Sunday, April 19, 2015

அம்பேத்காரின் "இந்து மதத்தின் புதிர்" - எதிர்வினை 1

எனது நண்பர் ஒருவர் இந்து மதத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்து மதம் சுத்தமாக அழித்தொழிக்கப்பட வேண்டியது என வாதிட்டார். திராவிட இயக்க சார்புடையவர். நான் இந்து மதத்தில் திருத்தப்பட வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. ஆனால் மொத்தமாகவே தூக்கி போட எந்த தேவையும் இல்லை என்றேன். நமது வாகனத்தில் ஒரு பழுது ஏற்பட்டால் எப்படி சரி செய்து உபயோகித்து கொள்கிறோமோ அதை போலவே இந்து மதத்திலும் உன்மையாகவே பிழைகளாக இருப்பதை சரி செய்யவேண்டும் என்றேன். அதற்கு அவர் இந்து மதத்தின் வேரிலேயே பழுது என்றார். இப்படி விவாதம் இரண்டு மூன்று நாட்கள் விட்டு விட்டு தொடர்ந்தது.


கடைசியில் இந்து மதத்தை பற்றி விமர்சிப்பவர்கள் இந்து மதத்தை பற்றி முழுதாக அல்லது மதிக்கதக்க அளவிலாவது தெரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும். அப்படியில்லாமல் காதில் கேட்ட விஷயங்களை வைத்து கொண்டெல்லாம் அவதூறு சொல்ல கூடாது என்றேன். மேலும் விவாதம் தொடர்ந்து ஒரு இடத்தில் அம்பேத்காரிடம் வந்து நின்றது. அம்பேத்கார் சாட்டிய குற்றங்களை பற்றி சொன்னார். அந்த புத்தகத்தையும் எடுத்துக்காட்டினார். அதன்படி அந்த புத்தகத்தை, அல்லது சில அத்தியாயங்களையாவது படித்துவிட்டு வருகிறேன். பின்பு அவரது இந்து மதத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலுரைக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். அதன்படி முதல் அத்தியாயத்தை படித்துவிட்டு அதற்கு எதிர்வினையாக இதை எழுதுகிறேன்.


இந்து மதத்தின் மீது அம்பேத்கார் "Riddle in  hinduism" என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் அல்லது முதல் புதிரில் இந்து மதத்தின் மீது எழுப்பும் கேள்விகள் என்று இவைகளை சொல்லலாம். இந்துக்கள் அனைவரும் தங்கள் கடவுள் என்று சொல்லி கொள்வது ஒற்றை கடவுள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபடுகிறார்கள். சிலர் எல்லா தெய்வத்தையும் வழிபடுகிறார்கள் - பலதெய்வமுறை வழிபாடு. பலர் மரம், மாடு, நதி ஆகியவைகளை வணங்குகிறார்கள் - பிரபஞ்ச தெய்வ முறை(pantheism). பலர் தங்களது கடவுளை தவிர மற்ற எந்த கடவுளையும் வணங்க மறுக்கிறார்கள் - ஒருதெய்வமுறை. இப்படி இருக்கும் போது ஒரு இந்துவை நீ எதனால் இந்துவாக இருக்கிறாய் என்று கேட்டால் அவன் பதில் சொல்ல முடியாமல் தினறுவான் என்கிறார்.


ஆனால் இந்த பிரச்சனை இந்தியாவில் வாழும் ஒரு கிறித்துவருக்கோ, இஸ்லாமியருக்கோ, பார்ஸிக்கோ கிடையாது என்கிறார். அவர்கள் முறையே கிறித்து, அல்லா, ஜரதுஷ்டரர் என்று சொல்லிவிடுவார்கள் ஆனால் இந்து அப்படி சொல்ல குழம்புவான் என்கிறார். மேலும் இந்துக்களுக்கு என்று பொதுவான ஒரு நூல் கிடையாது என்கிறார். சிலர் வேதங்களையே அவர்களின் புனித நூல்கள் என்பார்கள். சிலர் தாந்திரீக நூல்களை சொல்வர். சிலர் பாகவதத்தை சுட்டுவர்.


மூன்று, இந்து மதத்தினர் ஒரே பண்பாட்டை சார்ந்தவர்கள் அல்ல. பெண்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரம் மற்றும் கல்யானம் செய்ய கூடாத உறவுகள் என்பவை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. மேலும் இந்து மத சாதிகளில் ஒருவராக ஒருவர் இருந்தால் தான் அவர் இந்துவாகிறார். இது இந்து மதத்தின் முக்கிய பண்பு. ஒவ்வொரு இந்துவுக்கும் தனக்கு நிகரான சாதியில்லாதவருடன் சாப்பிடுவதோ, திருமண பந்தம் வைத்து கொள்வதோ கூடாது என்று கண்டிப்பாக இருக்கிறார்கள். இந்த நான்கு வாதங்களையும் தான் அவர் முதல் புதிராக இந்து மதத்தின் மீது வைக்கிறார்.

முதலில் தெய்வ வழிபாடு பற்றிய வாதத்தை எடுத்து கொள்வோம். ஒரு மதம் ஒரு தெய்வத்தை தான் கொண்டிருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்? அதிலும் ஒரு மதத்தில் ஒரு தெய்வ வழிபாடு, பல தெய்வ வழிபாடும் சேர்ந்திருந்தால் அது ஒரு மதமென ஏன் இருக்ககூடாது. ஒரு மதம் அதற்குள் எவ்வளவு பாகுபாடுகளை அனுமதிக்கிறதோ அது அத்தனை மதிப்பை மற்ற நம்பிக்கைகளுக்கு கொடுக்கிறது என்று அர்த்தம். அது அத்தனை வழிபாட்டு முறைகளையும் வன்முறையில்லாமல் ஏதோ ஒரு தருனத்தில் தன்னுடன் இணைத்திருக்கிறது என்று அர்த்தம்.


அவர் சுட்டிக்காட்டும் மதங்களில் பார்ஸி மதத்தை பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. ஆனால அந்த மதம் இன்று இரானில் கிட்டத்தட்ட முழுதும் இஸ்லாமியர்களால் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. இன்று அந்த மதத்தில் இருக்கும் உலக அளவிலான மக்களில் இந்தியாவில் தான் கணிசமானவர்கள் உள்ளார்கள். அவர் சுட்டிக்காட்டும் மற்ற இரண்டு மதங்களை பற்றி சொல்லவே தேவையில்லை. வரலாற்றில் ரத்த ஆற்றை ஓட விட்டவர்கள்.


கிறித்துவ மதம் ஐரோப்பாவின் ஆயிரம் மதங்களில் ஒரு மதமாக இருந்த காலகட்டம் ஒன்றுண்டு. ஒரு காலகட்டத்தில் அந்த மத குருக்கள் ரோம மன்னனை சம்மதிக்க வைத்து மதமாற்றினார்கள். அதன் பின் அது அரச மதமானது. அதற்கு அரசு அங்கிகாரம் வந்தவுடன் ஐரோப்பாவில் உள்ள தாய் தெய்வ வழிபாட்டு மதங்கள் மற்றும் பல மதங்களை அழித்தார்கள். வற்புறுத்தி வன்முறையினால் கிறித்துவதத்திற்கு மாற்றினார்கள். அவ்வாறு தான் இன்று ஐரோப்பா முழுவதும் இன்று கிறித்துவமாக இருக்கிறது. இன்று கிறித்துவத்தில் இருக்கும் பல மத சடங்குகளுக்கு பூர்விக ஐரோப்ப மதத்தில் வேர்கள் உண்டு அதற்கு கிறித்துவ சாயம் பூசப்பட்டு இன்றும் கொண்டாடுகிறார்கள்.


அதே போல கிறித்துவ மதத்தின் தெய்வ கோட்பாடு. கிறித்துவர்கள் கிறித்துவை தவிர யாரையும் வழிபடகூடாது என்று திட்டவட்டமாக எழுதப்பட்டிருக்கிறது. கிறித்து ஒருவனே உங்களை பாவத்தில் இருந்து விடுவிப்பவர். அவர் ஒருவரே கடவுளின் மகன். அவரிடம் வராமல் போனால் நரகம் நிச்சயம் என்று ஒரு அச்சத்தினூடாக கிறித்துவர்கள் அனைவரும் ஒற்றை வழிப்பாட்டு முறைக்குள்ளானார்கள். Inquisition என்ற முறையை வைத்து கொண்டு காலனியாக்கம் நடந்த நாடுகளில் எல்லாம் பல மக்கள் சித்ர வதைக்கும் மரணத்திற்கும் ஆளாகியிருக்கிறார்கள். அமெரிக்க பூர்வ குடிகளான செவ்விந்தியர்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்தொழிக்கபட்டதர்கான காரணங்களில் இந்த மதமாற்ற நிபந்தனையும் ஒன்று.


இஸ்லாம் மதம் உன்டான போதிலிருந்து வன்முறையால் பல மக்கள் மாற்றம் செய்யபட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து பிற நாட்டுக்கு படையுடன் சென்று மதமாற்றி அந்த நாடுகளில் ஆட்சியை நிறுவியிருக்கிறார்கள். தொடர்ந்து வன்முறையையே வழியாக கொண்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அல்லாவை தவிர வேறு ஒரு கடவுளை தொழுபவன் காஃபிர் என்று கூறுகிறது. இஸ்லாமிய மதத்தை பரப்ப அவன் மீது போர்தொடுப்பதையும் ஒரு வழியாக சொல்கிறது. இன்றும் இந்த விவகாரங்கள் ஓய்ந்தபாடில்லை.


இப்படி மற்ற மதங்கள் எல்லாம் அதை தவிர பிற மதங்கள் மீது கடும் வன்முறை செலுத்தியிருக்கும் போது. இன்றும் இந்து மதத்தில் இத்தனை வேறுபாடுகளுடன் பல பிரிவுகள் இருக்கிறதென்றால். உன்மையில் அது நல்ல விஷயம். இத்தனை பிரிவுகளையும் இந்து மதம் ஒருங்கினைத்திருக்கிறது. வன்முறையில்லாமல். ஒரு வேளை வன்முறை உபயோகிப்பட்டிருந்தால் நாம் இந்த வித்தியாசங்களை பார்க்க மாட்டோம். அப்ராஹமிய மதங்களை போல் ஓரே கடவுள் என்ற முறையில் இருந்திருக்கும். ஆனால் அப்படி வன்முறை ஏதும் நிகழவில்லை என்பதற்கு அதில் உள்ள இத்தனை பிரிவுகளும் அதில் உள்ள வித்தியாசங்களுமே காரணம். இந்து மதத்துக்குள் இருக்கும் உட்பிரிவுகளை பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.


இரண்டாவது காரணமாக அம்பேத்கார் சொல்லுவது இந்து மதத்தில் பொதுவான ஒரு நூலோ, வழிமுறைகளோ இல்லை என்று. எந்த மதத்தில் தான் இருக்கிறது. கிறித்துவம் என்று எடுத்து கொண்டால் அதில் எத்தனை கிளைகள். ரோமன் கத்தோலிக்க மதம், ப்ரோடஸ்டான்டுகள், ஓரியின்டல் ஆர்த்தடக்ஸ், பென்டா கொஸ்டுகள் என்று எத்தனையோ உட்பிறிவுகள். உலகம் முழுதும் பரவியிருக்கும் கிறித்துவ மதத்தினர் எல்லாம் ஒரே முறையை பின்பற்றுகிறார்கள் என்று சொல்ல முடியாது. இந்தியாவில் இருக்கும் கிறித்துவர்கள் பலர் இந்திய பழக்க வழக்கங்களை கடைபிடிக்கிறார்கள் சாதி உட்பட. அது கண்டிப்பாக அமெரிக்க கிறித்துவனிடம் இருந்து மாறுபடும். அதற்காக கிறித்துவம் ஒரு மதம் இல்லை  என்று சொல்லி விட முடியுமா.


அதே போல் இஸ்லாமியத்திலும் சுன்னி, ஷியா, சூஃபி, அஹமதியர் என்று பல பிரிவுகள் உள்ளது. இன்று மத்திய அரபு நாடுகளில் நடக்கும் கொலைகள் எல்லாம் சுன்னி பிரிவினர் ஷியாக்களின் மீது நடத்துவது தானே? கொலை செய்யும் அளவுக்கு போகிறது என்றால் அவை இரண்டுக்கும் இடையிலிருக்கும் வித்தியாசம் எவ்வளவு. இல்லை ஆக்கிரமிப்பு செலுத்தும் பிரிவிடம் இருக்கும் சகிப்புதன்மை எவ்வளவு. ஏன் அம்பேத்கார் தழுவிய புத்தமதத்திலேயே எத்தனை பிரிவுகள். தேராவாதம், மஹாயானம், வஜ்ராயனா என்று உட்பிரிவுகளுடன் பல வகை இருக்கிறது.


அப்போது இந்து மதத்தில் மட்டும் இருந்தால் என்ன பிரச்சனை? அப்படி இல்லாமல் ஒரே பிரிவாக இருந்தால் தான் பிரச்சனை. அப்படி இருந்தால் ஒரு வழிமுறை, நூல் எல்லார் மீதும் வலுகட்டாயமாக சுமத்த பட்டிருக்கிறது. ஆனால் அப்படி நடக்கவில்லை. எல்லோரும் அவரவர் முறைகளை நூல்களை இன்றும் பேன அனுமதி இருக்கிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். இருந்தாலும் பெரும்பாலான இந்து மதம் இந்த முறையிலேயே வேலை செய்கிறது.


மூன்றாவதாக அவர் காரணத்துக்கும் மேலே சொன்ன பதில் தான். இன்று உலகம் முழுதும் பரவி வரும் கிறித்துவ மதத்துக்கு ஒரே பண்பாட்டு அடித்தளம் இருக்கிறதா? ஜெர்மனியில் இருக்கும் ஒரு கிறித்துவுக்கும், கோயம்புத்துரில் இருக்கும் ஒரு கிறித்துவுக்கும் எப்படி ஒரு பொது பண்பாடு இருக்க முடியும். என்ன தான் வலுகட்டாயமாக அவன் அந்த மதத்தை பின் பற்றினாலும் அவன் அன்றாடம் வாழும் சமுகம் அல்லவா அவன் பண்பாட்டை கட்டமைக்கிறது. மஹாபாரத கதை சொல்லி குழந்தைகளை தூங்க வைக்கும் பல கிறித்துவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஏன் என்றால் இந்து கதை என்பதை விட இந்தியாவின் கதை. அதை விட்டு விட்டு அவர் ஹெர்குலஸ் கதை சொல்ல முடியுமா? சொன்னால் சற்று செயற்கையாக இருக்கும்.


நான்காவதாக சாதி. சாதி இந்தியாவிலிருந்து மறைய வேண்டும் என்பது என் கருத்து. அது தானாகவே நடக்கும் என்று தான் நான் நினைக்கிறேன். கல்வியும், நவினமயமும் அதை தானாக இந்தியாவிற்கு ஓரிரு நூற்றாண்டுகளில் முழுமையாக கொண்டு வரும். எந்த இந்துவும் நான் இந்த சாதியில் இருப்பதால் நான் இந்து என்று சொல்வானா என்று தெரியாது. இந்து மதம் சாதி சார்ந்த தனது கோட்பாடுகளை மறுபரிசிலனை செய்து சமத்துவம் நிலைக்குமாறு மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் இந்து மதம் மாற்றினால் சாதி பிடிப்புள்ளவர்கள் கேட்பார்களா? மாட்டார்கள். ஏனேனில் அவர்கள் இந்து மதத்தில் இருந்தாலும் இல்லாவிடிலும் அவர்களுக்கு சாதி என்ற ஒரு பிடிப்பு எப்போதுமே உண்டு.


தொடரும்...

3 comments:

  1. அருமையாக சாென்னீர்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. Great news என்னுடைய பல வினாக்களுக்கு விடை பெறுகிறேன்

    ReplyDelete
  3. உலக கட்டமைப்பு இப்படி இருக்கிறது.தேடலாம் தேடிக்கொண்டே இருக்கலாம்.ஆனால் முடிவோ....இன்வைனைட்.....என்று தான் சொல்ல முடியும்..உலகம் அழியும்போதாவது விடை கிடைக்குமா...சந்தேகம்.....மனுஷனே மனுஷனுக்கு விரோதி.......சமத்துவம் எப்போதோ......என்னுடைய இந்த தலைமுறையில் அது கிடைக்கும் என எதிர்பார்க்கவேண்டாம்......கடவுள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.

    ReplyDelete