Sunday, April 19, 2015

ஞான யோகமும் விவாதமும்

அன்புள்ள ஜெ,
ஞான யோகத்தை பின்பற்றுபவர்களுக்கு பிற தரிசனங்கள் உள்ளவர்களுடன் விவாதிப்பது அவசியம் இல்லையா? விவாதிப்பது அறிதலின் ஒரு வழியாக அது சொல்லவில்லையா?
அவசரமான கேள்வி. ஒரு வரி பதில் கூட போதும், இப்போதைக்கு.
நன்றி,
ஹரீஷ்

அன்புள்ள ஹரீஷ்,
ஞானநூல்களை தத்துவத்தை விவாதிப்பது வேறு ஞானத்தை விவாதிப்பது வேறு. ஞானநூல்களை விவாதிக்காமல் கற்கமுடியாது. நூல்களிலிருந்து மேலே சென்று அடையும் ஞானத்தை விவாதிப்பதன் மூலம் நிறுவவோ மறுக்கவோ முடியாது.
தத்துவப்பயிற்சியின் ஆரம்பநிலையில் இருக்கும் ஒருவர் ஒரு ஞானநூல்களை பயிலும்போது விவாதம் இன்றியமையாதது. இது எல்லா குருகுலங்களிலும் உள்ள ஒன்றுதான். இதன் மூலம் பலகோணங்கள் திறக்கின்றன. ஒரு கருத்தை ஐந்துபேர் அமர்ந்து விவாதித்தால் ஐந்துமடங்கு அறிவு அந்தக்கருத்தை ஆராயகுடிகிறது.

ஆனால் இந்த விவாதம் ஏறத்தாழ இணையான அறிவுத்திறனும் இணையான அறிதல் ஆர்வமும் கொண்டவர்கள் நடுவே நிகழவேண்டும். நோக்கம் அறிபடுபொருளை மேலும் கூர்மைப்படுத்துவதாக மட்டுமே இருக்கவேண்டும். ஆகவே உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் ஏதாவது ஒரு தரப்பைச் சார்ந்து நின்று விவாதிப்பது தீங்கிழைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அந்தவிவாதம் புறவயமான விவாதமுறைமையைச் சார்ந்ததாக மட்டுமே நிகழவேண்டும் என்று சொல்லப்படுவது த உணர்ச்சிகரமான விவாதம் நிகழாமலிருக்கும்பொருட்டு மட்டுமே. அதில் அகங்காரம் கலக்கலாகாது. வெற்றிதோல்வியல்ல உண்மை விளங்குவதே முதன்மையாக இருக்கவேண்டும். இல்லையேல் அது வீண்சொற்களாகவே முடியும்.

அந்தக் கல்விமூலம் தத்துவத்தை அறியும் ஒருவர் அதை கற்பனையாலும் உள்ளுணர்வாலும் முன்னெடுத்துச்சென்று தன் அந்தரங்க தரிசனத்தை அடைகிறார். அதையே ஞானம் என்கிறோம். அது கடல்போல, முகில் போல, மழைபோல, நிலத்தடி நீர் போல எங்குமுள்ள நீர். அதை அவர் தன் நிலத்தில் ஊற்றாக அடைகிறார். ஞானம் அவ்வகையில் முழுமையில் பொதுமையும் அறிதலில் அந்தரங்கத்தன்மையும் ஒருங்கே கொண்டதாகும்

அந்த ஞானத்தை அடைந்தவர்களில் குரு என்னும் நிலையை அடைந்தவர் அதை தகுதிகொண்ட மாணவர்களிடம் மட்டும் பகிரலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. குருநாதர்கள் பொதுவாக விவாதிப்பதில்லை.ஆனால் தன் மாணவர்களை வழிநடத்தவும் தன் ஞானத்தை முழுமைசெய்துகொள்ளவும் விவாதிக்கலாம்

அவர்களுக்கும் அப்பால் செல்பவர்கள் உலககுருநாதர்கள். மானுடத்தை நோக்கிப் பேசுபவர்கள். மகாவீரர் போல புத்தர் போல சங்கரர் போல.ஏசு போல. அவர்கள் ஞானத்தை அடைந்தவர்கள் மட்டும் அல்ல. ஞானமேயாக ஆனவர்கள். அதை சாக்‌ஷாத்காரம் என நம் மரபு சொல்கிறது. ஞானத்தை நிகழ்த்தியவர்கள். அவர்களில் விவாதிப்பவர்களும் விவாதிக்காதவர்களும் உண்டு. அவர்களின் வழியை அவர்களே கண்டடைகிறார்கள்

ஜெ

http://www.jeyamohan.in/74235#.VTRXE010z3g

No comments:

Post a Comment