Sunday, August 9, 2015

அயல் வாழ்க்கை

அமெரிக்காவில் வாழக்கூடாத காரணங்கள் என்று ஐந்தை என் மனதில் உருவாக்கி வைத்துள்ளேன். அதில் ஒன்று மதத்துடன் தொர்புடையது. ஆனால் மதம் என்ற அனுபவத்தை அடைவதற்கு வெளிநாட்டில் வாழும் குழந்தைகளுக்கு வழிகள் குறைவு என்பது என் எண்ணம்.

இதில் எனது அனுபவத்திலிருந்து மட்டும் சில கருத்துகளை சொல்கிறேன். இது வேறு இடங்களில் வேறு வகையாக இருக்கலாம். அதை சுட்டிக்காட்டினால் எண்ணத்தை மாற்றி கொள்ள தயார்.

அமெரிக்காவில் நான் வாழும் இடத்தில் இருக்கும் இந்து மதம் என்பது வெறும் சடங்கு சார்ந்தது அல்லது நிறுவனமயமான ஒரு இயக்கம் இது இரண்டையும் தாண்டி ஒரு இயல்பான இந்து மதம் அல்லது இந்த மதத்தின் பல வழி சாத்தியங்களை கொண்ட ஒரு மதத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த இயலவில்லை.

இங்கிருக்கும் இந்து கோவில்களும் வெறும் சடங்குகளை நிறைவேற்றுவதற்கும் ஆண்டவனிடம் பேரம் பேசுவதற்குமான ஒரு இடமாக தான் இருக்கிறது. நம்மூர் கோவில்களுக்குள் நுழையும் போது தோன்றும் ஒரு ஆன்மீகமான அனுபவம் இங்கு தோன்றுவதில்லை. ஜோசப் கேம்பில் ஒரு பேட்டியில் சொன்னார் - வழிபாட்டு தளங்க்களுக்குள் அப்படி ஒரு விஷேச அனுபவம் கிடைப்பதற்கு காரணம் அங்கிருக்கும் மத குறியீடுகள், சிலைகள், ஓவியங்கள் ஆகியவை என்று. இங்கிருக்கும் கோவில்கள் அப்படி அமைக்கப்படுவதில்லை. ஏராளமான கோவில்கள் இருக்கிறது ஆனால் அது இங்கிருக்கும் திருமண மன்டபம் போலான ஒரு கட்டடதுக்குள் அப்படி சில அறைகளை பிரித்து சில தெய்வ சிலைகளை வைத்திருக்கிறார்கள். அது கோவிலுக்கு செல்லும் முழுமையான அனுபவத்தை தருவத்தில்லை.

இப்படி வேறு ஒரு நாட்டில் வழிப்பாட்டிடங்கள் வைக்கும் போது அப்படி முழுமையான ஆன்மீக அனுபவத்தை அடையும் வகையில் வைக்கமுடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு தெரிந்தவரை ஜரோப்பியர்கள் காலனிய காலத்தில் வெளிநாட்டுக்கு சென்ற போது அங்கு அவர்கள் தங்கள் வழிப்பாட்டுக்கு ஏற்றவாறு அவர்களின் முறையில் வழிப்பாட்டிடம் அமைத்து கொண்டார்கள். அப்படி இந்தியர்கள் நாம் செய்வதில்லை.

பண்டிகைகளும், கோவில் திருவிழாக்களும் நம் ஊரில் வாழும் போது நம்மிடமிரருந்து பிரிக்க முடியாத அனுபவமாக இருந்தது. தீபாவளி, பொங்கல் எதுவானாலும் சரி ஊருக்குள்ளேயே ஒரு கொண்டாட்டம் தானாக புகுந்துவிடும். இப்படிப்பட்ட அனுபவங்களை வெளிநாட்டில் வாழும் குழந்தைகள் இழந்துவிடுகிறார்களோ என்று தோனுகிறது.

கிறிஸ்துமஸ் காலங்களில் இங்கு அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு கிறித்துவர்களும் குழந்தையாக மாறிவிடுவதை காணமுடிகிறது. எனது மேலாளர் அவரது அறைக்குள்ளேயே ஒரு சிறிய கிறிஸ்மஸ் மரத்தை வைத்து ஒரு சிறுவனைபோல்  அலங்கரித்து கொண்டிருந்தார். இது போன்ற கொண்டாட்டங்கள் வாழ்க்கையில் மிக முக்கியம் என்றே நான் கருதுகிறேன். நம் அன்றாட வாழ்விலிருக்கும் சுமையை மறக்க வைக்கும் ஒரு தருணம்.

பண்டிகைகளை தவிர நான் பார்த்த வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊரானாலும் அங்கிருக்கும் கோவில்களின் திருவிழா நடக்கும். கோவிலில் கொடியேற்றி பத்து இருபது நாள் அந்த திருவிழா தொடர்ந்து தேர் இழுப்பதோடு இது முடிவடையும். பண்டிக்கைள் ஒவ்வொருவரும் தனிதனியேயும் அருகிலிருப்பவர்களுடனும்  பகிர்ந்து கொண்டாடுவதென்றால் இப்படிப்பட்ட கோயில் திருவிழாக்கள் ஊரே திரண்டு கொண்டாடுவதாகும். தேர் இழுக்கும் போது அந்த ஜனக்கடலுடன் இணைந்து அதில் பங்குகொண்டு அனுபவிப்பது ஒரு உச்சம். இதை போன்ற அனுபவங்கள் இங்கு சாத்தியமில்லை.

மேல் சொன்ன பண்டிகைகள், திருவிழாக்கள் எல்லாம் வெளிநாடுகளிலும் பெயரளவில் நடத்தப்படுகிறது. ஆனாலும் அதில் முழுமையான ஒரு அனுபவமில்லை.

வெளிநாடுகளில் சென்று வாழ்வது அதற்காக சில விஷயங்களை இழப்பது என்பது தேவையானதே அதற்காக நான் இதை எழுதவில்லை. மேலும் நமது சொந்த நாட்டை விட்டு பிரியும் ஏக்கத்தால் திரும்ப வருவதையும் நான் ஆதரிக்கவில்லை. ஆனால் நமக்கென்றிருக்கும் வாழ்க்கை முறையை வெளிநாட்டுக்கு வந்தவுடன் துறந்துவிடுகிறோமோ என்று எண்ணுகிறேன்.

நியுயார்க் நகரத்திர்கு நான் சென்ற போது அங்கிருக்கும் சுற்றுலா தளங்களுக்கு சென்றதுடன் மன்ஹாட்டனில் சில இடங்களில் இறங்கி சுற்றினேன். அங்கு சைனா டவுன் என்ற இடத்துக்குள் போனால் நியுயார்க்குள் இருந்து வேறேங்கோ சென்றது போலிருந்தது. கடைகளின் அமைப்பு, ட்ராபிக், அங்கு சுற்றியும் தெரியும் சீன எழுத்துக்குள் எல்லாம் நீங்கள் சீனத்தில் ஏதோ ஒரு நகரத்துக்குள் சென்று விட்ட அனுபவத்தை தரும். அதற்கு அருகில் இருக்கும் லிட்டில் இட்டலி இடமும் அப்படி தான் இருந்தது ரோடு முழுவது உணவகங்கள். ரோட்டோரம் விற்கப்படும் தின்பண்டங்கள் என்று  அங்கிருக்கும் இத்தாலியர்களுக்கு ஏற்றார் போல் தான் இருந்தது.

இப்படி நாம் நமக்கு ஏற்றார் போல் ஒரு சூழ்நிலையை வெளிநாட்டில் ஏற்படுத்தி கொள்ளாமல் போய் விடுகிறோமோ என்று தோன்றுகிறது. ஏனெனில் இப்படி ஒரு சூழ்நிலையில் தான் நாம் நம் மதக்கொண்டாட்டங்களையும் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் அதற்கே உன்டான கோலாகலத்துடன் செய்ய முடியும். அதுவே நமக்கும் நம் குழந்தைகளுக்கும் நம் பண்பாடு, மதம் சார்ந்த முழுமையான, ஒரு எழுச்சியான அனுபவத்தை கொடுக்க முடியும்.

இப்படிப்பட்ட அனுபவங்களை இழந்துவிட்டு இங்கு வாழ்வதற்கு பேசாமல் இங்குள்ள ஏதோ ஒரு மதத்திற்கே மாறி அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று தோன்றியதுண்டு.

No comments:

Post a Comment