Monday, November 16, 2015

மாபெரும் பயணம் – சிறுகதை வாசிப்பு

மாபெரும் பயணம் – சிறுகதை வாசிப்பு

http://www.jeyamohan.in/22604#.VkEVKytqmFc

முன்னே செல்லும் மாட்டின் தலையில் ஒரு விளக்கு வைக்கப்படுகிறது. அதன் வழி பின்னே மாட்டு மந்தை செல்கிறது. முன்னே செல்லும் மாட்டின் ஒரு சிறு இடறல் தயங்கள் கூட இந்த மந்தை எனும் உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. அதனால் அதன் முன்னே புல்லும் பின்னே சவுக்கும் அதை நிறுத்தாமல் வழி நடத்துகிறது. கதை சொல்லும் இந்த புரட்சியாளன் அல்லது தீவிரவாதி பார்த்த அந்த முன் செல்லும் மாடு என்ன? இவன் பின் தொடர்ந்து செல்லும் சேகுவாராவோ பிரபாகரனோ போன்ற ஒரு தலைவன் தானே அது. முன்னே லட்சியவாதமும்(அல்லது சுய லாபமும்) பின்னே இக வாழ்க்கை நெருக்கடிகளும்(அல்லது ஆயுதங்களும்) செலுத்தும் ஒரு சுடரெந்திய தலைவன் தானே.

மாட்டை போல் தொடர்ந்து சென்று இந்த புரட்சியாளர்கள் தங்கள் உயிரை பலியாக்குகிறார்கள். அரசாங்கத்தின் காலடி நெஞ்சில் ஏறி ஏறி மிதிக்க நசுங்கி சாகிறார்கள். அப்படி பட்ட பயணத்தில் தானே இந்த கதை சொல்லியும் இருக்கிறான். சென்று சென்று முடியாத பயணம். யார் இந்த மந்தையை நடத்தி செல்வது. முன்னே புல்லும் பின்னே சவுக்கும் கொண்டு வழிநடத்தும் இந்த மனிதர்கள் யார்? இந்த உலகின் இயக்கத்திற்கு காரணமாய் விளங்கும் நாமறியா ’அது’ தான் இவர்களா? ஒவ்வொரு நாளும் மனிதர்களை அந்த அறுப்புகூடத்திற்கு அழைத்து செல்வது அதன் சிறு விளையாட்டா? இந்த உக்கிரமான பலிகளில் இன்பம் நுகர்வது அதன் குணமா?

வழியில் விழும் மாடுகளின் தோலையும் கரியையும் வாங்க பின்னே வரும் கூட்டம் யார். இந்த வன்முறை பயணத்தில் லாபம் காண வரும் குள்ளநரிகளா? செல்லும் வழியில் புன்னகைத்து இறந்து விழுந்தவன் தான் கோபாலா? கதை சொல்லி அறுப்பு கூடத்துக்கு சென்று சேருவானா? பயணத்தின் இலக்கு சாவு! என்ன கொடுமை? செல்ல செல்ல தீராத பயணம். சென்று சென்று உடலணுக்களில் ஊறிப்போன பயணம். தினம் தினம் ஒருமாடு விளக்கு ஏந்தி முன் செல்கிறது. மாட்டின் தலையில் விளக்கின் பகுதியாய் இருக்கும் அந்த டயர் தான் கால சக்கரமா?

அறுவை கூடத்தில் நடக்கும் அந்த பலியை நினைத்துபாருங்கள். போர் வெறியல்ல அங்கு இருப்பது. அமைதியான கொலைகள். ஒரு நிமிடத்திற்கு எத்தனை விழும்? சிறு ஈசல் பூச்சிகள் தானே நாம் அந்த பெரும் சுடரின் முன் என்ன செய்ய முடியும்?

----

இது ஒரு விதமான வாசிப்பு. வேறுவகையிலும் அர்த்தபடுத்தி கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இந்த கதையை பற்றி விவாதிக்கலாம் என்று எண்ணுகிறேன். விவாதம் தொடங்கினால் மேலும் பல கேள்விகள் உள்ளன கேட்பதற்கு,

No comments:

Post a Comment