Monday, December 28, 2015

பிரசாதம் - சிறுகதை வாசிப்பனுபவம்


பிரசாதம் - சுந்தர ராமசாமி

மனிதன் வாழ்வில் தன்னால் சாதிக்க முடியாத விஷயங்களின் முன் நிற்கும் போது ஒரு குறிப்பிட்ட நிறைவு நிலையை அடைகிறான். அந்த கையறு நிலையில் இருந்து பிறக்கும் அமைதி அது. சிந்தித்து பார்த்தால் அந்த நிலையில் அவன் அடையவேண்டியது மிகுந்த வருத்தத்தையே. இருப்பினும் அந்த தருணங்களில் தான் ஒரு வகை நிம்மதி நம்மை சூழ்கிறது. அது ஒரு வகை கடந்து வந்த நிலை. ஆசைகளை பயத்தை ஆனவத்தை அனைத்தையும் கடந்த பிறகு எஞ்சும் நம்மில் சுரக்கும் அமைதி அது. இத்தனை சுமைகளை இறக்கி வைத்ததனால் வரும் நிம்மது அது.

அது ஒருவகையில் நம் அகங்காரம் முற்றிலும் ஒடுங்கும் தருணம் என்று கொள்ளலாம். என்னால் முடியும் என்னால் முடியம் என்று நாம் துரத்தி கொண்டு செல்லும் விஷயம் ஒரு தருணத்தில் நாம் என்ன முயன்றாலும் முடியாது என்று அறியும் போது நாம் நமது சிறுமையை அறிகிறோம். இந்த சிறுமை குணத்தால் சிறுமை அல்ல. இந்த பிரம்மாண்ட பிரபஞ்ச வெளியின் முன் சுழன்று சுழன்று ஏறி செல்லும் இந்த காலத்தின் முன் சிறு துகளினும் கோடி பங்கில் ஒருவனாய் நம்மை பார்த்து உணரும் சிறுமை அது. இந்த சமயத்தில் தான் சரணாகதி என்பது முழு அர்த்தம் கொள்கிறது. நதிகிருஷ்ணன் கால்களில் சென்று பணிவதன் மேன்மை புரிகிறது. இவை எதற்கும் நான் பொறுப்பல்ல நீயே என்று அவன் மீது சுமைகளை இறக்கி வைத்து பஞ்சு போல் பறக்கும் இலகு தன்மை கூடுகிறது. அதற்கு பின் எதுவும் செய்யலாம். நக்கல், நையான்டி, சிரிப்பு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிறைந்தது தான் வாழ்க்கை. இந்த கதையில் அந்த அர்ச்சகரும் போலிஸ்காரரும் உருமாறும் நுட்பமான தருணத்தில் நிகழ்ந்தது இதுவென்றும் சொல்லலாம்.

இன்னொரு வகையில் காவலன் என்ற பொறுப்பில் இருப்பவன் மீது எழும் பயம். அவன் மீது ஒரு சிறு கலங்கம் தெரியும் போது அவன் கேலிக்குறியவன் ஆகிவிடுகிறான். அதற்கு மேல் அவன் கொடுரமான தன்டனை வாங்கி கொடுத்தாலும். அதன் பொருள் இழந்துவிடுகிறது. அந்த தன்டனை உடலுக்கு மட்டும் தான். உள்ளத்தளவில் அந்த தன்டனையின் கீழ்மை அர்ச்சகருக்கு தெரியும்.அவருக்கு அதனால் எந்த அவமானமும் நிகழப்போவதில்லை.

இந்த கதையில் படிப்படியாக இரண்டு பாத்திரங்களும் மாறி வருவதை கவணிக்கலாம். முதலில் அர்ச்சகர் காவலன் என்ற அவர்களின் தொழில் அடிப்படையில் இருவரும் உரையாடுகிறார்கள். அப்போது தான் பயம், மிரட்டல் ஆகியவை செல்லுபடியாகிறது. அடுத்த நிலையில் மனிதர்கள் என்ற அளவில் பேசிகொள்கிறார்கள். ஒருவரின் கீழ்மையும் ஒருவரின் நக்கலும் சேர்ந்த உரையாடலில் இருவரும் சிரித்து நாம் இருவரும் சமமான மனிதர்கள் என்ற நிலையை அடைகிறார்கள். அடுத்த நிலையில் உணர்வின் அடிப்படையில் இருவரும் உரையாடுகிறார்கள். பசித்து ஏங்கும், உறவுகளின் சிறு சிறு சந்தோஷங்களுக்கும் கூட கூட பல வகையான சமரசங்கள் செய்து கொண்டு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் சமுதாயத்தின் அடித்தட்டு மனிதர்களின் உணர்வுகளை இருவரும் பரிமாறிக்கொள்கிறார்கள்.

அந்த உணர்வுகளை பரிமாறிக்கொள்ளும் போதே அங்கு மனிதர்கள் தங்கள் உயர்வை காட்டுகிறார்கள். தன்னை காத்துக்கொள்ள ஒருவனுக்கு கொடுக்கபடாத காசை அந்த உணர்வுகளுக்காக அந்த காவலனுக்கு கொடுக்கிறார் அர்ச்சகர். உணர்வுகள் மட்டுமல்ல கணவுகளும் சேர்ந்துதான். நதிகிருஷ்ணன் அர்ச்சகரின் கணவு. கண்ணம்மா காவலனின் கணவு. இதை நிறைவேற்றி பார்ப்பதற்க்காகவும் தான் அவர்கள் பெரும் தொகை செலவு செய்கிறார்கள். இது போன்ற உணர்வுகளும் கணவுகளும் தான் நம் வாழ்க்கையை இன்பமாக்குகிறது. அனைத்தையும துறந்து கிருஷ்ணனின் காலில் விழுவது ஒரு இன்பம் என்றால். அனைத்து பந்தங்கலுடனும் கிருஷ்ணனைஅனைத்து கொள்வதும் ஒரு இன்பம் தான்.

****

இதே கதையை பாலு மகேந்திரா குறும்படமாக எடுத்திருக்கிறார்.Sunday, December 27, 2015

சங்க இலக்கியத் தாவரங்கள்

கவிதையில் கூறப்படும் உவமைகளின் இயல்புகளை வைத்துதான் அந்த கவிதையின் அனுபவத்தை நாம் அடைய முடியும் என்பது நான் சமீபமாக அறிந்து கொண்டது. உதாரணத்துக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சங்க கவிதையில் குவளை மலரையும் அதன் இயல்புகளும் ஓரளவுக்கு தெரிந்தால் தான் அந்த கவிதையை உள்வாங்க முடியும்.

கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுற மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே.


அதனால் சங்கபாடல்களில் சொல்லப்படும் மலர்கள் தாவரங்கள் ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வது அந்த பாடலை உள்வாங்குவது உதவியாக இருக்கும். 'சங்க இலக்கியத் தாவரங்கள்' என்ற இந்த புத்தகம் அந்த வகையில் முக்கியமாகிறது.

https://archive.org/details/SangaIlakkiyaThavarangal

இந்த புத்தகத்தை பற்றி நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரை.

Saturday, December 26, 2015

முக்தியும் மறுபிறவி எனும் முன்னனுமானமும்

இந்திய மதங்களில் பெரும்பாலும் முக்தி எனும் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த முக்தியை அடையும் வழியாக சில யோக மார்க்கங்கள் வரையறுத்து தரப்பட்டிருக்கிறுது. கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் ஞான யோகம் போன்றவை.  மனிதன் வாழ்வின் துன்பங்களை, பந்தங்களை, பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு இந்த இன்னல்கள் இல்லாத பேரானந்த நிலையில் சென்று அமர்வதே அந்த முக்தி என்பதாகும்.

இந்த முக்தியை அடைவதற்கு வாழ்நாள் முழுதும் அல்லது வாழ்வின் ஒரு பகுதி முழுக்க சாதகம் செய்து அந்த முக்தி நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். இப்படிபட்ட முக்தி என்ற கருத்தை ஏற்று கொள்வதற்கு முன்னணுமானமாக - Presupposition ஒரு கருத்து நம்முள் இருக்கிறது.  மறுபிறவி எனும் கருத்து தான் அது. ஒரு ஆத்மா அல்லது உயிர் முக்தி அடையாத வரையிலும் மறுபிறப்பு எடுத்துகொண்டே இருக்கும் என்ற கருத்து அடிப்படையாக இருப்பதாலயே இந்த முக்தி என்ற நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இந்த மறுபிறவி என்ற கருத்தை நான் மறுத்தால். எனது வாழ்க்கை என்பது சில பத்தாண்டுகள். இந்த காலத்தை நான் ஏன் முக்திக்கு செலவழிக்க வேண்டும்? வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிப்பதற்கே செலவு செய்துவிட்டு சென்றுவிடலாம். அது நல்ல வழியிலான இன்பமாக இருந்தாலும் சரி தீய வழியினாலான இன்பமாக இருந்தாலும் சரி. எனது வாழும் காலத்தில் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அனுபவித்து விட்டு செல்லதானே நான் பார்ப்பேன்.

ஒரு வசதிக்காக சொர்க்கம் நரகம் என்ற கருத்தையும் நிராகரிப்போம் என்றால், பாவம் எது புன்னியம் எது? மறுபிறவியும் இல்லை சொர்க்கம் நரகமும் இல்லை என்ற பின் நமது இந்த வாழ்க்கை மட்டுமே நமக்கானது. ஒவ்வொரு நொடியும் பொன் துளி அல்லவா? புலன் இன்பத்தை அளவோடோ அளவில்லாமலோ அனுபவித்து விட்டு செல்லலாமே? அறிதல் என்பதும் ஒரு புலன் இன்பமே. அதற்காக ஒருவர் அறிகிறார் என்றால் சரி. ஆனால் வீடுபேறுக்காக ஒருவர் அறிகிறார், தொழுகிறார், சாதகங்கள் செய்கிறார் என்பது எப்படி சரியாகும்.

ஆனால் மறுபிறவி என்ற கருத்து நமது இந்திய மதங்களில் ஆழமாக இருப்பதால் தான் முக்தி என்ற நிலை முக்கியமாக இருக்கிறது. அதற்காக நமது நேரத்தை செலவிட்டு செய்யும் சாதகங்கள் பொருள்படுகிறது. ஆனால் இந்த கருத்து மேற்கத்திய மதங்களில் இல்லை. அங்கு சொர்க்க நரகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த கருத்தை வைத்து பாவ புன்னியங்கள் பொருள் படுகிறது. அதனால் அவர்களுக்கு இறைவழிபாடு பொருள்படுகிறது.

தன் வாழ்க்கையையே தன் முக்திக்காக அற்பனித்த ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். ஞான மார்க்கத்தை தனது பாதையாக தேர்ந்தெடுத்தவர். அவரது கருத்துகளுக்கும், முக்திக்கான ஏக்கத்திற்கும் அடிநாதமாக மறுபிறவி சங்கிலி என்னும் முன்னணுமானம் இருப்பதாக தோன்றியது.  முக்தியை தேடுபவர்கள் இந்த முன்னணுமாத்தை உணர்ந்து அதை ஏற்று கொண்டு தேடுவார்களாயின் அது ஏற்றுகொள்ளதக்கது. ஆனால் அப்படி ஒரு முன்னணுமானத்தை அறியாமலேயே வாழ்க்கையின் இலக்கை தேர்ந்தெடுப்பது என்பது சரியாகப்படவில்லை. அதுவும் குறிப்பாக ஞான மார்க்கத்தின் வழியில் செல்பவர்கள் அதை செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்.

----

மேலே நான் எழுதிய அணுகுமுறையில் கொடுக்கல்-வாங்கல் என்ற தோரனை இருக்கிறது. அதில்லாமல் ஒரு உயிரானது தனது போதாமையை உணர்ந்து ஒரு முழுமைக்காக முக்தியை தேர்ந்தெடுக்கிறது என்ற கோணத்திலும் இதை அனுகலாம்.

Friday, December 25, 2015

கடவுச்சொல், போய்க் கொண்டிருப்பவள் - சிறுகதை வாசிப்பனுபவம்


சிலரால் பிறருக்கு அன்பை கொடுக்க முடியாவிட்டாலும் மற்றவர் செய்யும் அன்பை கண்டு பொறுத்துகொள்ளவும் முடிவதில்லை. வாழ்க்கையில் பணம் அந்தஸ்து ஆகியவற்றுக்கு பின்னால் போய்விட்டவர்களுக்கு வாழ்க்கையின் இயல்பாக கிடைக்கும் சந்தோஷம் என்பது இல்லாமல் ஆகிவிடுகிறது. அப்படி இழந்த சந்தோஷங்களின் மதிப்பு தெரிந்தாலும் அவர்களால் தாங்கள் ஏற்படுத்தி கொண்ட அந்த பொருளை தேடும் வாழ்விலிருந்து எளிதாக வெளிவரமுடியவில்லை. அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை அதிகம். ஆனால் அதை ஒன்றும் தெரியாத ஒரு கிழவி வந்து அனுபவிக்கும் போது அவர்களால் பார்த்துகொண்டு இருக்க முடியவில்லை.

கதை பாட்டி பேரன் அன்பை சொல்லும் கதையாக இருந்தாலும். இன்னொரு ஆழமான ஒரு விஷயமும் இந்த கதையிலிருக்கிறது. உண்மையான அன்பும் இன்பமும் மனிதனின் ஆழம் வரைக்கும் செல்லமுடிகிறது. மற்றவையவை எல்லாம் மேலோட்டமானவை. பாட்டியையும் பேரனையும் அந்த அன்பு ஆழமாக பாதிப்பதால் தான் பாட்டி தியானத்திற்கு அமரும் போது மனதில் பேரன் வந்து நிற்கிறான். பேரனுக்கு ரகசியமாக அவனுக்கு மட்டுமே தெரியகூடிய கடவுச்சொல்லில் பாட்டி வந்து நிற்கிறாள்.

*********************************************************************************

சாக்கடை என்பது அன்னத்தின் யதார்த்த வாழ்க்கையை குறிக்கிறது. அனைத்தும் நுகரப்பட்டு வெறும் கழிசல்கள் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடைக்கு அருகிலும் அவளுக்கென்று ஒரு வீடு இருக்கிறது. அதில் நினைவுகளும் கனவுகளும் பிணைப்புகளும் நிறைந்து அவள் வாழ்க்கைக்கு ஒளி சேர்க்கிறது. அந்த வீடு இருக்கையில் சாக்கடை என்பது எம்பி தாவி சென்றுவிட கூடிய ஒரு சின்ன தொல்லை அவ்வளவு தான்.

விருத்தாவும், கதை சொல்லியும் அன்னத்த்தின் சில கோணத்தை மட்டும் நிறுத்தி வைத்து ரசிக்கிறார்கள். ஆனால் அன்னம் இதை விட ஆழமானவள். இவர்கள் அறியாத கோணம் அவளை சுற்றியும் இருக்கிறது. ஆன்களுக்கு தெரிந்த கோணத்தில் மட்டும் தான் இவர்கள் இருவரும் இருந்து பார்க்க முடிகிறது, அந்த கோணத்தில் அவள் உடலே பிரதானம்.

ஒளிந்திருக்கும் அழகை கூட தேடி கண்டுபிடித்து பதிவு செய்யும் விருத்தா ஒரு ரசிகன். காட்சி ரசிகன். அவளிடம் அவன் ரசிப்பதும் அவளின் மயக்கம் தரும் இளமை அழகை தான். செழித்த கழுத்தும், மார்ப்புகளுமே அவனுடைய ரசனைக்கு தேவையானவை. கதை சொல்லிக்கு காட்சி குறியீடுகளும் அதில் எழும் கற்பனை எழுச்சியும் அவளை ரசிக்க வைக்கிறது. ஆனால் அது மட்டுமல்ல அவள். பாலுக்கு அழும் குழந்தை அன்னையிடம் ஒரு அழகை காணும். அவள் மடியில் மயங்கி கிடக்குமே அது ஒரு கோணம். டியுசன் படிக்கும் பையன் அன்னதிடம் ஒரு வித அழகை காண்பான், அது ஒரு கோணம்.

இப்படி பல் வேறு கோணங்களில் அழகை வெளிப்படுத்தி கொண்டு ஒரு பெண் போய் கொண்டிருக்கிறாள். இதில் சில அழகுகள் காலவதியாகலாம். அதனால் விரும்பியவர்கள் அவளை நிராகரிக்கலாம். ஆனால் ஒரு அழகு காலவதியாகும் போது அடுத்தகட்ட அழகு எழுந்து மிளிர தொடங்கும். இளமை உலர்ந்து ஒரு பெண் காய்ந்த பூவாகி போகும் போது அதில் தாய்மை எனும் பால் சுரந்து அடுத்தகட்ட அழகு மிளிர தொடங்குகிறது. 

நமக்கு வேண்டியவைகளை பூட்டி வைத்து கொள்வது வீடு. அது தேவையற்று போகும் போது அது சாக்கடையில் அல்லது குப்பை மேட்டில். விருத்தா அன்னத்தை வீட்டில் சென்று பார்க்கும் போது அவன் ரசனையில் சாக்கடை கலக்க தொடங்கிவிடுகிறது.

ஆனால் அன்னம் எந்த வகையில் தன் மேல் ஈர்ப்பு கொண்டவனையும் விலக்குவதில்லை. அன்னையாக அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டாலும் தன் உடலை ரசித்தவனின் ரசனையை எங்கோ ஒரு இடுக்கில் சுருட்டி வைத்திருக்கிறாள். தேவை எனும் போது அவள் மனம் பூனை போல் அதை நோன்டி எடுத்துப்பார்த்து ஏங்குகிறது. ஒரு வகையில் இன்புறுகிறது.

என்னாளும் அவளோடு ஆண்கள் நடக்க முடியாது. அவளின் வாழ்க்கை கனங்களின் உறைந்த காட்சி கோணங்களை பார்த்து நின்றுவிடுகிறார்கள். ஆனால் அவள் தொடர்ந்து நடந்து போய் கொண்டே இருக்கிறாள்.

Thursday, December 24, 2015

நாடகக்காரி, ரீதி - சிறுகதை வாசிப்பனுபவம்நாடகக்காரி: ஆண்டன் செக்காவ், மொழிபெயர்ப்பு - புதுமைபித்தன்
ஆங்கில வடிவம் - The Chorus Girl

வாழ்க்கையில் எதையும் அடையாமல் யாருக்காவோ வாழ்ந்து தனது வாழ்க்கையையும் சந்தோஷங்களையும் சமுதாய அந்தஸ்தையும் பெறாமல் இந்த சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்த கதை எனக்கு நினைவுப்படுத்துகிறது.

இந்த நாடக்காரி அழகானவள் ஆனால் தன் அழகை நினைத்துக்கூட பெருமிதம் அடையாத அளவுக்கு அவளுக்கு தாழ்வுணர்ச்சியிருக்கிறது. இவளிடம் வந்து செல்லும் ஆண்களுக்கு இவள் மேல் எந்த காதலுமில்லை. நாய்க்கு ரொட்டி துண்டுகள் வாங்கி வருவது போல் இவளுக்கு இனிப்புகள் வாங்கி வருகிறான் கோல்ப்பக்கோ. ஏதோ சமுதாய காரணங்களுக்காக கோல்ப்பக்கோவுடன் இவள் இணங்கிபோகிறாள்.

பெருந்தன்மையுடன் அவள் தனது நகைகளை விட்டுகொடுத்தபோதிலும் அவளுக்கு வெறுப்பும் வசைகளும் தான் கிடைக்கிறது. கோல்ப்பக்கோவினின் மனைவியிடமிருந்து எந்த நன்றியணர்வும் இவளுக்கு கிடைப்பதில்லை. எந்தவிதமான அங்கிகாரம் இவளுக்கு கிடைப்பதில்லை. ஆனால் இவள் தான் பிறருக்கு கொடுத்து கொண்டே இருக்கிறாள்.

“மூன்று வருஷங்களுக்கு முன்பு ஒரு வியாபாரி தன்னைக் காரணமில்லாது அடித்தது ஞாபகம் வந்தது” என்ற இந்த வரி எந்த பாவமும் செய்யாத இவளை இந்த நிலையில் வைத்திருக்க முடிவெடுத்தது எதுவோ எனும் கேள்வியை எழுப்புகிறது.

*******************************************************************************************************************

ரீதி - பூமணி

இயற்கை அன்னை மனிதர்களுக்கு துயரங்களை வைத்தாலும் ஏதோ வகையில் அவர்கள் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்களை வைத்திருக்கிறாள். பாலை வனத்திலும் சோலை என்ற இடம் இருக்கத்தான் செய்கிறது. எத்தனை துயர் நிறைந்த நிலமாக இருந்தாலும் மனிதர்கள் காலப்போக்கில் அவர்களின் வாழ்க்கை முறையை அந்த இடத்துக்கு ஏற்றார் போல் அமைத்துக்கொள்கிறார்கள்.

இயற்கைக்கு எந்த பேதமும் இல்லை. எல்லா உயிரினங்களையும் அரவனைத்து செல்கிறது. ஆனால் மனிதர்கள் தன் வளர்ச்சி போக்கில் அவரவர் களஞ்சியத்தை நிரப்பி கொள்ள எத்தனிக்கிறார்கள். அப்படி அளவுக்கு மீறி அவர்கள் அள்ளிப்போடும் போது அதில் அடுத்தவர்க்கு உண்டான பொருட்களும் சென்று விழுந்துவிடுகிறது. இப்படி வளத்தை குவிப்பவர்களுக்கென்றே இந்த நவீன உலகம் கருவிகளை ஏராளமாக உருவாக்கி தருகிறது.

இந்த கருவிகளை உபயோகிக்கும் தோறும் இயற்கையின் அரவனைத்து செல்லும் போக்கை இழக்க செய்கிறோம். அணைகள் கட்ட கட்ட அது இயற்கை சுழலை பல விதமான உயிர்களை பாதிக்கிறது. வசதியான ஆழ்குழாய் நீர் வசதி செய்யும் தோறும் மக்களுக்கென்று பொதுவாக இருக்கும் நீரை நமக்கென நம் சக்திக்கு ஏற்றார் போல் எடுத்து பயன்படுத்துகிறோம் அல்லது வீணடிக்கிறோம்.

இந்த கதையில் வரும் பையன்களும் அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தான். மழையில்லா பூமி என்றாலும் மக்கள் குறைந்தபட்ச அளவில் உயிர்வாழ்வதற்கு இயற்கையில் வழியிருக்கும். ஆனால் ஒரு கிராமம் நவீனமயம் ஆகும் தோறும் அந்த வாசல்கள் எல்லாம் மூடப்படுகிறது. பலம் படைத்தவர்கள் கருவிகளின் உதவியினால் மேலும் பலம் கொள்கிறார்கள். இயற்கையின் வளங்களை ஒரு சொட்டு கூட “வீணடிக்காமல்” எடுத்து தங்கள் களஞ்சியங்களை நிரப்புகிறார்கள்.

ஒரு சமுதாயம் அன்றாடம் சோற்றை திங்க இன்னொன்று பனை மரத்தின் உச்சியிலிருக்கும் அணில்களை தேடுகிறது. மனிதனின் வளர்ச்சியில் வேட்டை சமுகத்திலிருந்து விவசாயம் நோக்கி நகர்ந்தது வளர்ச்சியாக கருதப்படுகிறது. ஆனால் இங்கு ஒரு சமுதாயம் மீண்டும் வேட்டை சமுகத்தை நோக்கி தள்ளப்படுகிறது. இயற்கை என்பது அனைவருக்கும் பொது என்பது மாறிவிட்டது.

கிராமத்துக்குள் முரட்டு தனமாக வரும் காரை பார்த்து பயந்து ஓடும் ஆடுகளை போல, பிற உயிரினங்களும் மனிதர்களில் சிலரும் நவீனத்துவம் என்ற இந்த ராட்சச பலத்தை கண்டு அஞ்சி ஓடுகிறார்கள். 

Wednesday, December 23, 2015

பரதநாட்டியம் - ஒரு சிறு விவாதம்


சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் பல தரப்பட்ட நாட்டிய கலைகளை எடுத்து பார்த்து கொண்டிருந்தேன். பரதம், கதக், ஒடிசி, குச்சுபுடி என்று பல நாட்டியங்களையும் எடுத்துபார்த்தேன். எல்லாமே வியக்க வைத்தது.

கதக்கில் சுழன்று சுழன்று ஆடும் முறை மைக்கல் ஜாக்சனின் சுழற்சிக்கு நிகரானது. ஒடிசியில் பார்த்த சில ஸ்டெப்புகளை மைக்கல் ஜாக்ஸன் போட பார்த்திருக்கிறேன்(MJவின் தீவர ரசிகன்). இப்படி பல ஸ்டெப்புகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. பரதமும் மிக கவர்ந்தது. இந்திய நாட்டியத்திலேயே பரதம் மிக கடிணமானது என்று கலை விமர்சகர் வெங்கட் சாமிநாதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் சொல்லியிருப்பார்.

இங்கு பரதத்தின் இரு கலைஞர்களின் நடன வீடியோவை கொடுத்திருக்கிறேன். பத்மா சுப்ரமணியம் மற்றும் ஜானகி ரங்கராஜன். இதில் நான் காணும் வித்தியாசம்  இது தான். பத்மா சுப்ரமணியம் உச்சமான பரதநாட்டிய கலைஞர் என்று கூறுகிறார்கள். அவரது இந்த வீடியோவிலிருக்கும் நடனத்தில் அடவுகள் நெளிவுகள் வேகம் எல்லாம் கச்சிதமாக இருக்கிறது. ஆனால் அவரது நடனத்தில் ஏதோ ஒன்று என்னை கவரவில்லை.

அது நளினம் இல்லாத தன்மையா? அல்லது அவரது உடல் வாகு நடனத்துக்கு ஏற்றவாறு இல்லையா என்று தெரியவில்லை. உடல் அமைப்பு என்பது நடனத்துக்கு மிக முக்கியமானது, இலக்கியத்திற்கு மொழி போல. மேலும் அவரது முக பாவங்களில் ஒரு சிரிப்பூட்டும் தன்மை தெரிகிறது. ஆனால் பாரம்பரிய நடன கலைகளை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆரம்ப நிலை ரசிகன். எனக்கு தெரியாத ஏதோ ஒரு அம்சம் அவரது நடனத்தில் இருக்கலாம் அதனால் அவர் பெரும் கலைஞராக அறியப்படலாம்.  பரதநாட்டியத்தை ரசிக்க தெரிந்தவர்கள் எனக்கு கொஞ்சம் விளக்க முடிந்தால் நன்று.

ஆனால் எனக்கு பரதநாட்டியத்தை ரசிக்கவே தெரியாது என்று சொல்ல முடியாது. நடனத்தை குறித்து ஒரு அடிப்படை ரசனை எனக்கிருக்கிறது. இரண்டாவது வீடியோவிலிருக்கும் ஜானகி ரங்கராஜனின் நடனம் என்னை மிக கவர்ந்தது. அவரது நடனத்தின் கச்சிதம், அற்புதமான நெளிவுகள், நேர்த்தி, பாவங்கள் அனைத்தும் வியக்க செய்கிறது. அரை மன்டி நிலையில் கையை விரித்து ஆடும் போது மயில் போல தெரிகிறார். இவர் பத்மா சுப்ரமணியத்தின் மானவி தான். இருந்தாலும் நிறைய வேறுபாடு தெரிகிறது.இதை ஒரு நண்பருடன் இணையம் வழியாக விவாதித்த போது அவர் பரத நாட்டியத்தில் பல்வேறு நடன பாணிகள் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.  நடன பள்ளிகளுக்கு ஏற்றவாறு பாணிகள் வேறுபடுகிறது. பந்தநல்லார் பாணி, வழுவுர் பாணி, கலாக்ஷேத்ரா பாணி போன்றவைகளை அறிமுகம் செய்தார்.

மேலும் நண்பர் பல விஷயங்களை சொன்னார். பத்மா சுப்ரமணியம் அவர்கள் இங்கு முயன்றிருப்பது கோயில் சிற்பங்களில் இருக்கும் கரணங்களை நடனத்தில் மீளுருவாக்கம் செய்வது. இதே ஒரு முக்கிய முன்னேடுப்பு. நாம் இழந்துவிட்ட பல நடன கரணங்களை சிற்பங்களின் உதவியோடும் நாட்டிய சாஸ்திர நூல்களின் உதவியோடும் அவர் மீட்டெடுத்திருப்பது பெரு உதவியே. இந்த வீடியோவிலும் அவர் கரணங்களையே ஆடிக்காட்டுகிறார். அந்த ஆடல் முறையை அவர் பரத நிர்த்யம் என்று குறிப்பிடுகிறார் என்றார்.

ஆனால் ஜானகி செய்வது முழு மேடை நாட்டியம் - வந்தனம், வர்ணம், பதம், தில்லானா என்று பல பாகங்களை உள்ளடக்கிய ஒட்டு மொத்த நடன நிகழ்வு. அதை மார்க்கம் என்று அழைப்பார்கள் என்றார்.

இருப்பினும் நான் நண்பருக்கு இதை எழுதினேன்.

ஆனால் நான் சுட்டிக்காட்டுவது இருவரின் உடல் மொழியை பாருங்கள். ஜானகியிடம் தெரியும் அந்த நலினம் பத்மாவிடம் தெரியவில்லை எனக்கு. வெடுக் வெடுக் என்று ஒடித்துவிடுகிறார். பத்மாவின் கால்கள், இடை, torsoவின் அசைவுகளை பாருங்கள். அதில் ஒரு வேகம் தெரிகிறதே தவிர அழகு அவ்வளவாக தெரியவில்லை.

ஜானகியின் 5:28வது நிமிடத்தில் வரும் நடனத்தை பாருங்கள்.  அவரின் நடனத்திலேயே அது உச்சமான வெளிப்பாடாக இருக்கிறது. அதிலிருந்து வெளிவரமுடியவில்லை. பத்து பதினைந்து முறை திரும்ப திரும்ப பார்த்தேன். அதே இடை நெளிவு பத்மாவின் நடனத்திலும் இருக்கிறது. ஆனால் இருவரும் அதை செய்யும் விதத்திலிருக்கும் வித்தியாசத்தை தான் நான் சுட்டிகாட்டுகிறேன். ஜானகியிடம் இருக்கும் நலினமும், உடலமைதியும், கச்சிதமான செய்கையும் பத்மாவிடம்  இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் பத்மாவின் கரணங்கள் பல புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது.

நண்பர் மேலும் விளக்கினார்.

பத்மா அவர்கள் தன் நாட்டியத்தில் நாட்டியதர்மி ஆடல்முறையையும் லோகதர்மி ஆடல்முறையையும் கலந்து பயன்படுத்துகிறார். நாட்டியதர்மி ஆடல் முறையில் அபிநயங்கள் தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு வருவதனால் நன்கு மெருகேறி காட்சியளிக்கிறது. அந்த மெருக்கேற்றளையே நாம் நளினம் என்கிறோம். ஆனால் கரணங்கள் ஆடல்களை மீளுருவாக்கம் செய்வதால் அதில் அந்த நளினம் கைகூடுவதில்லை என்றார்.

ஆனால் எனக்கு நளினம் என்பது ஆடுபவரின் தனிப்பட்ட திறமை தான் என்று தோன்றியது.

****

நடன பாணிகளை பற்றி வெங்கட் சாமிநாதன்.

//உதாரணமாக, பரதத்தில் பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பரதம் சமரசம் ஏதும் இல்லாத பழமையின் இறுக்கமும் விதிகளின் பிடி வழுவாது கற்பிக்கப்படும் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. இதற்கு மாறாக, வழுவூர் பரம்பரையில் வரும் பரதம் சற்று நெகிழ்வுகளுக்கு இடம் கொடுத்து அலையோடும் இழையாக, இசையின் பாவங்களும் உணர்ச்சி வெளிப் பாடுகளும் கொண்டதாக, சொல்லப் படுகிறது. இந்த நெகிழ்வுகளின் காரணமாகவே அது, பந்தநல்லூர் மரபைப் பார்க்க அதிக வரவேற்பும் கவர்ச்சியும் கொண்டதாக கருதப்படுகிறது. ஆனால், இந்த நெகிழ்வும் உணர்ச்சி பாவங்களும், அவ்வளவாக கலைமனம் ஆழம் அற்றோர் வசத்தில், அது ஒரு கேளிக்கையாக, பொழுது போக்குக்கான ஒன்றாக மாறிவிடக்கூடும். குறிப்பாக, ஆடப்படும் பாட்டு சிருங்காரத்தையும் லாஸ்யத்தையும் வெளிப்பாட்டில் முதன்மையாகக் கொள்ளும் ஒன்றாக இருக்குமானால். அது அழகும் கம்பீரமும் கொண்ட செவ்வியல் குணங்களை இழந்து நிற்கும். இது போலவே, பந்த நல்லூர் பத்ததியிலும், அவ்வளவாக கலைஉணர்வு அற்றோர் வசத்தில் அந்த பரதம் இறுக்கம் கொண்டதாக, விதிகளை, இலக்கணங்கள்மீறி எழும் கலையாக மாறும் திறனற்றுப் போகும். இதை அங்க சுத்தி என்று பெரிய வார்த்தைகளில் சொல்லி நியாயப் படுத்தக் கூடும்//

http://solvanam.com/?p=35907

Monday, December 21, 2015