Sunday, November 15, 2015

புலிக்கலைஞன் சிறுகதை வாசிப்பனுபவம்

புலிக்கலைஞன்-அசோகமித்திரன்

 

புலிக்கலைஞன் கதையை இரு முறை படித்தேன். இந்த சிறுகதை கலைக்காக வாழ்க்கையை அற்பனித்த ஒரு உன்னதமான கலைஞனை நமக்கு காட்டுகிறது. அந்த கலைஞனின் உச்சமான கலை வெளிப்பாட்டை சித்தரித்துக்காட்டுகிறது. அப்படிப்பட்ட கலைஞனை இந்த காலத்தில் இந்த சமுதாயம் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்று உணர்த்துகிறது.

இதுவே இந்த கதையின் கரு. ஆனால் இந்த கதை பல செறிவான விஷயங்களை நுட்பமாக உள்ளடக்கி இருக்கிறது. இந்த கதை மூன்று விதமான மனிதர்களை சித்தரித்து காட்டுகிறது. கதையின் தொடக்கமே சோற்றில் தான் ஆரம்பிக்கிறது. சோற்று நேரம் அன்றாட அலுவல். அதன் வேலை பளு, அதன் வெட்டி நேரங்கள் என்று விவரித்து செல்கிறான் கதை சொல்லி. சோற்றையும் அன்றாட வாழ்க்கையையும் பற்றியே கவலைபடும் ஒரு வித மனிதர்கள்.

அடுத்தவகை மனிதர் சர்மா போன்றவர்கள். உண்மையில் இவரும் ஒரு வகை கலைஞர் தான். கதைகள் எழுதுகிறவர். காக்கி ட்ரௌசரிலிருந்து வேட்டிக்கு உருமாறியவர். தன்னுடைய இயல்புக்கு காக்கி சட்டை உரியதல்ல என்றுணர்ந்து இந்த ஸ்டுடியோவின் கதை இலக்காவில் வந்தமர்ந்தவர். இந்த ஸ்டுடியோவின் தேவையின் போது தனது கலை மனதை தூண்டி விட்டு தேவையில்லாத நேரம் அனைத்துவிட்டு குடை ரிப்பேர் போன்ற லௌகீக விஷயங்களில் ஈடுபடுபவர். இதை போன்ற மத்திம மனிதர்களுக்கு வாழ்க்கையின் பாதுகாப்பு முதல் அதன் பின்னே தான் கலை.

இந்த இருவகை மனிதர்கள் முன் வந்து நிற்கிறான் புலிக்கலைஞன். ஆம் அவன் புலிக்கலைஞன் தான் - உள்ளுக்குள்ளும். அவன் வந்து நிற்பது முதலே அவனை பற்றி நுட்பமாக சித்தரிக்க ஆரம்பித்துவிடுகிறார் எழுத்தாளர். முதலில் அவன் “க்ரவுடில்” ஒருவனாக இருக்க விரும்பவில்லை. அவனுக்கென்று ஒரு திறன் இருக்கிறது  அதனை வெளிக்காட்டவே காதர் விரும்புகிறான். பின் அவன் மற்ற புலிஆட்டகாரர்கள் போல அல்ல என்று கூறிக்கொள்கிறான். புலியை அப்படியே அசலாக கொண்டு வந்து காட்ட கூடிய கலைஞன் என்று தன்னை அறிமுகப்படுத்திகொள்கிறான்.

“ஐயாவெல்லாம் எங்க புலியாட்டம் பார்த்துருப்பீங்க” என்று சொல்லி அசல் புலி போல் நடித்து அவர்களை மிரள செய்கிறான். தன் கலைத்திறனை அவர்களுக்கு உணர்த்துகிறான். மற்ற புலிஆட்டகாரர்களிலிருந்து அவன் எப்படி வித்தியாசப்படுகிறான் என்று உணர்த்துமிடம் மூலம் நாம் உன்மையான கலை என்பது என்ன என்று புரிந்து கொள்ளலாம். சாதாரன வாழ்க்கையின் காணக்கிடைக்காத வாழ்க்கையின் பிரபஞ்சத்தின் ரசமான விஷயங்களை எடுத்து அடுத்தவர்கள் முன் வைப்பவனே கலைஞன் அல்லவா? இந்த புலிக்கலைஞன் பயம் என்ற ஒரு அடிப்படையான உணர்வை அவர்களில் தூண்டி தன் கலையை உணர்த்துகிறான்.

ஆனால் இன்னும் இந்த புலிகலைஞன் முழுமையடையவில்லை. இதுவரையிலும் நமக்கு தெரிந்தது ஒரு கலைஞன் தான். அவன் எப்படி புலிகலைஞனாகிறான் என்று நுட்பமாகவே சித்தரிக்கப்படுகிறது. காதர் ஒன்றும் முட்டாள் அல்ல. அந்த அறையில் அவர்களிடம் 5 நிமிடம் பேசும் போதே அவர்களில் யார் முக்கியம் என்று நன்கு உணர்ந்து கொள்கிறான். தொடர்ந்து அவர்களை தன் எண்ணத்திற்கு இணங்க வைப்பதில் வெற்றியடைகிறான்.

மேலும் யாருக்குமே இருக்கமுடியாத ஒரு அசாதாரனமான லாவகமும் கச்சிதமும் அவன் புலியாட்டத்தில் இருக்கிறது. இப்படி சாமர்த்தியமும் திறனும் கொண்ட ஒருவனுக்கு இந்த லௌகீக உலகில் வாழத்தெரியாதா? அது அவனுக்கு வாழைபழத்தை போல் எளிமையாக சாப்பிடும் விஷயமாக அல்லவா இருக்கும்? ஆனால் அவன் வறுமையில் வாடுகிறான். அது ஏன்? அவன் நினைத்தால் அவன் ஒரு ஸ்டன்ட் நடிகனாக எளிதாக ஆக முடியாதா? ஆம் முடியும். அவனுக்கு நீச்சல் கூட நன்கு தெரிந்திருக்கலாம்.

அவன் அந்த நீச்சல் காட்சியை மறைமுகமாக தட்டிகழிக்கிறான் என்று நினைக்கிறேன். அவன் செய்ய விரும்புவது கூட்டத்தில் ஒருவனாக நடிப்பது அல்ல. தெருவில் ரம்சானுக்கும் மொஹரத்துக்கும் புலிவேஷமிட்டு மக்களிடம் கைத்தட்டு வாங்குவதல்ல. அவன் புலிக்கலைஞனாகவே எப்போதும் இருக்கவிரும்புகிறான். அந்த புலியாட்டத்தை தவிர அவனுக்கு வேறு எந்த பாத்திரம் கொடுத்தாலும் அவன் செய்திருக்கமாட்டான். அதனாலேயே அவன் திரும்ப திரும்ப ரோல் ரோல் என்று கேட்டு கொண்டு இருக்கிறான்.

இந்த கதையில் அவன் புலியாக மாறும் தருணம் தான் பலருக்கும் உச்சமாக தெரியும். அது சரிதான். ஆனால் நான் அவன் முகமூடி அனிவதை அவன் வேஷமாக நினைக்கவில்லை. அவன் அந்த புலி முகமூடியை கழற்றும் போது தான் முகமூடியை போட்டுகொள்கிறான். ஆம். அவன் புலிதான். அவன் அகத்தில் எப்போதும் அந்த புலிதான் உலாவி கொண்டிருக்கிறது. இந்த உலகத்திற்கும் சமூதாயத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார் போல் ஒரு முகமூடி அணிந்து கொள்கிறான் அதுவே காதர். காலில் விழுபவன் அந்த காதரே புலி அல்ல. அவனுக்கு அந்த புலிதான் முக்கியம் காதர் அல்ல.

இவன் அகத்தில் எப்படி அந்த புலி எப்போதும் விழிப்புடனிருக்கிறது என்று மிக நுட்பமாக சொல்லப்படுகிறது. அந்த ஒரு கால் குட்டையான நாற்காலியை ஏன் விவரிக்கிறார் எழுத்தாளர்? வந்தமர்பவர்கள் வயிறை ஒரு நொடி கலக்க வைக்கும் அந்த நாற்காலியை அவன் முதுகை பிடித்து கொண்டு நிற்கிறான். இது போதாதா அவனில் அந்த புலி எப்போதும் விழித்திருக்கிறது என்று சொல்வதற்கு. ஆம் அவனுக்கு ஒரு பார்வை போதும் அவன் இருக்கும் இடத்தை அவன் அறிந்து கொள்ள. முகமூடி அணிந்து அறையை அங்குமிங்கும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மேசையிலிருக்கும் ஒரு பொருள் மீது கூட கால்படாமல் அவனால் பாய்ந்தும் குதித்தும் பற்றியும் புலியாட்டம் செய்ய முடியும்.

இங்கு புலி என்பது ஒரு குறியீடு. கலைஞனுக்குளிருக்கும் கலைக்கண் என்றும் மூடுவதில்லை. அதன் வழியாகவே அவன் உலகை பார்க்கிறான். சாமனியர்களுக்கு தெரியாத பல உண்மை கலைஞனுக்கு தெரிகிறது. அதிலிருந்தே தரிசனங்கள் பிறக்கிறது. இந்த தலைப்பு எவ்வளவு பொருத்தமானது. கீழே நான் கொடுத்திருக்கும் இணைப்புகளில் ஜெ புலிக்கலைஞன் என்ற தலைப்பில் இருக்கும் கலைஞனை அடிக்கோடிட்டு காண்பித்திருப்பார். நான் அதோடு அந்த புலியையும் அடிகோடிட்டு காண்பிக்க விரும்புகிறேன்.

புலி என்பது நமது பண்பாட்டில் அதன் தனித்தன்மைக்காகவே அறியப்படுகிறது. புலி பசித்தாலும் புல்லை திங்காது என்பார்கள். ஆடுகளுடன் சேர்ந்து ஆடு போல் கத்தி கொண்டிருக்கும் புலியை ஒரு பெரும் புலி வந்து மீட்டு கர்ஜிக்க வைத்த கதையை நாம் படித்திருப்போம். இந்த கதையில் வரும் கலைஞன் புலி வேடமிடுவதால் மட்டும் அவன் புலிக்கலைஞனல்ல. அவன் அந்த கலையை தவிர வேறு எதையும் எதற்காகவும் எந்த காலத்திலும் செய்ய தயாராக இல்லாதவன் என்பதாலேயே அவன் புலிக்கலைஞன். புலி பசித்தாலும் புல்லை திங்காது. அவன் செத்தாலும் அந்த கலையை தவிர வேறு ஒன்றை செய்யமாட்டான்.

அவன் வந்து ஆடும் அந்த அறையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பல மாதங்களாக வேலையில்லாமல் ஊளை சதையை சுமந்து கொண்டு வெட்டியாய் அமர்ந்திருக்கும் மனிதர்கள். பல்லை நோன்டி கொண்டும், வடையை தின்று கொண்டும் அரட்டையும் வாயுவும் உலாவும் அந்த அறையில் ஒரு தீ தழல் போல ஆடிவிட்டு போகிறான் அந்த கலைஞன். இருண்ட அறை ஜோதி மயம் அணிந்தெழுவது போல் அந்த அறையில் கலை ஒளியை பரவவிடுகிறான்.

சர்மாவுக்கும் இவனுக்குமான வித்தியாசத்தை ஒப்பிட்டு பாருங்கள்.ஒன்றரை வருடம் எந்த வேலையும் இல்லை என்றாலும் தன் படைப்பை தேவை எனும் போது வெகுஜன மக்களுக்காக தூண்டி விட்டுகொண்டு ஏதோ செய்ய கூடியவர் சர்மா. ஆனால் இவனோ தனது கலையை  வெளிப்படுத்த ஒவ்வொரு கணமும் துடித்து கொண்டிருக்கும் கலைஞன். ஆஹாம் வேணாம் வேணாம் என்று சொல்ல சொல்ல முகமூடியை எடுத்து அணிந்து கொள்கிறான் இவன். எப்போதும் தனது முகமூடியை அணிந்து கொண்டு தன் உண்மையான இருப்பை வெளிக்காட்ட துடிக்கிறான் இந்த புலிக்கலைஞன்.

இவனுக்கு என்ன பசியானாலும் குடும்பத்தை இழந்தாலும் இவன் இப்படி தான் இருப்பான். இவனது இயல்பு இது. பெரும்பாலான மனிதர்கள் இந்த உலகில் பசி விதைக்கப்பட்டு பிறப்பிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அதுவே பிரதானம். ஆனால் லட்சத்தில் ஒருவன் கலை விதைக்கப்பட்டு பிறப்பிக்கபடுகிறான். முன்னவர்களுக்கு உணவு என்பது செடிகள் எப்போதும் நினைத்து கைகூப்பி காத்திருக்கும் சூரியன் போன்றது. ஆனால் நமது புலிக்கலைஞர்கள் போன்றவருக்கோ அது கொடிகள் பற்றி ஏறும் ஒரு கிளை மட்டுமே. அவர்கள் தங்கள் கலையை நிதமும் வெளிப்படுத்துவதையே தர்மமாக கொண்டவர்கள்.

சாப்பிட காசு கொடுத்தாலும் ஏதாவது ரோல் கொடுங்க ரோல் கொடுங்க என்று இரைகிறான். அதுவே சர்மாவை நுட்பமாக சீண்டுகிறது. வர்ர லஷ்மிய வேண்டான்னு சொன்னா எப்டி காசு வரும் என்று கேட்கிறார். அவனுக்கு லஷ்மி இரண்டாம் பட்சம் தான். அவனுள் சரஸ்வதி என்றும் உறைந்திருக்கிறாள். இதை போல எத்தனையோ புலிக்கலைஞர்கள் சுற்றி கொண்டிருக்கிறார்கள் போலும். நான்கு தபால் அனுப்பினால் மூன்று இல்லை என்று திரும்பி வருவது இதை போன்ற புலிக்கலைஞர்களால் தானா? குடும்பத்தை இழந்து சுயமரியாதை இழந்து பசியிலும் தன் இயல்பை விட்டுகொடுக்க இயலாத உயர்ந்த கலைஞர்கள் எங்கோ தங்களுக்கான பார்வையாளர்களை தேடி சுற்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களை அந்த கலையை தவிர வேறு எதுவும் பிணைத்து வைப்பதில்லை போலும்.

நிலப்பிரபுத்துவ காலத்தில் இந்த கலைஞர்களுக்கென்று ஒரு களமிருந்திருக்கும். அவர்கள் சுயமரியாதை இழந்திருந்தாலும் அவர்களின் கலையை வெளிக்காட்ட அதிலேயே திளைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் நுகர்வையே பிரதானப்படுத்தும் இந்த நவீன யுகத்தில் கலைக்கென்று ஒரு தரப்பு அறிதாகவே இருக்கிறது. அதுவும் சோறு சோறு என்று ஓடி கொண்டிருக்கும் நம்மை போன்ற ஏழை நாடுகளில் அதற்கான தரப்பே இல்லை போலும். வெகுஜன விஷயங்களே இங்கு முக்கியத்துவப்படுத்தப்படுகிறது
. மக்கள் அதிகமாக விரும்பி பார்த்த அந்த காவடி காட்சியே புலியாட்டத்தின் இடத்தை பிடித்து கொள்கிறது. இந்த புலிகள் எல்லாம் இறையின்றி மடிகின்றது. புலியில்லா காடு எத்தனை வெறுமையானது?

http://www.jeyamohan.in/37090#.VklciL9qnMs

http://simulationpadaippugal.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D – இந்த பதிவுக்காக இந்த இணைப்பை கொடுக்கவில்லை. இதன் கீழே இருக்கும் ஜெ அவர்களின் கமென்டை படித்துபார்க்கவும்

No comments:

Post a Comment