Tuesday, September 8, 2015

இந்துத்துவமும் அதன் மீதான என் விமர்சனமும்

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன் மூன்று வகையான தேசிய கனவுகள் இருந்தது. அதில் நேரு கனவு கண்ட  தாராளவாத சோஷியலிச தேசம், காந்தி கனவு கண்ட ஸ்வாரஜ்யம், இந்துதவர்கள் கனவு கண்ட இந்துத்தவ தேசியம். இதில் நேரு வெண்றார், காந்தி தோற்றார். இந்துத்துவர்கள் வெல்வதற்கு அன்று ஒரு பெரிய தரப்பாக இருக்கவில்லை.

இந்துத்துவத்தும் என்ற கருத்தை முதலில் வரையறை செய்தவர் சாவர்க்கர். இந்துத்துவம் என்பது இந்துக்களை ஒட்டுமொத்தமாக திரட்டி அவர்களின் பெரும்பான்மையை கொண்டு ஒரு தேசத்தை உருவாக்குது. இவர்கள் இந்துக்கள் என்று சொல்வது ஒரு குறிப்பிட்ட மதத்தை அல்ல என்று விளக்கபடுகிறது. இந்து என்பது இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்தியர்களை குறிக்கிறது. அவர்களே இந்து இணம் என்கிறது. இந்து மதம் என்பது ஒற்றை வேதநூல் கொண்ட மதமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அதன் படி இந்திய பன்பாட்டில் வளர்ந்த எந்த மதத்துக்கும் இந்து என்ற வரையறையில் இடமுண்டு என்பது இவர்களது வாதம். ஆக இந்துத்துவ தேசியம் என்பது இந்து கலாச்சாரம் சார்ந்த தேசியம்.


இந்தியாவில் இந்துக்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் பிரிந்துகிடந்ததே காலனியதிக்கதுக்கும் இஸ்வாமிய ஆதிக்கத்துக்கும் காரணமானது. அதனால் இந்துக்களை ஒருங்கிணைத்து இந்த தேசத்தை ஒரு இந்து தேமாக ஆக்குவதே இவர்களின் குறிக்கோள். இந்த தேசமானது இங்கிருக்கும் மக்களின் பித்ருதேசமாகவும் புன்னிய பூமியாகவும்  இங்கு வாழும் மக்களால் கருதப்படவேண்டும். அப்படி இந்தியாவை தங்களது தந்தை தேமாக கருதமுடியாத பிற மதத்தினர்கள் இந்தியாவை தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த தேசமாக கருதவேண்டும். அவர்கள் இந்து பண்பாட்டின் மீதும் இந்து மதத்தின் மீதும் மதிப்பும் பெருமிதமும் கொண்டிருக்கவேண்டும். அதை அவரகள் நிராகரிக்ககூடாது. அப்படி நிராகரிப்பவர்களுக்கு இந்த நாட்டில் குடிமை உரிமை வழங்கப்படகூடாது என்று சொல்லியிருக்கிறார் இந்துத்துவ சித்தாந்தவாதியான கோல்வால்க்கர்.

1 -
இந்துத்தவம் என்ற கருத்து உருவாக்கப்பட்ட காலத்தையும் அந்த கருத்தையும் கவனித்தால் ஒன்று புரிகிறது. அது பயத்தினால் உருவாக்கப்பட்டது என்று தெரியவரும். நாம் கடந்த ஆயிரம் வருடங்களாய் பிற தேசங்களால் தாக்கப்பட்ட நாடாய் இருந்திருக்கிறோம். இந்தியாவில் நடந்த காலணி ஆதிக்கத்துக்கும் இஸ்லாமிய படையெடுப்புக்கும் காரணம் இந்துக்கள் ஒன்றிணையாமல் இருந்ததே. அதனால் இந்துக்கள் ஒன்று திரட்டப்பட வேண்டும். அவர்கள் இணைந்து வலுவான ஒரு இந்து தேசத்தை கட்டமைக்கவேண்டும் என்பது இந்துத்துவர்களின் எண்ணம்.

ஆனால் இந்த கருத்து ஒரு நவீன தேசம் எப்படி இயங்கும் என்ற ஒரு புரிதலில்லாமல் சொல்லப்பட்டது போல் தெரிகிறது. ஒரு நவீன தேசம் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டால் அதற்கென்று ஒரு ராணுவம் அமையும். அது அந்த தேசத்தை படையெடுப்பிலிருந்து பாதுகாக்கும். இதற்காக இந்தியா இந்து நாடாக ஒன்று திரளவேண்டியது அவசியமற்றது.


2 -
இந்துத்துவர்கள் சொல்லும் பல கருத்துகளுக்கு புறவயமான வரலாற்று பின்புலம் இருப்பதில்லை. அவர்கள் புராணங்களேயே வரலாறாக சொல்லிவருகின்றனர். சாவர்க்கர் எழுதிய இந்துத்துவ புத்தகத்தில் ராமர் என்று ராவனனை வெண்று நாடு திரும்பி சிம்மாசனத்தில் அமர்ந்தாரோ அன்று தான் இந்தியா என்பது முழுமையாக உருவாக்கப்பட்டது என்கிறார். அதுவே நம் தேசிய தினம் என்கிறார். பெரும்பாலும் புராணங்களில் வரும் ஸ்லோகங்களையே ஆதாரமாக வைக்கிறார். இன்று வரையிலும் இவர்களின் வாதம் புராணங்க்களை அடிப்படையாக கொண்டே இருக்கிறது.

3 -
இந்துத்துவர்களுள் ஒரு அறிவார்ந்த தரப்பு இருப்பதில்லை என்பது திரும்ப திரும்ப அறிஞர்களால் சொல்லபடுகிறது. இவர்கள் இந்து பெருமிதத்தை மட்டும் வைத்துகொண்டு நாங்களே தலை சிறந்ந பண்பாடு, இன்று நவீன அறிவியல் கண்டுபிடித்ததை எல்லாம் நாங்கள் என்றோ கண்டு பிடித்துவிட்டோம் என்று மார்த்தட்டிகொள்கிறார்கள். விநாயகருக்கு யானை தலை இருப்பது அந்த காலத்திலேயே ப்ளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்பதை காட்டுகிறது. சமஸ்கிருதமே அறிவியல் பூர்வமான மொழி என்பது போல பல நகைச்சுவைகளை செய்வது இவர்களுக்க வழக்கமாய் இருந்து வருகிறது.

அறிவியல் என்றால் என்ன என்று ஒரு அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்கள் சொல்வது இது போன்ற கருத்துக்கள். ஆனால் உன்மையில் அறிவியல் பற்றி அறிந்த சில இந்துத்துவர்கள் இந்த பெருந்தலைவர்களின் அதிரடியான இந்த கருத்துகளுக்கு விளக்கம் கொடுகின்றனர். இவர்களுள் இருக்கும் ஒன்றிரண்டு அறிவார்ந்தவர்களும் இவர்கள் தலைவர்கள் சொல்லும் அடிப்படையில்லா கருத்துகளை நியாயப்படுத்துவதற்கென்றே இருக்கிறார்கள் போலும். இது போன்ற கருத்துக்களால் இந்தியாவில் உன்மையாகவே கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் வெளி கொண்டு வரப்பட்டால் கூட அது ஏளனமாகவே பார்க்கப்படும்.


4 -
ஒரு நாட்டின் குடிமகனாக இருப்பவன் அந்த நாட்டின் கலாச்சாரத்தை மதத்தை ஏற்பதும் மறுப்பதும் அவனது உரிமை. தன் சொந்த கலாச்சாரத்தின் மேல் பிடிப்பு இருப்பது நல்லது. ஆனால் அதை முடிவெடுப்பது அவனது உரிமையாக இருக்கவேண்டும். அதை அவனில் வலுகட்டாயமாக ஏற்க செய்ய கூடாது. அப்படி நடந்தால் அது ஜனநாயக நாடாக அமையாது. ஒரு ஜனநாயக நாட்டில் அவன் அதன் சட்டத்தின் படி நடப்பதும் வரி கட்டுவது மட்டுமே அவனது கடமைகளாக இருக்க முடியும். அதற்கு மேல் அந்த நாட்டை அவன் போற்றுவதும் விமர்சிப்பதும் அவனது தனி மனித உரிமை. அதற்கு ஜனநாயக நாட்டில் சுதந்திரம் இருக்கவேண்டும். ஆனால் இந்துவத்தின் படி இந்திய நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் இந்திய பண்பாட்டை பற்றி பெருமிதம் கொள்ளவேண்டும் இந்து மதத்தை மதிக்கவேண்டும் என்று சொல்லுவது ஜனநாயகத்துக்கு எதிரான கருத்தாகவே தெரிகிறது.