Thursday, August 28, 2014

தண்டவாளம்

தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் (Tomas Tranströmer) கவிதை ஒன்று,

தன்டவாளம் (Tracks)

இரவு 2 மணி, ரயில் ஒரு வயக்காட்டில் நின்றது
தொலைவில் ஒரு சிறு நகரத்தில் இருந்து ஒளி பொறிகள்,
வின் விளிம்பில் உணர்வின்றி சிதறுகிறது.

ஒரு மனிதன் கனவின் ஆழத்திற்கு செல்லும் போது
அவன் அங்கு இருந்தது,
அவன் அறைக்கு அவன் மீன்டும் திரும்பும் போது நினைவிருக்காது.

அல்லது ஒரு நபர் நோயின் ஆழத்திற்கு செல்லும் போது
அவனது எல்லா நாட்களும் சிதறும் பொறிகளாய், பறவை கூட்டமாய்
வலுவிழந்து, உனர்வற்றதாய் மாறிவிடுகிறது.

ரயில் முற்றிலும் நகர்வற்று போயிற்று
இரன்டு மணி, திடமான நிலவு, சில நட்சத்திரங்கள்.


இந்த கவிதை ரயில் பயனத்தை ஒரு படிமமாக வைக்கிறது. 

ஒரு வயலில் நின்று விட்ட ரயிலில் இருந்து தொலைவில் தெரியும் ஒரு காட்சி, ஓளி சிதறல்கள், என்று கவிதை தொடங்குகிறது. அந்த ஒளி சிதறல்கள் உணர்வின்றி சிதறுகிறது என்கிறார். ஒளிக்கு உணர்வு உண்டா என்ன? ஒளியின் உணர்வு அது பிரதிபலிக்கும் மனிதனின் மனதில் உண்டாவது. ஒரு வாண வேடிக்கை கண்டால் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் ஒரு ஆனந்தம், ஒரு ஆச்சரியம் எழும். அதுவே அந்த ஒளியின் உணர்வு. ஆனால் இங்கு உணர்வில்லா ஒளி, அந்த ஒளி பயணியின் உள்ளத்தையே பிரதிபலிக்கிறது. எப்படி அந்த ஒளி சிதறல் பயணியின் உள்ளத்தில் எந்த ஒரு உணர்வையும் தோற்றுவிக்கவில்லை என்று காட்டுகிறது. ஏதோ துயரத்தில், இக்கட்டில் ஆழ்ந்த ஒரு பயணி. அதே சமயம் அதே காட்சியை வேறு ஒரு மூலையில் இருந்து பார்க்கும் ஒருவனுக்கு அது உவகையை அளித்திருக்கும். மகிழ்ச்சி தான் எத்தனை சார்ப்புடையது. அது எதை சார்ந்திருக்கிறது?

கனவில் ஆழ்ந்த ஒருவன் கனவில் இருந்து வெளிவந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் போது, அந்த கனவு நினைவில் இருக்கபோவதில்லை. கனவு - அதை வெறுப்பவர்கள் யாராவது இருக்கமுடியுமா? நம் உன்மை வாழ்க்கையில் கனவு காண்பதன் மூலம் தான் எத்தனை உவகை கொள்கிறோம். அகத்தளத்தில் நாமே நம்மை நிகழ்த்தி கொள்ளும் ஒரு வாழ்க்கை, ஒரு சில மனி துளிகளில் தொடங்கி முடியும் ஒரு வாழ்க்கை. அந்த வாழ்க்கை முடிந்தவுடன் ஒரு பெருமூச்சுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம். அந்த கனவளித்த மகிழ்ச்சியை நம் அன்றாட உலைச்சல்கள் மூழ்கடித்துவிடும்.

நோயில் மூழ்கிய ஒருவனுக்கு தன் மொத்த வாழ்நாளும் ஒரு கனவாய் தான் தெரியும். மகிழ்ச்சியான ஒரு நினைவு, ஆனால் அது இந்த தருணத்தின் வேதனையில் பொருளிழந்தது, வலுவிழந்தது, உணர்விழந்தது. மிஞ்சினால் ஒரு சோர்ந்த புன்னகையை எழுப்ப கூடியது. நமது மகிழ்ச்சி ஒரு தருணத்தில் நாம் வாழும் சூழ்நிலைக்குட்பட்டது. அந்த சூழ்நிலைகள் நமது வாழ்க்கை பயணத்தில் காணும் காட்சிகள். நமது பயணமோ ரயில் வண்டியில், தண்டவாளங்களுக்கு உட்பட்டது. ஆனால் தண்டவாளங்களை தாண்டியும் நம் கனவுகள் ஓட கூடியது. அது கனவு மட்டுமே. அதை ஏற்பத்தும் மறுப்பதும் இந்த சிறைப்பட்ட பயணியே.