Thursday, December 24, 2015

நாடகக்காரி, ரீதி - சிறுகதை வாசிப்பனுபவம்



நாடகக்காரி: ஆண்டன் செக்காவ், மொழிபெயர்ப்பு - புதுமைபித்தன்
ஆங்கில வடிவம் - The Chorus Girl

வாழ்க்கையில் எதையும் அடையாமல் யாருக்காவோ வாழ்ந்து தனது வாழ்க்கையையும் சந்தோஷங்களையும் சமுதாய அந்தஸ்தையும் பெறாமல் இந்த சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்த கதை எனக்கு நினைவுப்படுத்துகிறது.

இந்த நாடக்காரி அழகானவள் ஆனால் தன் அழகை நினைத்துக்கூட பெருமிதம் அடையாத அளவுக்கு அவளுக்கு தாழ்வுணர்ச்சியிருக்கிறது. இவளிடம் வந்து செல்லும் ஆண்களுக்கு இவள் மேல் எந்த காதலுமில்லை. நாய்க்கு ரொட்டி துண்டுகள் வாங்கி வருவது போல் இவளுக்கு இனிப்புகள் வாங்கி வருகிறான் கோல்ப்பக்கோ. ஏதோ சமுதாய காரணங்களுக்காக கோல்ப்பக்கோவுடன் இவள் இணங்கிபோகிறாள்.

பெருந்தன்மையுடன் அவள் தனது நகைகளை விட்டுகொடுத்தபோதிலும் அவளுக்கு வெறுப்பும் வசைகளும் தான் கிடைக்கிறது. கோல்ப்பக்கோவினின் மனைவியிடமிருந்து எந்த நன்றியணர்வும் இவளுக்கு கிடைப்பதில்லை. எந்தவிதமான அங்கிகாரம் இவளுக்கு கிடைப்பதில்லை. ஆனால் இவள் தான் பிறருக்கு கொடுத்து கொண்டே இருக்கிறாள்.

“மூன்று வருஷங்களுக்கு முன்பு ஒரு வியாபாரி தன்னைக் காரணமில்லாது அடித்தது ஞாபகம் வந்தது” என்ற இந்த வரி எந்த பாவமும் செய்யாத இவளை இந்த நிலையில் வைத்திருக்க முடிவெடுத்தது எதுவோ எனும் கேள்வியை எழுப்புகிறது.

*******************************************************************************************************************

ரீதி - பூமணி

இயற்கை அன்னை மனிதர்களுக்கு துயரங்களை வைத்தாலும் ஏதோ வகையில் அவர்கள் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்களை வைத்திருக்கிறாள். பாலை வனத்திலும் சோலை என்ற இடம் இருக்கத்தான் செய்கிறது. எத்தனை துயர் நிறைந்த நிலமாக இருந்தாலும் மனிதர்கள் காலப்போக்கில் அவர்களின் வாழ்க்கை முறையை அந்த இடத்துக்கு ஏற்றார் போல் அமைத்துக்கொள்கிறார்கள்.

இயற்கைக்கு எந்த பேதமும் இல்லை. எல்லா உயிரினங்களையும் அரவனைத்து செல்கிறது. ஆனால் மனிதர்கள் தன் வளர்ச்சி போக்கில் அவரவர் களஞ்சியத்தை நிரப்பி கொள்ள எத்தனிக்கிறார்கள். அப்படி அளவுக்கு மீறி அவர்கள் அள்ளிப்போடும் போது அதில் அடுத்தவர்க்கு உண்டான பொருட்களும் சென்று விழுந்துவிடுகிறது. இப்படி வளத்தை குவிப்பவர்களுக்கென்றே இந்த நவீன உலகம் கருவிகளை ஏராளமாக உருவாக்கி தருகிறது.

இந்த கருவிகளை உபயோகிக்கும் தோறும் இயற்கையின் அரவனைத்து செல்லும் போக்கை இழக்க செய்கிறோம். அணைகள் கட்ட கட்ட அது இயற்கை சுழலை பல விதமான உயிர்களை பாதிக்கிறது. வசதியான ஆழ்குழாய் நீர் வசதி செய்யும் தோறும் மக்களுக்கென்று பொதுவாக இருக்கும் நீரை நமக்கென நம் சக்திக்கு ஏற்றார் போல் எடுத்து பயன்படுத்துகிறோம் அல்லது வீணடிக்கிறோம்.

இந்த கதையில் வரும் பையன்களும் அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தான். மழையில்லா பூமி என்றாலும் மக்கள் குறைந்தபட்ச அளவில் உயிர்வாழ்வதற்கு இயற்கையில் வழியிருக்கும். ஆனால் ஒரு கிராமம் நவீனமயம் ஆகும் தோறும் அந்த வாசல்கள் எல்லாம் மூடப்படுகிறது. பலம் படைத்தவர்கள் கருவிகளின் உதவியினால் மேலும் பலம் கொள்கிறார்கள். இயற்கையின் வளங்களை ஒரு சொட்டு கூட “வீணடிக்காமல்” எடுத்து தங்கள் களஞ்சியங்களை நிரப்புகிறார்கள்.

ஒரு சமுதாயம் அன்றாடம் சோற்றை திங்க இன்னொன்று பனை மரத்தின் உச்சியிலிருக்கும் அணில்களை தேடுகிறது. மனிதனின் வளர்ச்சியில் வேட்டை சமுகத்திலிருந்து விவசாயம் நோக்கி நகர்ந்தது வளர்ச்சியாக கருதப்படுகிறது. ஆனால் இங்கு ஒரு சமுதாயம் மீண்டும் வேட்டை சமுகத்தை நோக்கி தள்ளப்படுகிறது. இயற்கை என்பது அனைவருக்கும் பொது என்பது மாறிவிட்டது.

கிராமத்துக்குள் முரட்டு தனமாக வரும் காரை பார்த்து பயந்து ஓடும் ஆடுகளை போல, பிற உயிரினங்களும் மனிதர்களில் சிலரும் நவீனத்துவம் என்ற இந்த ராட்சச பலத்தை கண்டு அஞ்சி ஓடுகிறார்கள். 

No comments:

Post a Comment