Thursday, October 1, 2015

பெரியாரின் பகுத்தறிவு

பெரியாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை தற்போது படித்து முடித்தேன். அந்த புத்தகத்தில் பெரியாரை விமர்சன நோக்குடன் பார்க்காமல் புகழும் நோக்குடன் எழுதப்பட்டிருந்தது. இருந்தும் அவரது வாழ்க்கையை உள்ளபடியே பதிவு செய்திருந்ததாகதான் தோன்றியது. அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களே அவரின் அணுகுமுறையை தெளிவாக நமக்கு எடுத்துகாட்டுகிறது.

தி.கவிற்குள் அண்ணாவின் தனிப்பட்ட போக்கினால் எரிச்சலடைந்த பெரியார் இப்படி சொல்கிறார்(எனது வார்த்தைகளில்). "உங்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் கொண்டு நான் முன்வைக்கும் கொள்கைகளை சிந்தித்து பாருங்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானால் எடுத்துகொள்ளுங்கள். கொள்கை ஏற்புடையதாக இருந்தால் கட்சியில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த மறுநொடியில் உங்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் எடுத்து ஓரமாக வைத்துவிடுங்கள். நான் சொல்வதை மட்டும் கேளுங்கள், செய்யுங்கள். இது சர்வாதிகாரம் தான். ஆனால் அதை கொண்டு தான் கட்சியை நடத்த முடியும்" என்கிறார்.

இது பகுத்தறிவுக்கே எதிரான நிலைபாடு. நவீன ஐரோப்பாவில் பகுத்தறிவு சிந்தனைகள் உருவாகி சில காலங்களிலேயே அங்கே தனித்துவவாதம் -individualism என்ற கருத்து தோன்றிவிட்டது. அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அனைவருக்கும் அவரவர் தர்க்க புத்தியை உபயோகிக்கும் உரிமை உண்டு என்று அடக்குமுறைக்கு எதிராக போராடினார்கள். இதன் விளைவாக பிறந்ததே ஜனநாயகம்.

பகுத்தறிவின் வரலாறு இப்படி இருக்க பகுத்தறிவு, சமதர்மம், சுயமரியாதை என்றெல்லாம் பேசிய பெரியார் மக்கள் அவர் கட்சியில் சேர்ந்த பிறகு பகுத்தறிவை ஓரமாக வைத்துவிடுங்கள், நான் சிந்திக்கிறேன் உங்களுக்காக என்று சொல்வது பெரும் அபத்தமாக தெரிகிறது. இதற்கும் மத நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்? ஒரு மாநிலத்து மக்களிலேயே தனக்கு மட்டும் தான் சிந்திக்க தெரியும் என்பது போல் அவர் பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

பெரியாரிடம் பொது நல நோக்கும், நேர்மையும் இருந்ததாக நான் கருதுகிறேன். அது ஒரு ஆளுமைக்கு தேவையான முக்கியமான அடிப்படை தகுதி. அவர் பகுத்தறிவு என்ற பிரச்சாரம் செய்ததும் அன்றைய சமூகத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. அந்த பகுத்தறிவின் ஆழம் எவ்வளவு என்பது பற்றிய விவாதம் தனி என்றாலும் அவர் அப்படி ஒரு கருத்தை பரப்பினார் என்பதற்காக அவருக்கு மதிப்பு கொடுக்கலாம். ஆனால் அவர் தனக்கு மட்டும் தான் பகுத்தறிவு உள்ளது என்பது போல் பேசியிருக்கும் அளவுக்கு அவரது பகுத்தறிவு அணுகுமுறைகள் அறிவுபூர்வமாகவும் இல்லை, ஆழமானதாகவும் இல்லை, நடைமுறைக்கு ஏற்றதாகவும் இல்லை.

No comments:

Post a Comment