Monday, October 19, 2015

காந்தியும் இந்திய ஆன்மீகமும்

நவகாந்தியத்தை பற்றி மகரந்த் பரஞ்சபெயின் கட்டுரையை படித்தேன். அதன் தமிழ் மொழியாக்கம் இங்கு

காந்தியை இந்திய மெய்ஞான மரபின் ஒரு பகுதியாக வைத்து விளக்குமிடம் பிடித்திருந்தது. காந்தி அந்த மரபின் அடிப்படைகளுக்கு எப்படி தன் வழியில் விளக்கம் கொடுத்தார் அதிலிருந்து எப்படி ஒரு வாழ்வியல் வழிமுறையை வரையறுத்தார் என்று சிறப்பாக விளக்கியிருக்கிறார். நவ இந்தியர்கள் காந்தியை பின்பற்றுபவர்களாக, காந்தியவாதிகளாக இருக்க முயற்சிக்காமல் காந்தியை-போல் இருக்க முயற்சிக்க வேண்டும் என்கிறார்.

காந்தியை-போல் எப்படி இருப்பது? காந்தி எங்கிருந்து தனது வழிமுறையை எடுத்து கொண்டார்? இந்திய மெய்ஞான மரபிலிருந்து. அதற்கே திரும்ப செல்வோம். அந்த மெய்ஞானத்தின் அடிப்படைகளை கொண்டு நமது காலகட்டத்திற்கும் நமது உண்மை தேடலுக்கும் ஏற்றார் போல் ஒரு வாழ்க்கை முறையை வரையறுப்போம். மேலும் முக்கியமாக அந்த வாழ்க்கை முறையை நமது வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும், அனைத்து சமயங்களிலும் தொடர்ந்து பயன்படுத்துவோம்.

காந்தியை-போல் நாம் வாழ வேண்டுமென்றால் இரு முக்கியமான விஷயங்களை நாம் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
1. அகங்காரம்
2. புலன் இன்பம்

அகங்காரத்தை சிறிதாக்கி நமக்குள் இருக்கும்  ஆன்மாவிற்கு - spirit முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். புலன் இண்பமே வாழ்க்கை என்றில்லாமல் ஆன்ம இண்பத்தை மையபடுத்தவேண்டும். இந்த இரண்டையுமே நான் காந்தி தனது சிந்தனையின் செயல்பாட்டின் முக்கியமான அடிப்படையாக கொண்டார் என்று கருதுகிறேன். தாக்குபிடிக்கும் பொருளாதாரம், சுழலியல் என்று பல்வேறு தளங்களில் அவரின் சிந்தனை-செயல்முறைகளை போட்டு பார்த்தாலும் அனைத்துக்கும் வேர் இந்த ஆதார புள்ளிகளிலிருக்கிறது.   தனது ஆன்மாவின் குரலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.. தன் புலனடக்கம், உணவு பழக்கவழக்கங்கள் வழியாக அந்த ஆன்மாவை சுத்திகரிக்கிறார்.

அகங்கார மற்றும் புலன் இன்ப கட்டுபாடு என்ற இரு மாற்றங்களையும் நம்மில் நிகழ்த்த தொடங்கினால், சுயநலம்  என்பதற்கான அவசியம் குறைந்து போகிறது. சமூகத்தின் மீது அக்கரையும். உலகத்தின் மீது பொருப்புணர்வு தோன்றும். அங்கு ஆரம்பிக்கிறது நாம் செய்ய வேண்டிய சேவை. சுயநலமில்லாத, அறத்தின் அடிப்படையில், அஹிம்சையை வழிமுறையாக கொண்டு இந்த உலகத்திற்கு செய்ய வேண்டிய சேவை.

இங்கு தான் காந்தி மற்ற இந்திய மெய்ஞானிகளிடமிருந்து வெறுபடுகிறார். ஆன்ம தேடலால் முற்றிலும் தங்களுக்குள் ஆழ்ந்துவிடும் மற்ற ஆன்மீகவாதிகள் போலில்லாமல் ஆன்மாவையும் சமூகத்தையும் இணைத்து பார்க்கும் பார்வை கொண்டவர் காந்தி.

அகங்காரம், புலன் இன்பத்தை கட்டுபடுத்துதல் போன்ற விழுமியங்கள் எல்லாம் காந்தி மட்டும் முன்வைத்தது அல்ல. நம் பண்பாடே இதை வலியுறுத்துகிறது. அதனால் தான் புலன் இன்பத்தை சிற்றின்பம் என்கிறோம். அந்த கட்டுரையில் அவர் குறிப்பிடுவது போல் புருஷார்த்தம் என்பதை நம் மரபு வகுத்தளிக்கிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்பதை வாழ்க்கையின் பகுதிகளாக வரையறை செய்கிறது.

இதில் சில மகான்கள் நேரடியாக வீடுபேறு எனும் கடைசி நிலைக்கு சென்று விடுகிறார்கள். சிலர் மற்ற மூன்றையும் அனுபவித்து விட்டு கடைசியில் அங்கு வந்து சேருவார்கள். வராமல் செல்பவர்களும் உண்டு. காந்தி அந்த கடைசி நிலையில் இருந்து நம்மிடம் உரையாடுகிறார். அந்த நிலைக்கு நாம் செல்லவேண்டும். இல்லை என்றால் பிற மூன்று தளத்திலிருந்து அங்கு செல்ல முயற்சி செய்யவேண்டும்.

இன்பம் என்பதை விலக்கி வைப்பதாக நம் மரபு இருக்கவில்லை. அதை வாழ்வின் ஒரு பகுதியாக சொல்லி காம சுத்திரம் எழுதி வைத்தது தான் நம் மரபு. அதன்படி இன்பத்தை முற்றும் துறந்து செல்லவேண்டும் என்பது அனைவருக்கும் கட்டாயமில்லை. அளவான இன்பம் வேண்டுவோர் அடைந்து கொள்ளலாம். அந்த இன்பத்தில் கள்ளும் ஒரு பகுதியே.

காந்தியிடம் இருக்கும் அந்த விஷேச கலவை குணம் ஆன்ம விடுதலை + உலக நலம் என்பதில் இரண்டாம் பகுதியான உலக நலம் என்னும் கூறு காந்தியை-போல் வாழ நினைப்பவரின் அனைத்து வாழ்க்கை தளத்திலும் செயல்களிலும் தாக்கம் செலுத்தும். அதன்படி நாம் கள் குடித்தாலும் அந்த குடிக்கும் முறையும் அமைப்பும் உலக நலம் கருதுவதாக கட்டுப்பாடு உடையதாக இருக்கவேண்டும். நம் இண்பத்துக்காக எதையும் அழிப்பதாக இருக்ககூடாது. நமது இலக்கு காந்தி நின்று பேசும் அந்த தளத்தை சென்றடைவது என்ற உணர்வு எப்போதும் நமக்கிருக்கவேண்டும்.

No comments:

Post a Comment