Tuesday, July 14, 2015

ஜே ஜே சில குறிப்புகள்

ஜே ஜே சில குறிப்புகள் இப்போது தான் படித்து முடித்தேன். ஒரு வித்தியாசமான நாவலாக இருந்தது. அதில் கதை என்று ஒன்று இல்லாததால் அப்படி இருந்திருக்கலாம். முழுக்க முழுக்க தத்துவார்த்த தளத்திலான பிரச்சனைகளை பேசுகிறது. அதை படிக்கும் போதே இது தான் இருத்தலியல் பிரச்சினைகளை பேசுகிறதோ என்று தோன்றியது. பின்பு இணையத்தில் தேடி உறுதி செய்து கொண்டேன்.

மனிதன் இது வரையிலும் புரிந்து கொள்ள முயன்று தோற்று கொண்டிருக்கும். இதுவரை முழுமையான விடையை அறிந்திடாத இந்த உலகை, அதன் இயக்கத்தை பற்றி பேசுகிறது. அதன் நாயகனான  ஜே ஜேயின் சிக்கலும் இதுவே. இந்த கேள்விகளால், வியப்புகளாள், தேடல்களால் அலைக்களிக்கப்படுகிறான்.   தான் செய்யும் காரியத்தை மன ஊசலாட்டம் இல்லாமல் முடிவு எடுப்பதற்கான விடையை தேடி கொண்டே இருக்கிறான்.

ஒரு பசுமாட்டின் மேல் எச்சில் உமிழும் ஒரு மனிதனை பார்த்து அவனின் இந்த கீழ்மை குணத்திற்கு எது காரணம் என ஆராய்கிறான். ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிடுவது பற்றி தீவிரமாக பல மணி நேரம் யோசித்துவிட்டு அவனை தேடி சென்று பிச்சையிடுகிறான். இப்படி வாழ்க்கையை முழுதும் தேடலுக்கும் சிந்தனைக்கும் கொடுத்துவிட்ட மனிதனை பற்றிய நாவல் இது.

நாவல் பேசும் காலத்திய இலக்கிய போக்கும் கருத்தியல் சூழ்நிலையை தெரிந்திருந்தால இன்னும் நன்றாக பிடி கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தும் பல இடங்கள் சிந்திக்க வைத்தது, பரவசமூட்டியது.

கதாப்பாத்திரங்கள் ஒரு விஷேச தளத்தில் உரையாடுவது போல் தோன்றியது. பெரும்பாலும் தத்துவார்தமான, கருத்தியல் பற்றிய உரையாடல் தான். அது அவர்களை ஒற்றைப்படையாக சித்தரிப்பதாக தோன்றியது. கதாப்பாத்திரங்களில் சிக்கல் இல்லை. அது ஒரு குறைபாடாக தோன்றியது.

சிந்திக்க வைத்த சில குறிப்புகள்:
  • ஜே ஜேயிடம் இன்னொரு முற்போக்குவாதி கூறும் ஒரு  கருத்து. சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றால் அதில அவ்வப்போது கூச்சலிட்டு விமர்சனம் செய்வது உதவாது. சமூகம் இயங்கும் நிலைகளை அறிவியல் பூர்வமாக ஆராயவேண்டும். அதன் நியதிகளை கண்டடைந்து அதை கட்டுப்படுத்துவதன் மூலம் சமூகத்தில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியம் என்று சொல்வது போல் வரும். இது ஒரு சதிகார வழிமுறை என்று தோன்றியது. அப்போது மக்கள் என்ன ஆராய்ச்சி மிருகங்களா?
  • நான் ஏவியதை செய்ய ஒரு குட்டி பூதம் வேண்டும். நான் ஏவும் சிறு காரியங்களை செய்ய. பெரிய காரியங்களை நான் பார்த்து கொள்வேன்.
  • ஒற்றை கருத்தை அனைத்தற்குமான தீர்வு என்று பிடித்து கொண்டு அனைத்து பிரச்சினைகளுக்கும் கண்மூடிதனமாக அந்த தீர்வையே போட்டு பார்த்தல். முல்லைக்கள் ஜே ஜேவுடனான விவாதம்.
  • சுதந்திர போரட்டத்தை வரும் ஒரு குறிப்பு. இந்தியர்கள் ஆளமுடியும் என்று இந்தியர்களுக்கு நம்பிக்கையின்மை. குறிப்பாக பெண்களுக்கு.
  • மனம் என்ற மனிதனின் புதிரான அங்கத்தை பற்றி பல்வேறு கதாப்பாத்திரங்களுக்கு தோன்றும் சிந்தனைகள்.

Monday, July 13, 2015

எழுத்தாளர் ஜெயமோனுடன் ஒரு சந்திப்பு - அனுபவ குறிப்பு

ஜூலை 5 2015 அன்று ஒஹாயோ டொலிடோ நகரத்துக்கு அருகில் இருக்கும் சிவா சக்திவேல் அவர்களின் இல்லத்தில் 3:30 மணிக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் இருக்கும் ஃபார்மிங்டன், மிஷிகனிலிருந்து  95 மைல் தூரத்தில் இருந்தது அந்த இடம். ஒன்றரை மணி நேர பயணம்.  மதியம் 3:20க்கு அங்கு சென்று சேர்ந்தோம். புகைக்கும் நண்பர்கள் கடனை முடித்தவுடன் 3:25க்கு வீட்டிற்க்குள் நுழைந்தோம். கனிவான வரவேற்புடன் எங்களை அழைத்து உபசரித்தார் சிவா அவர்கள். நமஸ்காரம் என்று வரவேற்றதற்கு சில திராவிட நண்பர்கள் வணக்கம் என்று பதிலளித்தனர்.

ஜெயமோகன் அவர்கள் களைத்து வந்ததாகவும். தற்சமயம் சிறிது உறங்கி எழுந்து தயாராகி கீழே வருவார் என்று சொன்னார்கள். நாங்கள் ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தோம். வீட்டில் பல உலோக சிற்பங்கள் ஓவியங்கள் என்று கலை அழகோடு இருந்தது. கொலம்பஸ் நகரிலிருந்து இருந்து மூன்று வாசகர்கள் வந்திருந்தார்கள். அடுத்த நாள் ஜெவுக்கு டப்ளின் என்ற ஊரில் நூலகத்தில் ஒரு கலந்துரையாடல் இருப்பதாக சொன்னார்கள. என்னுடன் வந்த நண்பர்கள் மீண்டும் காற்றுக்கு வெண்மை தூவக் கிளம்பினார்கள்.

ஒரு 4:15 மணி அளவில் ஜெயமோகன் அவர்களும் அருண்மொழி அவர்களும் இறங்கி வந்தார்கள். ஜெ புத்துணர்ச்சியுடன் தெரிந்தார். அவர் அறையில் நுழைந்தவுடன் அங்கு அமர்ந்து பேசி கொண்டிருந்தவர்கள் எல்லாம் தன்னியல்பாக எழுந்து கொண்டனர். அவர் எல்லா முகங்களையும் பார்த்தார். கைகளை கோர்த்து இடை அளவு உயர்த்தி இறக்கினார். அவருக்கு அங்கு வந்த வாசகர்கள் எவரையும் தெரியவில்லை என்று தெரிந்தது.

மெதுவாக நடந்து வந்து ஒவ்வொருவருடனும் அறிமுகம் செய்து கொண்டார். காணொளிகள், புகைப்படங்களில் பார்த்தது போன்ற அதே வெண்பட்டை கண்ணாடி. முழுக்கை சட்டையும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தாரர். தலையை எண்ணையிட்டு படிய வாரியிருந்தார். ஒவ்வொருவரும் பெயரை சொல்லி கை குலுக்கினர். நானும் "நான் ஹரீஷ்" என்றேன். ஒரு நொடி பார்த்தார். பின் "வெண்முரசு விவாதக்கு..." என்றவுடன் "ஓ" என்று சொல்லிவிட்டு சிரித்தார்.கைகுலுக்கலில் சற்று இருக்கம் கூடியது. பின் அருண்மொழி அவர்களிடம் அறிமுகம் செய்தார்.

சில வாசகர்கள் எப்போதிருந்து அவரது படைப்புகளை படிக்கிறார்கள் என்று சொன்ன போது தொப்பி திலகம் பற்றிய உரையாடல் வந்தது. இன்றிருக்கும் 90 சதவிகித வாசகர்கள் அப்படி தன்னை அறிந்தவர்கள் என்று ஜெ சொன்னார். இதை ஒட்டி எழுத்தினால் தான் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளை பற்றி அவர் சொன்னார். அப்போது அரசியல் தலைவர்கள் பற்றி பேச்சு நடந்தது.  அவர்களின் இலக்கிய அறிவு, வாசிப்பு போன்ற சில ஸ்வாரஸ்யமான விஷயங்களை சொன்னார்.

அப்போது நான் கேட்டேன் "பிரச்சார கவிதைகளை எல்லாம் இலக்கியம் என்று சொல்வதா இல்லை அது ஒரு தனி வகையா? ஏனென்றால் சமீபத்தில் மலையாளத்து அரசியல் கவிஞர் ஒருவர் பற்றி எழுதியிருந்தீர்கள்". பிரச்சார கவிதைகள் என்பது வேறு, இலக்கிய அம்சம் கொண்ட பிரச்சார கவிதைகள் என்பது வேறு என்றார்.

அப்போது ஒருவர் அவர் பங்கு வகித்து பின் வெளியேறிய அரசியல் கட்சிகளை பற்றி கேள்வி கேட்டார். அதற்கு ஜெ அவருக்கு அரசியல் கட்சிகளில் கொள்கை பிடிக்காமல் வெளிவந்ததாகவும், ஆனால் அந்த கட்சிகளில் இருப்பவர்களிடம் தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த முரண்பாடும் இல்லை என்றார். அவரின் இளமை பருவத்தில் அவரிருந்த ஊரில் நடந்த சில விஷயங்களே அவரை ஆர்.எஸ்.எஸில் சென்று சேர தூண்டியதாகவும். தான் எதில் ஈடுப்பட்டாலும் அதில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றும் அதையே அந்த கட்சியிலும் செய்ததாக சொன்னார். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் பிடிக்காமலான போது அதன் நேரெதிர் கட்சியான கம்யூனிஸ்டில் சென்று சேர்ந்ததாக சொன்னார்.

நான் கேட்டேன், "இந்து மதம் இந்தியாவில் தன்னுள் பல மதங்களை சேர்த்து கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது. இதை இந்து மதம் அராஜகம் இன்றியே சாதித்திருக்கிறது. பிற மதங்களான சமணம் பெளத்தம் போன்ற மதங்களுடன் ஒரு ஆரோக்கியமான உறவினிலேயே இருந்திருக்கிறது. அப்படி இருக்கையில், இந்து மதம் இன்றிருக்கும் கிறித்துவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுடன் ஆரோக்கியமாக இணைந்திருக்க என்ன செய்ய வேண்டும். பிற மதங்களை, தெய்வங்களை தன்னுடன் இணைத்து கொண்ட இந்து மதம் இந்த மதங்களுடனும் அதை செய்ய இயலுமா?" என்று கேட்டேன்.

அதற்கு அவர் விரிவான பதிலை சொன்னார்.  அப்படி செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சொன்னார். ஒரு ஜனநாயக நாடான இந்தியா எல்லா மதத்தினருக்கும் அவர்களின் மதத்தை கடைபிடிக்க சுதந்திரம் தர வேண்டும் என்றார். மதங்களின் தத்துவ முரண்களை பற்றி பேசினார். மெல்ல மெல்ல கேள்வி பதில் பொது விவாதமாக மாறியது. அனைவரும் அவரவர் கருத்துகளை சொல்ல தொடங்கினர். கேள்வியிலிருந்து மெல்ல நகர்ந்து யூத மதமும் அமெரிக்க லிபரல்களும் என்ற அளவில் பேச்சு திசை திரும்பியது.

விவாதத்தின் Frame of reference தனக்கு மிகவும் முக்கியம் அதில் தான் எப்போதும் கவனமாக இருப்பதாக சொல்லி மீண்டும் கேள்விக்கு வந்து பதிலளித்தார். நான் மேலும் மேலும் கேள்விகளை அதில் கேட்க, அவர் "நான் என் கருத்தை சொல்லிவிட்டேன். அதை ஏற்றுகொள்வது உங்கள் விருப்பம், ஆனால் என் பதில் இவ்வளவு தான். வேறு கேள்விகளுக்கு நகர்வோம்" என்றார். எனது கேள்வியை வைத்து எனது அரசியல் நிலைப்பாட்டை தவறாக புரிந்து கொண்டுவிட்டாரோ என்று தோன்றியது. அதை மட்டும் தெளிவுப்படுத்தினேன்.

இலக்கியம் சார்ந்த கேள்விகளுக்குள் நகர்ந்தோம். "ஒரு நாவலில் வரும் கதாப்பாத்திரம் அந்த எழுத்தாளரின் பார்வையை கொண்டிருக்கிறதா? அதாவது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு வகையில் நுண்ணுணர்வு இருக்கும் என்று சொல்லியிருந்தீர்கள் அது கதாப்பாத்திரங்களிலும் வெளிப்படுமா? " என்று கேட்டேன். "ஆம். அது எழுத்தாளனின் தனிதன்மை அது அவனது படைப்பில் வெளிப்படும். எனது படைப்பில் காட்சி வடிவமாக அதிகம் வரும், மணம் சார்ந்த குறிப்புகள் அதிகம் வரும்" என்றார்.

அவரது எழுத்துமுறையை பற்றி பேசினோம். அதை அவர் Ride into unconsciousness என்று சொன்னார். ஒரு கனவுக்குள் நுழைந்ததை போல் சென்று அந்த கனவுலகை எழுதுவது என்றார். இப்படி பட்ட எழுத்து முறைக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று கேட்டேன். எல்லா வகையான creative writing-ம் இதை போன்றது தான் என்றார். "ஒரு பொம்மையை தொடர்ந்து சில மணி நேரம் பார்த்து கொண்டிருந்துவிட்டு சென்று தூங்கினால் அது நம் கனவில் வரும் அதை போல தான் என் எழுத்தும், ஒரு விதமாக கனவை தூண்டிவிட்டு கொண்டு எழுதுவேன்" என்றார்.

ஒரு நண்பர் கேட்டார், "இந்த creative writing என்பதை ஒருவர் பயிற்சியின் மூலம் வளர்த்து கொள்ள முடியுமா?" என்று.  நிச்சயம் முடியாது என்றார். இது மனிதர்களின் தனித்தன்மை சார்ந்து விஷயம். பிறப்பிலேயே அந்த தன்மை இருந்திருந்தால் தான் அது சாத்தியம் என்றார். முன்பு அப்படி நினைத்து கொண்டிருந்தார்கள் Behaviorist என்ற தரப்பு ஒரு குழந்தை எந்த சூழ்நிலையில் வளருகிறதோ அதை பொறுத்து அதன் திறன் வளர்கிறது என்று சொல்லிவந்தார்கள். ஆனால் அது அப்படி அல்ல. இதை குறித்து Piaget மற்றும் Chomsky என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் விவாதம் செய்திருக்கிறார்கள். இணையத்தில் இந்த விவாதம் கிடைக்கும். அதன்படி குழந்தையின் திறன்கள் பிறப்பிலேயே முடிவாகிவிடுகிறது என்று வாதிட்டார் Noam Chomsky" என்றார்.

"Fine arts வகையான இசை ஓவியம் போன்ற விஷயங்களை வெறும் பழக்கத்தின் மூலம் அடைந்துவிட முடியும். அது ஒரு craft தான். ஆனால் அந்த craftக்கு மேல் creativityயை கொண்டு வர முடிவது தான் ஒருவரை கலைஞனாக செய்கிறது" என்றார். ஒரு உதாரணம் சொன்னார், இவரும் சுந்தர ராமசாமியும் ஒரு இசை கச்சேரிக்கு போகும் போது. இவர்கள் நுழைவதற்கு முன் இசை கச்சேரி தொடங்கி பாடி கொண்டிருந்தார்களாம். அரங்கின் வெளியே நடந்து வரும் போதே பாடலை கேட்டு, அரங்கில் நுழைவதற்கு முன்னரே "இவ இவ்வளோதான், இனி எத்தனை நாள் சாதகம் பன்னாலும் இவ இதுக்கு மேல பாடமாட்டா" என்றாராம் சு.ரா. அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்ககூடியது ஒரு கலைக்கும் craftக்கும் உள்ள வித்தியாசத்தை என்றார் அந்த நண்பர் கேட்டார் அப்போது உங்களுக்கு சிறு வயதிலேயே உங்கள் திறன் தெரிந்ததா என்று. ஆம் என்றார்.

இசை உருவாக்கும்  உணர்வு நிலைகளை பற்றி பேச்சு வந்தது. அப்போது நான் கேட்டேன், உணர்வுகளை தொட்டெழுப்பும் ஆக்கங்களை கலை என்று சொல்லலாமா என்று. அப்படி இல்லை என்றார். கலை என்பதற்கு ஒரு definition கிடையாது என்றார். அதில் ஒரு creativity இருக்கவேண்டும். அந்த creativity மூலமாக உணர்வுகளை தூண்டும் படைப்புகள் கலைப்படைப்பாகும் என்றார்.

பேசி கொண்டே கூட்டத்தில் யாரையோ பார்த்து விஷமமாக சிரித்தார். "சொல்லுங்க வேணு" என்றார். வேணு தயாநிதி வந்திருந்தார். அவரை அறிமுகம் செய்தார் . கிறிஸ்டோபர் ஆன்டனி வந்திருந்தார் அவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் புதிய படைப்புகளை பற்றி சொன்னார். சிறிது நேரம் கழித்து விவாதம் தொடர்ந்தது. நவீன படைப்புகள் அதன் பலவீனங்கள், பின் நவீனத்துவ படைப்புகள் என்று நீண்ட நேரம் பேசினோம். வெண்முரசை பற்றி பேசினோம். அதன் பின் இயங்கும் குழுவை பற்றி சொன்னார். சினிமா பற்றி கேள்விகள் வந்தது. அவரது ஆண்மீக அனுபவங்களை பற்றியும் குரு நித்ய சைதன்ய யதி பற்றியும் கூறினார். திடீர் என்று மணியை பார்த்தால் 7 ஆகியிருந்தது. நேரம் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை.

நான் உட்பட வாசகர்கள் சிலர் அடிக்கடி எழுந்து வெளியே சென்று திரும்பி வந்து அமர்ந்தனர். அவர் தொடர்ந்து 3 மணி நேரம் பேசி கொண்டிருந்தார். சில நெருக்கமான வாசகர்கள் கிளம்புவதால் அவர்களை வழியனுப்புவதற்க்காக எழுந்து வெளியே சென்றார். அந்த சமயத்தில் இரவு உணவு சாப்பிட தொடங்கினோம். சிவா சக்திவேல் அவர்களே உணவு ஏற்பாடு செய்திருந்தார். சாப்பிட்டு கொண்டே புது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தோம்.

எனது நண்பர் ஒருவர் வந்திருந்தார். கடந்த ஒரு வருடமாக ஜெவை படிக்கிறார். அவரிடம் சென்று "சார், என்னா, எப்டி பேசரார்?" என்று கேட்டேன். அவர் சாப்பிட்டு கொண்டே "நான் நென்சத விட நல்லா பேசரார்" என்றார். "ஆனா யாரயோ நடூல திட்டினுருந்தாரு" என்றார்., "யார திட்டினாரு!?" என்றேன். "அதான் சூதகர் பற்றி கேட்டப்போ கெட்ட வார்த்தலெ திட்னாரே". "யாரு சுதாகர்?", "சுதாகர் இல்லப்பா, வெண்முரசுல வர்மே, கதைலாம் சொல்வாங்கலே" "அது சூதர்ங்க", "ஆன், அதான், அத பத்தி கேட்டேன், பாடு, பாடுனு யாரயோ திட்டினாரு.". "சார், அது இங்கிலிஷ் Bard சார், குலப்பாடகன்னு சொல்வாங்க, குலக்கதைகள சொல்லுவான்". "ஓ, எனக்கு இன்னா தெரியும்" என்றார் சாப்பிட்டு கொண்டே.

திராவிட நண்பர் ஒருவர் பாயசம் ஆரிய உணவு அதை சாப்பிடமாட்டேனென்று கேக் எடுத்து கொண்டார். நாசூக்காக முள்கரண்டியில் சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்து நின்று கொண்டு இருந்தபோது ஜெ உள்ளே வந்தார். பசியில்லை சிறிது நேரம் கழித்து சாப்பிடுவதாக சொன்னார். அப்போது பேசி கொண்டிருந்த போது அவரிடம் சொன்னேன்.  "என்ன விட உயரமா இருப்பீங்கன்னு நெனச்சேன். ஆனா ஒரே உயரம் இல்ல கம்மியா இருப்பீங்க போலருக்கு" என்று சொன்னேன். அப்படியா என்று நெஞ்சை நிமிர்த்தி என் தோள் அருகில் வந்து நின்று பார்த்தார்.

பின் "நான் இவ்ளோ உயரம்னு தெரியாதா" என்றார். "இல்ல வீடியோல பாக்கும் போது உயரமா இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. ஏன் தம்பி உங்களோட நின்னு போட்டோ எடுத்திருக்கான். அவன் என்னவிட உயரம் அதுல நீங்க உயரமா இருக்கிற மாதிரி தெரிஞ்சது. அதான் அப்படி நெனச்சேன்" என்றேன். 'ஓ' என்று விட்டு. "போன தலை முறைல எல்லாரும் இந்த உயரம் தான். ஆனா இப்போ ஏன் பையன் என்ன விட நல்ல உயரம்".

தொடர்ந்தார் "பொதுவா போன தலை முறைல இந்த ப்ரோடின் இன்டேக் இவ்ளோ இல்ல, இப்பதான் ப்ரோட்டின் புரட்சி நடக்குது - கோழி ஆடுன்னு." என்றார். சாதாரணமான ஒரு சின்ன குறிப்புக்கு கூட வரலாற்று ரீதியான ஒரு பார்வை, ஒரு விளக்கம். இந்த சந்திப்பில் பலர் சொன்ன சிறு குறிப்பிலிருந்து அவர் கலாச்சார வரலாற்று கோணத்திலான விளக்கங்களுக்குள் நுழைந்ததை பார்த்தேன்.

அதன் பின் அமர்ந்து மேலும் பேசினோம். எந்த குறிப்பிட்ட கேள்விகளும் இல்லாமல் தன்னியல்பாக உரையாடல் நகர்ந்தது. வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் சங்கங்களை பற்றி பேச்சு வந்தது. குழந்தைகளை தமிழ் கலாச்சார தொடர்பு அறுந்துவிடாமல் வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது போல் கேள்வி வந்தது. பெற்றோர்கள் தங்கள் சொந்த நாட்டை எப்படி மதிப்பிடுகிறார்களோ, அதன் அடையாளமாக எதை முன்னிறுத்துகிறார்களோ அதை பொறுத்தே குழந்தைகள் அந்த நாட்டின் மீது மதிப்பு வைக்கிறது. தன் தாய் நாட்டை பற்றி பெற்றோர்கள் தாழ்வுணர்வு கொண்டிருந்தாள் குழந்தைகளுக்கு இயல்பாகவே அந்த நாட்டின் மீது மதிப்பு வராது. மேலும் பெற்றோர் மீதும் மதிப்பு குறையும்.

இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் கலாச்சார பாரம்பரியம் நன்றாக சொல்லி வளர்க்கப்படுகிறது. ஒரு வெள்ளையனின் இந்திய கலாச்சராத்தை, மதத்தை பற்றிய நக்கலுக்கு தத்துவத்தை கொண்டும் வரலாற்றை கொண்டும் எளிதாக பதில் கொடுக்க அந்த குழந்தைகளுக்கு தெரிந்திருக்கிறது. அந்த குழந்தைகள் வளரும் போது அவர்களின் மதம் சார்ந்த சடங்குகள் செய்ய கூச்சப்படுவதில்லை. நெற்றியில் திருநீறு வைத்து செல்ல வெட்கப்படுவதில்லை என்றார்,

"ஆனால் நம் தமிழ் குழந்தைகளுக்கு நாம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் சரியாக அறிமுகம் செய்வதில்லை. அவர்களுக்கு நாம் தமிழின் கேளிக்கை கலைஞர்களையே அறிமுகப்படுத்துகிறோம்.  அதனால் அவர்களுக்கு தங்களின் வேரை பற்றி பெருமிதம் உருவாவதில்லை. ஆனால் கர்நாடக சங்கிதம் போன்றவற்றை கற்ப்பிக்கப்படும் குழந்தைகளுக்கு ஓரளவு தாய்நாட்டின் மீது மரியாதை இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் வணங்குதற்குரிய சிலர் அங்கிருக்கிறார்கள்" என்றார்.

பின் தமிழ் சினிமா துறை சார்ந்து ஸ்வாரஸ்யமான சில விஷயங்களை சொன்னார். அறிவுக்கு அங்கிருக்கும் மதிப்பை பற்றி சொன்னார். "தாய் மொழி வழி கல்வி சிறந்ததா?" என்று கேட்டேன். "அவ்வளவு எளிதாக பதில் சொல்ல முடியாது, இன்னைக்கு தமிழில் ஒரு மானவன் படித்தால், அவன் பாடத்தை தவிர பிற துறைகளில் படிக்கவேண்டும் என்றால் அவனுக்கு இலக்கியம் தவிர வேறு எந்த துறையிலும் புத்தகங்கள் அதிகம் கிடையாது. அதை எல்லாம் பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர முடியும்" என்றார்.

கல்வி துறை சார்ந்து உரையாடல் நகர்ந்தது. அவர் சொன்னார் "ஒரு கருத்தை நாம் அறிந்து கொள்ளும் போது அதை முழுதாக உள்வாங்கியிருந்தால் அதற்கு ஒரு உவமை சொல்ல தெரிய வேண்டும். நான் ஒரு கல்லூரியில் சென்று புவியீர்ப்பு விசைக்கு உவமை சொல்ல முடியுமா என்று மாணவர்களை பார்த்து கேட்டேன் அவர்களிடம் பதிலில்லை. ஆசிரியர்களிடம் கேட்டேன் அவர்களிடமும் பதிலில்லை. அப்படிப்பட்ட படிப்பு உதவாது. அப்படிப்பட்ட படிப்பு நமது மாணவர்கள் அறிவியல் துறையில் முன்னேறுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும். இங்கு வந்து ஆராய்ச்சி துறையில் ஈடுபடுபவர்கள் கடும் உழைப்புக்கு பின்னரே அதை கடந்து வர முடியும். இதை போன்ற கல்வியை வைத்து கொண்டு நாம் இரண்டாம் தர ஆராய்ச்சியாளர்களையே உருவாக்கமுடியும்" என்றார்.

மீண்டும் வெண்முரசை பற்றி பேச்சு வந்தது. நீலம் பற்றி பேசி கொண்டிருந்தபோது தமிழ் மொழி பற்றி பேசினார். "தமிழ் மொழிக்கு என்று ஒரு ஓசையிருக்கிறது - ஒரு இசை. இன்று நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் உருண்டு வந்து நமக்கு கிடைத்தது. ஆற்றில் எங்கோயிருந்து அடித்து வரப்படும் கூழாங்கல்லை போல. பல மைல் உருண்டு வந்து அந்த கல்லின் புறம்  மொழுழொழுப்பாக வடிவம் பெற்றுவிடுகிறது. அது போல் தான் தமிழ் வார்த்தைகளும்."

சில நண்பர்கள் அவரிடம் ஆசி வாங்கி கிளம்பினார்கள். புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நானும் எடுத்துகொண்டேன். புகைபடங்களுக்கு ஜீன்ஸ் பேண்டுக்குள் கை விட்டு  நிற்பதன் பலன்களை பற்றி சொன்னார்.  அவ,ரை அடுத்தநாள் ஹாகிங் ஹில்ஸ் என்ற இடத்திற்கு ஹைக்கிங் அழைத்து செல்வதாக சொன்னார்கள். அவரே போதும் என்பது போல் சொல்வது வரை அவரிடம் உரையாடினோம். விடை பெற்று வீட்டை விட்டு வெளியே வரும் போது இரவு 9:50 மணி. கிட்டத்தட்ட 5:30 மணி நேரம் பேசியிருக்கிறோம். இருந்தும் போதாமல் தான் இருந்தது.

எழுத்தில் அவர் பேச்சைவிட நிதானமாகவும் ஆழமாகவும் இருப்பதாக தோன்றியது. அவருக்குள்ளேயே ஒரு பேச்சு ஓடி கொண்டிருப்பது போல் இருந்தது. கேள்வி என்ற ஒன்று அவருக்க தேவையில்லை. சில வரிகளை சொல்லிவிட்டு இரண்டு மூன்று நொடி அமைதிக்கு பிறகு அவரே மேலும் தகவல்களை சொல்ல தொடங்கிவிடுவார். ஒரு முறை என் முகத்தை பார்த்தே நான் கேட்க நினைப்பதை அவரே சொல்ல தொடங்கினார். கேள்விகள் அரைகுறையாக கேட்டாலும் அதற்குன்டான பதிலை சரியாக சொன்னார். அவ்வப்போது பேச்சுக்கிடையில் பேசாதவர்களின் பேரை கேட்டு அறிமுகம் செய்து கொண்டார்.

முதல் முறை அவரை சந்திக்கிறேன் என்றாலும். நான் அப்படி உணரவில்லை, அப்படி நடந்து கொள்ளவும் இல்லை. காணொளிகளில் காண்பது போலவே தான் இருந்தார். அதே பிசிறுடைய குரல். மிகவும் பழகிய ஒருவரிடம் பேசுவது போல் தான் பேசினேன். அவரிடத்திலும் அப்படி ஒரு அணுகுமுறை தெரிந்தது. எந்தவிதமான சம்பிரதாயமான சொற்களையும் நான் சொல்லவில்லை. ஆனால் தொடர்ந்து ஒரு அசாதாரணமான மனிதரிடம் இருந்து கொண்டிருக்கும் உணர்விருந்தது. ஒரு தருணத்தில் அவர் அருகில் அமர்ந்திருந்த எனக்கு அவரின் கனம் அந்த அறை முழுதும் நிரம்பியிருந்ததாக தோன்றியது.

பின்குறிப்பு: முற்றிலும் நினைவிலிருந்து எழுதிய குறிப்பு. தவறிருக்குமாயினும் அவை எனது பிழைகளே.