Tuesday, August 4, 2015

சிறியதே அழகு

சிறியதே அழகு -  Small is Beautiful - E.F.Schumacher, Technology with Human Face என்ற கட்டுரையின் சுருக்கம்

தொழில் நுட்பத்தால் நாம் இயற்க்கை வளங்களை அழிப்பது மட்டுமின்றி  அது மனிதர்களின் படைப்பு திறனையும் முடக்கிவிடுகிறது என்கிறார் ஷூமாக்கர்.  ஒருவன் தன் சொந்த உழைப்பால் ஒரு பொருளை தயாரிப்பான் எனில் அதிலிருக்கும் படைப்பு செயல்பாடும், நுட்பங்களும் அவனுக்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் தருகிறது. இன்று அந்த வேலைகளை தொழில்நுட்பம் பிடுங்கி கொள்வதால் அவன் முழுதாக ஒரு பொருளை தயாரிக்கும் வாய்ப்பை இழக்கிறான்.அவன் மிக பெரிதான ஒரு பொருளின் பாகங்களை தயாரிக்கும் தொழில்களில் ஈடுபடுகிறான். அப்படிபட்ட வேலையில் மனிதன் நிறைவடவதில்லை. அப்படி நிறைவடையாத மக்கள் இருக்கும் சமூகத்தில் தான் கேளிக்கைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

Mass production என்பதற்கு மாற்றாக அவர் காந்தி சொன்ன production by mass என்ற உற்பத்தி முறையை வைக்கிறார். பெரும் உற்பத்தி முறைகளில் பெரிய அளவிலான மூதலீடும், ஆற்றலும், தொழில்நுட்பமும் தேவைபடுகிறது. பெரும் உற்பத்தி முறைகளில் இயல்பாகவே ஒரு வன்முறை இருக்கிறது. அதன் அளவுக்கும், வேகத்துக்கும் எல்லையில்லாமல் இருக்கிறது. அது மிக முக்கியமான அதன் மூல தனத்தையே அழிக்கிறது. அந்த மூலதனம் மீண்டும் உயிர்ப்பிக்க முடியாத இயற்க்கை.

அதனால் மக்களை கொண்டே உற்பத்தி செய்யும் முறையை முன் மொழிகிறார். இதில் பெரிய முதலீடோ, ஆற்றலோ, தொழில்நுட்பங்களோ தேவையில்லை. மக்களின் உழைப்பு, அந்த உழைப்பே பெரும் முதலீடு, சில கருவிகளை கொண்டு உற்பத்தி செய்வோம் என்கிறார். மையமற்ற தன்மையும், இயற்கையுடனான ஒத்திசைவும், சிக்கனமாக வளங்களை உபயோகிக்கும் தன்மையும் இந்த முறையின் சிறப்புகளாகும். மேலும் இந்த முறையில் குழந்தைகளிலிருந்து முதியவர் வரை பங்கு வகிக்கலாம். மனிதர்களின் திறமையை, படைப்பூக்கத்தை, நுட்பங்களை வெளி கொண்டுவரும் இதை போன்ற வேலைகளில் ஈடுபடுவோருக்கு கேளிக்கை என்று தனியாக ஒன்று தேவையில்லை. தொழிலே ஒரு இன்பமான அனுபவமாக மாறிவிடுகிறது.

தொழில் நுட்பத்தை புதிய பாதையில் நம்மால் கொண்டு செல்ல முடியும் என்கிறார். பெரிய அளவிலான உற்பத்தி அழிவை நோக்கியே கொண்டு செல்லும். அதில் சுற்று சுழல் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை. பிரச்சினைகளை ஒன்றை இன்னொன்றாக அதை மேலும் பெரிதாக தான் மாற்றி கொள்கிறோம். மனிதனின் உன்மையான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தொழில் நுட்பம் தேவை. அவனை இயந்திரங்களுக்கு அடிமையாக்குபவை அல்ல. மனிதனின் அளவுக்கு ஏற்றார் போல் தொழில்நுட்பம் இருந்தால் போதும். மனிதன் சிறியவன், சிறியதே அழகு.

No comments:

Post a Comment