Tuesday, August 25, 2015

இரவெனும் கடல்

எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயிவன்
எவன்கொல் வாழி தோழி 
கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே



இந்த சங்க பாடல் குறிப்பிடும் நிலைக்கு நேரெதிரான உணர்வை அடைந்திருக்கிறேன். பலரும் அடைந்திருக்கலாம், இரவு கரைகிறேதே என்று ஏங்க வைத்திருக்கிறது. பகல் - அதை நான் வெறுக்கிறேன். எங்கும் இடம். எதை வைத்து அடைப்பது இந்த இடங்களை. எவ்வளவு நிறைத்தாலும் நிறைவதில்லை. இங்கு என் முன்னே எத்தனையோ தோன்றி நிற்கின்றன. எத்தனை குழப்பங்கள் எத்தனை தடுமாற்றங்கள் எத்தனை பாவனைகள்.

ஆனால் இரவு அப்படி அல்ல. இரவெனும் இருள் பொங்கி வழியும் கடல். இருள் - அது அமிர்தமல்லவா. என்னை மூழ்கடித்து அனைத்து கொள்கிறது. எங்கும் எதுவும் இல்லை. நானே. நான் மட்டுமே. அனைத்தும் நானே. என் எண்ணங்களால் மட்டுமான நான். என் அகமே அனைத்தும். எத்தனை நிறைவு. என் அகம் விஸ்வருபம் எடுத்து எங்கும் பரவியிருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு சிறு கணத்தில் இந்த பெருங்கடல் வற்றி பாலையாகிறது. பாலையில் விழுந்த மீனாய் துடிக்கிறேன். அந்த கடலில் இரு கைபிடி இருளை எடுத்து வைத்துகொள்ள முடியாதா? என் கண்களில் நான் விரும்பும் போது வைத்துகொள்ள.

ஒருவேளை இரவில் நம் அகமே அனைத்தும் ஆவதால் அகத்தில் ஊற்றெடுப்பது நம்மை அழுத்திவிடுகிறது. பகலில் நம் அகம் ஒரு சிறு பறவை என அங்கங்கு பறந்து கொண்டிருக்கிறது. 'சூ' என்று விரட்டிவிட்டு நம் வேலையை பார்க்கக முடிகிறது. ஆனால் இருளில் அதுவே பெருங்கடலாகி நம்மை மூழ்கடிக்கிறது. அதில் ஏற்படும் ஒரு சிறு சலனம் இரவில் பேரலையாய் நம்மை அழுத்திவிடுகிறது. அதில் கசியும் விஷம் பெரும் ஊற்றென பொங்கி பாய்ந்து கடலையே நஞ்சாக்கிவிடுகிறது.

No comments:

Post a Comment