Wednesday, November 11, 2015

வாசகனின் இலக்கு

வாசிப்பு என்பது அகவயமானது. ஓரளவுக்கு மேல் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. கற்பனையை அடிப்படையாக கொண்டது. அப்படி இருக்கயில் ஒவ்வொரு வாசகனின் கற்பனை சக்திக்கு ஏற்பவும் அவனது இயல்புக்கு ஏற்பவும் படைப்பிலிருந்து தனக்கான அனுபவங்களை பெற்றுகொள்கிறான். அதிலிருந்து கருத்துக்களை உருவாக்கி கொள்கிறான்.
வெறும் கதை ஓட்டத்தை மட்டும் படித்து செல்லாமல் அந்த கதை தருணங்களை பற்றி தன்னுள் கேள்விகளையும் கற்பனைகளையும் எழுப்பி கொண்டு தனக்கென ஒரு பார்வையை கதை முழுதும் தொகுத்து கொண்டு வருபவன் நல்ல இலக்கிய வாசகன் என்று கருதுகிறேன்.

இது நல்ல வாசகனின் முதல் நிலை என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு படைப்பில் இருந்து எடுக்கப்படும் கருத்தை தன் வாழ்வு மட்டும் பிரபஞ்சம் என்ற Phenomenon மீது தனக்கான ஒரு பார்வையை உருவாக்கி கொள்ள கூடியதாக இருப்பின் அது தரிசனமாக அமைகிறது. இப்படி ஒரு கருத்தை படைப்பிலிருந்து எடுப்பவன் மேலே சொன்ன வாசகனை விட ஒரு படி மேல்.
அதே சமயம் ஒரு நல்ல இலக்கியம் என்பது(நாவல் போன்றவை) இந்த ஒட்டு மொத்த தரிசனத்தை தருபவையாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட படைப்புகள் உலகியல் தளத்திலும் எளிய உணர்வு தளத்திலும் பேசும் படைப்புகளை விட உயர்ந்தது.

எழுத்தாளர் எழுதியதையே தான் வாசகனும் சென்று அடையவேண்டும் என்று இல்லை. வாசகன் தனக்குண்டான அனுபவத்தை எடுத்துகொள்ளலாம். ஆனால் எழுத்தாளர் எந்த அளவுக்கு ஆழமான ஒரு கதை கருவை அடிப்படையாக கொண்டு எழுதியிருக்கிறாரோ அந்த ஆழம் வரை வாசகன் செல்லக்கூடியவனாக இருக்கவேண்டும். அதை விட ஆழமாக சென்று கூட அதை விளக்கி கொள்ளலாம். அவன் சிறந்த வாசகன்.

அதே சமயம் இன்னொரு விஷயமிருக்கிறது. ஒரு படைப்பு என்பது அந்த படைப்பாளி உருவாக்குவதால் அவர் எழுத நினைத்த சாரம்சத்தை நோக்கி நம்மை அழைத்து சொல்கிறார். இலக்கிய வாசிப்பை ஒரு பயணமாக உருவகித்து பார்க்கலாம். வாசகர்கள் அனைவரும் ஒரு இடத்துக்கு பயணம் செல்கிறார்கள். பயணத்தின் இலக்கு என்பது அந்த படைப்பின் சாராம்சம். போகும் பாதை என்பது அந்த படைப்பு. நம்மை அந்த இலக்கை நோக்கி வண்டி ஓட்டி செல்வது எழுத்தாளர்.

இந்த பயணத்தில் அனைவருக்கும் ஒரே புறவெளிதான் இருக்கிறது. எங்கு, எந்த வழியே செல்கிறோம் என்பதை எழுத்தாளரே முடிவெடுக்கிறார். அங்கு கொண்டும் சேர்க்கிறார். ஆனால் இந்த பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவமிருந்திருக்கலாம். அவரவரின் அக ஓட்டம், கற்பனை, நுண்ணுணர்வு பொருத்தது அது. இருந்தும் சென்ற பயணம் ஒன்றே. அதனால் கிட்டத்தட்ட எழுத்தாளர் உட்பட அனைத்து நல்ல வாசகர்களும் – பயணத்தில் தூங்காமல் வந்தவர்கள்! – ஒரு பொதுவான அனுபவத்தையும் அடைந்திருப்பார்கள்.

அதனால் இந்த விஷயத்திற்கு Binary இல் பதில் சொல்ல முடியாது. இரண்டுமே முக்கியம்.

Silicon shelf என்ற தளத்தில் நடந்த விவாதத்தில் நான் எழுதியது.

2 comments: