Monday, June 23, 2014

மனித வளர்ச்சியும், இயற்கையின் அழிவும்

முதலாளித்துவம் முதலாளியின் லாபத்தின் மேல் உள்ள நாட்டத்தால் இயங்கும் பொருளியல் முறை. தொழிலாளித்துவம் அல்லது சோஷயலிசம், முதலாளி லாபத்தை குவித்து தொழிலாளிகளை சுரண்டுகிறார்களே, தொழிலாளிகளுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும், தொழிலாளி புரட்சியின் மூலம் ஆட்சியை பிடிக்க வேண்டும் ஆகிய லட்சியங்களை கொண்ட கருத்து. இந்த இரு தரப்பும் ஒரு முக்கியமான பொருளை மறந்துவிடுகிறது அல்லது பொருட்படுத்துவதில்லை.

இன்று ஒரு மர கதவு செய்யப்படுகிறது என்றால் அதற்கான மூலதனத்தை முதலாளி போடுகிறான், மரத்தை வாங்கி தருகிறான், அதற்கு வேண்டிய உபகரணங்களயும், தொழிற்சாலையும் அமைத்து தருகிறான். தொழிலாளி மரக்கதவை செய்கிறான். இந்ந மரக்கததவின் விலையானது மூல பொருட்கள் வாங்குவதற்கான செலவு, தொழிலாளி சம்பளம், தொழிற்சாலை செலவுகள், முதலாளி லாபம், வரி ஆகியவற்றின் கூட்டு தொகை. அதுவே மக்கள் கையில் வந்து சேரும் பொழுது, இடை தரகு, போக்குவரத்து என்று இன்னும் விலை ஏற்றப்பட்டு விற்கப்படும். இந்த விலையில், அந்த மரத்தின் விலை என்ன? மூல பொருள் வாங்குவதற்கான விலை. இந்த மூல பொருளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படும்? மேலே சொன்ன அதே வகையில் தான். மரத்தை வெட்டும் செலவு, போக்குவரத்து, மரம் வெட்ட அனுமதி வாங்கும் செலவு அல்லது தோட்ட பரமாரிப்பு, லாபம் ஆகியவற்றின் கூட்டு தொகையே அந்த மரத்தின் விலை.அப்போது உண்மையாக மரத்திற்கான விலை எவ்வளவு? ஒன்றுமே இல்லை. மீண்டும், மீண்டும் எந்த ஒரு பொருளின் விலையும், மனித உழைப்புக்கும் மனித முதலுக்கும் தான் தரப்படுகிறதே தவிர அந்த மரத்திற்கு அல்ல. வளத்திற்காக என்று அரசாங்கத்துக்கு ஒரு பகுதி போகலாம். ஆனால் அந்த மரத்திற்கு என்று எந்த மதிப்பும் அளிக்கபடுவதில்லை.
அந்த மரத்திற்கு விலை தேவையா? தேவையில்லை, அந்த பணத்தை வைத்து அம்மரம் என்ன செய்ய இயலும். ஆனால் அந்த மரத்தை மண்ணில் சாய்த்ததற்கு என்ன திருப்பி தரப்படுகிறது? உழைப்புக்கு ஊதியம், முதலுக்கு லாபம், வளத்திற்கு ? சரி என்னதான் திருப்பி தர வேண்டும்? அதிக மரம் வளர்கலாமா? வளர்க்கலாம், ஆனால் எத்தனை மரத்தை வாங்கும் வணிகர்கள் அதை செய்கிறார்கள். இல்லை எத்தனை மக்கள் அதை செய்கிறார்கள். சேவை மனப்பான்மை, சுற்று சூழலை மதிப்பவர்கள் சிலரே அதை செய்கிறார்கள். அப்படி மரத்தை நட்டாலும் அது வெட்டப்பட்ட மரத்திற்கு நிகரல்ல. இருந்தும் அந்த சிறு வேலையை கூட எந்த நிறுவனமும் செய்வதில்லை.இந்த வணிகம் எப்படி இருக்கிறது என்றால்,ஒரு குடும்பம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் போயிருக்கிறது, அதில் சுலபமாய் எட்டி குதித்து அந்த வீட்டில் இருக்கும் பொருட்களை திருடும் கூட்டம் அதை சந்தையில் கொண்டு வந்து பாதி விலையில் விற்பது போல தான் உள்ளது.

இது மரங்களுக்கு மட்டும் இல்லை, இயற்கையில் இருக்கும் எல்லா வளங்களுக்கும் இந்த கேள்வி பொருந்தும். இதனால் என்ன விளைவு என்றால், ஒரு பொருள் விலை குறைவாக கிடைக்கும் என்றால் அதை வீனாக்கப்பட்டால் யாரும் கவலை கொள்வதில்லை. உதாரனம், உணவு பொருட்கள், இன்றைய நிலையில் ஒரு நடுத்தர குடும்பத்திற்கு உணவு பொருட்கள் வாங்க செலவு அவ்வளவாக ஆகி விடாது. அதனால் அந்த உணவு வீணாக்கபட்டால் அது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. நிறுவனங்களில் வீணாகும் மின்சாரத்தை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். காகிதங்களை இஷ்டத்திற்கு செலவளிப்பார்கள். பிளாஸ்டிக் காகிதங்களை தூக்கி குப்பையில் வெகு சுலபமாக போடுவார்கள். மதிப்பு என்பது பொருளுக்கு அல்ல, பணத்திற்கு தான். அதற்காக எல்லா பொருளையும் விலை அதிகமாக விற்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு வணிக பொருளும் உருவாக்குவதற்கு இயற்கை வளங்கள் எவ்வளவு செலவாகிறது என்ற பிரக்ஞை மனிதர்களுக்கு தேவை.

இயற்கையில் இருந்து எடுக்கும் வளத்திற்க்காக திருப்பி இயற்கைக்கு என்ன செய்கிறோம். பெரும்பாலும் ஒன்றுமில்லை பதிலுக்கு அதே இயற்கையை இன்னும் நாசம் செய்யும் வகையாக ப்ளாஸ்டிக போன்ற பொருட்களை உற்பத்தி செய்கிறோம், உலக தட்ப வெட்ப நிலையை மாற்றும் வகையில் பல விதமான நச்சு வாயுவை உமிழ செய்கிறோம். எதற்கு இப்படி ஒரு வெறி ஆட்டம். இதன் மூலம் என்ன சாதிக்கிறோம். மனிதன் அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டிருந்தால் இப்படி நடக்குமா? மனிதனுக்கு ஏன் அதிகம் தேவைபடுகிறது? இந்த தேவையின் ஊற்று முகம் எது? தேவை அவனில் நிகழ்கிறதா இல்லை அவன் மேல் திணிக்கப்படுகிறதா?

தொழில்நுட்பம் மக்களின் உடல் உழைப்பை குறைப்பதற்காக கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறது. சைக்கிளிள் 10 மைல் போகும் நேரம் 1 மணி நேரம் என்றால் பைக்கில் அதை அரை மணி நேரத்தில் சென்று சேர்ந்து விடலாம். காரில் அதை விட விரைவாக சொகுசாக போய் சேரலாம். ஆக இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதனுக்கு நேரம் மிச்சமாகிறது. வேலை செய்யும் வேகத்தை தொழில்நுட்பம் அதிகம் செய்திருக்கிறது ஆனால் வேலை செய்யும் நேரம் இன்னும் 8 மணி நேரம் தான். மணிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களும் சேவைகளும் தயாரிக்க தேவையான ஆட்களும் நேரமும் குறைகிறது. இன்று மணிதனின் முக்கியமான தொழிலில் ஒன்றாக விவசாயம் கிடையாது, அது படிக்காதவர்களுக்கான தொழிலாகிவிட்டது. அமெரிக்காவில் கிட்டதட்ட நூறு வருடங்களுக்கு முன் விவசாயத்தில் 80% மக்கள் ஈடுபட்டிருந்தனர், ஆனால் இன்று வெறும் 3% மக்களே விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதில் மக்கள் தொகை பெருக்கமும், அந்த நாட்டுக்கு அன்றாடம் நடக்கும் குடியேற்றத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆயினும் விவசாயத்தில் குறைந்த சதவிகித மக்களே வேலை செய்கின்றனர் என்றால் மீதமிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள். அத்தியாவசிய சேவை, அத்தியாவசிய பொருள் உற்பத்தியில் ஒரு கணிசமான சதவிகித மக்கள் வேலை செய்வார்கள். ஆனால் கட்டாயம் 50% சதவிகித மக்கள் அத்தியவசிய தேவைக்கு அதிகமான ஏதோ ஒரு பொருளின் உற்பத்தியிலோ அல்லது சேவையிலோ தான் ஈடுபட்டிருப்பார்கள். இப்படி தேவைக்கு அதிகமான உற்பத்தியில் தான் இயற்கை வளங்கள் தேவையில்லாமல் அழிக்கப்படுகிறது, மாசு படுத்தப்படுகிறது.
அப்போது இயற்கை வளங்களை உபயோகப்படுத்துவது தவறா? தவறில்லை இயற்கையில் இருக்கும் அனைத்துமே உயிரினங்களுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. ஒன்று அழிந்து ஒன்று வாழ்கிறது. புலி மானை தின்று தான் உயிர் வாழ்கிறது. அது பத்து வருடம் உயிர் வாழும் என்றால் எத்தனை மான் அழிக்கப்படும்? ஆனால் அதன் தேவை அது, அதற்கு ஏற்ப அதை இயற்கையிலிருந்து எடுத்து கொள்ளகிறது. ஆனால் மனிதர்களான நாம் இயற்கையை தேவைக்கு மேலாக நுகர்வுக்காக அழிக்கிறோம். என் எண்ணத்தில் மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை உண்டாக்கும் கண்டுபிடிப்புகள் என்றோ நடந்து முடிந்துவிட்டது. இன்று கண்டுபிடித்து கொண்டிருப்பதெல்லாம் தேவையில்லாத, முதலாளிக்கு லாபம் ஈட்டி தரும் விஷயங்கள் தான். அப்போது ஏன் நாம் கண்டுபிடிப்பதை நிறுத்தி கொள்ளக்கூடாது. எதற்காக புதிதான பொருளுக்கான ஆராய்ச்சி. இன்று புதிய பொருட்கள் கண்டு பிடிக்கும் தோறும் அது முதலாளி வர்க்கத்தின் அசுர வளர்ச்சிக்கு உதவுகிறது, அந்த புதிய கண்டுபிடிப்புகளின் வசதிகளால் மக்கள் அதற்கு அடிமையாகி உடல் உழைப்பு இல்லாத பூஞ்சைகளாகி வருகிறார்கள். அந்த புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் ஏராளமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இத்தனை கெடுதல்கள், இயற்கை வளங்களை விடுங்கள், மக்களுக்கே ஏற்படும் போது ஏன் இதை நாம் இன்னும் தொடர்கிறோம். நிறுத்திவிடலாமல்லாவா? இதுவரை கண்டுபிடிக்கபட்ட உபகரணங்கள், சக்திகள் ஆகியவையை செம்மை படுத்துவதோடு நிறுத்தி கொள்ளலாமல்லவா?

இதில் பிரச்சனை என்னவென்றால், நிறுத்துவது என்றால் யார் நிறுத்துவது? எந்த நாடு இதற்கு முன் வரும். ஒன்றுமில்லை, உலகெங்கும் அதி ஆபத்தானது என்று பொதுவாக ஒத்து கொள்ளப்பட்ட அணு அயுதங்களை எல்லா தேசங்களும் கைவிட்டுவிட்டதா? தேசங்களுக்கு இடையில் போட்டி இருக்கும் தோறும் இந்த 'வளர்ச்சிக்கான' தேடலும் ஓட்டமும் தொடரும். வரலாறு தோறும் நாம் காண்பது, எந்த ஒரு சமுகம், ஆட்சி, நாடு தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அல்லது உலகின் பொதுபோக்குக்கு தன்னை தயார்படுத்தி கொள்ளவில்லயோ அவையெல்லாம் பின் தங்கி ஒடுக்கப்படுகிறது. காடுகளிலும், மலைகளிலும் வாழும் பழங்குடி மக்கள், நாட்டில் வாழும் மக்களால் தாழ்ந்தவர்களாய் கருதப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத நாடுகள் வளர்ச்சி அடைந்த நாட்டு மக்களால் அடக்கி அழிக்கப்படுகிறார்கள. உதாரணம், அமெரிக்க பழங்குடிகள் ஸ்பானிய மற்றும் பிற காலனிய படைகளால் கிட்டதட்ட முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டார்கள். அப்படி இருக்கையில் எந்த நாடு தன் தொழில்நுட்ப நிலையை கைவிட தயாராகும்? அது மட்டுமில்லாம் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வரும் இந்த மக்கள் தொகைக்கு வேலை தர முடிகிறது. அதனால் இந்த வளர்ச்சிகளை நிறுத்தினால் பல்வாறான பின் விளைவுகளிருக்கும்.

இது ஒரு சுழற்சி போலாகி விட்டது. மனிதன் தன்னை பிற மனிதனிடம் இருந்து காப்பாற்றி கொள்ள வளர்ச்சி அடைந்தாக வேண்டும், ஆனால் அவன் வளர்ச்சி அடையும் தோறும் அவன் வாழும் இந்த உலகம் படி படியாக அழிகிறது. ஒரு வீட்டின் அஸ்திவாரத்தை பெயர்த்தெடுத்து மேலும் தளங்கள் கட்ட உபயோகிப்பது போன்றது இந்த வளர்ச்சி. காந்திய பொருளாதார முறை இயற்கையை கணக்கில் கொள்கிறது,அதை வீணடிக்க கூடாது என்று வாதிடுகிறது. ஆனால் அதை யார் நடைமுறைக்கு கொண்டுவருவது? மனிதனுக்குள் போட்டி விலகி மனித நேயம் வளர்ந்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment