Saturday, April 19, 2014

ஒரு புளிய மரத்தின் கதை - வாசிப்பு அனுபவம் - 2

அந்த காற்றாடி மரங்கள் எல்லாம் வெட்டி அங்கு உண்டாகும் பார்க்கில் நடக்கும் சம்பவங்களை வெகு ஸ்வாரஸ்யமாக சொல்கிறார் ஆசிரியர். முதலில் அங்கு வந்து உட்கார்ந்து அரசியல், இலக்கியம் ஊர்வம்பு பேசும் முதியவர்கள் எல்லாரும் நன்கு படித்தவர்கள். கல்லூரிகளிளும், அரசாங்க துறைகளிளும் வேலைக்கு இருப்பவர்கள். அனைவருக்கும் ஏதோ ஒர் நோய் குறைந்தப்பட்சம். ரத்த அழுத்தம், சர்க்கரை, நெஞ்சு வலி என பல உபாதைகளுடன் இவர்களை சித்திரித்திருக்கும் விதத்தை கவனித்தால், இவர்கள் ஆசான் கதாபாத்திரத்திற்கும் நேர் எதிராக இருப்பதை காணலாம் திடகாத்திரமான தன் கைகளில் பசங்களை தொங்க சொல்லும் ஆசான். நடப்பதற்கு முடியாத பார்க் முதியவர்களின். நினைத்ததை இஷ்டம் போல் சாப்பிடும் ஆசான், நோய் நொடியினால் எதையுமே சாப்பிட முடியாமல் வாய் கட்டி போடப்பட்ட முதியவர்கள். உரக்க சிரிக்கும் ஆசான், பல் வலியினாலும், பிற உபாதைகளாலும் சிரிக்க கூட முடியாத முதியவர்கள். 80 வயதிலும் 60 வயது என்று சொல்லும் ஆசான். எப்படா சாவெனும் விடுதலை வரும் என்று ஏங்கும் முதியவர்கள். எவ்வளவு வித்தியாசம் ஒரு தலைமுறையில் அப்படி என்ன சமுதாயாத்தில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது, மனிதன் மனிதனுக்கேன்று விதிக்கப்பட்ட அல்லது செய்யவேண்டிய விஷயங்களை செய்ய அவன் மூளை வளர்ந்திருக்கலாம் உடல் மாறவில்லை.

சுந்தர ராமசாமி


அந்த பார்க்கில் இருக்கும் ஒரு காந்தி சிலை. அந்த சிலையில் அருகில் செருப்பு போட்டு கொண்டோ, புகை பொருள்களையோ யாரும் உபயோகிக்காமல் பார்த்து கொள்ள ஒரு காவலாளி . இந்த கதை எழுதப்பட்டது 1960களில். சுதந்திரம் வாங்கி 20 வருடத்திற்குள்ளாகவா தேசபக்தி மங்கிவிட்டது, காந்தி சிலையை அவமதிக்காமல் பாரத்து கொள்ள ஓர் ஆளை போடும் அளவிற்கு என்று யோசிக்க வைக்கிறது. பூங்காவில் விளையாட வரும் கான்வென்ட் குழந்தைகளுக்கு ஏழை குழந்தைகளுக்கும் நடக்கும் பூங்கா ஊஞ்சல், சருக்கு மரங்களை உபயேகிக்க உருவாகும் போட்டியும், அதை சரி செய்ய பெரியவர்கள் விதிக்கும் விதி முறைகளும் அப்படியும் எந்த குழந்தையும் சந்தோஷமடையாமல் போகும் நிலையும், இந்த உலகில் எந்த ஒரு செயல் முறையும், கொள்கையும் முழுமை அல்ல என்பதை காட்டுகிறது.

இதற்கு மேல் கதை கடை வீதியை சுற்றி நடக்க ஆரம்பித்து விடுகிறது, அதை பற்றி நான் அதிகம் எழுத போவதில்லை. ஆனால் ஞாபகத்தில் இருக்கும் சில விஷயங்களை மட்டும் சொல்கிறேன். கதையில் ஒரு கட்டத்தில் தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் வாக்கு வெல்ல சாதி, மத வகையில் என்னென்ன வேலைகள் நடக்கிறது. பத்திரிக்கை எப்படி இதற்கு  உதவுகிறது என்று விரிவாக நமக்கு காண்பிக்கிறது. புளிய மரத்தை வெட்டாமல் நிறுத்த மரத்தின் கீழ் ஒரு  சிலை பிரதிஷ்டை செய்து ஒரே நாளில் ஒரு பெரும் பக்தர் கூட்டம் சேர்த்து விடுகிறது. மூன்று மாதங்களாக பத்திரிக்கையில் எழுதி பல வேலைகள் செய்து மரத்தை வெட்ட முயற்சித்தால், அதை தடுக்க ஒரே நாளில் மதத்தின் பெயரால் ஒரு பெருங்கூட்டம்  கூட்டப்பட முடிகிறது. மதத்தின் சக்தி அப்படி. வியாபரிகளின் வாழ்கையும், அவர்கள் முன்னேறும் மற்றும் நஷ்டமடையும் தருணங்களையும் பல கதாபாத்திரம் மூலம் எடுத்துரைக்கிறது இந்த கதை.


இந்த கதையை படிக்கும் போது இது வாசகர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் அறிந்த அத்தனை மரங்களையும் நினைவூட்டும். அதில் இன்று முக்கால் வாசி மரங்கள் வெட்ட பட்டிருக்கும் என்ற உண்மையை உணர்த்தி கசப்புட்டும். இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பு நமது வாழ்க்கை முறை, அதாவது இந்திய வாழ்க்கை முறை இப்படி இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். என் தாத்தா மரங்களையும், செடிகளையும் பேணி பாதுகாத்து வளர்த்தார், உடல் நிலை சரியில்லா கடைசி காலத்தில் மருத்துவமனையில் இருக்கும் போதும், அந்த செடிகளுக்கெல்லாம் யார் தண்ணீர் ஊற்றுவார் என்று அழுதார். நாலு பெரும் வேப்ப மரம் அவர் வீட்டருகே இருப்பதால், அவரை வேப்ப மரத்துக்காரர் என்று தான் அவர் கிராமத்தில் அழைப்பார்கள். ஆனால் அதற்கடுத்த தலைமுறை அப்படி இல்லை. அந்த தலைமுறைக்கு தான் தான் முக்கியம். தனக்கு முக்கியமில்லாத, தனக்கு தொல்லை கொடுத்த எதையும் அது விட்டு வைக்காது. என் வீட்டில் கொத்து கொத்தாக பூத்து, வாசனை பொங்கும் சென்பக மரம், கட்டெறும்பு வருகிறது என்ற காரணத்துக்காக வெட்டப்பட்டது.


மதுரையில் எங்கள் வீட்டின் முன் இருந்த வேப்ப மரம், அந்த வீதியிலே அது ஒன்று தான் மரம் என்று இருந்தது என்று நினைக்கிறேன், என் பாட்டி அந்த மரக்காலில் சிறு சிறு தெய்வ சிலைகள் வைத்து வழிப்பட்ட மரம். வீடு பெரிதாக கட்டும் போது அந்த மரம் இல்லாமல் ஆனது சென்னையில் சூளைமேட்டில் ஒரு பூங்காவிற்கு மதிய அளவில் போயிருந்தேன். ஊரே வெந்து தகித்து கொண்டிருக்கும் போது, அந்த பூங்கா மட்டும் சில் என்ற தென்றலுடன் இருந்தது. ஆனந்தமாய் தூங்க அழைப்பு விடுத்தது. காரணம்? மரங்கள், எப்படியோ தப்பித்து அது வரை உயிர் வாழ்ந்து கொண்டிருந்த  பெருமரங்கள். அப்படி அந்த மதுரை வீட்டின் முன் இருந்த வேப்ப மரம் ஒரு நாலு வீட்டிற்காவது நல்ல காற்றை தந்திருக்கும். என் பெற்றோர்கள் அதை வெட்ட எண்ணம் இல்லாமல் வீட்டின் முன் கெஞ்சம் இடம் விட்டு கட்டிக் கொள்ளாம் என்ற எண்ணத்தில் தான் இருந்திருக்கிறார்கள். வேப்பமரம் தெய்விக மரமாய் கருதபடுவதாயிற்றே, அதுவும் வீட்டின் முன் அத்தனை வருடம் நின்றது. ஆனால் வீட்டை கட்டும் போது கட்டட தொழிலாளிகள் மரத்தின் வேர் அஸ்திவாரம் தோண்டுவதற்கு தடையாக இருக்கிறது, மரத்தை வெட்டாமல் மேலே தோண்ட முடியாது என்று கட்டாயமாக சொல்லிவிட்டார்கள், பொறியாளர்களும் அதையே வழிமொழிந்திருகிறார்கள். உடனே ஒரு 5000 ரூபாய் செலவில் மரம் வெட்டப்பட்டிருக்கிறது. அந்த மரம் உண்மையிலே அகற்றப்பட வேண்டிய அளவுக்கு தடையாக இருந்தாதா? இல்லை வேரின் ஊடாக குழியை தோண்டுவது கடினம், மேலும் கூலி வாங்கி மரத்தையும் வெட்டி அதன் பின் குழியை சுலபாமாக தோண்டிவிடலாம் என்ற எண்ணத்தில் மரம் அகற்றப்பட்டதா என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒரு மரத்தை அரவணைத்து வீடோ, சாலையோ அமைக்கும் அளவிற்கு நம்மிடம் தொழில் நுடபம் இல்லை, அப்படியே இருந்தாலும் அது நம் சராசரி பொறியாளர்களுக்கு தெரிவதில்லை, அப்படியே தெரிந்தாலும் அதை அவ்வளவு சிரத்தை எடுத்து பின்பற்றுவார்களா என்று தெரியவில்லை. அந்த மரத்தை வெட்டி வீட்டை கட்டி விட்டு, வீட்டின் நடுவில் மேல் வெளியில் இருந்து கீழ் தளம் வரை நான்கு அடி சதுரமாய் ஒரு பெரிய ஓட்டை சந்து விட்டிருக்கிறார்கள், காற்றோட்டதிற்காக! 


கோவையில் என் பாட்டி வீட்டில் பல வருஷங்களுக்கு முன்னால் பல செடிகளையும் விதைகளையும் ஊன்றியது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. போன வருடம் அங்கு சென்றிருந்த போது, நாங்கள் விதைத்து/நட்ட பவள மல்லி என்னை விட இரு மடங்கு வளர்ந்திருந்தது. தன்னளவில் அது ஒரு மரம். வீதி முழுதும் காலையில் முத்தும், பவளமும் போல அதன் மலர்கள் இரைந்து கடக்கும். ஆனால் அது சாலை புதுப்பிக்கும் போது யாரையும் கேட்காமலே வெட்டப்பட்டுவிட்டதாம். அந்த சாலையின் விளிம்பில் எத்தனை வண்டி போகபோகிறதோ? இந்த சிறு இயற்கைகளை நகரமெனும் நரகத்திற்குள் அனுமதிக்க நம் தொழில் நுட்பம் வளர்க்கபடவில்லை. இயற்கையை அழித்து அது கொடுக்கும் அதே பலனை செயற்கையாக உற்பத்தி செய்வோம். நாம் போகும் வழி கவலைக்கிடமாகவே உள்ளது.

No comments:

Post a Comment