உண்டாகும் பார்க்கில் நடக்கும் சம்பவங்களை வெகு ஸ்வாரஸ்யமாக சொல்கிறார் ஆசிரியர். முதலில் அங்கு வந்து உட்கார்ந்து அரசியல், இலக்கியம் ஊர்வம்பு பேசும் முதியவர்கள் எல்லாரும் நன்கு படித்தவர்கள். கல்லூரிகளிளும், அரசாங்க துறைகளிளும் வேலைக்கு இருப்பவர்கள். அனைவருக்கும் ஏதோ ஒர் நோய் குறைந்தப்பட்சம். ரத்த அழுத்தம், சர்க்கரை, நெஞ்சு வலி என பல உபாதைகளுடன் இவர்களை சித்திரித்திருக்கும் விதத்தை கவனித்தால், இவர்கள் ஆசான் கதாபாத்திரத்திற்கும் நேர் எதிராக இருப்பதை காணலாம் திடகாத்திரமான தன் கைகளில் பசங்களை தொங்க சொல்லும் ஆசான். நடப்பதற்கு முடியாத பார்க் முதியவர்களின். நினைத்ததை இஷ்டம் போல் சாப்பிடும் ஆசான், நோய் நொடியினால் எதையுமே சாப்பிட முடியாமல் வாய் கட்டி போடப்பட்ட முதியவர்கள். உரக்க சிரிக்கும் ஆசான், பல் வலியினாலும், பிற உபாதைகளாலும் சிரிக்க கூட முடியாத முதியவர்கள். 80 வயதிலும் 60 வயது என்று சொல்லும் ஆசான். எப்படா சாவெனும் விடுதலை வரும் என்று ஏங்கும் முதியவர்கள். எவ்வளவு வித்தியாசம் ஒரு தலைமுறையில் அப்படி என்ன சமுதாயாத்தில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது, மனிதன் மனிதனுக்கேன்று விதிக்கப்பட்ட அல்லது செய்யவேண்டிய விஷயங்களை செய்ய அவன் மூளை வளர்ந்திருக்கலாம் உடல் மாறவில்லை.

சுந்தர ராமசாமி


அந்த பார்க்கில் இருக்கும் ஒரு காந்தி சிலை. அந்த சிலையில் அருகில் செருப்பு போட்டு கொண்டோ, புகை பொருள்களையோ யாரும் உபயோகிக்காமல் பார்த்து கொள்ள ஒரு காவலாளி . இந்த கதை எழுதப்பட்டது 1960களில். சுதந்திரம் வாங்கி 20 வருடத்திற்குள்ளாகவா தேசபக்தி மங்கிவிட்டது, காந்தி சிலையை அவமதிக்காமல் பாரத்து கொள்ள ஓர் ஆளை போடும் அளவிற்கு என்று யோசிக்க வைக்கிறது. பூங்காவில் விளையாட வரும் கான்வென்ட் குழந்தைகளுக்கு ஏழை குழந்தைகளுக்கும் நடக்கும் பூங்கா ஊஞ்சல், சருக்கு மரங்களை உபயேகிக்க உருவாகும் போட்டியும், அதை சரி செய்ய பெரியவர்கள் விதிக்கும் விதி முறைகளும் அப்படியும் எந்த குழந்தையும் சந்தோஷமடையாமல் போகும் நிலையும், இந்த உலகில் எந்த ஒரு செயல் முறையும், கொள்கையும் முழுமை அல்ல என்பதை காட்டுகிறது.

இதற்கு மேல் கதை கடை வீதியை சுற்றி நடக்க ஆரம்பித்து விடுகிறது, அதை பற்றி நான் அதிகம் எழுத போவதில்லை. ஆனால் ஞாபகத்தில் இருக்கும் சில விஷயங்களை மட்டும் சொல்கிறேன். கதையில் ஒரு கட்டத்தில் தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் வாக்கு வெல்ல சாதி, மத வகையில் என்னென்ன வேலைகள் நடக்கிறது. பத்திரிக்கை எப்படி இதற்கு  உதவுகிறது என்று விரிவாக நமக்கு காண்பிக்கிறது. புளிய மரத்தை வெட்டாமல் நிறுத்த மரத்தின் கீழ் ஒரு  சிலை பிரதிஷ்டை செய்து ஒரே நாளில் ஒரு பெரும் பக்தர் கூட்டம் சேர்த்து விடுகிறது. மூன்று மாதங்களாக பத்திரிக்கையில் எழுதி பல வேலைகள் செய்து மரத்தை வெட்ட முயற்சித்தால், அதை தடுக்க ஒரே நாளில் மதத்தின் பெயரால் ஒரு பெருங்கூட்டம்  கூட்டப்பட முடிகிறது. மதத்தின் சக்தி அப்படி. வியாபரிகளின் வாழ்கையும், அவர்கள் முன்னேறும் மற்றும் நஷ்டமடையும் தருணங்களையும் பல கதாபாத்திரம் மூலம் எடுத்துரைக்கிறது இந்த கதை.


இந்த கதையை படிக்கும் போது இது வாசகர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் அறிந்த அத்தனை மரங்களையும் நினைவூட்டும். அதில் இன்று முக்கால் வாசி மரங்கள் வெட்ட பட்டிருக்கும் என்ற உண்மையை உணர்த்தி கசப்புட்டும். இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பு நமது வாழ்க்கை முறை, அதாவது இந்திய வாழ்க்கை முறை இப்படி இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். என் தாத்தா மரங்களையும், செடிகளையும் பேணி பாதுகாத்து வளர்த்தார், உடல் நிலை சரியில்லா கடைசி காலத்தில் மருத்துவமனையில் இருக்கும் போதும், அந்த செடிகளுக்கெல்லாம் யார் தண்ணீர் ஊற்றுவார் என்று அழுதார். நாலு பெரும் வேப்ப மரம் அவர் வீட்டருகே இருப்பதால், அவரை வேப்ப மரத்துக்காரர் என்று தான் அவர் கிராமத்தில் அழைப்பார்கள். ஆனால் அதற்கடுத்த தலைமுறை அப்படி இல்லை. அந்த தலைமுறைக்கு தான் தான் முக்கியம். தனக்கு முக்கியமில்லாத, தனக்கு தொல்லை கொடுத்த எதையும் அது விட்டு வைக்காது. என் வீட்டில் கொத்து கொத்தாக பூத்து, வாசனை பொங்கும் சென்பக மரம், கட்டெறும்பு வருகிறது என்ற காரணத்துக்காக வெட்டப்பட்டது.


மதுரையில் எங்கள் வீட்டின் முன் இருந்த வேப்ப மரம், அந்த வீதியிலே அது ஒன்று தான் மரம் என்று இருந்தது என்று நினைக்கிறேன், என் பாட்டி அந்த மரக்காலில் சிறு சிறு தெய்வ சிலைகள் வைத்து வழிப்பட்ட மரம். வீடு பெரிதாக கட்டும் போது அந்த மரம் இல்லாமல் ஆனது சென்னையில் சூளைமேட்டில் ஒரு பூங்காவிற்கு மதிய அளவில் போயிருந்தேன். ஊரே வெந்து தகித்து கொண்டிருக்கும் போது, அந்த பூங்கா மட்டும் சில் என்ற தென்றலுடன் இருந்தது. ஆனந்தமாய் தூங்க அழைப்பு விடுத்தது. காரணம்? மரங்கள், எப்படியோ தப்பித்து அது வரை உயிர் வாழ்ந்து கொண்டிருந்த  பெருமரங்கள். அப்படி அந்த மதுரை வீட்டின் முன் இருந்த வேப்ப மரம் ஒரு நாலு வீட்டிற்காவது நல்ல காற்றை தந்திருக்கும். என் பெற்றோர்கள் அதை வெட்ட எண்ணம் இல்லாமல் வீட்டின் முன் கெஞ்சம் இடம் விட்டு கட்டிக் கொள்ளாம் என்ற எண்ணத்தில் தான் இருந்திருக்கிறார்கள். வேப்பமரம் தெய்விக மரமாய் கருதபடுவதாயிற்றே, அதுவும் வீட்டின் முன் அத்தனை வருடம் நின்றது. ஆனால் வீட்டை கட்டும் போது கட்டட தொழிலாளிகள் மரத்தின் வேர் அஸ்திவாரம் தோண்டுவதற்கு தடையாக இருக்கிறது, மரத்தை வெட்டாமல் மேலே தோண்ட முடியாது என்று கட்டாயமாக சொல்லிவிட்டார்கள், பொறியாளர்களும் அதையே வழிமொழிந்திருகிறார்கள். உடனே ஒரு 5000 ரூபாய் செலவில் மரம் வெட்டப்பட்டிருக்கிறது. அந்த மரம் உண்மையிலே அகற்றப்பட வேண்டிய அளவுக்கு தடையாக இருந்தாதா? இல்லை வேரின் ஊடாக குழியை தோண்டுவது கடினம், மேலும் கூலி வாங்கி மரத்தையும் வெட்டி அதன் பின் குழியை சுலபாமாக தோண்டிவிடலாம் என்ற எண்ணத்தில் மரம் அகற்றப்பட்டதா என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒரு மரத்தை அரவணைத்து வீடோ, சாலையோ அமைக்கும் அளவிற்கு நம்மிடம் தொழில் நுடபம் இல்லை, அப்படியே இருந்தாலும் அது நம் சராசரி பொறியாளர்களுக்கு தெரிவதில்லை, அப்படியே தெரிந்தாலும் அதை அவ்வளவு சிரத்தை எடுத்து பின்பற்றுவார்களா என்று தெரியவில்லை. அந்த மரத்தை வெட்டி வீட்டை கட்டி விட்டு, வீட்டின் நடுவில் மேல் வெளியில் இருந்து கீழ் தளம் வரை நான்கு அடி சதுரமாய் ஒரு பெரிய ஓட்டை சந்து விட்டிருக்கிறார்கள், காற்றோட்டதிற்காக! 


கோவையில் என் பாட்டி வீட்டில் பல வருஷங்களுக்கு முன்னால் பல செடிகளையும் விதைகளையும் ஊன்றியது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. போன வருடம் அங்கு சென்றிருந்த போது, நாங்கள் விதைத்து/நட்ட பவள மல்லி என்னை விட இரு மடங்கு வளர்ந்திருந்தது. தன்னளவில் அது ஒரு மரம். வீதி முழுதும் காலையில் முத்தும், பவளமும் போல அதன் மலர்கள் இரைந்து கடக்கும். ஆனால் அது சாலை புதுப்பிக்கும் போது யாரையும் கேட்காமலே வெட்டப்பட்டுவிட்டதாம். அந்த சாலையின் விளிம்பில் எத்தனை வண்டி போகபோகிறதோ? இந்த சிறு இயற்கைகளை நகரமெனும் நரகத்திற்குள் அனுமதிக்க நம் தொழில் நுட்பம் வளர்க்கபடவில்லை. இயற்கையை அழித்து அது கொடுக்கும் அதே பலனை செயற்கையாக உற்பத்தி செய்வோம். நாம் போகும் வழி கவலைக்கிடமாகவே உள்ளது.

Thursday, April 17, 2014

என் வீட்டு வார்த்தைகள்...

என் வீட்டில் சாதாரணமாக புழக்கத்தில் இருந்த வார்த்தைகள், வேறு பல விஷயங்களை படிக்கும் போது அந்த வார்த்தைகளின் அர்த்தமும் அதை பற்றிய ஸ்வாரஸ்யமான தகவல்களும் தெரியவந்தது. அந்த சில வார்த்தைகளை இங்கு தொகுத்து அளிக்கிறேன்.

பத்து:
பத்து என்ன ஒரு அரிய வாரத்தையா? இல்லை தான். அன்றாடம் பயன் படுத்தும் வார்த்தைதான். ஆனால் என் அம்மா 'பத்து பாத்திரம் இருக்கின்றது' என்கிறாளே, அதற்கு என்ன அர்த்தம்? 10 பாத்திரம் இருக்கிறது என்றா? பத்து என்றால் தமிழில் சோற்றுப் பருக்கை என்றொரு அர்த்தம் உண்டு. அந்த பத்தை சமைத்த, உண்ட பாத்திரம் - பத்து பாத்திரம். கன்னடத்தில் சாதத்தை பாத் என்கிறார்களே, பாத்துக்கும், பத்துக்கும் தொடர்பு இருக்குமோ? சரி, 'சொத்து பத்து' என்றால்? பத்தின் இன்னும் ஒரு அர்த்தம் - வயல். இப்படி எனக்கு தெரிந்து பத்திற்கு மூன்று அர்த்தங்கள்.


நொம்பலம்;
இது என் தந்தை அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. அநேகமாக நாங்கள் கோவை சுற்று வட்டாரத்தில் குடியேரிய பிறகு பயன்படுத்த ஆரம்பித்த வார்த்தை என்றே நினைக்கிறேன். 'அந்த ஊருக்கு போரத்துக்குள்ள நொம்பல பட்டு போயிட்டோம்' என்பார். அது 'நொம்பலமா', 'லொம்பலமா' என சந்தேகமாகவே இருக்கும். 'நொம்பரம்'  என்றால் மலையாளத்தில் 'வலி' என்று பொருள். நொம்பலம் என்று அதே அர்த்ததில் நாஞ்சில் நாட்டு தமிழ் வழக்கில் கூறப்படுகிறது. அதன் படி, அவர் சொன்னதுக்கு 'அந்த ஊருக்கு போரத்துக்குள்ள வேதன பட்டு போயிட்டோம்' என்று பொருள். ஒரு வேளை கொங்கு பிரதேசமும் கேரள எல்லையில் இருப்பதால் அங்கு இந்த வார்த்தை பயன்பாடு இருந்திருக்கலாம். இதே போல் 'நொப்பி' என்றாள் தெலுங்கில் வலி என்று பொருள். தமிழில் 'நோவு' என்றும் சொல்வதுன்டு. ஆக, 'நொம்பலம்', 'நொப்பி', 'நோவு' இவை எல்லாம் ஏதாவது ஒரு வேர் சொல்லில் தோன்றியதாக இருக்கலாம்.

ஏனம்:
இதை என் தாத்தா பாத்திரங்களை குறிக்க பயன்படுத்துவார். அந்த 'ஏனத்த எடு' என்பார். அது என்ன ஏனம்? பாத்திரம் தெரியம், இல்லை என்றால் சம்படம், தட்டு, தூக்கு, குன்டா, அன்டா, ஏன் பான்ட்லி(வானலி?) என்ற விநோத உச்சரிப்பு கூட உள்ளது. ஆனால் ஏனம்? அவர் மட்டும் உபயோகிக்கும் வார்த்தை. ஒரு நாள் ஏதோ படிக்கும் போது அதில் இவ்வாறு வந்தது. 'அந்நகரம் இறையருளைப் பெறுவதற்காக மானுடன் மண்ணில் விரித்துவைத்த யானம் எனத் தோன்றியது.' அந்த தளத்திலேயே அந்த 'யானம்' என்ற சொல்லிற்கு அர்த்தம் 'வாயகன்ற பாத்திரம் - ஏனம்' என்று  பொருள் தரப்பட்டிருந்தது. அந்த தமிழ் வாரத்தையை இப்போது யாரும் பயன்படுத்துவதாய் தெரியவில்லை.

பரிக்கல்:
'இவன வச்சு பரிக்க முடில' - என் அம்மா சொல்லும் வாக்கியம். பரிக்க என்றால்? 'Barika' என்று உச்சரிக்கப்படும். இது ஒரு பழந்தமிழ் வார்த்தை. புறநானுற்றில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆட்சி செய்தல் என்று பொருள். இன்றும் மலையாளத்தில் பயன்படுத்தப்படும்  வார்த்தை. பரன கட்சி என்றால் ஆளும் கட்சி என்று பொருள். 'என்னை நீ ஒன்னும் பரிக்கான் வேண்டா' என்றால் 'என்னை ஒன்னும் நீ கட்டுப்படுத்த வேண்டாம்' என்று பொருள். இதன் படி என் அம்மா சொன்னதற்கு 'இவன வச்சு சமாளிக்க முடில' என்று தானே அரத்தம்.

பூச்சை:
என் அப்பா 'பூச்ச கண்ணனாட்டம் மூஞ்சி' என்று சொல்வார். அவர் எந்த அர்த்ததில் பயன்படுத்தினாரோ தெரியவில்லை. ஆனால் 'பூச்சை கண்ணன்' என்றால் மலையாளத்தில் பூனை கண்ணன் என்று பொருள். 'பூச்சை குட்டி' என்றால் பூனை குட்டி என்று பொருள். பூச்சை என்பது பழந்தமிழ் சொல்லான 'பூசை' என்பதில் இருந்து மறுவிய சொல்.  பூசை என்றால் இன்று பூஜையின் தமிழ் வடிவம். பழந்தமிழில் பூசை என்றால் பூனை. அதற்காக puzzy cat எனும் ஆங்கில வார்த்தை தமிழில் இருந்து தான் போயிற்று என்றும், தமிழே உலகத்தின் முதல் மொழி என்று வாதிடும் ஆள் நானல்ல.


லெக்கு:
'அந்த லெக்குல இருக்கு பாரு' என்பார் என் தாத்தா. 'அந்த இடத்தில் இருக்கு பார்' என்று பொருள். அதென்ன லெக்கு? இடத்திற்கு ஏன் Leg என்கிறார் என்று யோசிப்பேன். பிறகொரு நாள் கூகுள் செய்து பார்த்ததில் தான் புரிந்தது. 'இலக்கு' எனும் தூய தமிழ் சொல்லே 'லெக்கு' என்று மறுவி இருக்கிறது.

காபேரி:
ஒரு முறை நானும் என் தாத்தவும் தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருக்கும் போது, ஒரு ஆப்பரிக்க பெண் அதில் தோன்றினாள். அதை பார்த்துவிட்டு என் தாத்தா 'காபேரியாட்டிருக்குது' என்றார். அதென்ன, காபேரி, சொல்லின் பொருள் தெரிகிறது. ஆனால் ஏன் அப்படி ஒரு பெயர். தமிழ் படி கூறினால் கருப்பி என்று தானே கூற வேண்டும்? பின்பு இலங்கையை பற்றி படிக்கும் போது ஏதேச்சையாக தெரியவந்தது. என் தாத்தா இலங்கையில் சில வருடம் அவர் இளமை காலத்தில் இருந்தவர். இலங்கையில் 'காஃபிர்' என்ற கருப்பின மக்கள் பல நூற்றான்டுக்கு முன்னிலிருந்து போர்ச்சுகீசியரால் அடிமைகளாக கொண்டு வரப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இலங்கையிலேயே பாரம்பரியமாக வாழந்து பல இலங்கை பழக்கவழக்கங்களை உள்ளிழுந்து கொன்டு வாழ்ந்து வருகின்றனர். 'காஃபிர்' என்ற அரபு மொழி சொல் 'இறை மறுப்பவன்' என்ற அர்த்தில்  இஸ்லாமியர்களால் உபயேகிக்கப்படும் சொல். இஸ்லாமியரல்லாத அடிமை ஆப்பிரிக்கரை அப்படி சுட்டியதால் அவர்களுக்கு அதுவே பெயராகி போனது. அது இன்று ஒரு இன வன்சொல்லாகவே கருதப்படுகிறது. ஆனாலும் இலங்கையில் வாழும் அந்த கருப்பின மக்கள் தங்களை காஃபிர் என்றே சொல்லி கொள்கின்றனர். காஃபிர் - காபேரியாக திரிவது தமிழில் வெகு இயல்பாக நடந்திருக்கும்.

இலங்கை காஃபிர்



Thursday, April 10, 2014

ஒரு புளிய மரத்தின் கதை - வாசிப்பு அனுபவம் - 1

"ஒரு புளிய மரத்தின் கதை" ஒரு தமிழ் புனைவு, 1960களில்  முன்னொடி எழுத்தாளரான சுந்தர ராமசாமி எழுதப்பட்ட நாவல். இந்நாவல்  பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஹீப்ருவில் மொழி பெயர்க்கப்பட்ட இந்திய மொழி ஒன்றில் எழுதப்பட்ட முதல் நூல் இது.

காலத்தால் ஏற்படும் மாற்றங்களை பார்த்து கொன்டிருக்கும் ஒரு புளிய மரத்தின் கதை இது. இரண்டு தலைமுறையின் மாற்றங்களை கவனித்து கொன்டிருக்கும் புளிய மரத்தின் கதை இது. காரி உமிழ்ந்த போதிலும் நம்மை சலைக்காமல் தாங்கி கொன்டிருக்கும் பூமி மாதாவின் ஒரு ரோம காலாய் முளைத்து அதே பண்பை வெளிக்காட்டும் ஒரு புளிய மரத்தின் கதை. உலகெங்கும் எத்தனையோ மரங்களுக்கு நடந்தேரும் இந்த கதையை பிரதிநிதியாக வைத்து சொல்லப்பட்ட ஒரு புளி்ய மரத்தின் கதை.

கதையின் ஆரம்பத்தில் புளிய மரத்தின் பூர்வீகத்தை பற்றி கூறும் போதே புளிய மரம் பல பழைய ஞாபகங்களை என்னுள் தூன்டியது. புளிய குளம் என்ற குளத்தில் தீவு போன்ற ஒரு திட்டின் மேல் எழுந்திருந்தது இந்த புளிய மரம். இது கிட்டத்தட்ட நான் கல்லூரி காலங்களில் சில நேரம் சென்றமரும் மரங்களை ஞாபகபடுத்தியது. உடுமலைப்பேட்டை ஒரு டவுன். அங்கிருந்தி இரண்டு கிலோமீட்டர் ஊருக்கு வெளியே சென்றால் விவசாய நிலங்கள். அதற்னிடையே ஒரு குளம், 'ஒட்டுக்குளம்'. குளத்தை ஒட்டி ஒரு 20 அடி உயர மேடான மன்பாதை . அதில் சைக்கிளில் செல்லும் போது தொலைவில் இரு கருவேல மரம். பச்சை தளத்தில் கருத்த மரமாய், ஊசி இலைகளுடன் தன்னிருக்கு நடுவில் கணவுலகம் போல இருந்தது. இரண்டு மூன்று முறை போகும் போதும் வரும் போதும் அதை பார்த்த படியே சென்று வந்தேன். சென்றடைய முடியாத இடம் போலவே தெரிந்தது. ஒரு நாள் சென்று தான் பார்ப்போமே என்று தோன்றியது. குளத்தின் மறுகரையின் கீழே ஒரு அகல மண்பாதை மேடும் பள்ளமுமாக குளத்தை நோக்கி நுழைந்தது. முதலில் இரு கூரை வீடுகள், அதை மரத்தாலான பட்டியில் அடைக்கபட்ட பண்ணி மந்தை. அதிலிருந்து இரண்டு நாய்கள் துரத்தி கொன்டு வந்தது. வேகமாக சைக்கிளை உருட்டி கொன்டு அந்த மரங்களை நோக்கி சென்றேன். அந்த மரங்கள் இருந்த இடம் ஒரு தீபகற்பம். நடுவில் புல்வெளியில் இந்த மரங்கள். ஊருக்கு வெளியே அனுகமுடியாத இருக்கும் இதை போன்ற மரங்கள் கொடுக்கும் அனுபவங்களே வித்தியாசமானது. கண்னகளுக்கு குளிர்ச்சி, மனதிற்கு அமைதி, எவ்வளவு கத்தினாலும் யாருமே கேட்க முடியாத தனிமை என்று அனைவருக்கும் கிடைத்திடாது. ஆனால் இதையும் தான்டி அங்கு கிடைத்த விநோதமான காட்சிகள் திடுக்கிடவே வைத்தது. தலை அறுக்கப்பட்டு முன்டமாய் குளியில் தூக்கி எரியப்பட்ட ஒரு நாய். ஓரினசேர்க்கையரின் அனுகல், அந்த மரங்களில் கட்டப்பட்டிருந்த தாலி கயிறு.

இதே போன்று சென்ற நூற்றான்டில் இருந்த மரம் தான் அந்த புளிய மரம். கால போக்கில் அதை சுற்றி இருந்த குளம் ரோடாகிறது, புளியமரம் பேருந்து நிறுத்துமிடம் ஆகிறது, அங்கே பல கடைகள் தோன்றுகின்றன மரத்தை சுற்றி பல் வேறு மாற்றங்கள். இறுதியில் அந்த மரம் அற்ப மணித சுய நலத்தால் வீழ்த்தபடுகிறது. இந்த புளிய மரத்தாலேயே புளிய குளம் என்று பெயர் பெற்ற ஊர் படிபடியாக வளரும் வளர்ச்சியும், அங்குள்ள வியாபாரிகளின் போட்டியினாலும் பொறாமையானாலும் உன்டாகும் விளைவுகளே இக்கதை. ஆசிரியர், தன்னயே ஒரு பாத்திரமாய் வைத்து கதை சொல்லி செல்கிறார், கதையின் மூன்றில் ஒரு பங்கு ஊரை பற்றியும் ஆசான் என்பவர் சொல்லும் கதைகளிலுமே நகர்கிறது. கிராமத்தை மையமாக வைத்து உலகலாவிய பல விஷயங்களை உனர்த்ததுகிறது. அதன் பிறகு பெரிய பரப்பில் பேசி கொன்டிருந்த கதை சுருங்கி ஊரின் நடுவில் இருக்கும் கடை தெருவும் , வியாபாரிகளும், முனுசிபாலிடியையும் சுற்றி வருகிறது. தொடக்கத்தில் இருந்து இறுதி வரை புளிய மரம் கதையின் முதுகெழும்பாய் வந்து கொன்டிருக்கிறது.

ஆசான் கதையில் ஒரு முக்கிய கதா பாத்திரம். பழைய மனிதர். எண்பது வயதிலும் திடகாத்திரமான ஆள், கற்பனை நிறைந்த ஒரு கதை சொல்லி, எவ்வளவு கதை சொன்னாலும் தன்னை பற்றிய வீஷயங்களை வெளி சொல்லாத இறுக்கமான மணிதர். அவரே புளிய மரத்தின் கதையை ஆசிரியருக்கும் அவர் நன்பர்களுக்கும் சொல்கிறார். தூர்வாரப்படாமல் நாறும் குளமாய் இருந்த இடம் திருவிதாங்குர் மகாராஜாவால் எப்படி ஒரே வாரத்தில் ராஸ்தாவக மாறுகிறது என்று சொல்கிறார். புளிய மரத்தில் ஒருத்தி தூக்கு மாட்டி செத்து போன கதையை சொல்கிறார். அதனால் கோபமடைந்த அவள் மாமனான பூசாரி மரத்தை வெட்ட வரும் நேரத்தில் யுக்தியாக மரத்தை காத்த கதையை பெருமையுடன் சொல்கிறார்.

ஆசிரியர் வேலைக்காக வெளியுர் சென்று சில வருடங்கள் கழித்து வரும் போது ஆசானை ஊரில் கானவில்லை. அவர் என்ன ஆனார் என்பதற்கு பல விதமான கதைகள் இருந்தது. அதே சமயத்தில் ஊர் பல மாற்றங்களை அடைகிறது. அந்த காற்றாடி தோப்பு அழித்து ஒழிக்கப்பட்டு ஒரு பூங்கா உருவாக்கப்படுகிறது. மரங்கள் வெட்டப்பட்டு க்ரோடன்ஸ் செடிகள் நடப்படுகிறது. அதை பார்த்து கொன்டு இருந்த ஒர் கிழவர், கிட்டத்தட்ட ஆசான் போல மனநிலை உடையவர், அருகில் இருந்த இளைஞரை பார்த்து கேட்கிறார், 'எதுக்கு மரத்த வெட்ரானுவ?' இளைஞர் சொல்கிறார் 'மரத்த வெட்டிட்டு அழகான செடி நடத்தான்', 'ஏன் மரம் அழகில்லயோ?', 'இல்ல, செடி தான் அழகு', 'அப்ப அந்த செடி வளந்து மரமாகதோ?' இளைஞகன் கிழவரை முறைத்து விட்டு 'செடிய மரமாகாம வெட்டி வெட்டி உடுவாங்க' என்று கடுப்புடன் சொல்லி செல்கிறான். இது தான் இந்த இரு தலைமுறைக்கும் உள்ள வித்யாசம். கிழவரின் தலைமுறை இயற்கையை தங்களை போலவே கருதியது. இயர்கையை இயர்கையாகவே மிளிர செயத்து அதில் இருந்து இயற்கையாய் கிடைக்கும் பலன்களில் திருப்தி அடைந்தது. ஆனால் அந்த இளைஞகனின் தலைமுறை, கிட்டத்தட்ட நம் பெற்றொரின் காலத்தை சேர்ந்தவர்கள், அந்த தலைமுறைக்கு இயற்கையை சுய நலத்தையே பிரதானமாக கொன்டு அனுகப்பட வேண்டிய ஒரு பொருளாக மாறிவிட்டது. அந்த தலைமுறைக்கு இயற்கை ஒரு அழகு பொருளாகவும், தன் தேவைக்கு உபயோகித்து கொள்ளும் ஒரு மூல பொருளாகவுமே தெரிகிறது. அதற்கு இயற்கையை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை, ஸ்விட்சை போட்டால் ஃபேன் ஓடும் போது அதற்கு மரத்தின் அருமை புரியவில்லை, குழாயை திருகினால் தன்னிர் வரும் போது குளங்களின் தேவை தெரிவதில்லை. மரங்களையும், அதன் மேல் அமரும் பறவைகளையும், அது வீசும் தென்றலையும் அனுபவிக்க தெரியாது. அதன் கண்னுக்கு செயற்கையாய் செய்யப்படும் அழகு தான் அழகாய் தெரிகிறது. அதுவும் நம் ஊர் செடிகளாலான மல்லி, முல்லை போன்ற செடிகள் அழகாய் தெரியாது. வெளிநாட்டு செடிதான் அழகாய் தெரியும். அதை பரமரிக்க இரண்டு ஆட்களை போட்டு பேனி பாதுகாப்போம். இலை அழகில் ஒரு பலனும் இருக்காது. பூக்காது, காய்காது, நிழல் தராது, தென்றல் வீசாது. ஆனால் அதை தான் வெள்ளை காரன் ரசிக்கிறான் அதனால் நாமும் ரசித்தாக வேண்டும், அதுவே நவநாகரிகம், அதுவே அறிவு பூர்வமான ரசனை. அன்று முதல் இன்று வரை இதே முட்டாள் தனம் தான். மணிதனை மையமாக வைத்து, மற்ற அனைத்து வளங்களும் மனிதனின் தேவைக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது என்பது மேற்கத்திய சிந்தனை. காலனிய காலத்தின் ஆரம்பத்தில் ஒரு கப்பல் செய்ய 2000 மரங்கள் தேவைப்பட்டிருக்கிறது. உலகம் முழுதும் சென்று காலனி ஆதிக்கம் புரிந்த அந்த ஐரோப்பியர்கள் எத்தனை மரங்களை அழித்து ஒழித்திருப்பார்கள்? ஆனால் கீழை சிந்தனைகள் இயற்கையோடு ஒன்றி வாழவே முயன்றிருக்கிறது. தேவைகேற்ப இயற்கையிடம் எடுத்திருக்கிறதே தவிர பேராசையால் அதை அழித்தொழிக்கவில்லை. ஆனால் இந்த காலனி ஆதிக்கத்தால் நமது பன்பாட்டின் பல்வேறு விழுமியங்கள் நம்மிடம் இருந்து நழுவி சென்றுவிட்டது.