Thursday, September 18, 2014

ஒளியின் இருள்



ஒளியின் இருள்

என் வீட்டின் கூரையில்
ஒரு சிலந்தி வலையின் அறுந்த கீற்று
காற்றை குறிகாட்டி அசைந்தாடுகிறது
ஆனால் அன்றொரு நாள்,

விளக்கினொளி வீடு முழுதும் பரவியிருந்தது
அந்த கீற்றுக்கு பின்னால் விழும் நிழலை
இந்த ஒளி வெள்ளம் கரைத்துவிட்டது
இருப்பினும் அந்த கீற்றுக்கு பின்னால் ஒரு நுண்ணிய நிழல்.

இருளாலான அந்த நிழல்
ஒளி வெள்ளத்தில் மிதக்கும் ஓர் இருள் தீவு
அந்த தீவில் கிடந்தது ஒரு நீண்ட முள்
அதுவரை அதிர்ஷ்டத்தால் தப்பிய நான்
அன்று அதை ஏற்றி கொண்டேன் என் உடலில்.

இருளை மறைக்கும் இருள் கொண்டது ஒளி
ஒளி ஏதோ ஒன்றின் மேல் பூசப்பட்ட ஒரு பொய் பூச்சு
ஒளி மறைக்கும் வெளி ஒன்று உள்ளது
அதை எப்படி பார்ப்பது?

*******************************************************************

Tuesday, September 16, 2014

தேவைக்கு மீறிய அறிவியல் வளர்ச்சி

சில நாட்களுக்கு முன்னால் மின்சாரத்தின் கண்டுபிடிப்பு பற்றி ஒரு பிபிசி டாக்குமெண்டரி யூட்யூபில் பார்த்தேன். அது படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு துறை. அதை பார்த்து முடித்து சில நாட்கள் கழித்து இந்த எண்ணம் தோன்றியது.

"Neccesity is the mother of invention" என்பது உண்மையின் ஒரு பகுதி மட்டுமே. இன்று நாம் புழங்கும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எல்லாம் தேவையின் அடிப்படையில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. அதை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

தேவை, கனவு, ஆர்வம். தேவைக்கு உதாரணமாக அனைத்து விதமான வாகனங்களையும் சொல்லலாம், காலம் காலமாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு துறை. கனவிற்கு உதாரணமாக விமானத்தை சொல்லலாம், இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இது தேவையே இல்லாதது. மோட்டார் வாகனங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் புழக்கத்தில் வர ஆரம்பித்தது, அந்த வாகனங்களின் ஆச்சரியத்தில் இருந்து மக்கள் வெளிவருவதற்கு முன்னரே பறக்கும் வாகனம் காலத்தை மீறிய கண்டுபிடிப்பு, முற்றிலும் கனவினால் உந்தப்பட்டது. ஆர்வத்திற்கு உதாரணமாக மின்சாரம், அணு அறிவியல் ஆகியவற்றை சொல்லலாம். இயற்கையில் நாம் காணும் ஒரு வெளிப்பாடு ஏன் இப்படி நடக்கிறது என்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டு கண்டுபிடிக்கபட்டவை. இந்த ஆர்வத்தின் காரணமாக தான் இன்று நாம் உபயோகிக்கும் அனைத்து அதி நவீன தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்திருக்கிறோம்.

மனிதன் தன் தேவைக்கு வேண்டிய கண்டுபிடிப்புகளை எப்போதோ கண்டுபிடித்தாகிவிட்டது என்றே நினைக்கிறேன். சராசரி மனிதனுக்கு இன்றிருக்கும் வசதிகள் மிக மிக அதிகம். இபோலா போன்ற விஷயங்கள் திடீர் தேவையை உண்டு செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இன்று அறிவியலும், விஞ்ஞான சமுகமும் மனித தேவைக்கு அதிகமான விஷயங்களை உருவாக்கவே பெரும்பாலும் உதவி வருகின்றன. இன்று தேவைகள் பல விதமான உத்திகளால் நம் மீது தினிக்கப்படுகிறது. எந்த விதமான எல்லையும் இல்லாமல் கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அவை நடக்கும் தோறும் செயற்கையை நாடி இயற்கையை அழிக்கிறோம்.

அறிவியல் இன்று முதலாளித்துவத்தின் மற்றும் அரசாங்கங்களின் கருவியாக மாறிவிட்டது. போட்டி போட்டு கொண்டு எந்த வித அற உணர்வும் இன்றி அதை பயன்படுத்துகிறார்கள். விஞ்ஞானிகள் இந்த அமைப்புகள் ஆட்டி வைக்கும் பொம்மைகளாக மாறிவிட்டனர். அவர்களின் அறிதலின் சுகமும், அடையும் புகழும் அவர்களை மறு பரிசீலனை இல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு உதவ செய்கிறது. விளைவாக இயற்கை நாள் தோறும் நாசாமாகிறது, மனிதர்கள் இயந்திரங்களுக்கு அடிமையாகி கொன்டே இருக்கிறார்கள். முன்னர் செய்த தவறுகளை எல்லாம் திருத்துவதற்காக விஞ்ஞானம் உபயோகிக்கபடாமல் மேலும் மேலும் தவறு செய்து கொண்டே போகிறோம் என்று தோன்றுகிறது. மாற்று சக்தி (alternative energy) போன்ற ஆராய்ச்சிகள் இதற்கு விதி விலக்கு.

அறிவியல் வளர்ச்சியே இருக்க கூடாது என்று சொல்ல வரவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை அறம் சார்ந்தும், உலக நன்மை சார்ந்தும் பரிசீலிக்க பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் மகத்தான கனவுகளும் ஆர்வங்களும் அர்த்தமற்று தவறுகளுக்கு துனை செல்லவே கூடும். இப்படியே நாள் தோறும் சென்றால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. மனித இனம் எப்போது இதை உணர்ந்து தன் பாதையில் இருந்து திரும்பி நடந்து இயற்கையுடன் ஒரு சமரச புள்ளியில் வந்து நிற்கும் என்றும் தெரியவில்லை.

Thursday, August 28, 2014

தண்டவாளம்

தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் (Tomas Tranströmer) கவிதை ஒன்று,

தன்டவாளம் (Tracks)

இரவு 2 மணி, ரயில் ஒரு வயக்காட்டில் நின்றது
தொலைவில் ஒரு சிறு நகரத்தில் இருந்து ஒளி பொறிகள்,
வின் விளிம்பில் உணர்வின்றி சிதறுகிறது.

ஒரு மனிதன் கனவின் ஆழத்திற்கு செல்லும் போது
அவன் அங்கு இருந்தது,
அவன் அறைக்கு அவன் மீன்டும் திரும்பும் போது நினைவிருக்காது.

அல்லது ஒரு நபர் நோயின் ஆழத்திற்கு செல்லும் போது
அவனது எல்லா நாட்களும் சிதறும் பொறிகளாய், பறவை கூட்டமாய்
வலுவிழந்து, உனர்வற்றதாய் மாறிவிடுகிறது.

ரயில் முற்றிலும் நகர்வற்று போயிற்று
இரன்டு மணி, திடமான நிலவு, சில நட்சத்திரங்கள்.


இந்த கவிதை ரயில் பயனத்தை ஒரு படிமமாக வைக்கிறது. 

ஒரு வயலில் நின்று விட்ட ரயிலில் இருந்து தொலைவில் தெரியும் ஒரு காட்சி, ஓளி சிதறல்கள், என்று கவிதை தொடங்குகிறது. அந்த ஒளி சிதறல்கள் உணர்வின்றி சிதறுகிறது என்கிறார். ஒளிக்கு உணர்வு உண்டா என்ன? ஒளியின் உணர்வு அது பிரதிபலிக்கும் மனிதனின் மனதில் உண்டாவது. ஒரு வாண வேடிக்கை கண்டால் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் ஒரு ஆனந்தம், ஒரு ஆச்சரியம் எழும். அதுவே அந்த ஒளியின் உணர்வு. ஆனால் இங்கு உணர்வில்லா ஒளி, அந்த ஒளி பயணியின் உள்ளத்தையே பிரதிபலிக்கிறது. எப்படி அந்த ஒளி சிதறல் பயணியின் உள்ளத்தில் எந்த ஒரு உணர்வையும் தோற்றுவிக்கவில்லை என்று காட்டுகிறது. ஏதோ துயரத்தில், இக்கட்டில் ஆழ்ந்த ஒரு பயணி. அதே சமயம் அதே காட்சியை வேறு ஒரு மூலையில் இருந்து பார்க்கும் ஒருவனுக்கு அது உவகையை அளித்திருக்கும். மகிழ்ச்சி தான் எத்தனை சார்ப்புடையது. அது எதை சார்ந்திருக்கிறது?

கனவில் ஆழ்ந்த ஒருவன் கனவில் இருந்து வெளிவந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் போது, அந்த கனவு நினைவில் இருக்கபோவதில்லை. கனவு - அதை வெறுப்பவர்கள் யாராவது இருக்கமுடியுமா? நம் உன்மை வாழ்க்கையில் கனவு காண்பதன் மூலம் தான் எத்தனை உவகை கொள்கிறோம். அகத்தளத்தில் நாமே நம்மை நிகழ்த்தி கொள்ளும் ஒரு வாழ்க்கை, ஒரு சில மனி துளிகளில் தொடங்கி முடியும் ஒரு வாழ்க்கை. அந்த வாழ்க்கை முடிந்தவுடன் ஒரு பெருமூச்சுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம். அந்த கனவளித்த மகிழ்ச்சியை நம் அன்றாட உலைச்சல்கள் மூழ்கடித்துவிடும்.

நோயில் மூழ்கிய ஒருவனுக்கு தன் மொத்த வாழ்நாளும் ஒரு கனவாய் தான் தெரியும். மகிழ்ச்சியான ஒரு நினைவு, ஆனால் அது இந்த தருணத்தின் வேதனையில் பொருளிழந்தது, வலுவிழந்தது, உணர்விழந்தது. மிஞ்சினால் ஒரு சோர்ந்த புன்னகையை எழுப்ப கூடியது. நமது மகிழ்ச்சி ஒரு தருணத்தில் நாம் வாழும் சூழ்நிலைக்குட்பட்டது. அந்த சூழ்நிலைகள் நமது வாழ்க்கை பயணத்தில் காணும் காட்சிகள். நமது பயணமோ ரயில் வண்டியில், தண்டவாளங்களுக்கு உட்பட்டது. ஆனால் தண்டவாளங்களை தாண்டியும் நம் கனவுகள் ஓட கூடியது. அது கனவு மட்டுமே. அதை ஏற்பத்தும் மறுப்பதும் இந்த சிறைப்பட்ட பயணியே.

Monday, June 23, 2014

மனித வளர்ச்சியும், இயற்கையின் அழிவும்

முதலாளித்துவம் முதலாளியின் லாபத்தின் மேல் உள்ள நாட்டத்தால் இயங்கும் பொருளியல் முறை. தொழிலாளித்துவம் அல்லது சோஷயலிசம், முதலாளி லாபத்தை குவித்து தொழிலாளிகளை சுரண்டுகிறார்களே, தொழிலாளிகளுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும், தொழிலாளி புரட்சியின் மூலம் ஆட்சியை பிடிக்க வேண்டும் ஆகிய லட்சியங்களை கொண்ட கருத்து. இந்த இரு தரப்பும் ஒரு முக்கியமான பொருளை மறந்துவிடுகிறது அல்லது பொருட்படுத்துவதில்லை.

இன்று ஒரு மர கதவு செய்யப்படுகிறது என்றால் அதற்கான மூலதனத்தை முதலாளி போடுகிறான், மரத்தை வாங்கி தருகிறான், அதற்கு வேண்டிய உபகரணங்களயும், தொழிற்சாலையும் அமைத்து தருகிறான். தொழிலாளி மரக்கதவை செய்கிறான். இந்ந மரக்கததவின் விலையானது மூல பொருட்கள் வாங்குவதற்கான செலவு, தொழிலாளி சம்பளம், தொழிற்சாலை செலவுகள், முதலாளி லாபம், வரி ஆகியவற்றின் கூட்டு தொகை. அதுவே மக்கள் கையில் வந்து சேரும் பொழுது, இடை தரகு, போக்குவரத்து என்று இன்னும் விலை ஏற்றப்பட்டு விற்கப்படும். இந்த விலையில், அந்த மரத்தின் விலை என்ன? மூல பொருள் வாங்குவதற்கான விலை. இந்த மூல பொருளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படும்? மேலே சொன்ன அதே வகையில் தான். மரத்தை வெட்டும் செலவு, போக்குவரத்து, மரம் வெட்ட அனுமதி வாங்கும் செலவு அல்லது தோட்ட பரமாரிப்பு, லாபம் ஆகியவற்றின் கூட்டு தொகையே அந்த மரத்தின் விலை.அப்போது உண்மையாக மரத்திற்கான விலை எவ்வளவு? ஒன்றுமே இல்லை. மீண்டும், மீண்டும் எந்த ஒரு பொருளின் விலையும், மனித உழைப்புக்கும் மனித முதலுக்கும் தான் தரப்படுகிறதே தவிர அந்த மரத்திற்கு அல்ல. வளத்திற்காக என்று அரசாங்கத்துக்கு ஒரு பகுதி போகலாம். ஆனால் அந்த மரத்திற்கு என்று எந்த மதிப்பும் அளிக்கபடுவதில்லை.
அந்த மரத்திற்கு விலை தேவையா? தேவையில்லை, அந்த பணத்தை வைத்து அம்மரம் என்ன செய்ய இயலும். ஆனால் அந்த மரத்தை மண்ணில் சாய்த்ததற்கு என்ன திருப்பி தரப்படுகிறது? உழைப்புக்கு ஊதியம், முதலுக்கு லாபம், வளத்திற்கு ? சரி என்னதான் திருப்பி தர வேண்டும்? அதிக மரம் வளர்கலாமா? வளர்க்கலாம், ஆனால் எத்தனை மரத்தை வாங்கும் வணிகர்கள் அதை செய்கிறார்கள். இல்லை எத்தனை மக்கள் அதை செய்கிறார்கள். சேவை மனப்பான்மை, சுற்று சூழலை மதிப்பவர்கள் சிலரே அதை செய்கிறார்கள். அப்படி மரத்தை நட்டாலும் அது வெட்டப்பட்ட மரத்திற்கு நிகரல்ல. இருந்தும் அந்த சிறு வேலையை கூட எந்த நிறுவனமும் செய்வதில்லை.இந்த வணிகம் எப்படி இருக்கிறது என்றால்,ஒரு குடும்பம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் போயிருக்கிறது, அதில் சுலபமாய் எட்டி குதித்து அந்த வீட்டில் இருக்கும் பொருட்களை திருடும் கூட்டம் அதை சந்தையில் கொண்டு வந்து பாதி விலையில் விற்பது போல தான் உள்ளது.

இது மரங்களுக்கு மட்டும் இல்லை, இயற்கையில் இருக்கும் எல்லா வளங்களுக்கும் இந்த கேள்வி பொருந்தும். இதனால் என்ன விளைவு என்றால், ஒரு பொருள் விலை குறைவாக கிடைக்கும் என்றால் அதை வீனாக்கப்பட்டால் யாரும் கவலை கொள்வதில்லை. உதாரனம், உணவு பொருட்கள், இன்றைய நிலையில் ஒரு நடுத்தர குடும்பத்திற்கு உணவு பொருட்கள் வாங்க செலவு அவ்வளவாக ஆகி விடாது. அதனால் அந்த உணவு வீணாக்கபட்டால் அது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. நிறுவனங்களில் வீணாகும் மின்சாரத்தை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். காகிதங்களை இஷ்டத்திற்கு செலவளிப்பார்கள். பிளாஸ்டிக் காகிதங்களை தூக்கி குப்பையில் வெகு சுலபமாக போடுவார்கள். மதிப்பு என்பது பொருளுக்கு அல்ல, பணத்திற்கு தான். அதற்காக எல்லா பொருளையும் விலை அதிகமாக விற்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு வணிக பொருளும் உருவாக்குவதற்கு இயற்கை வளங்கள் எவ்வளவு செலவாகிறது என்ற பிரக்ஞை மனிதர்களுக்கு தேவை.

இயற்கையில் இருந்து எடுக்கும் வளத்திற்க்காக திருப்பி இயற்கைக்கு என்ன செய்கிறோம். பெரும்பாலும் ஒன்றுமில்லை பதிலுக்கு அதே இயற்கையை இன்னும் நாசம் செய்யும் வகையாக ப்ளாஸ்டிக போன்ற பொருட்களை உற்பத்தி செய்கிறோம், உலக தட்ப வெட்ப நிலையை மாற்றும் வகையில் பல விதமான நச்சு வாயுவை உமிழ செய்கிறோம். எதற்கு இப்படி ஒரு வெறி ஆட்டம். இதன் மூலம் என்ன சாதிக்கிறோம். மனிதன் அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டிருந்தால் இப்படி நடக்குமா? மனிதனுக்கு ஏன் அதிகம் தேவைபடுகிறது? இந்த தேவையின் ஊற்று முகம் எது? தேவை அவனில் நிகழ்கிறதா இல்லை அவன் மேல் திணிக்கப்படுகிறதா?

தொழில்நுட்பம் மக்களின் உடல் உழைப்பை குறைப்பதற்காக கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறது. சைக்கிளிள் 10 மைல் போகும் நேரம் 1 மணி நேரம் என்றால் பைக்கில் அதை அரை மணி நேரத்தில் சென்று சேர்ந்து விடலாம். காரில் அதை விட விரைவாக சொகுசாக போய் சேரலாம். ஆக இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதனுக்கு நேரம் மிச்சமாகிறது. வேலை செய்யும் வேகத்தை தொழில்நுட்பம் அதிகம் செய்திருக்கிறது ஆனால் வேலை செய்யும் நேரம் இன்னும் 8 மணி நேரம் தான். மணிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களும் சேவைகளும் தயாரிக்க தேவையான ஆட்களும் நேரமும் குறைகிறது. இன்று மணிதனின் முக்கியமான தொழிலில் ஒன்றாக விவசாயம் கிடையாது, அது படிக்காதவர்களுக்கான தொழிலாகிவிட்டது. அமெரிக்காவில் கிட்டதட்ட நூறு வருடங்களுக்கு முன் விவசாயத்தில் 80% மக்கள் ஈடுபட்டிருந்தனர், ஆனால் இன்று வெறும் 3% மக்களே விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதில் மக்கள் தொகை பெருக்கமும், அந்த நாட்டுக்கு அன்றாடம் நடக்கும் குடியேற்றத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆயினும் விவசாயத்தில் குறைந்த சதவிகித மக்களே வேலை செய்கின்றனர் என்றால் மீதமிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள். அத்தியாவசிய சேவை, அத்தியாவசிய பொருள் உற்பத்தியில் ஒரு கணிசமான சதவிகித மக்கள் வேலை செய்வார்கள். ஆனால் கட்டாயம் 50% சதவிகித மக்கள் அத்தியவசிய தேவைக்கு அதிகமான ஏதோ ஒரு பொருளின் உற்பத்தியிலோ அல்லது சேவையிலோ தான் ஈடுபட்டிருப்பார்கள். இப்படி தேவைக்கு அதிகமான உற்பத்தியில் தான் இயற்கை வளங்கள் தேவையில்லாமல் அழிக்கப்படுகிறது, மாசு படுத்தப்படுகிறது.
அப்போது இயற்கை வளங்களை உபயோகப்படுத்துவது தவறா? தவறில்லை இயற்கையில் இருக்கும் அனைத்துமே உயிரினங்களுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. ஒன்று அழிந்து ஒன்று வாழ்கிறது. புலி மானை தின்று தான் உயிர் வாழ்கிறது. அது பத்து வருடம் உயிர் வாழும் என்றால் எத்தனை மான் அழிக்கப்படும்? ஆனால் அதன் தேவை அது, அதற்கு ஏற்ப அதை இயற்கையிலிருந்து எடுத்து கொள்ளகிறது. ஆனால் மனிதர்களான நாம் இயற்கையை தேவைக்கு மேலாக நுகர்வுக்காக அழிக்கிறோம். என் எண்ணத்தில் மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை உண்டாக்கும் கண்டுபிடிப்புகள் என்றோ நடந்து முடிந்துவிட்டது. இன்று கண்டுபிடித்து கொண்டிருப்பதெல்லாம் தேவையில்லாத, முதலாளிக்கு லாபம் ஈட்டி தரும் விஷயங்கள் தான். அப்போது ஏன் நாம் கண்டுபிடிப்பதை நிறுத்தி கொள்ளக்கூடாது. எதற்காக புதிதான பொருளுக்கான ஆராய்ச்சி. இன்று புதிய பொருட்கள் கண்டு பிடிக்கும் தோறும் அது முதலாளி வர்க்கத்தின் அசுர வளர்ச்சிக்கு உதவுகிறது, அந்த புதிய கண்டுபிடிப்புகளின் வசதிகளால் மக்கள் அதற்கு அடிமையாகி உடல் உழைப்பு இல்லாத பூஞ்சைகளாகி வருகிறார்கள். அந்த புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் ஏராளமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இத்தனை கெடுதல்கள், இயற்கை வளங்களை விடுங்கள், மக்களுக்கே ஏற்படும் போது ஏன் இதை நாம் இன்னும் தொடர்கிறோம். நிறுத்திவிடலாமல்லாவா? இதுவரை கண்டுபிடிக்கபட்ட உபகரணங்கள், சக்திகள் ஆகியவையை செம்மை படுத்துவதோடு நிறுத்தி கொள்ளலாமல்லவா?

இதில் பிரச்சனை என்னவென்றால், நிறுத்துவது என்றால் யார் நிறுத்துவது? எந்த நாடு இதற்கு முன் வரும். ஒன்றுமில்லை, உலகெங்கும் அதி ஆபத்தானது என்று பொதுவாக ஒத்து கொள்ளப்பட்ட அணு அயுதங்களை எல்லா தேசங்களும் கைவிட்டுவிட்டதா? தேசங்களுக்கு இடையில் போட்டி இருக்கும் தோறும் இந்த 'வளர்ச்சிக்கான' தேடலும் ஓட்டமும் தொடரும். வரலாறு தோறும் நாம் காண்பது, எந்த ஒரு சமுகம், ஆட்சி, நாடு தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அல்லது உலகின் பொதுபோக்குக்கு தன்னை தயார்படுத்தி கொள்ளவில்லயோ அவையெல்லாம் பின் தங்கி ஒடுக்கப்படுகிறது. காடுகளிலும், மலைகளிலும் வாழும் பழங்குடி மக்கள், நாட்டில் வாழும் மக்களால் தாழ்ந்தவர்களாய் கருதப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத நாடுகள் வளர்ச்சி அடைந்த நாட்டு மக்களால் அடக்கி அழிக்கப்படுகிறார்கள. உதாரணம், அமெரிக்க பழங்குடிகள் ஸ்பானிய மற்றும் பிற காலனிய படைகளால் கிட்டதட்ட முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டார்கள். அப்படி இருக்கையில் எந்த நாடு தன் தொழில்நுட்ப நிலையை கைவிட தயாராகும்? அது மட்டுமில்லாம் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வரும் இந்த மக்கள் தொகைக்கு வேலை தர முடிகிறது. அதனால் இந்த வளர்ச்சிகளை நிறுத்தினால் பல்வாறான பின் விளைவுகளிருக்கும்.

இது ஒரு சுழற்சி போலாகி விட்டது. மனிதன் தன்னை பிற மனிதனிடம் இருந்து காப்பாற்றி கொள்ள வளர்ச்சி அடைந்தாக வேண்டும், ஆனால் அவன் வளர்ச்சி அடையும் தோறும் அவன் வாழும் இந்த உலகம் படி படியாக அழிகிறது. ஒரு வீட்டின் அஸ்திவாரத்தை பெயர்த்தெடுத்து மேலும் தளங்கள் கட்ட உபயோகிப்பது போன்றது இந்த வளர்ச்சி. காந்திய பொருளாதார முறை இயற்கையை கணக்கில் கொள்கிறது,அதை வீணடிக்க கூடாது என்று வாதிடுகிறது. ஆனால் அதை யார் நடைமுறைக்கு கொண்டுவருவது? மனிதனுக்குள் போட்டி விலகி மனித நேயம் வளர்ந்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

Friday, June 13, 2014

கவிதை வாசிப்பு

கவிதை வாசிப்பு குறித்த என் கேள்விக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் பதில். படிமம், கவிதையின் மொழி குறித்த எனது ஐயத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

Tuesday, June 3, 2014

நியூ யார்க் பயணக் கட்டுரை - 7

மே 25 மதியம் ஒரு மணி அளவில் அமேரிக்கன் நேச்சுரல் அரங்காட்சியகத்திற்கு சென்றோம். நியு யார்க்கில் அருங்காட்சியகங்கள் தான் அதிகமாக இருக்கிறது. அருங்காட்சியகத்தில் நுழைந்த்துமே, முதலில் வானவியல் சம்பத்தப்பட்ட காட்சி பொருட்கள் தான் இருந்தது. பூமி, அதின் அருகே உள்ள கிரகங்கள் அதை பற்றிய தகவல்கள் என நிறைய இருந்ந்தது.அந்த ஒரு சின்ன பகுதியை முழுமாயாய் பார்ப்பது என்றாலே பல மணி நேரம் தேவைப்படும். அதற்கு மேலிருந்த தளத்தில் உலகின் உருவாக்கம் பற்றியும், அதன் வயது மற்றும் எந்த காலத்தில் என்னன்ன மாற்றங்கள் உருவாயிற்று, உயிர்கள் எப்படி உருவாயிற்று என்பதை விவரிக்கும் ஒரு சுருள் படிக்கட்டு டைம் லைன் இருந்தது.

அதன் பின் வேற்று கிரக்கத்தில் பல டன் எடையுன் பூமியில் விழுந்த மிட்டியோராய்ட் கற்களின் பகுதிகளை வைத்திருந்நார்கள். இரும்பு கற்கள். வேற்று கிரகத்தின் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாய் கிடைத்த ஃபாசில்கள் வைத்திருந்தார்கள். எரிமலைகளை பற்றி, பூமியை பற்றி என்று பல தகவல்கள். இப்படியே பார்த்தால் இந்த அருங்காட்சியகத்தை பார்த்து முடிக்க ஒரு வாரத்திற்கும் மேல் ஆகும். அதனால் நமக்கு எந்த இடம் பார்க்க ஆசை இருக்கிறதோ அதை பார்த்துவிட்டு கிளம்புவது என்று முடிவுக்கு வந்தோம். அதன் படி விளங்குகள், பறவைகளின் தோலில் பஞ்சிட்டு அடைத்து வைத்திருந்தார்கள், அதன் வழியே பார்த்து கொன்டே நகர்ந்தோம். சமுத்திர உலகம் எனும் இடத்தில் கடலுக்குள் இருக்கும் உயிரினங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். அமெரிக்க தாவரங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். அதில் அமெரிக்காவில் இருக்கும் 2000 வருடங்களுக்கு முன்னிருந்தே இன்றும் உயிருடன் இருக்கும் சிக்காயோ மரத்தின் குறுக்கு வெட்டு தோற்றதின் மாதிரியை வைத்திருந்தார்கள். 20 அடி விட்டம் உள்ள வட்டமாக தோன்றியது.

மனித பரினாம வளர்ச்சியை குறித்து ஒரு பகுதி ஒதுக்க பட்டிருந்தது. ஆதி மனிதனின் எலும்பு கூடுகள். அவன் உடற் கூறு விவரங்கள். அவனின் தொழில் நுட்பம் மற்றும் அவனிடம் எப்படி மொழி வளர்ந்து வந்தது என்பதை காட்சி படுத்தி விவரித்திருந்தார்கள்.ஒரு பகுதியில் ஆசிய மக்களை பற்றிய ஒரு பகுதி இருந்தது. ரஷ்ய, சீன, திபத்திய, இந்திய, ஜாப்பானிய நாட்டு மக்களின் கலச்சாரங்கள், அவர்களின் இசை, மதம், முந்தய தொழில்நுட்பம் என பல பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். மதத்தின் வகையில் இந்தியா ஆசியாவிற்கே பெரிய பங்காற்றி இருக்கிறது. புத்தரும், இந்து தெய்வங்களும் பல நாடுகளில் வழிபட பட்டிருக்கிறது.

இன்று நியூ யார்க் சுற்றுலாவின் கடைசி நாள், அதனால் பார்க்கவிட்டு போன இடங்கள் இன்னும் நிரைய இருந்தது. அதனால் ஒரு இரண்டு மணி நேரம் அந்த அருங்காட்சியகத்தில் செலவிட்டு விட்டு வெளியேறினோம். அதற்கு பின் புறம் நியூ யார்க் ஹிஸ்டார்க்கள் சொசைட்டி இருந்தது. அங்கு சென்றோம். அதில் அமெரிக்க புரட்சி போரில் சம்பத்தபட்ட பல பொருட்கள் வைத்திருந்தார்கள். அமெரிக்க சிவில் வாரின் போது பயன் படுத்தப்பட்ட காட்டன் கில்ட் போர்வைகளை பல வைத்திருந்தார்கள். அந்த போர்வைகளில் தேசப்பக்தி உருவகங்களும், தேச கொடியும் வரையப்படிருந்தது. அது மக்களையும் போரில் இருக்கும் ரானுவ வீர்ர்களையும் இனைக்கும் ஒரு பொருளாக இருந்திருக்கிறது. 

1930களில் நியூ யார்க்கில் எடுக்கப்பட்ட புகைபடங்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள். மேல் தளத்தில் யாரோ ஒரு ஓவியரின் ஓவியங்களை வைத்திருந்தார்கள். அவர் பறவைகளை மட்டுமே வரைந்திருந்தார். அதற்கு மேல் அங்கு வரலாற்று காட்சியகங்கள் எதுவும் இல்லை. அங்கிருந்நு வெளியேரினோம்.

நியூ யார்க் கடலோரத்தில் பல தீவுகளாக இருப்பதால் அதை நீரில் சுற்றி காட்ட பல படகு சவாரிகள் இருக்கிறது. அதனால் படகு சவாரி போவதாக முடிவு செய்து 42வது வீதியில் இருக்கும் படகு துறைக்கு சென்றோம். அந்த வீதியில் எல்லாம் குடியிருப்பு கட்டிடங்கள் பல்லடுக்கு மாடிகளாய் இருந்தது. படகு துறைக்கு செல்லும் போது 5 மணியாகிவிட்டது. கடைசியில் ஒரே ஒரு அதி வேக படகு சவாரி இருந்தது. அதில் சென்றோம். தன்னிரை கிழித்து கொன்டு சென்றது. 4000 குதிரை வேகம் என்று சொன்னார்கள், ஆனால் அவ்வளவு வேகமாக செல்வதாக தெரியவில்லை. நியூ யார்க் கரை முழுக்க படகு துறைகள் இருந்தது. அரை மணி நேர சவாரி முடிந்து திரும்பினோம்.

அங்கிருந்து சப் வே ரயில் மூலமாக ப்ருக்ளின் பாலத்திற்கு சென்றோம். இதுவும் நியூ யார்க் நகரின் ஒரு அடையாள சின்னம். நான்கு நாட்களாய் நியூ யார்க்கில் சுற்றியும் நியூ யார்க்கின் மன்ஹாட்டன் பகுதியை விட்டு இப்போது தான் வேறு பகுதிக்கு வருகிறோம். ஏனெனில் மன்ஹாட்டன் பகுதியில் சுற்றலா தளங்கள் அதிகம், மற்றும் மன்ஹாட்டன் பகுதி வளர்ந்த அளவிற்கு பிற பகுதிகள் வளரவில்லை என்று தான் நினைக்கிறேன். சப் வே ரயிலில் ப்ரூக்ளின் பாலம் அருகே இறங்கி பாலத்திற்கு நடந்தோம் சூரியன் மறைய துவங்கி இருந்தது. பாலத்தின் மேல் மக்கள் பலர் நடந்து கொன்டிருந்தனர். சைக்கிள்களில் பலர் சென்று கொன்டுருந்தனர். பாலத்தில் இரு தளங்கள், கீழ் தளத்தில் கார்கள் ஓடி கொன்டு இருந்தது, மேல் தளத்தில் பாதசாரிகளும், சைக்கிளும்.

ப்ரூக்ளின் பாலம்
பெரிய பாலம். 1883ல் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மாபெரும் தூன்களின் மேல் பாலம் செல்கிறது. மன்ஹாட்டனையும், ப்ரூக்ளினையும் இனைக்கிறது. பாலத்தை பல இரும்பு கம்பிகளால் தூன்களில் பினைக்கபட்டிருந்தது. தூன்களில் இருந்து விரியும் விலா எழுப்புகள் போல் இருந்தது அந்த கம்பிகள். பாலத்தின் உள்ளிருந்து பார்க்கும் போது ஏதோ பெரிய வலையில் அடைக்கப்பட்டது போலிருந்தது.  அது கட்டப்பட்ட காலத்திற்கு இது பெரும் சாதனை. இப்படிப்பட்ட செயல்களை செய்து காட்டுவது உலக அளவில் அந்நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது. பாலங்களின் விளிம்பு தடுப்பிகள் இரும்புகளால் ஆனது. அதில் சுற்றுலா வருபவர்கள் அவர்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு சென்றுருந்தார்கள். பாலத்தில் சில இடங்களில் பூட்டை பூட்டி, அந்த பூட்டில் அவர்களின் பெயர்களை எழுதி இருந்தார்கள். ஜோடிகளின் பெயர்களாக தானு இருந்தது. அதற்கு பெயர் காதல் பூட்டு - love lock. நாங்கள் பூட்டு எடுத்து செல்லவில்லை. ப்ருக்ளினில் இருந்து மன்ஹாட்டன் நோக்கி நடக்கும் போது, மன் ஹாட்டன் நகரின் கட்டட வரிசைகள் அழகாக தெரிந்தது. பாலத்தின் கீழு படகுகள் சென்று கொன்டிருந்தது. அனைவரும் புகைபடங்கள் எடுத்து கொன்டனர். விபரிதமாக ஒரு வெள்ளை இளைஞன் பாலத்தின் விளிம்புகளில் ஏறி புகைபடம் எடுத்த கொன்டிருந்தான். பாலத்தை நடந்தே கடந்து மன்ஹாட்டன் வந்தோம். பார்க்க இருந்த கடைசி இடம் எம்பயர் ஸ்டேட் கட்டிடம். அங்கு சென்றோம்.


காதல் பூட்டு

இரவு 9;30 ஆகி இருந்தது. ரயிலில் இருந்து இறங்கி உணவகம் தேடி நடந்து சென்றோம். இரவு நேரங்களில் நியூ யார்க்கின் வீதிகள் குப்பை பைகளாள் நிரம்பி இருக்கிறது. ஒவ்வொரு கடையும் மூடும் நேரத்தில் குப்பைகளை எடுத்து வீதியில் வைத்து கடையை சுத்தம் செய்கிறார்கள். வீதிகளில் நீர் வழிந்தோட குப்பைகளுடன் இருந்ந்து. எம்பயர் ஸ்டேட் அருகே ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். எம்பயர் ஸ்டேட்டை சுற்றி இருக்கும் வீதிகள் சுத்தமாக இருந்தது. சாப்பிட்டு வெளிவந்தால் பெரிய வரிசை நின்று கொன்டிருந்தது. மேல சென்று பார்க்க இரண்டு மணி நேரமாகும் என்றார்கள். அதை தவிர்க்க விரைவு டிக்கட்டுகளும் விற்று கொன்டிருந்தனர்.

எம்பயர் ஸ்டேட் பில்டிங் 103 தளங்களுடன் அமேரிக்காவின் நான்காவது உயரமான கட்டிடம், உலக அளவில் 23 வது உயரமான கட்டிடம். 1931ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடம் கட்டப்பட்ட வருடத்தில் இருந்து 40 ஆண்டுகள் உலகின் உயரமான கட்டிடமாக இருந்திருக்கிறது. நியூ யார்க்கின் உயரமான கட்டிடங்களுக்கு அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் இருக்கிறது 19ம் நூற்றான்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றான்டின் தொடக்கத்திலும் அமேரிக்காவின் அசாதாரன வளர்ச்சியை இந்த கட்டிடங்கள் குறிக்கிறது. அந்த காலங்களில் இந்த கட்டிடங்களின் தலை சுற்ற வைக்கும் உயரத்தில் தொழிலாளிகள் (Iron workers) எப்படி அநாயாசமாக வேலை செய்தார்கள் என்பது ஆச்சரியத்துக்குரியது.
இரும்பு தொழிலாளிகள்

திருப்பதி தேவஸ்தான வரிசை போல் வளைந்து வளைந்து சென்றது வரிசை. கட்டிடத்தின் உயரமான தளத்திற்கு கூட்டி சென்று அங்கிருந்து நகரத்தை பார்கலாம். அவ்வளவு தான் விஷயம். நேற்றும் இங்கு வந்தோம் ஆனால் மேகத்தினால் காட்சி சுத்தமாக தெரியாது எள்றார்கள். இன்று தெளிவான வானம், இரவு வார இறுதி அதனால் தான் பெரும் கூட்டம். வரிசையில் கால் கடுக்க இரண்டு மணி நேரம் நின்றோம். எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் மின் சக்தியை சேமிக்க எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் என்று எழுதிப்போட்டிருந்தார்கள். கட்டிடம் கட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைபடங்கை வைத்திருந்தார்கள். இந்த கட்டிடத்தின் ஒவுவொரு தளமுமு உயரமாகவே இருந்தது. இப்போது கட்டப்படும் பல்லடுக்கு கட்டிடங்களில் தளங்களின் உயரத்தை குறைத்த கட்டுகிறார்கள் போலும்.

87வது மாடியில் இருந்து நகரத்தை பார்த்தோம். நான்கு திசைகளில் இருந்து பார்த்தோம். விமானத்தில் இருந்து பார்ப்பது போல் இருந்தது. நகரத்தின் மேல் மின் மினிகள் போர்வையாக போர்த்த பட்டிருந்தது போல் இருந்தது. நிறைய கட்டிடங்களில் தேவை இல்லாமல் விளக்கு எரிந்து கொன்டிருக்கிறது என்று தோன்றியது.  பல கட்டிடங்களின் சிகரங்களில் சிவப்பு விளக்கும் அதன மேல் நீல விளக்கும் எரிந்யு கொன்டிருந்தது. அமெரிக்க கொடியின் நிறத்தை குறிக்கிறது என்று நினைக்கிறேன். மன் ஹாட்டனை தவிர நியூ யார்க்கின் மற்ற பகுதிகளில் உயர்ந்த கட்டிடங்கள் மிக குறைவாகவே தென்ப்பட்டது.

நியூ யார்க்கில் இன்னும் ரிக் ஷாக்கள் ஓட்டுகிறார்கள். எம்பயர் ஸ்டேட்டில் இருந்த வெளிவந்ததும். ரிக்ஷா நின்றது அதில் ஏரி டைம் ஸ்க்யர் சென்றோம். 1 நிமிடத்திற்கும் 4 டாலர் என்று 9 நிமிடத்திற்கு பனம் கேட்டான் ரிக்ஷாகாரன், அது மிகவும் அதிகம் காரில் வந்தாலே 10 டாலருக்கு வந்திருப்போம் என்று பேரம் பேசி குறைத்தேன். நாளைக்கு ஊருக்கு கிளம்புவதால் நள்ளிரவில் நகரத்தை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று தான் அங்கு வந்தோம். அந்த நேரத்திலும் டைம் ஸ்கயரில் நல்ல கூட்டம். விளம்பரங்கள் ஓடி கொன்டே இருந்தது. ஒரு ஒன்றரை மணி நேரம் அங்கு உட்கார்ந்திருந்து விட்டு இரவு 2;30 மணி அளவில் விடுதிக்கு திரும்பினோம்.

மே 26, 11 மணி அளவில் காரில் ஊருக்கு கிளம்பினோம். நியூ ஜெரிஸியில் காருக்கு பெட்ரோல் போட்டோம். அமெரிக்காவில் நாம் தான் பெட்ரோல் பங்கில் பம்புகளை இயக்க வேண்டும் ஆனால் நியூ ஜெரிஸியில் இந்தியாவை போல் பெட்ரோல் போட ஊழியர்கள் இருக்கிறார்கள். மொத்தம் 10;30 மணி நேரம் காரை ஓட்ட வேண்டும். நல்ல வெயிலுடன் ஓட்டுவதற்கு இதமாக இருந்தது.வேக அளவை மீராமல், 2 மணி நேரத்திற்கு ஓரிடத்தில் நிறுத்தி ஓட்டி வந்தேன். திரும்பும் போது இயற்கை காட்சிகள் வரும் போது இரிந்தது போல் சிறப்பாக இல்லை. நிறைய பேர் வேக வரம்பை மீறியதால் காவலர்களால் பிடிக்கப்பட்டனர். இந்த முறை டோல் சாலைகள் வழியாக தான் வந்தேன். மொத்தம் 11 டாலர் சுங்கம் கட்டவேண்டி இருந்தது. இரவு 11;30 அளவில் வீட்டுக்கு வந்தோம். இன்னும் புத்துனர்ச்சி இருந்து கொன்டிருந்தது.

Monday, June 2, 2014

இந்தியாவின் மாபெரும் வேலி

ராய் மாக்ஸெம் - Roy moxham எழுதிய 'தீ க்ரேட் ஹெட்ஜ் ஆஃப் இந்தியா' இந்தியாவின் மாபெரும் வேலி என்ற புத்தகத்தை சில மாதங்களுக்கு முன் வாசித்து முடித்தேன். ராய் மாக்ஸாம் ஒரு பிரித்தானியர். நூலகத்தில் வேலை செய்யும் அவர், ஒரு பழைய புத்தக கடைக்கு செல்கிறார். அங்கு பழைய பிரிட்டிஷ் இந்தியா அதிகாரி ஒருவர் எழுதிய புத்தகத்தை பார்க்கிறார். ஒரு நூற்றான்டுகளுக்கு முன் தனது இந்திய வேலை அனுபவத்தை பற்றி அந்த அதிகாரி அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அதில் ஒரு விஷயம் ராயிற்கு ஆச்சரியமும் ஆர்வமும் அளிக்கிறது. அந்த புத்தகத்தை வாங்கி வந்து மேலும் படிக்கிறார்.


அதில் இந்தியாவை காஷ்மீரில் இருந்து ஒரிசா வரைக்கும் சரி பாதியாக  பிரிக்கும் உயிர் வேலியை பற்றிய குறிப்பு வருகிறது. அப்படிபட்ட விஷயமே தான் இதுவரை கேள்விபட்டதில்லையே, அப்படி ஒரு வேலி இருக்குமாயின் உலகின் மாபெரும் வேலி அதுவாகவே அமையுமே என அதை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக பிரிட்டிஷ் நூலகங்களில் பல புத்தகங்களையும், கணக்கு வழக்குகளையும் தேடுகிறார். அவருக்கு அந்த வேலியை பற்றி எந்த தகவலும் கிடைப்பதில்லை. விடாமல் தேடுகிறார், கடைசியில் 1870க்கு முன்னால் எழுதப்பட்ட புத்தகம்  ஒன்றில் அதை பற்றிய குறிப்புகளை கண்டுப்பிடிக்கிறார்.

அந்த மாபெரும் வேலி, உப்பு வரியினால் உப்பு கடத்தபடுவதை தடுப்பதற்காக போடப்பட்ட உயிர் வேலி. ஆங்காங்கே உதிரி பாகங்களாய் காய்ந்த முள்ளாள் உருவான வேலி, ஒரு காலத்தில் ஆக்டேவியன் ஹ்யும் என்பவரின் யோசனையின் பேரில் முள் செடிகளாள் பல அடி உயரமான மாபெரும் உயிர் வேலியாய் இந்தியாவை இரண்டாக பிரிக்கிறது. இந்த வேலியை பற்றிய விஷயங்களை கடும் உழைப்பின் மூலம் சேகர்க்கிறார் ராய் மாக்ஸெம். இந்ந வேலி இந்தியா கிழக்கிந்திய கம்பனி ஆட்சியில் இருந்து நேரடி பிரித்தானிய ஆட்சிக்கு வந்த பின் விலக்கப்பட்டுவிட்டது. அதனால் அதிக ஆவனங்களிலும், மேப்களிளும் அந்த வேலியை பற்றிய தகவல் இல்லை. அந்த வேலி இருக்கும் போது உருவாக்கப்பட்ட ஆவனங்களிலும், வரைபடத்திலும் தான் அந்த வேலியின் இருந்த வழியும், அதன் தகவல்களும் கிடைக்கிறது. சேர்த்த அந்த தகவல்களுடன் அந்ய வேலியை எப்படியும் கண்டுபிடிப்பது என இந்தியா வருகிறார்.

அவர் சாதாரன நூலக காப்பாளர், இந்த ஆராய்ச்சிக்கு அவர் சொந்த வருவாயிலிருந்து தான் காசு செலவு செய்கிறார். இந்தியாவுக்கு விடுமுறைகளில் வருகிறார். இரண்டாம் ரக ரயில் பெட்டிகளில் பயனக்கிறார். தெரிந்த இந்திய நன்பர்களின் வீடுகளில் தங்குகிறார். உத்திர பிரதேசத்தில் கிராமம், கிராமமாக அந்த வேலியை தேடுகிறார். பல கிராம வாசிகளுடன் அதை பற்றி விசாரிக்கிறார். அதை பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒன்ற்றல்ல இரண்டல்ல, மூன்று முறை அதை தேடி இந்தியாவுக்கு வருகிறார். பழைய ஆவனங்களில் இருந்து அவர் குறித்து கொன்ட வேலியின் பாதையில் எல்லாம் வேலி இருந்தற்கு தடையமே இல்லை. சுதந்திரத்துக்கு பின் இந்தியா வளர்ச்சிக்கும், மாற்றதிற்கும் உள்ளானதால் அந்த வேலி இருந்த இடத்தில் சாலைகளும், வீடுகளும் உருவாகி இருக்கிறது. மேலும் அந்த மூள் செடியின் ஆயுள் அத்தனை வருடம் தாங்காது என்கிறார்கள் சிலர்.

இந்த விஷயத்தை மனதில் போட்டு புரட்டி கொன்டுருக்கிறார். நண்பர்களால் வித்தியானமாக பார்க்க படுகிறார். அவரால் விட்டு விட முடியவில்லை. மூன்றாம் முறை கடைசி முறை என இந்திய வருகிறார். இந்த முறை கிடைக்கவில்லை என்றால தேடலை விட்டு விடுவது என்று முடிவெடுக்கிறார். மூன்றும் முறையும் தன் நன்பரின் உறவுகார பையன் ஒருவன் அவருக்கு உதவிக்கு அவருடன வருகிறான். இந்த முறை ஒரு ஜீ.பி.ஸ் கருவியையும் உபயோகிக்கிறார். ஆபத்து நிறைந்த சம்பல் பகுதியின் கிராமங்களில் சென்று தேடுகிறார். கடைசியாக அவர் ஒரு கிராமத்தின் அருகில் அந்த வேலியின் உதிரி பாகங்களை அந்த கிராம வாசியின் உதவியுடன் கண்டு பிடிக்கிறார்.

உப்புக்கு வரியா? எதற்காக உப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் லாபம் வருமா? என்றால் வரும் என்பது தான் பதில். இந்தியாவில் அந்த காலகட்டத்தில் ஒரு கிராமத்துக்கு தேவையான உணவு பொருட்கள் எல்லாம் அந்த கிராமத்தாலேயே விளைவிக்கப்படுகிறது. ஆனால் உப்பிற்கு கடலை நம்பி தான் இருக்க வேன்டும். இதற்கு விதி விலக்கு ராஜஸ்தானின் சாம்பார் லேக். அதனால் உப்புக்கு அந்த காலத்தில் அதிக விலையுள்ள ஒரு பொருள்.  இந்தியா போன்ற நாடுகளில் வெப்பம் அதிகம், அதனால் வியர்வையில் உப்பு அதிகமாக வெளியேறுகிறது. அதனால் உப்பு ஒரு அத்தியாவசிய பொருளாகிறது. உப்பிற்கு வரி விதிப்பதன் மூலம் ஒவ்வொரு கைப்பிடி சோற்றிலிருந்தும் வரி வசுலிக்க முடியும். அதே நேரத்தில் உப்பை கடலோரங்களில் முடக்கி வரி வசுலிப்பது மிகவும் சுலபம்.

இந்த வரி வசுலினால் உப்பின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஒரு இந்திய விவசாயின் சம்பளம் அந்த காலத்தில் மிக மிக குறைவு. ஒரு மாதத்திற்கு ஓரிரு ரூபாய் தான். ஆனால் ஒரு மூட்டை உப்பின் விலை மூன்றறை ரூபாய். அதன் படி ஒரு விவசாயி தன் குடும்பத்தின் ஒரு வருட உப்பு செலவிற்கு கிட்டதட்ட அவன் இரண்டு மாத சம்பளத்தை செலவு செய்ய வேண்டும். இது பணம் படைத்தவருக்கு ஒரு கவலையாக இருக்கவில்லை, நில வரி ஏராமல் இருந்த்தால் அவர்களுக்கு மகிழ்ச்சி தான். ஏழைகள் தான் இதில் முற்றாக சுரண்டப்பட்டார்கள்.

அதன் விளைவாக அவர்கள் உணவில் உப்பு சேர்பதை குறைத்து கொன்டார்கள். வியர்வை சிந்தி தினமும் குறிப்பிட்ட அளவு உப்பை வெளியேற்றும் அவர்களுக்கு உப்பு மிக மிக முக்கியம். உப்பை குறைவினால் நோய்களுக்கு ஆளாகிறார்கள். ரத்த அழுத்தம் கூடுகிறது மயக்கம் அடைகிறார்கள். சிலர் மரணத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வியாதியின் தன்மை மருத்துவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அவர்கள் சாதாரன காய்சலுக்கு தரும் சிகச்சையையே இதற்கும் தருகிறார்கள்.


பல்வேறு கோனங்களில் இந்த வேலியை ஆராய்கிறார் ராய். உப்பு வரியால் வெள்ளயர் அடையும் லாபம், அந்த சமயத்தில் பிரிட்டிஷ் அரசு என்ன செய்தது, மக்கள் எப்படி பாதிக்கபட்டார்கள், நோய்களும் அதன் காரனங்களும். எப்படி அந்த வேலி பேனி படி படியாக வளர்க்கப்பட்டது, அந்த வேலி எப்படி மேற்பார்வையிட்டனர் என்று எவ்வளவோ தகவல்கள் தருகிறார். 200 பக்கங்கள் கொன்ட இந்த புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூன்டுவதாய், வெள்ளய ஆட்சியை பற்றிய பல தகவல் தருவதாய் இருக்கிறது. ஒரு பிரிட்டிஷ்காராய் இருந்தும் வெள்ளையர்கள் செய்த சூழ்ச்சியை அம்பலபடுத்தி இருக்கிறார். அவருக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.