Thursday, October 1, 2015

காந்தியின் நினைவில்

காந்தி என்னை கவர்ந்த தருணம் என் வாழ்க்கையில் மிக முக்கியமானது. சில வருடங்களுக்கு முன் அது நிகழ்ந்தது. அந்த தருணத்தில் நான் என் அகத்தின் அஸ்திவாரங்களை உடைத்தெடுத்து மறு கட்டுமானம் செய்து கொண்ட காலம். அப்படி ஒரு அடி என் அகங்காரத்தின் மேல் விழுந்தது. அகங்காரத்தை காலடியில் போட்டு நசுக்கி தள்ளினால் ஒழிய அந்த தருண நரகத்திலிருந்து மீள முடியாத ஒரு சூழ்நிலை. அந்த தருணத்தில் எனது அகம் பல உண்மைகளை கண்டடைந்தது. எந்த முன் அறிவும் இல்லாமல் தத்துவார்த்தமான சில விஷயங்கள் என்னில் எழுந்தது. இந்த பிரபஞ்சத்தின் முன் நான் எத்தனை சிறியவன் என்பதை முழுதாய் உணர்ந்த காலம் அது. என் சிந்தனைகளின், வாழ்க்கை நோக்கின் அடிகட்டுமானத்தை மாற்றி அமைத்தது அந்த காலகட்டம்.

அப்போது புரிந்தது மனிதர்களின் செயல்கள் எவ்வளவு அர்த்தமற்றது என்று. பகைகளும், வெறுப்பும், கோபமும் தேவையற்றது என்று விளங்கியது. இயற்கையாக மனிதர்கள் மேல் அன்பு பிறந்தது. அதே போல் இயற்கையாக காந்தியின் மீது அபிமானம் தோன்றியது. அவரது அஹிம்சையின் மீது பெரு மதிப்பு வந்தது. அதற்கு முன்னால் காந்தியை பற்றி சிறிதளவு கூட நான் படித்ததில்லை. காந்தி என்று அனைவருக்கும் தெரிந்த பொது பிம்பமே எனக்கும் தெரிந்திருந்தது. சிறு வயதில் சுபாஷ் சந்திர போஸ் தான் மிகவும் பிடித்தவர். ஆனால் அந்த தருணம் என் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்றது, உலகின் மீது புது பார்வையை ஏற்படுத்தியது. என் அகம் முதிர்ச்சி அடைந்த தருணம் அது என்று நான் கருதுகிறேன். அந்த தருணத்தில் காந்தி என்னுள் நுழைந்தார்.

அதன் பிறகு சில வருடம் கழித்து ஜெவை கண்டறிந்து காந்தியை பற்றி அவ்வப்போது படிக்கும் போது அவரின் மற்ற பரிமானங்களையும் தெரிந்து கொண்டேன். என்னை பொருத்த வரை ஒரு மனிதன் எவ்வளவு அறிவாளியாக இருக்கிறான் என்பதை விட அவன் எவ்வளவு நல்ல நோக்குடனும் நேர்மையுடனும் இருக்கிறான் என்பது முக்கியம். சமீபத்தில் அந்த கருத்தை விரிவாக்கி கொண்டேன். அதை வைத்து நாம் காந்தியை அளவிடலாம் என்று நினைக்கிறேன். மக்கள் தலைவராய் கொண்டாடப்பட வேண்டிய ஒரு மனிதருக்கு தேவையான அடிப்படை குணங்கள்,

1. பொது நலம் மற்றும் நேர்மை
2. அணுகுமுறை
3. அறிவும் சிந்தனையும்

முதல் அம்சம் குறித்து அதிகம் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். இரண்டாம் அம்சமான அணுகுமுறை பற்றி நிறையவே சொல்லாம். ஒரு நல்ல கருத்தை லட்சியத்தை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது. அதை எப்படி நடைமுறையில் வெல்வது என்பதை வரையறுப்பது அணுகுமுறை. இதில் பல வழிகளை பல தலைவர்கள் கடைபிடித்திருக்கிறார். அதில் இன்று வரை எனக்கு தெரிந்து காந்தியின் வழிமுறையை மிகவும் மேலானதாக கருதுகிறேன். அஹிம்சையை முன் வைத்து மக்களை பிரதானபடுத்தி போராடும் வழிமுறை அது. மார்ட்டின் லூரத் கிங் சொல்வது போல "Christ gave me the message.  Gandhi gave me the method." காந்தி மறைந்துவிட்டாலும் இன்னும் பல காலங்களுக்கு இந்த வழிமுறை பல காந்திகளை உருவாக்கும்.

மூன்றாவதாக காந்தியின் சிந்தனையும் அறிவும். காந்தி அறிவுஜீவியா என்று எனக்கு தெரியாது. ஆனால் பொதுவான உலக நடப்புகளும் வரலாறும் அவருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதை விட அவருக்கு மக்களுடனான நேரடி உறவிருந்தது. நாள் தோறும் மக்களிடம் தொடர்பிலிருந்ததால் அவருக்கு மக்களின் உண்மை நிலவரம் தெரியும். அவர்களின் உணர்வுகள் கஷ்டங்களை அறிந்தவர். அவரது சிந்தனை முறை வருங்காலத்தையும் கணக்கில் கொண்டு சிந்திப்பதாக இருந்தது. எதை தர்க்கபூர்வமாக அணுகவேண்டுமோ அதை அந்த நோக்குடன் பார்க்கும் தன்மை அவருக்கிருந்தது. நவீன காலத்தின் மக்களுக்கும் காலத்திற்கும் உகந்த அம்சங்களை எடுத்துகொண்டு குறைபாடுகளை சுட்டிகாட்ட அவரால் முடிந்தது.

ஆனால் மேலே சொன்னவை எல்லாம் ஒரு மக்கள் தலைவரை உருவாக்கிவிடும். ஒரு மஹானை உருவாக்கிவிடாது. யோசித்து பார்த்தால் இந்த குணாம்சங்கள் ஓரளவுக்கு நேருவுக்கும் பட்டேலுக்குமே பொருந்தி வரும். இருவரும் நேர்மையும் நல்ல நோக்கமும் உடையவர்கள். காந்திக்கு பின் இந்தியாவை கட்டி எழுப்பும் திறன் கொண்டவர்கள். சில விஷயங்களில் தோல்வி அடைந்தாலும் இந்தியாவை ஒரு மதசார்பற்ற நாடாக நிறுவினார் நேரு. 500க்கும் மேற்பட்டதாக சிதறிகிடந்த இந்திய மாநிலங்களை, குறுநிலங்களை ஒன்றினைக்கும் அறிவும் திறனும் பட்டேலுக்கு இருந்தது.

ஆனால் இதை எல்லாம் விட மேலும் ஒரு அம்சம் காந்தியிடம் இருந்தது. தன் உள்ளுணர்வுடன் உரையாடும் திறன். இறைவன் தன்னை வெளிபடுத்தி கொள்ள தேர்தெடுத்த ஒரு விஷேச மனிதர் அவர். அதுவே காந்தியை தலைவராக மட்டுமில்லாமல் ஒரு ஞானியாகவும் ஆக்கியது. அந்த ஞானமே அவரை அஹிம்சையை தேர்ந்தெடுக்க செய்தது. அந்த அஹிம்சையினாலேய அவர் மஹான். மனித குலத்துக்கு அவர் கொடுத்த நற்செய்தி அஹிம்சையே.

இன்றைய உலகுக்கு வேறு எந்த அறிஞர், தலைவர் தேவையோ இல்லையோ காந்தி மிகவும் தேவை. அவர் கருத்துக்கள் மட்டுமல்ல அவரே மீண்டும் இங்கு வர வேண்டும். அவருக்காக இந்தியாவும் உலகமும் காத்துகொண்டிருக்கிறது. 

No comments:

Post a Comment