Wednesday, October 29, 2014

கந்தபுடம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதும் மஹாபாரத மறு உருவாக்கமான வெண்முரசை சார்ந்து நான் எழுதிய ஒரு நகைச்சுவை அத்தியாயம்.


>---------->    <-----------<         >---------~~    ~~----------<         >----------{    }----------<

கந்தபுடம்:

மேற்கு வான் விளிம்பில் நீர்த்த குருதி போல் ஒளி படர்ந்திருந்தது. குளிர்ந்த காற்றில் புல்லின் மணம் கிளம்பி நாசியை அடைத்தது. துரோணர் நடந்து கொண்டே மூச்சை ஒரு முறை நன்கு இழுத்து விட்டார். அவர் எடுத்து வைத்த காலடியின் முன் இருந்து ஒரு வெட்டு கிளி புல் எய்த அம்பு போல் தவ்வி விழுந்ததை அர்ஜுனன் பார்த்தான். அதன் இட காலில் இருப்பத்தேழு கரும்புள்ளிகள் இருப்பதை அவன் எண்ணிவிட்டான். அஸ்வத்தாமன் அதை எண்ண திணறுவதை பார்த்து அர்ஜுனன் உவகை கொண்டான். துரோணர் செருமி வலப்பக்கம் திரும்பி 'தூ' என்று துப்பினார். ஏவப்பட்ட அம்பென சென்ற அவர் எச்சில் அந்த வெட்டு கிளியை வெட்டியது.

துரோணர் மீண்டும் ஒரு முறை மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு "இளைஞர்களே, இலக்கு என்பது அம்பின் ஒரு பாகமே. அம்பு என்பது நிகழ் காலத்தில் வில்லாளியின் ஒரு பகுதி. விரல்களால் இழுத்து அவன் ஆற்றல் முழுதையும் அதில் செலுத்தி அனுப்புகிறான். அம்பானது விசை மட்டுமல்ல, வில்லாளியின் எண்ணத்தையும் தன் மீது ஏற்றி கொண்டு தான் எழுகிறது. மந்தண செய்தியை ஏற்றி பறக்கும் தூது பறவை போல. அம்பு இலக்கை தைக்கும் போது அம்பின் ஒரு பகுதியாக இலக்கு மாறிவிடுகிறது. எய்தவனும், அம்பும், இலக்கும் ஒன்றே என்று ஆகிவிடும் தருணம் அது. அந்த தருணத்தை வில்லாளி தன் அகத்தில் நிகழ்த்திய பிறகே அம்பு எய்ய வேண்டும். எய்பவனும், எய்யபடுவதும், எய்படு இலக்கும் ஒன்றென உணர்பவனே சிறந்த வில்லாளி. அவ்வாறு அவன் உணர்கையிலேயே அவன் பிரம்மத்தை அறிகிறான் என்கிறது தனுர் வேதம். பிரம்மத்தை நாம் உணர வழி காட்டும் தனுர் வேதத்தை வணங்குவோம்" என்றார். மாணவர்கள் "ஓம் ஓம் ஓம்" என்று முழங்க ஒரு கௌரவன் மட்டும் நித்ர வாயு உமிழ்ந்ததால் "ஓ..ஒ...ஒ..ம்" என்றான். துரோணர் அவர் சொற்களிலேயே ஊழ்ந்திருந்ததால் அதை கவனிக்கவில்லை.

துரோணர் தொடர்ந்தார் "வில்லில் இருந்து எழுந்து இலக்கை அடையும் அம்பு ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வை முழுதாக உணர்பவனுக்கே வில் வித்தை கை கூடுகிறது. ஒளியை மட்டும் உள்வாங்குபவன் அவன் அறிதலை ஒரு திசையில் குறுக்குகிறான். ஒலியையும் உள்வாங்குபவன் ஆறு திசைகளிலும் உள்ளதை அறிகிறான். ஆனால் அவன் இருப்பை மட்டும் அறிகிறானே தவிர அங்கே இருக்கப்பட்டதை அறிவதில்லை. தனது ஐம்புலன்களாலும் சூழ்நிலையை முழுதறிபவனுக்கே வில் வெற்றியை அளிக்கிறது. மனிதன் தனது சில புலன்களின் மீதான ஆளுமையை கால போக்கில் இழந்துவிட்டான். மனிதன் மிக குறைந்த அளவில் உபயோகிக்கும் ஒரு புலன் அவனது நாசி. ஆனால் அதன் ஆற்றலை மிருகங்கள் நன்குணர்ந்திருக்கிறது. அதை கண்டு நாம் கற்று கொள்ள வேண்டும். உங்கள் நாசியை திறந்து வையுங்கள், உலகின் இன்னொரு பரிமானத்தை அது உங்களுக்கு காட்டிவிடும்."

கௌரவர்களில் சிலர் சிறிதும் தயக்கமின்றி அவர்களின் சுட்டு விரலை நாசியில் விட்டு குடைந்தனர். மற்ற சில கௌரவர் தம் இடக்கை கட்டை விரலால் ஒரு மூக்கை நன்கு அழுத்தி கறந்து சிந்தினர். அர்ஜுனன் ஒரு புல்லை எடுத்து அவன் மூக்குக்குள் வருடி சில முறை தும்மினான். அஸ்வத்தாமன் கனைக்க புதருக்குள் இருந்து பிங்கல நிற குதிரை ஒன்று தலையை சிலுப்பி ஓடி வந்து அவன் அருகில் நின்றது. அவன் அதன் குஞ்சி ரோமத்தை கொய்து நாசியில் செலுத்தி வெறி கொண்ட குதிரை கனைப்பாக தும்மினான். அவன் தும்மல் ஒலியை கேட்டு குதிரையின் கொழுத்த பின் தசை சிலிர்த்தது. அனைவரும் கைகளை மரஉரி ஆடையில் துடைத்து கொண்டு துரோணரை தொடர்ந்தனர்.

துரோணர் கங்கை கரையை அடைந்து இடக்கையால் பக்கவாட்டை சொறிந்து கொண்டு தொலைவில் நோக்கினார். "சூதர் குழு வந்துவிட்டது, அனைவரும் அமருங்கள்" என்றார். அவரை சுற்றி வட்டமாக மாணவர்கள் அமர்ந்து கொண்டார்கள். அஸ்வத்தாமன் துரோணரின் இடப்பக்கம் அமர அர்ஜுனன் துரோணரின் நேர் எதிரில் அமர்ந்தான். பறவைகள் கூடணய கீச்சிட்டு பறந்து கொண்டிருந்தது. அர்ஜுனன் கங்கையை பார்த்தான், கங்கை நீர் சீராக சுழித்து ஓடி கொண்டிருந்தது. அது ஏன் எப்போதும் சுழித்தே ஓடுகிறது என்று எண்ணி வியந்தான். கொம்பும், முழவும், கினையும் ஏந்தி சூதர் குழு வந்தது. அனைவரும் வந்து நிற்க முன்னால் வந்த முதுசூதர் மட்டும் குழு நின்றது அறியாமல் மேலும் முன் நகர, அவரின் இடையை வளை கொம்பால் பற்றி இழுத்தான் பின்னிருந்த சூதன். அவர் இழுபட்டு திகைத்து காலை பின் இழுத்து செருக்கடித்து நின்றார்.

துரோணர் முதுசூதரிடம் "சூதரே, தொடங்குங்கள், கந்தி கதையை மாணவர்களுக்கு சொல்லுங்கள்" என்றார். சிறு குச்சியால் கண்களை மூடி கொண்டு பல்லை நோன்டி கொண்டிருந்த முதுசூதரின் மரஉரி கொசுவத்தை ஒருவன் பின்னிருந்து இழுக்க "கள்ளி! இந்த அகவையிலும்.." என்று திரும்பி பார்த்து நிலைமையை புரிந்து கொண்டு கைகளை மேலே தூக்கி பாட தொடங்கினார். "உத்தமர்களே, அடியேன் பெயர் இளவெனில் அழுவன். திருவிட நாட்டை சேர்ந்த நான் ஏகர் குலத்துதித்தவன். இன்று கந்தி காதை பாடும் நல்லூழ் அருளப்பெற்றவன்" என்றார்.

முதுசூதர் ஓங்கிய குரலில் பாடினார் "பாதாள நாகனாகிய தட்சன் தலாதலத்தில் தள்ளாடியபடி உலா சென்ற போது அங்கே தளதளா என்ற பெண் நாகத்தை கண்டு மோகம் கொண்டான். பல்லாயிரம் ஆண்டுகள் அந்த இரு நாகங்களும் அங்கு இருக பின்னி கிடந்தன. கூடல் முடிந்து நகர்ந்த தட்சனிடம் தளதளா தன்னை மணந்து அவனோடு பாதாளத்திற்கு அழைத்து செல்லும் படி சொன்னாள். மனைவியை அஞ்சிய தட்சன், "தேவி, நம் இருத்தலத்திற்கும் நீர் பாசன பிரச்சனை ஊழிக்கால தொடக்கத்தின் முன்பிருந்தே இருக்கிறது. இந்த இரு உலகில் இருந்து நாகங்கள் மண உறவு கொள்வதை குல மூத்தார் ஒப்ப மாட்டார்"என்றான். அதை கேட்ட தளதளா தளுதளுத்து "ஹிஸ்ஸ்ஸ்ஸ்" என்று ஓலமிட்டு அழுதாள். மனம் இளகிய தட்சன் "கவலை கொள்ளாதே தேவி, நான் இங்கு நினைத்த நேரம் வந்து செல்ல முடியும். ஒவ்வொரு அமாவாசையிலும் நான் இங்கு உன் முன் தோன்றுவேன்" என்று கூறி அவிழ்த்த சட்டையை மாட்டி கொண்டு பாதாளத்திற்கு இறங்கினான்.

ஆயிரம் ஆண்டுகள் கழித்து தளதளா முட்டையிட்டு தன் மகளை ஈன்றால். தன் மகளை கண்டால் ஊர் நாகங்கள் எல்லாம் நாக்கில் நரம்பில்லாமல் பேசுமென்று எண்ணிய தளதளா அந்த மகளை ரகசியமாக வளர்த்து வந்தாள். அந்த மகளின் பெயரை யாரும் அறியக்கூடாது என்பதற்காக  'அநாமி' என்று அவளுக்கு பெயரிட்டாள். அநாமி வளர்ந்து ஆதி அந்தம் கண்டறிய இயலா உடல் கொண்டவளாக மாறினாள். அவள் இருபத்து ஓராயிரம் அகவை நிரம்பிய உடன் அவளுக்கு தலாதள அரசு பரிந்துரைத்த திருமண வயதாகிவிட்டது என்று உணர்ந்தாள் தளதளா. அடுத்த முறை தட்சன் அதல அல்வாவும் மஹாதல மல்லிகையுடனும் வரும் போது அவள் புற்றின் வாசலில் துடைப்பத்துடன் நின்று சீறுவதை கண்டான். நிலைமையை உய்த்தறிந்த தட்சன், தன் வாலை வளைத்து தளதளாவின் கன்னங்களை தடவி நாக்கை சுழட்டினான். வாலை சுழற்றி அவன் வாலை தட்டிவிட்ட தளதளாவிடம் இன்று பாதாள பருப்பு வேகாது என்று அறிந்த தட்சன். அநாமியை பாதாளத்திற்கு அழைத்து சென்று மணம் நிகழ்த்தி வைப்பதாக வாக்குரைத்தான்.

பாதாளத்தில் அநாமியை மணம் முடித்து வைத்தால் அவன் குட்டு வெளிப்பட்டு விடும் என்று பயந்த தட்சன் விஷயத்தை கண்ணும் கண்ணும் வைத்தாற் போல் முடிக்க வேண்டும் என்று நினைத்தான். வின்னவர் எல்லோரும் இதை போன்ற செயல்களில் அனுபவமிக்கவர்கள் என்றென்னி அவர்களை நினைத்து ஊழ்கத்தில் அமர்ந்தான். அப்போது மின்னல் வெட்டியது போல் ஒரு என்னம் அவன் அடி மனதில் எங்கோ தோன்றி மறைந்தது. அவன் எழுந்து "ஆம் அது தான் ஒரே வழி" என்று சொல்லிக் கொண்டான். இருண்ட அறைக்குள் சென்று அங்கிருந்த ஆடி முன்  நின்ற தட்சன் மந்தண சீழ்க்கையால் அவன் யாரையோ விளித்தான். ஏழுலகம் கொண்ட வின்னில் ஏழாம் வின்னுலகான சத்ய லோகத்தில், தட்சனின் மருமகனான காசியப பிரஜாபதிக்கு அவன் அழைப்பு கணவில் கேட்டது. மாமனின் இந்த மாதிரி அழைப்புகளை நன்குனர்ந்த காசியபர் மனைவிகளிடம் சொல்லாமல் தலையில் துண்டை போட்டுக் கொண்டு ஓசையின்றி வெளிவந்து பாதாளத்திற்கு இறங்கினார்.

காசியபரை வரவேற்ற தட்சன், அவரை அமர செய்து ஆற்றுபடுத்தினான். ரசாதலத்து இன்மதுரசத்தை பருக கொடுத்தான். விதல வத்தலும், சுதல சுண்டலும் உப உண்டிகளாக கொடுத்தான். தட்சன் மெதுவாக தொடங்கினான் "மருமகனே, வின்னுலகின் ஆடிப்பிம்பம் பாதாளம். அங்கு இடமிருப்பது இங்கு வலமிருக்கும், வலமிருப்பது இடமிருக்கும். அங்கு சத்வ குணம் கொண்ட உயிர்களையெல்லாம் இங்கு தமோ குணம் கொண்டவை பிரதிபலிக்கின்றன. அங்கு முற்போக்கு சிந்தனை என்றால் இங்கு பிற்போக்கு சிந்தனை. அங்குள்ள அமைதி இங்கு கொந்தளிப்பாகவே பிரதிபலிக்கப்படுகிறது". மாமன் விஷயத்துக்கு வருகிறான் என்றறிந்த காசியபர் மெல்ல அசைந்து இடையில் இருந்த ஜனர் லோக ஃபாங்க சுருட்டை எடுத்தார். பீடத்திலிருந்த பீத நாக குஞ்சொன்றை எடுத்து வாலில் சுண்டி காசியபரின் சுருட்டை பற்ற வைத்தான் தட்சன்.

"பிரஜாபதியே நீ அறியாததில்லை, நெறி தவறிய பாம்பின் நாக்கில் வரும் வார்த்தைகளுக்கு பாதாளத்தில் மதிப்பில்லை. நெறி தவறி பிறந்த என் மகளுக்கு இங்கு வாழ்வுமில்லை. என் பிற மகள்களை மனந்து வாழ்வு தந்த பிரம்மனின் மைந்தனே. நீயே இவளை ஏற்று எனது துயர் நீக்க வேண்டும்" என்றான். வானை நோக்கி கண் மூடி புகை வெளியில் அமர்ந்திருந்த காசியபர் "யாருக்கு தான் இல்லை இந்த பிரச்சினை. உன் மகளை ஏற்பதற்கு எனக்கு மறுப்பேதுமில்லை. ஆனால் உன் இன்னொரு மகள் குரோதவசையிடம் வசை வாங்குவதை நினைத்தால் தான் சற்று கிலி கான்கிறது.. ஹும்.." என்று வின்வரை எழுந்து நின்ற தன் வெண் தாடியை நீவியபடி சிந்தனையில் ஆழ்ந்தார். "சரி. அதை நான் பார்த்து கொள்கிறேன். உன் எண்ணம் போல் நடக்கட்டும்" என்று புகை வழியும் புன்னகையுடன் சொன்னார்.

முதுசூதர் கக்குவான் இருமல் வந்து கக்கி கொண்டிருக்க துரோணர் முகத்தை சுளித்து அவரை பார்த்துவிட்டு திரும்பி அவரே கதையை சொல்ல தொடங்கினார். "அநாமியை மணந்த காசியபர் அவளை நட்சத்திரமாக மாற்றி வின்னுலகுக்கு ஏற்றினார். மாமன் கண்ணிர் மல்கி நன்றி உரைக்க காசியபர் விடைபெற்று பறந்தார். காசியபரிடம் இருந்து அநாமிக்கு பன்னிரண்டு நாகங்கள் பிறந்தன காலினி, காவனி, காபரி, கடாஃபி, கலட்டி, கபடி, கபாடி, களரி, டேக் வான் டூ, கிம் கி டுக், கிக்கு ஜீரா, மிஷ்கி லாலா". "ஆம் அதுவே இளைய ராகத்தை பின்னனி..." என்று முதுசூதர் ஏதோ சொல்ல தொடங்க அவர் பின்னிருந்த சூதன் அவர் கையில் முழவு கோலால் 'பட்' என்று வைத்தான். "உத்தமரே, விடைபெறுகிறோம்" என்று சொல்லி கங்கை கரையை நோக்கி நடக்க தொடங்கினார் முதுசூதர். முன் வரிசையில் இருந்த இரு சூதர்கள் முழவையும் கொம்பையும் கீழே வைத்து விட்டு கிழவரை பிடிக்க ஓடினர்.

துரோணர் தொடர்ந்தார் "இதில் கலட்டி என்ற நாகம் இந்திரனை காமுற்று அட்டை, அரட்டை, குட்டை, குரட்டை, பட்டை, பரட்டை, செட்டை, செரட்டை என்ற எட்டு நாகங்களை ஈன்றாள். இதில் செரட்டை என்ற நாகினி ஒரு பேரழகி, அவள் அழகில் மயங்கிய கந்தர்வன் அவளுடன் இணைந்தான். கந்தர்வனால் அவளுக்கு கதி, கத்தி, கவுந்தி, காதி, கநாதி, கந்தி என்று ஆறு நாகங்கள் பிறந்தன. அதில் கந்தி வளர்ந்து பேருருவம் கொண்டாள். வின்னை முழுதும் அடைத்து சுருண்டு கிடந்தாள். அவளுக்கும் வாயு தேவனுக்கும் ஏற்பட்ட காதல் எப்படி என்று தேவர்களும் அறியோர். அவளை தினமும் மாலையில் சந்தித்து காதல் சொல்லாடி மீண்ட வாயு தேவன் சுகந்தமாய் அனைத்துலகையும் நிரப்பினான். ஆனால் அதே சமயம் கந்தியின் பேருடலை பார்த்து மோகம் கொண்ட வாசுகி என்ற பாதாள பெருநாகன், வானில் ஏறி அவளை இழுத்து வந்து ரசாதலத்தில் அடைத்து வைத்தான். ரசாதலத்தில் ஊன் மது செய்யும் பீத நாகங்களின் கிடங்கில் நொதித்து அழுகிய ஊனுக்கு அடியில் அவளை சிறு பாம்பாக மாற்றி பதுக்கி வைத்தான். செய்தியை தெரிந்து கொண்ட வாயு அவளை அந்த ஊன்கிடங்கில் சந்தித்து மீண்ட போது துர்கந்தமாய் மாறி அனைத்துலகயும் நிரப்பினான். இவ்வாறே உலகில் கந்தங்கள் பிறந்தது என்று கந்த புராணம் சொல்கிறது."

துரோணர் "போர்களம் என்பது இடி முழங்கும், பாரைகள் உராய்ந்து உருளும், பேரலைகள் எழுந்து அடங்கும் ஓரிடம். அங்கு கேட்கும் பேரோலத்தில் அம்பின் ஓசையை அறிய மனித செவிகள் ஆற்றலில்லாதவை. தன் ஆற்றல் குறைவை அறிந்து அதை வேறொரு மாற்றாற்றலால் நிறைப்பவனே சிறந்த போர் வீரன். அவனை நாகங்கள் கூட அஞ்சுகிறது. செவியால் குறைந்த ஆற்றலை நாசியால் நிரப்ப கற்று கொள்ளுங்கள். உங்களை சுற்றியிருக்கும் ஒவ்வொரு பொருளையும் நீங்கள் அதன் வாடையை வைத்தே அறிந்து கொள்ள முடியும். இலக்கை நீங்கள் நாசியாலேயே குறிபார்த்து அம்பு எய்ய முடியும்." என்றார்

உங்களை தாக்க வரும் அம்பை உங்கள் நாசியை கூர்மையாக்கி அதை எய்தவன் முந்தய இரவு உண்ட உணவயும் உய்த்துனர நீங்கள் அறிய வேண்டும். உணவே மனிதனின் மன நிலையை தீர்மானிக்கிறது. உணவின் தன்மையை கொண்டே அவனில் இருக்கும் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் ஓங்கி சுருங்குகிறது. காயும் கணியும் மீனும் உண்டால் சத்வ குணம் பரவுகிறது, பறவையும் விலங்கையும்  உண்டால் ரஜோ குணம் ஓங்குகிறது. ஊர்வனவற்றையும் ஊசிப் போனதையும் உண்டால் தமோ குணம் ஆற்றல் கொள்கிறது என உரைக்கிறது தனுர் வேத குணசீலம்.

வாசங்களில் நாகங்கள் குடிகொண்டிருக்கிறது என்கிறது வேதங்கள். மூக்கை தீண்டி முகத்தை சுழிக்க செய்வது விடாய் கக்கும் வெண்நாகங்கள். நாசியில் நுழைந்து நாபியில் நிறைவது பாற்கடலில் உலவும் கருநாகங்கள். அதிலிருக்கும் நாகங்களை ஆழ்பவன் கந்தாபதி எனும் தேவன். அவன் உங்களை ஏற்றாலே நீங்கள் அவனை உய்த்தறிய முடியும். அவனை துதிப்போம். கந்தங்களை கையாள தெரிந்தவனுக்கு வில் கலையில் மிச்சமிருப்பது எண்ணங்களை அம்பில் ஏற்றவும் அறியவும் முடிவது மட்டுமே. எண்ணங்களை ஆட்சி செய்பவன் வெங்கிடுபதி. இவனை யவணத்தில் டெலிபதி என்றும் அழைக்கிறார்கள் என்று அங்கு கலவீரர்களாய் சென்று திரும்பிய என் மாணவர்கள் கூறினார்கள். "அவனை வணங்குவோம்" என்றார், மாணவர்கள் "ஓம் ஓம் ஓம்" என்று வணங்கினர்.

கௌரவர்களில் ஐவர் புல்லை மென்று கொண்டிருப்பதை ஓர கண்ணால் பார்த்த துரோணர் "உணவு பரிமாறுங்கள்" என்றார். ஏவலர்கள் உணவு பரிமாறினர். ஆமை ஊனை அகத்தே கொண்ட அப்பங்கள். பாலில் வேகவைத்து பசும் நெய்யில் பொறிக்கப்பட்ட கிழங்குகள். காட்டு ஆட்டை காத தூரம் விரட்டி சென்று பிடித்து மஞ்சள், மிளகாய், இஞ்சி, கிராம்பு, பட்டை, தெங்கு, கடலை ஆகியவற்றை செக்கிலிட்டு அரைத்து. சுட்ட ஊனை அதிலிட்டு நாற்பத்தி இரண்டு நிமிடம் கொதிக்கவைத்து சவ்வு பதம் பார்த்து இறக்கி. அதில் கொத்த மல்லி, கருவேப்பில்லை, ஆடாதோடா, நெடு மூங்கில் நடுங்குறுத்து, வண்டு துளைத்த மாம்பழச்சாறு ஆகியவைகளை சேர்த்து. உப்பும், மிளகும், ஜாதிகாய் துகளும் பத்து சிட்டிகை முறையே தூவப்பட்டு சமைத்த ஆட்டு குழம்பு அவர்கள் முன் ஆவிபறக்க வைக்கப்பட்டது. வேகவைத்த காய்களிட்ட கூட்டும் பரிமாறப்பட்டது. துரோணருக்கு காயும் கிழங்கும் பழரசமும் பரிமாறப்பட்டது. குந்தியின் ஆணையின் பேரில் அர்ஜுனனுக்கு மட்டும் பாசகஞானி மந்தரர் புதிதாய் கண்டடைந்த ஆரோக்கிய நாலரை பால் வைக்கப்பட்டது.

துரோணரின் சொற்களை அகத்தில் அசை போட்டு, அப்பங்களை வாயில் அசை போட்ட அர்ஜுனன், தாலத்தில் புது வகையான காய்கள் தட்டுபட்டதை பார்த்தான். பணிவுடன் துரோணரை பார்த்து "குருவே" என்றான். சிறு நாணல் குழாயை வாயின் இட விளிம்பில் வைத்து பழரசத்தை உறிந்து குடித்து கொண்டிருந்த துரோணர் அர்ஜுனனை பார்த்து புருவங்களை மட்டும் உயர்த்தி இறக்கினார். "இன்று உணவில் புது வகையான காய்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதே" என்றான். வாயிலிருப்பதை விழுங்கிவிட்டு செருமியபின் "ஆம், அதை நான் தான் சேர்க்க சொன்னேன். அது வில் வீரனுக்கு தேவையான ஊட்ட சத்து" என்றார். அர்ஜுனன் "குருவே, இதை நான் இதுவரை எந்த பந்தியிலும் உண்டதில்லை. என் தமையன் பீமன் சமையல் கலையை மந்தரரிடம் பயின்று வருகிறார். நான் சமையல் கொட்டகைக்கு சென்றிருந்த போது என் தமையன் எனக்கு எல்லாவற்றையும் விளக்கியிருக்கிறார். அஷ்டஃபலத்தையும் அதிலிடும் மூவகை காய் வகை பற்றியும் சொல்லியிருக்கிறார். ஆனால் இப்படி ஒரு காயை நான் இன்று தான் ருசிக்கிறேன்"

"பார்த்தா ஒன்று புரிந்து கொள், படகின் காலமும், ரதங்களின் காலமும் பழையது. இன்றைய காலம் பெருங்கலங்களுடையது. வானில் பருந்து வட்டமிடுவது போல இன்று ஆழியில் பெருங்கலங்கள் கோலமிடுகிறது. பாரதவர்ஷத்து துறைமுகங்களை காணாத பெருங்கலங்கள் பூவுலகில் எங்கும் இல்லை. மொழியும், உணவும், கலையும், காதலும் இன்று நாளும் ஒன்றுடன் ஒன்று கலந்து புதுமை கொள்கிறது. யவன மதுவை அருந்தும் நாம், பீத பட்டும் காப்பிலி வைரமும் அணியும் நாம், ஏண் புது உணவை பார்த்து மட்டும் திகைக்க வேண்டும்? இந்த காய்கள் அஸ்திர வடிவிலிருப்பதால் இது அஸ்திரங்களை அறிய உதவுகிறது அதனாலேயே இதை சேர்க்க சொன்னேன் என்றார். இதை ஆரியவர்த்த பாசகர்கள் சற்று சந்தேகத்துடனேயே பார்க்கிறார்கள். தட்சினத்திலேயே இதை பெரிதும் புழங்குகிறார்கள். நீர் தன்மை, விழுது தன்மை, மாவு தன்மை கொண்ட காய் வகைகளை போல் இவை விரைப்புத்தன்மை கொண்டது என்று வகுத்திருக்கிறார் அகத்தியர்.

தலையை தூக்கிய முதுசூதர் "ஆம் இளவரசே, நீண்டு வளரும் இந்த காய்கள் யவனத்திலிருந்து வந்து தென்னாட்டில் பயிரிடப்படுகிறது. முறுக்கேறிய முருங்கைக்காயும், சிவந்து விரைத்த கேரிட்டங்காய், சிறிதே நீண்ட வெண்டைக்காய், வளையும் தன்மை கொண்ட பீன்ஸாரங்காய். இந்த காய்களே தென்னகத்தில் பலருக்கு இஷ்டஃபலமாக இருக்கிறது. ஆனால் முறுங்கை என்பது வீரியமிக்கது என்று அங்கிருக்கும் கூத்து கலைஞர் ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார். இந்திரன் மைந்தரே, முருங்கை சமாச்சாரத்தில் தாங்கள் சற்றே கவனமாக இருத்தல் நன்று, இல்லையேல் பாரதவர்ஷத்தின் ஜனபதங்கள் போதாது." என்று முதுசூதர் சொன்னவுடன் சூதர்கள் அனைவரும் வெடித்து சிரித்தனர்.

முதுசூதர் தொடர்ந்தார் "இளவரசே, மனிதனின் நாக்கு உலகை அள்ளி விழுங்க நினைக்கும் நாகம். நாக்கை எண்வகையாக வகுக்கிறார் குமரி கோட்டு தொல் தமிழ் புலவர் நீலமேகர். அவை நாக நாக்கு, காக நாக்கு, தாக நாக்கு, யாக நாக்கு, வேக நாக்கு, மேக நாக்கு, போக நாக்கு, ரோக நாக்கு எனப்படுகிறது. இதிலடங்காத புன்னாக்கு உன்னும் ரிஷப நாக்கு கொண்ட நிஷாதர்களும் வணங்களில் உண்டு. அவர் நாக நாக்கை மேலும் நிறங்களின் அடிப்படையில் "கறி நாக்கு, கபில நாக்கு.." என்று தொடர, தெற்கு நோக்கி அமர்ந்திருந்த துரோணர் தன் வடக்கு வாயிலை கையால் மூடி சூதர்களுக்கு சைகை காட்டினார். முழவு சூதன் ஒருவன் முதுசூதரின் தலையில் கோலால் 'நொட்' என்று அடிக்க, முதுசூதர் "வக்காள.." என்று பச்சை தமிழில் ஏதோ சொல்ல வாயெடுக்க ஒரு சூதன் அவர் வாயை விரைந்து மூடினான்.

உண்டு முடித்ததும் துரோணர் "பயிற்சியை தொடங்கலாம், மானவர்களே நாசிகளை கொண்டு இவ்விடத்தை பாருங்கள்" என்றார். சூதர்கள் முதுசூதர் காதில் ஏதோ கிசுகிசுக்க அவர் எழுந்தார் "இளவரசர்களே, தாளம் நாற்பத்து ஏழு வகை, இதில் தப்பு தாளங்கள்..." என்று அவர் தொடங்க, துரோணர் "சூதரே" என்று கூவினார். முதுசூதர் துரோணர் இல்லாத திசையை நோக்கி திரும்பி "சொல்லுங்கள் உத்தமரே" என்றார். "தாளங்கள் பாடத்திட்டதில் இல்லை. பயிற்சியை தொடங்கலாம்" என்றார். முதுசூதர் தோளில் இருந்த துண்டை உதறி "அஆ" என்று முனகியபடி கக்கத்தில் வைத்தார். கங்கை நோக்கி திரும்பி வாசிக்க சொல்லி கைகளை காட்டினார். முரசு அதிர, கொம்பு பிளிர பேரொலி எழுந்தது. துரோணர் பந்தங்களை அனைக்க சொல்லி கையை காட்டினார். இருளில் ஒலி சூழ்ந்து அழுத்த மாணவர்கள் அந்த இடத்தை நாசியால் அறிய முயன்றனர்.

திடீர் என்று 'ஆ...' என்ற அபஸ்வரத்துடன் இசை நின்றது. "பந்தத்தை கொளுத்துங்கள் என்றார்" துரோணர். ஒளி வந்ததும் முது சூதர் இடையாடை கலைந்து கிடக்க இருசூதர்களால் தாங்கி எழுப்ப பட்டார். துரோணர் "மானவர்களே இதோ இந்த சூதரை நான் என் நாசியால் நோக்கியே தாக்கினேன். "குருவே" என்றான் ஒரு கௌரவன் "என்ன குண்டூசி" என்றார் துரோணர். "எப்படி துள்ளியமாக அவரது நாசியை தாக்கினீ்ர்கள்" என்றான் குண்டூசி. "அது மிக எளிது. அந்த சூதர் நாசி பஸ்பம் இழுக்கும் பழக்கம் கொண்டவர், அதை நான் அவர் இங்கு வந்து நிற்கும் போதே அறிய முடிந்தது" என்றார். "அவரை உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் என்னால் தாக்கியிருக்க முடியும். அவரின் குடுமியில் நீலி பிருங்காதி தைல வாடை வருகிறது, வாயில் மாலை அருந்திய புளித்த கள் வாடை குதம்புகிறது, மடியில் கட்டியிருக்கும் புகையிலை வாடை கமழ்கிறது. காலில் கண்ட கண்ட வாடை வருகிறது." என்றார். அஸ்வத்தாமன் "குருவே தாங்கள் எதை கொண்டு அவரை தாக்கினீர்கள்" என்றான். துரோணர் புன்னகைத்து தான் உண்ட தாலத்தை காட்டி "இதோ நான் வழித்து உண்ட இந்த முருங்கை பட்டையால் தான்." என்றார். துரோணர் இருமுறை சிறுமூச்சுகளை உள்ளிழுத்து, "ஆனால்.. இங்கு புதிதாய் ஏதோ ஒரு வீச்சம் எழுகிறதே" என்றார். கௌரவர்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல் திரும்பி ஒரே கௌரவனை பார்க்க அவன் குளம்பி விழித்தான்.

அர்ஜுனன் எழுந்து "மன்னிக்க வேண்டும் குருவே' என்றான். அப்போது அங்கு திரும்பிய துரோணர் அதை கண்டார். அங்கு ஒரு கரடி வாயிலும் குதத்திலும் அம்பு தைத்து வீழ்ந்திருந்தது. துரோணர் "அர்ஜுனா இதை எப்படி வீழ்த்தினாய் சொல்" என்றார். "குருவே பயிற்சியின் போது நான் நாசியால் உற்று நோக்கினேன். எனக்கு பின் பச்சை ஊன் வாடை எழுந்தது தெரிந்தது. அதன் மணத்தை வைத்து அது ஒரு மிருகம், மேலும் அது தமோ குணம் படைத்தது என்றறிந்தேன். எதிரிலிருந்த அப்பத்தை அம்பால் குத்தி பின்னால் வீசினேன். வாடை மேலும் கடுமையான போது இலக்கு தன் உடலை திருப்பி விட்டது என்றறிந்தேன். வில்லில் அம்பு கோர்த்து காத்து நின்றேன். அம்பை கடித்த மிருகம் உருமுவது மந்தமாக கேட்டது. வாடை எழுந்த இடத்தில் அம்பை தொடுத்தேன்" என்றான் அர்ஜுனன்.

துரோணர் புன்னகைத்து "வில் விஜயன் நீ. இனி நீ கற்க மிச்சமிருப்பது பஞ்ச பூதங்களையும் உன் வில்லால் ஆள்வதை மட்டும் தான்" என்றார். அர்ஜுனன் வணங்கி "தங்கள் தயை குருவே" என்றான். துரோணரின் வெண்தாடியில் வழிந்திருந்த ஒரு துளி நீரை அர்ஜுனன் உற்று நோக்கினான். அதன் வழியாக அவன் அஸ்வத்தாமன் முகத்தை பார்த்தான். அஸ்வத்தாமன் கண்ணுக்குள் ஒரு நாகம் நாநீட்டி தலை சொடுக்கி இமையா விழிகளுடன் நிற்பதை கண்டு திகைத்தான்.


 >---------->    <-----------<         >---------~~    ~~----------<         >----------{    }----------<


(ஹரீஷ்)

Sunday, October 26, 2014

சில மலையாள வார்த்தைகள்

  1. பரணம் - ஆட்சி
  2. ரோமாஞ்சனம் - புல்லரிப்பு
  3. வெப்பராளம் - கோவம்,கொதிப்பு
  4. எரப்பாளி - பிச்சைகாரன்
  5. சீத்தை - மோசம்
  6. நொம்பரம் - வலி
  7. பூச்சை - பூனை
  8. விஜாரம் - நினைப்பு
  9. அன்வஷிக்கனம் - விசாரிக்கனும்
  10. நொனா - பொய்
  11. வல்லதும் - ஏதாவது
  12. காயல் - கடல்
  13. அம்பலம் - கோயில்
  14. தரவாடு - ஒரு குடும்பத்தின் பெரிய வீடு
  15. தம்புராட்டி, தம்புராண் - ராணி, ராஜா
  16. முண்டனம் - மொட்டை
  17. வட்டு, பிராந்து - பைத்தியம்
  18. பஞ்ச சாரம் - சர்க்கரை
  19. சம்பாரம் - மோர்
  20. சக்கா - பலா
  21. கச்சவடம் - தொழில்
  22. சக்கரம் - காசு
  23. வெஷப்பு - பசி
  24. களி - விளையாட்டு
  25. ஓர்மை - ஞாபகம்
  26. தெளிவு - சாட்சி
  27. தாக்கோலு - சாவி
  28. ஒக்க - எல்லாம்
  29. முறி - அரை
  30. ஒழிமுறி - விவாகரத்து
  31. பராதி - புகார்
  32. பினக்கம் - கோவம்
  33. ஆத்யம் - முதலில்
  34. அவசானம் - கடைசி
  35. சிக்ஷா - தன்டனை
  36. ஆய்ட்சா - வாரம், கிழமை
  37. திவசம்  - நாள்
  38. கொள்ளம் - வருடம்
  39. மணிக்கூறு - மணி நேரம்
  40. சல்லியம் - தொந்தரவு
  41. வைய்யான் - முடியாது, இயலாது
  42. உச்சி - மதியம்
  43. புலரி - காலை
  44. பக்ஷனம் - உணவு
  45. அணியன், அணியத்தி - தம்பி, தங்கச்சி
  46. அம்மாவன் - மாமன்
  47. சுண்டு - உதடு
  48. சேலு - அழகு
  49. மின்டு - பேசு
  50. ஆக்ரஹம் - ஆசை
  51. செராய் - பேன்ட்
  52. சம்ஷயம் - சந்தேகம்
  53. கத்து - கடிதம்
  54. விளி - அழை
  55. தெற்று - தவறு
  56. ஷெமிக்கனும்/மாப்பு தரனும் - மன்னிக்கனும்
  57. ஷீனம் - நோய்
  58. தத்தா - கிளி
  59. பஹுமானம் - மரியாதை, மதிப்பு 
  60. வாதில் - கதவு
  61. ஏமான் - எஜமான் 
  62. சம்ஸ்காரம் - கலாச்சாரம்
  63. ஆத்மஹத்தி - தற்கொலை 
  64.  ஆலோஷனா - யோசனை
  65. தள்ளு - அடி
  66. வழக்கு - சன்டை
  67. கோடதி - நீதிமன்றம்
  68. ஒரப்பு - நீச்சயம்
  69. தோக்கு - துப்பாக்கி
  70. வைகும் - தாமதமாக