Thursday, April 17, 2014

என் வீட்டு வார்த்தைகள்...

என் வீட்டில் சாதாரணமாக புழக்கத்தில் இருந்த வார்த்தைகள், வேறு பல விஷயங்களை படிக்கும் போது அந்த வார்த்தைகளின் அர்த்தமும் அதை பற்றிய ஸ்வாரஸ்யமான தகவல்களும் தெரியவந்தது. அந்த சில வார்த்தைகளை இங்கு தொகுத்து அளிக்கிறேன்.

பத்து:
பத்து என்ன ஒரு அரிய வாரத்தையா? இல்லை தான். அன்றாடம் பயன் படுத்தும் வார்த்தைதான். ஆனால் என் அம்மா 'பத்து பாத்திரம் இருக்கின்றது' என்கிறாளே, அதற்கு என்ன அர்த்தம்? 10 பாத்திரம் இருக்கிறது என்றா? பத்து என்றால் தமிழில் சோற்றுப் பருக்கை என்றொரு அர்த்தம் உண்டு. அந்த பத்தை சமைத்த, உண்ட பாத்திரம் - பத்து பாத்திரம். கன்னடத்தில் சாதத்தை பாத் என்கிறார்களே, பாத்துக்கும், பத்துக்கும் தொடர்பு இருக்குமோ? சரி, 'சொத்து பத்து' என்றால்? பத்தின் இன்னும் ஒரு அர்த்தம் - வயல். இப்படி எனக்கு தெரிந்து பத்திற்கு மூன்று அர்த்தங்கள்.


நொம்பலம்;
இது என் தந்தை அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. அநேகமாக நாங்கள் கோவை சுற்று வட்டாரத்தில் குடியேரிய பிறகு பயன்படுத்த ஆரம்பித்த வார்த்தை என்றே நினைக்கிறேன். 'அந்த ஊருக்கு போரத்துக்குள்ள நொம்பல பட்டு போயிட்டோம்' என்பார். அது 'நொம்பலமா', 'லொம்பலமா' என சந்தேகமாகவே இருக்கும். 'நொம்பரம்'  என்றால் மலையாளத்தில் 'வலி' என்று பொருள். நொம்பலம் என்று அதே அர்த்ததில் நாஞ்சில் நாட்டு தமிழ் வழக்கில் கூறப்படுகிறது. அதன் படி, அவர் சொன்னதுக்கு 'அந்த ஊருக்கு போரத்துக்குள்ள வேதன பட்டு போயிட்டோம்' என்று பொருள். ஒரு வேளை கொங்கு பிரதேசமும் கேரள எல்லையில் இருப்பதால் அங்கு இந்த வார்த்தை பயன்பாடு இருந்திருக்கலாம். இதே போல் 'நொப்பி' என்றாள் தெலுங்கில் வலி என்று பொருள். தமிழில் 'நோவு' என்றும் சொல்வதுன்டு. ஆக, 'நொம்பலம்', 'நொப்பி', 'நோவு' இவை எல்லாம் ஏதாவது ஒரு வேர் சொல்லில் தோன்றியதாக இருக்கலாம்.

ஏனம்:
இதை என் தாத்தா பாத்திரங்களை குறிக்க பயன்படுத்துவார். அந்த 'ஏனத்த எடு' என்பார். அது என்ன ஏனம்? பாத்திரம் தெரியம், இல்லை என்றால் சம்படம், தட்டு, தூக்கு, குன்டா, அன்டா, ஏன் பான்ட்லி(வானலி?) என்ற விநோத உச்சரிப்பு கூட உள்ளது. ஆனால் ஏனம்? அவர் மட்டும் உபயோகிக்கும் வார்த்தை. ஒரு நாள் ஏதோ படிக்கும் போது அதில் இவ்வாறு வந்தது. 'அந்நகரம் இறையருளைப் பெறுவதற்காக மானுடன் மண்ணில் விரித்துவைத்த யானம் எனத் தோன்றியது.' அந்த தளத்திலேயே அந்த 'யானம்' என்ற சொல்லிற்கு அர்த்தம் 'வாயகன்ற பாத்திரம் - ஏனம்' என்று  பொருள் தரப்பட்டிருந்தது. அந்த தமிழ் வாரத்தையை இப்போது யாரும் பயன்படுத்துவதாய் தெரியவில்லை.

பரிக்கல்:
'இவன வச்சு பரிக்க முடில' - என் அம்மா சொல்லும் வாக்கியம். பரிக்க என்றால்? 'Barika' என்று உச்சரிக்கப்படும். இது ஒரு பழந்தமிழ் வார்த்தை. புறநானுற்றில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆட்சி செய்தல் என்று பொருள். இன்றும் மலையாளத்தில் பயன்படுத்தப்படும்  வார்த்தை. பரன கட்சி என்றால் ஆளும் கட்சி என்று பொருள். 'என்னை நீ ஒன்னும் பரிக்கான் வேண்டா' என்றால் 'என்னை ஒன்னும் நீ கட்டுப்படுத்த வேண்டாம்' என்று பொருள். இதன் படி என் அம்மா சொன்னதற்கு 'இவன வச்சு சமாளிக்க முடில' என்று தானே அரத்தம்.

பூச்சை:
என் அப்பா 'பூச்ச கண்ணனாட்டம் மூஞ்சி' என்று சொல்வார். அவர் எந்த அர்த்ததில் பயன்படுத்தினாரோ தெரியவில்லை. ஆனால் 'பூச்சை கண்ணன்' என்றால் மலையாளத்தில் பூனை கண்ணன் என்று பொருள். 'பூச்சை குட்டி' என்றால் பூனை குட்டி என்று பொருள். பூச்சை என்பது பழந்தமிழ் சொல்லான 'பூசை' என்பதில் இருந்து மறுவிய சொல்.  பூசை என்றால் இன்று பூஜையின் தமிழ் வடிவம். பழந்தமிழில் பூசை என்றால் பூனை. அதற்காக puzzy cat எனும் ஆங்கில வார்த்தை தமிழில் இருந்து தான் போயிற்று என்றும், தமிழே உலகத்தின் முதல் மொழி என்று வாதிடும் ஆள் நானல்ல.


லெக்கு:
'அந்த லெக்குல இருக்கு பாரு' என்பார் என் தாத்தா. 'அந்த இடத்தில் இருக்கு பார்' என்று பொருள். அதென்ன லெக்கு? இடத்திற்கு ஏன் Leg என்கிறார் என்று யோசிப்பேன். பிறகொரு நாள் கூகுள் செய்து பார்த்ததில் தான் புரிந்தது. 'இலக்கு' எனும் தூய தமிழ் சொல்லே 'லெக்கு' என்று மறுவி இருக்கிறது.

காபேரி:
ஒரு முறை நானும் என் தாத்தவும் தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருக்கும் போது, ஒரு ஆப்பரிக்க பெண் அதில் தோன்றினாள். அதை பார்த்துவிட்டு என் தாத்தா 'காபேரியாட்டிருக்குது' என்றார். அதென்ன, காபேரி, சொல்லின் பொருள் தெரிகிறது. ஆனால் ஏன் அப்படி ஒரு பெயர். தமிழ் படி கூறினால் கருப்பி என்று தானே கூற வேண்டும்? பின்பு இலங்கையை பற்றி படிக்கும் போது ஏதேச்சையாக தெரியவந்தது. என் தாத்தா இலங்கையில் சில வருடம் அவர் இளமை காலத்தில் இருந்தவர். இலங்கையில் 'காஃபிர்' என்ற கருப்பின மக்கள் பல நூற்றான்டுக்கு முன்னிலிருந்து போர்ச்சுகீசியரால் அடிமைகளாக கொண்டு வரப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இலங்கையிலேயே பாரம்பரியமாக வாழந்து பல இலங்கை பழக்கவழக்கங்களை உள்ளிழுந்து கொன்டு வாழ்ந்து வருகின்றனர். 'காஃபிர்' என்ற அரபு மொழி சொல் 'இறை மறுப்பவன்' என்ற அர்த்தில்  இஸ்லாமியர்களால் உபயேகிக்கப்படும் சொல். இஸ்லாமியரல்லாத அடிமை ஆப்பிரிக்கரை அப்படி சுட்டியதால் அவர்களுக்கு அதுவே பெயராகி போனது. அது இன்று ஒரு இன வன்சொல்லாகவே கருதப்படுகிறது. ஆனாலும் இலங்கையில் வாழும் அந்த கருப்பின மக்கள் தங்களை காஃபிர் என்றே சொல்லி கொள்கின்றனர். காஃபிர் - காபேரியாக திரிவது தமிழில் வெகு இயல்பாக நடந்திருக்கும்.

இலங்கை காஃபிர்



No comments:

Post a Comment