Friday, November 27, 2015

அன்பளிப்பு - சிறுகதை வாசிப்பனுபவம்

அன்பளிப்பு - கு அழகிரிசாமி

http://azhiyasudargal.blogspot.in/2011/04/blog-post.html


நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நமது அன்பு ஏதோ வகையில் சார்புடையதாக ஆகிவிடுகிறது. ஆனால் நாம் கண்டுகொள்ளாவிட்டாலும் நமது அன்பை கோரிக்கும் உயிர்கள் எப்போதும் நம்மை சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை கண்டுகொள்ளமுடியாதபடி அவர்களின் உணர்வுகள் நமக்கு தெரியாதபடி நம்மை ஏதோ மறைக்கிறது.

ஆனால் இந்த மாதிரி ஏமாற்றத்தை இந்த கதையில் வரும் சாரங்கன் குழந்தையாக இருந்தாலும் மிக கௌரவமாக கையான்டிருக்கிறான். ஒவ்வொரு முறையும் அன்புக்காக ஏங்கி தோற்று சென்றும், கடைசியில் வாய் விட்டு கேட்டும் அவமானமடைந்தும் தோல்வியுற்றாலும் பெரும் தன்மையுடன் கதை சொல்லியை தன் வீட்டுக்கு ஆழைத்து அவன் கையாலயே அன்பளிப்பு பெருவது போல் பாவனை செய்து கொள்கிறான்.

சாரங்கன் போன்ற மனிதர்களுக்கு இந்த உலகம் ஏமாற்றங்களை தொடர்ந்து தந்தாலும் அதை வென்று செல்வதற்கான பாவனையை கையான்டு இந்த உலகத்தை இன்பமையமாக ஆக்கிகொள்ளும் உயிர்துடிப்பு கொண்டவர்கள். எல்லாரும் ஏதோ ஒரு வகை பாவனை செய்து தானே இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படியிருக்க நாம் அடையும் ஏமாற்றங்களையும் ஏன் அதே பாவனையால் தான்டி செல்ல கூடாது?

புத்தகம், படிப்பு, கவிதை என்று முழுவதும் அறிவு உலகிலும் கற்பனை உலகிலும் மயங்கி கிடக்கும் கதை சொல்லிக்கு சாரங்கன் ஒரு அதிர்ச்சி கொடுத்து அவன் கண்களை திறக்கிறான். அந்த வரலாற்று புத்தகத்தை தூங்கும் குழந்தையின் கையிலிருக்கும் கிளுகிளுப்பையை மெதுவாக எடுத்துவைப்பது போல் கதை சொல்லியின் புத்தகங்களினால் ஆன உலகத்திலிருந்து அவனை மீட்டு உணர்வுகள் நிரம்பிய இந்த மனிதர்களின் உலகத்திற்கு அழைத்து வருகிறான் சாரங்கன்.

மாப்பஸானின் - The Necklace

Maupassant's The Necklace

http://americanliterature.com/author/guy-de-maupassant/short-story/the-necklace
இந்த கதையை படித்தவுடன் தோன்றிய பழமொழி - மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது தான். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயங்களுக்கு முக்கியத்தும் கொடுக்கிறோம். அதனை அடைவதற்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்து கொள்கிறோம். ஆனால் நாம் கனவுகானும் அந்த விஷயம் உண்மையிலேயே மதிப்புள்ளதா இல்லையா என்று நமக்கு எப்படி தெரியும். அதன் மதிப்பை உண்மையிலேயே பரிசீலித்து தான் அதனை அடைய முயல்கிறோமா. இல்லை ஏதோ ஒரு வகை மயக்கத்தில் அதன் மீது விருப்பத்தை வளர்த்து கொண்டு அதனால் நம் வாழ்க்கையை மாற்றி அமைத்துகொள்கிறோமா? இது போன்ற கேள்விகளை இந்த சிறுகதை எழுப்புகிறது.

இந்த கதை  ஒரு டிவிஸ்டுடன் முடிகிறது.

-----

நான் மத்தில்டேவை மானிடர்களுக்கான ஒரு குறியீடாக தான் பார்த்தேன்.

1. அவள் ஆசைப்படும் விஷயத்தின் மதிப்பு என்ன என்று தெரியாமலேயே அந்த விஷயத்துக்காக தன் வாழ்க்கையையே மாற்றியமைக்கிறாள். எந்த விஷயங்கள் அவளிடம் நிறைவாக இருக்கிறதோ அதை அந்த ஆசையினால் கெடுத்து கொள்கிறாள். இது எல்லா மானுடருக்குமே பொருந்தும். நாம் எண்ணி ஏங்கும் விஷயங்களை அடைய நினைப்பவைகளை மறுபரிசீலனை செய்துபார்க்கவேண்டும்.

2.அவள் தன்னிடம் நிறைவாக இருக்கும் விஷயங்களை நினைத்து மகிழ்ச்சி அடைவதில்லை. அந்த நிறைவான விஷயத்திலிருந்து மேலும் மேலும் எதிர்பார்ப்புகளை வளர்த்துகொள்கிறாள். அழகாக இருக்கிறோமே என்று நிறைவடையவில்லை அந்த அழகுக்கு ஏற்ற அந்தஸ்தில் இல்லையே என்று நினைக்கிறாள். புது கவுன் கிடைத்ததே என்று நினைக்கவில்லை அதற்கு மேலும் நகைகளை எதிர்பார்க்கிறாள். இப்படியே போனால் என்று தான் நிறைவடைவது? இப்படி தானே மனிதர்கள் ஓடி கொண்டிருக்கிறோம். ஒரு நிமிடம் நாம் இருக்கும் நிலையை நினைத்து மகிழ்வடையும் பக்குவம் அனைவருக்கும் இருப்பதில்லை.

Wednesday, November 18, 2015

சித்த மருத்துவம் சில நூல்களும் அறுவை சிகிச்சையும்

அங்காதிபாதம் என்று நூல் பரராசசேகரம் என்ற சித்த மருத்துவ நூல் தொகுப்பின் ஒரு பகுதியாக சொல்லப்படுகிறது. அங்காதிபாதம் என்றால் Anatomy. ஆனால் இந்த அங்காதிபாதம் நூலில் பாக்களில் உடற்பாகங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இது மேலை நாட்டில் சென்ற நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட மிக விரிவான உடற்கூறு புத்தகங்களுடன் ஒப்பிட முடியாது. 

ரராசசேகரம் என்பது 14 - 16ம் நூற்றாண்டு காலத்தில் இலங்கை பரராசசேகரம் மன்னனால் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது.

பரராசசேகரம் என்ற நூல் இணையத்தில் என் தேடலுக்கு கிடைக்கவில்லை. ஆனால் ’ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள் - ஓர் அறிமுகம்' என்ற நூல் பரராசசேகரம் உட்பட பல நூல்களை அறிமுகப்படுகிறது.

இந்த அறிமுக நூலில் பக்கம் 38ல் அங்காதிபாதம் பற்றி விளக்கப்படுகிறது. பக்கம் 62ல் சாமூவேல் கிறீன் அவர்களின் அங்காதிபாதம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது.


அறுவைசிகச்சை குறித்து:
 
இது சித்த மருத்துவத்தில் அரக்க வைத்தியம் என்று கூறப்படுகிறது. இதில் பல முறைகள் பிரயோகிக்கப்படுகிறது. அறுவை, கீரல், சுடல், அட்டைவிடல் போன்றவை.


பரராசசேகரத்தின் ஐந்தாம் பாகம் மட்டும் இணையத்தில் கிடைக்கிறது. முற்றிலும் செய்யுள் வடிவில் இருக்கிறது. அதில் சந்திர விதி என்ற பகுதியில் 26 வகை கருவிகள் குறிப்பிடப்படுகிறது.

மண்டலாக்கிரம், விருத்தி, உற்பலம், சூசி, குடோரி, முத்தரி, கத்தரி, குறும்பிவாங்கி, கபத்திரம், பணபத்திரம், கரபந்திரம்,விண்டகண்ணி, சாரி போன்ற கருவிகள் இதில் அடங்கும்.


ஆனால் சுஷ்ருத சம்ஹிதையின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பில் அறுவை சிகிச்சை முறைகளை பற்றி விரிவாகவே விளக்கப்படுகிறது.

https://archive.org/details/englishtranslati01susruoft 

Monday, November 16, 2015

மாபெரும் பயணம் – சிறுகதை வாசிப்பு

மாபெரும் பயணம் – சிறுகதை வாசிப்பு

http://www.jeyamohan.in/22604#.VkEVKytqmFc

முன்னே செல்லும் மாட்டின் தலையில் ஒரு விளக்கு வைக்கப்படுகிறது. அதன் வழி பின்னே மாட்டு மந்தை செல்கிறது. முன்னே செல்லும் மாட்டின் ஒரு சிறு இடறல் தயங்கள் கூட இந்த மந்தை எனும் உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. அதனால் அதன் முன்னே புல்லும் பின்னே சவுக்கும் அதை நிறுத்தாமல் வழி நடத்துகிறது. கதை சொல்லும் இந்த புரட்சியாளன் அல்லது தீவிரவாதி பார்த்த அந்த முன் செல்லும் மாடு என்ன? இவன் பின் தொடர்ந்து செல்லும் சேகுவாராவோ பிரபாகரனோ போன்ற ஒரு தலைவன் தானே அது. முன்னே லட்சியவாதமும்(அல்லது சுய லாபமும்) பின்னே இக வாழ்க்கை நெருக்கடிகளும்(அல்லது ஆயுதங்களும்) செலுத்தும் ஒரு சுடரெந்திய தலைவன் தானே.

மாட்டை போல் தொடர்ந்து சென்று இந்த புரட்சியாளர்கள் தங்கள் உயிரை பலியாக்குகிறார்கள். அரசாங்கத்தின் காலடி நெஞ்சில் ஏறி ஏறி மிதிக்க நசுங்கி சாகிறார்கள். அப்படி பட்ட பயணத்தில் தானே இந்த கதை சொல்லியும் இருக்கிறான். சென்று சென்று முடியாத பயணம். யார் இந்த மந்தையை நடத்தி செல்வது. முன்னே புல்லும் பின்னே சவுக்கும் கொண்டு வழிநடத்தும் இந்த மனிதர்கள் யார்? இந்த உலகின் இயக்கத்திற்கு காரணமாய் விளங்கும் நாமறியா ’அது’ தான் இவர்களா? ஒவ்வொரு நாளும் மனிதர்களை அந்த அறுப்புகூடத்திற்கு அழைத்து செல்வது அதன் சிறு விளையாட்டா? இந்த உக்கிரமான பலிகளில் இன்பம் நுகர்வது அதன் குணமா?

வழியில் விழும் மாடுகளின் தோலையும் கரியையும் வாங்க பின்னே வரும் கூட்டம் யார். இந்த வன்முறை பயணத்தில் லாபம் காண வரும் குள்ளநரிகளா? செல்லும் வழியில் புன்னகைத்து இறந்து விழுந்தவன் தான் கோபாலா? கதை சொல்லி அறுப்பு கூடத்துக்கு சென்று சேருவானா? பயணத்தின் இலக்கு சாவு! என்ன கொடுமை? செல்ல செல்ல தீராத பயணம். சென்று சென்று உடலணுக்களில் ஊறிப்போன பயணம். தினம் தினம் ஒருமாடு விளக்கு ஏந்தி முன் செல்கிறது. மாட்டின் தலையில் விளக்கின் பகுதியாய் இருக்கும் அந்த டயர் தான் கால சக்கரமா?

அறுவை கூடத்தில் நடக்கும் அந்த பலியை நினைத்துபாருங்கள். போர் வெறியல்ல அங்கு இருப்பது. அமைதியான கொலைகள். ஒரு நிமிடத்திற்கு எத்தனை விழும்? சிறு ஈசல் பூச்சிகள் தானே நாம் அந்த பெரும் சுடரின் முன் என்ன செய்ய முடியும்?

----

இது ஒரு விதமான வாசிப்பு. வேறுவகையிலும் அர்த்தபடுத்தி கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இந்த கதையை பற்றி விவாதிக்கலாம் என்று எண்ணுகிறேன். விவாதம் தொடங்கினால் மேலும் பல கேள்விகள் உள்ளன கேட்பதற்கு,

Sunday, November 15, 2015

புலிக்கலைஞன் சிறுகதை வாசிப்பனுபவம்

புலிக்கலைஞன்-அசோகமித்திரன்

 

புலிக்கலைஞன் கதையை இரு முறை படித்தேன். இந்த சிறுகதை கலைக்காக வாழ்க்கையை அற்பனித்த ஒரு உன்னதமான கலைஞனை நமக்கு காட்டுகிறது. அந்த கலைஞனின் உச்சமான கலை வெளிப்பாட்டை சித்தரித்துக்காட்டுகிறது. அப்படிப்பட்ட கலைஞனை இந்த காலத்தில் இந்த சமுதாயம் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்று உணர்த்துகிறது.

இதுவே இந்த கதையின் கரு. ஆனால் இந்த கதை பல செறிவான விஷயங்களை நுட்பமாக உள்ளடக்கி இருக்கிறது. இந்த கதை மூன்று விதமான மனிதர்களை சித்தரித்து காட்டுகிறது. கதையின் தொடக்கமே சோற்றில் தான் ஆரம்பிக்கிறது. சோற்று நேரம் அன்றாட அலுவல். அதன் வேலை பளு, அதன் வெட்டி நேரங்கள் என்று விவரித்து செல்கிறான் கதை சொல்லி. சோற்றையும் அன்றாட வாழ்க்கையையும் பற்றியே கவலைபடும் ஒரு வித மனிதர்கள்.

அடுத்தவகை மனிதர் சர்மா போன்றவர்கள். உண்மையில் இவரும் ஒரு வகை கலைஞர் தான். கதைகள் எழுதுகிறவர். காக்கி ட்ரௌசரிலிருந்து வேட்டிக்கு உருமாறியவர். தன்னுடைய இயல்புக்கு காக்கி சட்டை உரியதல்ல என்றுணர்ந்து இந்த ஸ்டுடியோவின் கதை இலக்காவில் வந்தமர்ந்தவர். இந்த ஸ்டுடியோவின் தேவையின் போது தனது கலை மனதை தூண்டி விட்டு தேவையில்லாத நேரம் அனைத்துவிட்டு குடை ரிப்பேர் போன்ற லௌகீக விஷயங்களில் ஈடுபடுபவர். இதை போன்ற மத்திம மனிதர்களுக்கு வாழ்க்கையின் பாதுகாப்பு முதல் அதன் பின்னே தான் கலை.

இந்த இருவகை மனிதர்கள் முன் வந்து நிற்கிறான் புலிக்கலைஞன். ஆம் அவன் புலிக்கலைஞன் தான் - உள்ளுக்குள்ளும். அவன் வந்து நிற்பது முதலே அவனை பற்றி நுட்பமாக சித்தரிக்க ஆரம்பித்துவிடுகிறார் எழுத்தாளர். முதலில் அவன் “க்ரவுடில்” ஒருவனாக இருக்க விரும்பவில்லை. அவனுக்கென்று ஒரு திறன் இருக்கிறது  அதனை வெளிக்காட்டவே காதர் விரும்புகிறான். பின் அவன் மற்ற புலிஆட்டகாரர்கள் போல அல்ல என்று கூறிக்கொள்கிறான். புலியை அப்படியே அசலாக கொண்டு வந்து காட்ட கூடிய கலைஞன் என்று தன்னை அறிமுகப்படுத்திகொள்கிறான்.

“ஐயாவெல்லாம் எங்க புலியாட்டம் பார்த்துருப்பீங்க” என்று சொல்லி அசல் புலி போல் நடித்து அவர்களை மிரள செய்கிறான். தன் கலைத்திறனை அவர்களுக்கு உணர்த்துகிறான். மற்ற புலிஆட்டகாரர்களிலிருந்து அவன் எப்படி வித்தியாசப்படுகிறான் என்று உணர்த்துமிடம் மூலம் நாம் உன்மையான கலை என்பது என்ன என்று புரிந்து கொள்ளலாம். சாதாரன வாழ்க்கையின் காணக்கிடைக்காத வாழ்க்கையின் பிரபஞ்சத்தின் ரசமான விஷயங்களை எடுத்து அடுத்தவர்கள் முன் வைப்பவனே கலைஞன் அல்லவா? இந்த புலிக்கலைஞன் பயம் என்ற ஒரு அடிப்படையான உணர்வை அவர்களில் தூண்டி தன் கலையை உணர்த்துகிறான்.

ஆனால் இன்னும் இந்த புலிகலைஞன் முழுமையடையவில்லை. இதுவரையிலும் நமக்கு தெரிந்தது ஒரு கலைஞன் தான். அவன் எப்படி புலிகலைஞனாகிறான் என்று நுட்பமாகவே சித்தரிக்கப்படுகிறது. காதர் ஒன்றும் முட்டாள் அல்ல. அந்த அறையில் அவர்களிடம் 5 நிமிடம் பேசும் போதே அவர்களில் யார் முக்கியம் என்று நன்கு உணர்ந்து கொள்கிறான். தொடர்ந்து அவர்களை தன் எண்ணத்திற்கு இணங்க வைப்பதில் வெற்றியடைகிறான்.

மேலும் யாருக்குமே இருக்கமுடியாத ஒரு அசாதாரனமான லாவகமும் கச்சிதமும் அவன் புலியாட்டத்தில் இருக்கிறது. இப்படி சாமர்த்தியமும் திறனும் கொண்ட ஒருவனுக்கு இந்த லௌகீக உலகில் வாழத்தெரியாதா? அது அவனுக்கு வாழைபழத்தை போல் எளிமையாக சாப்பிடும் விஷயமாக அல்லவா இருக்கும்? ஆனால் அவன் வறுமையில் வாடுகிறான். அது ஏன்? அவன் நினைத்தால் அவன் ஒரு ஸ்டன்ட் நடிகனாக எளிதாக ஆக முடியாதா? ஆம் முடியும். அவனுக்கு நீச்சல் கூட நன்கு தெரிந்திருக்கலாம்.

அவன் அந்த நீச்சல் காட்சியை மறைமுகமாக தட்டிகழிக்கிறான் என்று நினைக்கிறேன். அவன் செய்ய விரும்புவது கூட்டத்தில் ஒருவனாக நடிப்பது அல்ல. தெருவில் ரம்சானுக்கும் மொஹரத்துக்கும் புலிவேஷமிட்டு மக்களிடம் கைத்தட்டு வாங்குவதல்ல. அவன் புலிக்கலைஞனாகவே எப்போதும் இருக்கவிரும்புகிறான். அந்த புலியாட்டத்தை தவிர அவனுக்கு வேறு எந்த பாத்திரம் கொடுத்தாலும் அவன் செய்திருக்கமாட்டான். அதனாலேயே அவன் திரும்ப திரும்ப ரோல் ரோல் என்று கேட்டு கொண்டு இருக்கிறான்.

இந்த கதையில் அவன் புலியாக மாறும் தருணம் தான் பலருக்கும் உச்சமாக தெரியும். அது சரிதான். ஆனால் நான் அவன் முகமூடி அனிவதை அவன் வேஷமாக நினைக்கவில்லை. அவன் அந்த புலி முகமூடியை கழற்றும் போது தான் முகமூடியை போட்டுகொள்கிறான். ஆம். அவன் புலிதான். அவன் அகத்தில் எப்போதும் அந்த புலிதான் உலாவி கொண்டிருக்கிறது. இந்த உலகத்திற்கும் சமூதாயத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார் போல் ஒரு முகமூடி அணிந்து கொள்கிறான் அதுவே காதர். காலில் விழுபவன் அந்த காதரே புலி அல்ல. அவனுக்கு அந்த புலிதான் முக்கியம் காதர் அல்ல.

இவன் அகத்தில் எப்படி அந்த புலி எப்போதும் விழிப்புடனிருக்கிறது என்று மிக நுட்பமாக சொல்லப்படுகிறது. அந்த ஒரு கால் குட்டையான நாற்காலியை ஏன் விவரிக்கிறார் எழுத்தாளர்? வந்தமர்பவர்கள் வயிறை ஒரு நொடி கலக்க வைக்கும் அந்த நாற்காலியை அவன் முதுகை பிடித்து கொண்டு நிற்கிறான். இது போதாதா அவனில் அந்த புலி எப்போதும் விழித்திருக்கிறது என்று சொல்வதற்கு. ஆம் அவனுக்கு ஒரு பார்வை போதும் அவன் இருக்கும் இடத்தை அவன் அறிந்து கொள்ள. முகமூடி அணிந்து அறையை அங்குமிங்கும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மேசையிலிருக்கும் ஒரு பொருள் மீது கூட கால்படாமல் அவனால் பாய்ந்தும் குதித்தும் பற்றியும் புலியாட்டம் செய்ய முடியும்.

இங்கு புலி என்பது ஒரு குறியீடு. கலைஞனுக்குளிருக்கும் கலைக்கண் என்றும் மூடுவதில்லை. அதன் வழியாகவே அவன் உலகை பார்க்கிறான். சாமனியர்களுக்கு தெரியாத பல உண்மை கலைஞனுக்கு தெரிகிறது. அதிலிருந்தே தரிசனங்கள் பிறக்கிறது. இந்த தலைப்பு எவ்வளவு பொருத்தமானது. கீழே நான் கொடுத்திருக்கும் இணைப்புகளில் ஜெ புலிக்கலைஞன் என்ற தலைப்பில் இருக்கும் கலைஞனை அடிக்கோடிட்டு காண்பித்திருப்பார். நான் அதோடு அந்த புலியையும் அடிகோடிட்டு காண்பிக்க விரும்புகிறேன்.

புலி என்பது நமது பண்பாட்டில் அதன் தனித்தன்மைக்காகவே அறியப்படுகிறது. புலி பசித்தாலும் புல்லை திங்காது என்பார்கள். ஆடுகளுடன் சேர்ந்து ஆடு போல் கத்தி கொண்டிருக்கும் புலியை ஒரு பெரும் புலி வந்து மீட்டு கர்ஜிக்க வைத்த கதையை நாம் படித்திருப்போம். இந்த கதையில் வரும் கலைஞன் புலி வேடமிடுவதால் மட்டும் அவன் புலிக்கலைஞனல்ல. அவன் அந்த கலையை தவிர வேறு எதையும் எதற்காகவும் எந்த காலத்திலும் செய்ய தயாராக இல்லாதவன் என்பதாலேயே அவன் புலிக்கலைஞன். புலி பசித்தாலும் புல்லை திங்காது. அவன் செத்தாலும் அந்த கலையை தவிர வேறு ஒன்றை செய்யமாட்டான்.

அவன் வந்து ஆடும் அந்த அறையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பல மாதங்களாக வேலையில்லாமல் ஊளை சதையை சுமந்து கொண்டு வெட்டியாய் அமர்ந்திருக்கும் மனிதர்கள். பல்லை நோன்டி கொண்டும், வடையை தின்று கொண்டும் அரட்டையும் வாயுவும் உலாவும் அந்த அறையில் ஒரு தீ தழல் போல ஆடிவிட்டு போகிறான் அந்த கலைஞன். இருண்ட அறை ஜோதி மயம் அணிந்தெழுவது போல் அந்த அறையில் கலை ஒளியை பரவவிடுகிறான்.

சர்மாவுக்கும் இவனுக்குமான வித்தியாசத்தை ஒப்பிட்டு பாருங்கள்.ஒன்றரை வருடம் எந்த வேலையும் இல்லை என்றாலும் தன் படைப்பை தேவை எனும் போது வெகுஜன மக்களுக்காக தூண்டி விட்டுகொண்டு ஏதோ செய்ய கூடியவர் சர்மா. ஆனால் இவனோ தனது கலையை  வெளிப்படுத்த ஒவ்வொரு கணமும் துடித்து கொண்டிருக்கும் கலைஞன். ஆஹாம் வேணாம் வேணாம் என்று சொல்ல சொல்ல முகமூடியை எடுத்து அணிந்து கொள்கிறான் இவன். எப்போதும் தனது முகமூடியை அணிந்து கொண்டு தன் உண்மையான இருப்பை வெளிக்காட்ட துடிக்கிறான் இந்த புலிக்கலைஞன்.

இவனுக்கு என்ன பசியானாலும் குடும்பத்தை இழந்தாலும் இவன் இப்படி தான் இருப்பான். இவனது இயல்பு இது. பெரும்பாலான மனிதர்கள் இந்த உலகில் பசி விதைக்கப்பட்டு பிறப்பிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அதுவே பிரதானம். ஆனால் லட்சத்தில் ஒருவன் கலை விதைக்கப்பட்டு பிறப்பிக்கபடுகிறான். முன்னவர்களுக்கு உணவு என்பது செடிகள் எப்போதும் நினைத்து கைகூப்பி காத்திருக்கும் சூரியன் போன்றது. ஆனால் நமது புலிக்கலைஞர்கள் போன்றவருக்கோ அது கொடிகள் பற்றி ஏறும் ஒரு கிளை மட்டுமே. அவர்கள் தங்கள் கலையை நிதமும் வெளிப்படுத்துவதையே தர்மமாக கொண்டவர்கள்.

சாப்பிட காசு கொடுத்தாலும் ஏதாவது ரோல் கொடுங்க ரோல் கொடுங்க என்று இரைகிறான். அதுவே சர்மாவை நுட்பமாக சீண்டுகிறது. வர்ர லஷ்மிய வேண்டான்னு சொன்னா எப்டி காசு வரும் என்று கேட்கிறார். அவனுக்கு லஷ்மி இரண்டாம் பட்சம் தான். அவனுள் சரஸ்வதி என்றும் உறைந்திருக்கிறாள். இதை போல எத்தனையோ புலிக்கலைஞர்கள் சுற்றி கொண்டிருக்கிறார்கள் போலும். நான்கு தபால் அனுப்பினால் மூன்று இல்லை என்று திரும்பி வருவது இதை போன்ற புலிக்கலைஞர்களால் தானா? குடும்பத்தை இழந்து சுயமரியாதை இழந்து பசியிலும் தன் இயல்பை விட்டுகொடுக்க இயலாத உயர்ந்த கலைஞர்கள் எங்கோ தங்களுக்கான பார்வையாளர்களை தேடி சுற்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களை அந்த கலையை தவிர வேறு எதுவும் பிணைத்து வைப்பதில்லை போலும்.

நிலப்பிரபுத்துவ காலத்தில் இந்த கலைஞர்களுக்கென்று ஒரு களமிருந்திருக்கும். அவர்கள் சுயமரியாதை இழந்திருந்தாலும் அவர்களின் கலையை வெளிக்காட்ட அதிலேயே திளைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் நுகர்வையே பிரதானப்படுத்தும் இந்த நவீன யுகத்தில் கலைக்கென்று ஒரு தரப்பு அறிதாகவே இருக்கிறது. அதுவும் சோறு சோறு என்று ஓடி கொண்டிருக்கும் நம்மை போன்ற ஏழை நாடுகளில் அதற்கான தரப்பே இல்லை போலும். வெகுஜன விஷயங்களே இங்கு முக்கியத்துவப்படுத்தப்படுகிறது
. மக்கள் அதிகமாக விரும்பி பார்த்த அந்த காவடி காட்சியே புலியாட்டத்தின் இடத்தை பிடித்து கொள்கிறது. இந்த புலிகள் எல்லாம் இறையின்றி மடிகின்றது. புலியில்லா காடு எத்தனை வெறுமையானது?

http://www.jeyamohan.in/37090#.VklciL9qnMs

http://simulationpadaippugal.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D – இந்த பதிவுக்காக இந்த இணைப்பை கொடுக்கவில்லை. இதன் கீழே இருக்கும் ஜெ அவர்களின் கமென்டை படித்துபார்க்கவும்

Wednesday, November 11, 2015

வாசகனின் இலக்கு

வாசிப்பு என்பது அகவயமானது. ஓரளவுக்கு மேல் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. கற்பனையை அடிப்படையாக கொண்டது. அப்படி இருக்கயில் ஒவ்வொரு வாசகனின் கற்பனை சக்திக்கு ஏற்பவும் அவனது இயல்புக்கு ஏற்பவும் படைப்பிலிருந்து தனக்கான அனுபவங்களை பெற்றுகொள்கிறான். அதிலிருந்து கருத்துக்களை உருவாக்கி கொள்கிறான்.
வெறும் கதை ஓட்டத்தை மட்டும் படித்து செல்லாமல் அந்த கதை தருணங்களை பற்றி தன்னுள் கேள்விகளையும் கற்பனைகளையும் எழுப்பி கொண்டு தனக்கென ஒரு பார்வையை கதை முழுதும் தொகுத்து கொண்டு வருபவன் நல்ல இலக்கிய வாசகன் என்று கருதுகிறேன்.

இது நல்ல வாசகனின் முதல் நிலை என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு படைப்பில் இருந்து எடுக்கப்படும் கருத்தை தன் வாழ்வு மட்டும் பிரபஞ்சம் என்ற Phenomenon மீது தனக்கான ஒரு பார்வையை உருவாக்கி கொள்ள கூடியதாக இருப்பின் அது தரிசனமாக அமைகிறது. இப்படி ஒரு கருத்தை படைப்பிலிருந்து எடுப்பவன் மேலே சொன்ன வாசகனை விட ஒரு படி மேல்.
அதே சமயம் ஒரு நல்ல இலக்கியம் என்பது(நாவல் போன்றவை) இந்த ஒட்டு மொத்த தரிசனத்தை தருபவையாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட படைப்புகள் உலகியல் தளத்திலும் எளிய உணர்வு தளத்திலும் பேசும் படைப்புகளை விட உயர்ந்தது.

எழுத்தாளர் எழுதியதையே தான் வாசகனும் சென்று அடையவேண்டும் என்று இல்லை. வாசகன் தனக்குண்டான அனுபவத்தை எடுத்துகொள்ளலாம். ஆனால் எழுத்தாளர் எந்த அளவுக்கு ஆழமான ஒரு கதை கருவை அடிப்படையாக கொண்டு எழுதியிருக்கிறாரோ அந்த ஆழம் வரை வாசகன் செல்லக்கூடியவனாக இருக்கவேண்டும். அதை விட ஆழமாக சென்று கூட அதை விளக்கி கொள்ளலாம். அவன் சிறந்த வாசகன்.

அதே சமயம் இன்னொரு விஷயமிருக்கிறது. ஒரு படைப்பு என்பது அந்த படைப்பாளி உருவாக்குவதால் அவர் எழுத நினைத்த சாரம்சத்தை நோக்கி நம்மை அழைத்து சொல்கிறார். இலக்கிய வாசிப்பை ஒரு பயணமாக உருவகித்து பார்க்கலாம். வாசகர்கள் அனைவரும் ஒரு இடத்துக்கு பயணம் செல்கிறார்கள். பயணத்தின் இலக்கு என்பது அந்த படைப்பின் சாராம்சம். போகும் பாதை என்பது அந்த படைப்பு. நம்மை அந்த இலக்கை நோக்கி வண்டி ஓட்டி செல்வது எழுத்தாளர்.

இந்த பயணத்தில் அனைவருக்கும் ஒரே புறவெளிதான் இருக்கிறது. எங்கு, எந்த வழியே செல்கிறோம் என்பதை எழுத்தாளரே முடிவெடுக்கிறார். அங்கு கொண்டும் சேர்க்கிறார். ஆனால் இந்த பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவமிருந்திருக்கலாம். அவரவரின் அக ஓட்டம், கற்பனை, நுண்ணுணர்வு பொருத்தது அது. இருந்தும் சென்ற பயணம் ஒன்றே. அதனால் கிட்டத்தட்ட எழுத்தாளர் உட்பட அனைத்து நல்ல வாசகர்களும் – பயணத்தில் தூங்காமல் வந்தவர்கள்! – ஒரு பொதுவான அனுபவத்தையும் அடைந்திருப்பார்கள்.

அதனால் இந்த விஷயத்திற்கு Binary இல் பதில் சொல்ல முடியாது. இரண்டுமே முக்கியம்.

Silicon shelf என்ற தளத்தில் நடந்த விவாதத்தில் நான் எழுதியது.