Monday, December 28, 2015

பிரசாதம் - சிறுகதை வாசிப்பனுபவம்


பிரசாதம் - சுந்தர ராமசாமி

மனிதன் வாழ்வில் தன்னால் சாதிக்க முடியாத விஷயங்களின் முன் நிற்கும் போது ஒரு குறிப்பிட்ட நிறைவு நிலையை அடைகிறான். அந்த கையறு நிலையில் இருந்து பிறக்கும் அமைதி அது. சிந்தித்து பார்த்தால் அந்த நிலையில் அவன் அடையவேண்டியது மிகுந்த வருத்தத்தையே. இருப்பினும் அந்த தருணங்களில் தான் ஒரு வகை நிம்மதி நம்மை சூழ்கிறது. அது ஒரு வகை கடந்து வந்த நிலை. ஆசைகளை பயத்தை ஆனவத்தை அனைத்தையும் கடந்த பிறகு எஞ்சும் நம்மில் சுரக்கும் அமைதி அது. இத்தனை சுமைகளை இறக்கி வைத்ததனால் வரும் நிம்மது அது.

அது ஒருவகையில் நம் அகங்காரம் முற்றிலும் ஒடுங்கும் தருணம் என்று கொள்ளலாம். என்னால் முடியும் என்னால் முடியம் என்று நாம் துரத்தி கொண்டு செல்லும் விஷயம் ஒரு தருணத்தில் நாம் என்ன முயன்றாலும் முடியாது என்று அறியும் போது நாம் நமது சிறுமையை அறிகிறோம். இந்த சிறுமை குணத்தால் சிறுமை அல்ல. இந்த பிரம்மாண்ட பிரபஞ்ச வெளியின் முன் சுழன்று சுழன்று ஏறி செல்லும் இந்த காலத்தின் முன் சிறு துகளினும் கோடி பங்கில் ஒருவனாய் நம்மை பார்த்து உணரும் சிறுமை அது. இந்த சமயத்தில் தான் சரணாகதி என்பது முழு அர்த்தம் கொள்கிறது. நதிகிருஷ்ணன் கால்களில் சென்று பணிவதன் மேன்மை புரிகிறது. இவை எதற்கும் நான் பொறுப்பல்ல நீயே என்று அவன் மீது சுமைகளை இறக்கி வைத்து பஞ்சு போல் பறக்கும் இலகு தன்மை கூடுகிறது. அதற்கு பின் எதுவும் செய்யலாம். நக்கல், நையான்டி, சிரிப்பு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிறைந்தது தான் வாழ்க்கை. இந்த கதையில் அந்த அர்ச்சகரும் போலிஸ்காரரும் உருமாறும் நுட்பமான தருணத்தில் நிகழ்ந்தது இதுவென்றும் சொல்லலாம்.

இன்னொரு வகையில் காவலன் என்ற பொறுப்பில் இருப்பவன் மீது எழும் பயம். அவன் மீது ஒரு சிறு கலங்கம் தெரியும் போது அவன் கேலிக்குறியவன் ஆகிவிடுகிறான். அதற்கு மேல் அவன் கொடுரமான தன்டனை வாங்கி கொடுத்தாலும். அதன் பொருள் இழந்துவிடுகிறது. அந்த தன்டனை உடலுக்கு மட்டும் தான். உள்ளத்தளவில் அந்த தன்டனையின் கீழ்மை அர்ச்சகருக்கு தெரியும்.அவருக்கு அதனால் எந்த அவமானமும் நிகழப்போவதில்லை.

இந்த கதையில் படிப்படியாக இரண்டு பாத்திரங்களும் மாறி வருவதை கவணிக்கலாம். முதலில் அர்ச்சகர் காவலன் என்ற அவர்களின் தொழில் அடிப்படையில் இருவரும் உரையாடுகிறார்கள். அப்போது தான் பயம், மிரட்டல் ஆகியவை செல்லுபடியாகிறது. அடுத்த நிலையில் மனிதர்கள் என்ற அளவில் பேசிகொள்கிறார்கள். ஒருவரின் கீழ்மையும் ஒருவரின் நக்கலும் சேர்ந்த உரையாடலில் இருவரும் சிரித்து நாம் இருவரும் சமமான மனிதர்கள் என்ற நிலையை அடைகிறார்கள். அடுத்த நிலையில் உணர்வின் அடிப்படையில் இருவரும் உரையாடுகிறார்கள். பசித்து ஏங்கும், உறவுகளின் சிறு சிறு சந்தோஷங்களுக்கும் கூட கூட பல வகையான சமரசங்கள் செய்து கொண்டு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் சமுதாயத்தின் அடித்தட்டு மனிதர்களின் உணர்வுகளை இருவரும் பரிமாறிக்கொள்கிறார்கள்.

அந்த உணர்வுகளை பரிமாறிக்கொள்ளும் போதே அங்கு மனிதர்கள் தங்கள் உயர்வை காட்டுகிறார்கள். தன்னை காத்துக்கொள்ள ஒருவனுக்கு கொடுக்கபடாத காசை அந்த உணர்வுகளுக்காக அந்த காவலனுக்கு கொடுக்கிறார் அர்ச்சகர். உணர்வுகள் மட்டுமல்ல கணவுகளும் சேர்ந்துதான். நதிகிருஷ்ணன் அர்ச்சகரின் கணவு. கண்ணம்மா காவலனின் கணவு. இதை நிறைவேற்றி பார்ப்பதற்க்காகவும் தான் அவர்கள் பெரும் தொகை செலவு செய்கிறார்கள். இது போன்ற உணர்வுகளும் கணவுகளும் தான் நம் வாழ்க்கையை இன்பமாக்குகிறது. அனைத்தையும துறந்து கிருஷ்ணனின் காலில் விழுவது ஒரு இன்பம் என்றால். அனைத்து பந்தங்கலுடனும் கிருஷ்ணனைஅனைத்து கொள்வதும் ஒரு இன்பம் தான்.

****

இதே கதையை பாலு மகேந்திரா குறும்படமாக எடுத்திருக்கிறார்.



No comments:

Post a Comment