Saturday, December 26, 2015

முக்தியும் மறுபிறவி எனும் முன்னனுமானமும்

இந்திய மதங்களில் பெரும்பாலும் முக்தி எனும் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த முக்தியை அடையும் வழியாக சில யோக மார்க்கங்கள் வரையறுத்து தரப்பட்டிருக்கிறுது. கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் ஞான யோகம் போன்றவை.  மனிதன் வாழ்வின் துன்பங்களை, பந்தங்களை, பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு இந்த இன்னல்கள் இல்லாத பேரானந்த நிலையில் சென்று அமர்வதே அந்த முக்தி என்பதாகும்.

இந்த முக்தியை அடைவதற்கு வாழ்நாள் முழுதும் அல்லது வாழ்வின் ஒரு பகுதி முழுக்க சாதகம் செய்து அந்த முக்தி நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். இப்படிபட்ட முக்தி என்ற கருத்தை ஏற்று கொள்வதற்கு முன்னணுமானமாக - Presupposition ஒரு கருத்து நம்முள் இருக்கிறது.  மறுபிறவி எனும் கருத்து தான் அது. ஒரு ஆத்மா அல்லது உயிர் முக்தி அடையாத வரையிலும் மறுபிறப்பு எடுத்துகொண்டே இருக்கும் என்ற கருத்து அடிப்படையாக இருப்பதாலயே இந்த முக்தி என்ற நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இந்த மறுபிறவி என்ற கருத்தை நான் மறுத்தால். எனது வாழ்க்கை என்பது சில பத்தாண்டுகள். இந்த காலத்தை நான் ஏன் முக்திக்கு செலவழிக்க வேண்டும்? வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிப்பதற்கே செலவு செய்துவிட்டு சென்றுவிடலாம். அது நல்ல வழியிலான இன்பமாக இருந்தாலும் சரி தீய வழியினாலான இன்பமாக இருந்தாலும் சரி. எனது வாழும் காலத்தில் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அனுபவித்து விட்டு செல்லதானே நான் பார்ப்பேன்.

ஒரு வசதிக்காக சொர்க்கம் நரகம் என்ற கருத்தையும் நிராகரிப்போம் என்றால், பாவம் எது புன்னியம் எது? மறுபிறவியும் இல்லை சொர்க்கம் நரகமும் இல்லை என்ற பின் நமது இந்த வாழ்க்கை மட்டுமே நமக்கானது. ஒவ்வொரு நொடியும் பொன் துளி அல்லவா? புலன் இன்பத்தை அளவோடோ அளவில்லாமலோ அனுபவித்து விட்டு செல்லலாமே? அறிதல் என்பதும் ஒரு புலன் இன்பமே. அதற்காக ஒருவர் அறிகிறார் என்றால் சரி. ஆனால் வீடுபேறுக்காக ஒருவர் அறிகிறார், தொழுகிறார், சாதகங்கள் செய்கிறார் என்பது எப்படி சரியாகும்.

ஆனால் மறுபிறவி என்ற கருத்து நமது இந்திய மதங்களில் ஆழமாக இருப்பதால் தான் முக்தி என்ற நிலை முக்கியமாக இருக்கிறது. அதற்காக நமது நேரத்தை செலவிட்டு செய்யும் சாதகங்கள் பொருள்படுகிறது. ஆனால் இந்த கருத்து மேற்கத்திய மதங்களில் இல்லை. அங்கு சொர்க்க நரகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த கருத்தை வைத்து பாவ புன்னியங்கள் பொருள் படுகிறது. அதனால் அவர்களுக்கு இறைவழிபாடு பொருள்படுகிறது.

தன் வாழ்க்கையையே தன் முக்திக்காக அற்பனித்த ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். ஞான மார்க்கத்தை தனது பாதையாக தேர்ந்தெடுத்தவர். அவரது கருத்துகளுக்கும், முக்திக்கான ஏக்கத்திற்கும் அடிநாதமாக மறுபிறவி சங்கிலி என்னும் முன்னணுமானம் இருப்பதாக தோன்றியது.  முக்தியை தேடுபவர்கள் இந்த முன்னணுமாத்தை உணர்ந்து அதை ஏற்று கொண்டு தேடுவார்களாயின் அது ஏற்றுகொள்ளதக்கது. ஆனால் அப்படி ஒரு முன்னணுமானத்தை அறியாமலேயே வாழ்க்கையின் இலக்கை தேர்ந்தெடுப்பது என்பது சரியாகப்படவில்லை. அதுவும் குறிப்பாக ஞான மார்க்கத்தின் வழியில் செல்பவர்கள் அதை செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்.

----

மேலே நான் எழுதிய அணுகுமுறையில் கொடுக்கல்-வாங்கல் என்ற தோரனை இருக்கிறது. அதில்லாமல் ஒரு உயிரானது தனது போதாமையை உணர்ந்து ஒரு முழுமைக்காக முக்தியை தேர்ந்தெடுக்கிறது என்ற கோணத்திலும் இதை அனுகலாம்.

No comments:

Post a Comment