Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Saturday, December 26, 2015

முக்தியும் மறுபிறவி எனும் முன்னனுமானமும்

இந்திய மதங்களில் பெரும்பாலும் முக்தி எனும் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த முக்தியை அடையும் வழியாக சில யோக மார்க்கங்கள் வரையறுத்து தரப்பட்டிருக்கிறுது. கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் ஞான யோகம் போன்றவை.  மனிதன் வாழ்வின் துன்பங்களை, பந்தங்களை, பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு இந்த இன்னல்கள் இல்லாத பேரானந்த நிலையில் சென்று அமர்வதே அந்த முக்தி என்பதாகும்.

இந்த முக்தியை அடைவதற்கு வாழ்நாள் முழுதும் அல்லது வாழ்வின் ஒரு பகுதி முழுக்க சாதகம் செய்து அந்த முக்தி நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். இப்படிபட்ட முக்தி என்ற கருத்தை ஏற்று கொள்வதற்கு முன்னணுமானமாக - Presupposition ஒரு கருத்து நம்முள் இருக்கிறது.  மறுபிறவி எனும் கருத்து தான் அது. ஒரு ஆத்மா அல்லது உயிர் முக்தி அடையாத வரையிலும் மறுபிறப்பு எடுத்துகொண்டே இருக்கும் என்ற கருத்து அடிப்படையாக இருப்பதாலயே இந்த முக்தி என்ற நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இந்த மறுபிறவி என்ற கருத்தை நான் மறுத்தால். எனது வாழ்க்கை என்பது சில பத்தாண்டுகள். இந்த காலத்தை நான் ஏன் முக்திக்கு செலவழிக்க வேண்டும்? வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிப்பதற்கே செலவு செய்துவிட்டு சென்றுவிடலாம். அது நல்ல வழியிலான இன்பமாக இருந்தாலும் சரி தீய வழியினாலான இன்பமாக இருந்தாலும் சரி. எனது வாழும் காலத்தில் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அனுபவித்து விட்டு செல்லதானே நான் பார்ப்பேன்.

ஒரு வசதிக்காக சொர்க்கம் நரகம் என்ற கருத்தையும் நிராகரிப்போம் என்றால், பாவம் எது புன்னியம் எது? மறுபிறவியும் இல்லை சொர்க்கம் நரகமும் இல்லை என்ற பின் நமது இந்த வாழ்க்கை மட்டுமே நமக்கானது. ஒவ்வொரு நொடியும் பொன் துளி அல்லவா? புலன் இன்பத்தை அளவோடோ அளவில்லாமலோ அனுபவித்து விட்டு செல்லலாமே? அறிதல் என்பதும் ஒரு புலன் இன்பமே. அதற்காக ஒருவர் அறிகிறார் என்றால் சரி. ஆனால் வீடுபேறுக்காக ஒருவர் அறிகிறார், தொழுகிறார், சாதகங்கள் செய்கிறார் என்பது எப்படி சரியாகும்.

ஆனால் மறுபிறவி என்ற கருத்து நமது இந்திய மதங்களில் ஆழமாக இருப்பதால் தான் முக்தி என்ற நிலை முக்கியமாக இருக்கிறது. அதற்காக நமது நேரத்தை செலவிட்டு செய்யும் சாதகங்கள் பொருள்படுகிறது. ஆனால் இந்த கருத்து மேற்கத்திய மதங்களில் இல்லை. அங்கு சொர்க்க நரகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த கருத்தை வைத்து பாவ புன்னியங்கள் பொருள் படுகிறது. அதனால் அவர்களுக்கு இறைவழிபாடு பொருள்படுகிறது.

தன் வாழ்க்கையையே தன் முக்திக்காக அற்பனித்த ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். ஞான மார்க்கத்தை தனது பாதையாக தேர்ந்தெடுத்தவர். அவரது கருத்துகளுக்கும், முக்திக்கான ஏக்கத்திற்கும் அடிநாதமாக மறுபிறவி சங்கிலி என்னும் முன்னணுமானம் இருப்பதாக தோன்றியது.  முக்தியை தேடுபவர்கள் இந்த முன்னணுமாத்தை உணர்ந்து அதை ஏற்று கொண்டு தேடுவார்களாயின் அது ஏற்றுகொள்ளதக்கது. ஆனால் அப்படி ஒரு முன்னணுமானத்தை அறியாமலேயே வாழ்க்கையின் இலக்கை தேர்ந்தெடுப்பது என்பது சரியாகப்படவில்லை. அதுவும் குறிப்பாக ஞான மார்க்கத்தின் வழியில் செல்பவர்கள் அதை செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்.

----

மேலே நான் எழுதிய அணுகுமுறையில் கொடுக்கல்-வாங்கல் என்ற தோரனை இருக்கிறது. அதில்லாமல் ஒரு உயிரானது தனது போதாமையை உணர்ந்து ஒரு முழுமைக்காக முக்தியை தேர்ந்தெடுக்கிறது என்ற கோணத்திலும் இதை அனுகலாம்.

Tuesday, October 27, 2015

இந்திய மெய்ஞானமும் தர்க்கமும்

இந்து ஞான மரபை அனுகும் போது ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். அது மேலை தத்துவ மரபுக்கும் இந்து மெய்ஞான மரபுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம். மேலை தத்துவ மரபுகள் தர்கத்தை தன் அடிப்படையாக கொண்டது. அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்து ஞான மரபில் அப்படியல்ல.. சில வரிகளை மேற்கொள் காட்டுகிறேன்.

இந்த வரிகளை ஸிம்மர் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்.

Philosophy as the handmaid of empirical research, thought wearing the blinders of the standards of contemporary science, and metaphysics open to rational criticism from every quarter - in short, reason infallible; this is the ideal and requirement of the practical-minded thinker. Whereas the other is simply not convinced by all the plausible searching and discovering...what he wants is a response...to the primary question in his mind.

Something beyond critical reasoning is what he requires; something that someone of adequate mind should have realized intuitively as a Truth(with a capital T) about man's existence and the nature of the cosmos; something to enter the breast and pierce the heart with what Baudelaire called "the steely barb of the infinite". What he requires is a philosophy that will confront and resolve the conflict once performed by religion; and this is a need from which no number of college courses on the validity of inference can emancipate him.
- Page 16, Philosophies of India, Heinrich Zimmer (ஓழுங்குக்காக வரிகளின் வரிசை சற்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது)

தர்க்கத்துக்கு அப்பாற்ப்பட்ட ஞானம். ஒரு குறிப்பிட்ட ஞானிக்கு கிடைத்த ஒரு உள்ளுணர்வு(Intuition) - தரிசனம். அதுவே ஒரு ஒட்டு மொத்தமான பிரபஞ்ச தரிசனமாயும் அடிப்படையாயும் அமையமுடியும். தர்க்கத்தால் நிராகரிக்க முடியாத ஒரு தத்துவத்தை தேடும் ஒருவனுக்கல்ல, நெஞ்சை கிழித்து உள்ளிறங்கும் தரிசனத்தை தேடும் ஒருவனுக்கே இந்திய ஞானத்தில் விடை கிடைக்கும்.

//இந்து தத்துவ மரபு எனும்போது இந்து மரபில் உள்ள பல்வேறு சிந்தனைப்போக்குகளை மட்டுமே கூறமுடியும். ஆனால் தரிசனம் என்பது சிந்தனையினால் உருவாக்கப்பட்டது அல்ல. தர்க்கபூர்வமாக முழுமையாக விளக்கிவிடக் கூடியதும் அல்ல. தர்க்கமானது ஓர் எல்லை வரை மட்டுமே போகமுடியும். தரிசனங்களில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் அதிகம்.

உதாரணமாக ‘பிரபஞ்சமே ஒரு சக்தி பிரவாகம்’ என்ற ஆதி தரிசனம், தர்க்கபூர்வமாக ஒருவர் அடையப் பெற்ற ஒன்றாக இருக்க இயலுமா என்ன? தன்னைச் சுற்றி உள்ள ஒவ்வொரு பொருளையும்  எடுத்து பகுப்பாய்வு செய்து வந்த இறுதி முடிவா இது? இல்லை. அது ஒரு மனத்திறப்பின் கணத்தில் அடைந்த ஒட்டு மொத்தமான அகப்பார்வை மட்டுமே.//
பக்கம் 45, "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்", ஜெயமோகன்
----
இந்திய மெய்ஞானம் என்பது அறிவை தொகுத்து வைக்கும் ஒரு செயல்பாடு மட்டுமல்ல.  அது ஒரு மனிதனின் அக மற்றும் தரிசன மாற்றத்தையே  பிரதான நோக்கமாக கொண்டிருக்கிறது.

"They(Hindu Philosophers) study also the visible traits of phenomenal existence, criticizing the data of external experience and drawing deductions with respect to the supporting principles. India, that is to say, has had, and still has its own disciplines of psychology, ethics, physics, and metaphysical theory. But the primary concern-in striking contrast to the interests of the modern philosophers of the West-has always been, not information, but transformation: a radicalchanging of man's nature and, therewith, a renovation of his understanding both of the outer world and of his own existence; a transformation as complete as possible, such as will amount when successful to a total conversion or rebirth"
- Page 4, Philosophies of India, Heinrich Zimmer

//தரிசனங்கள் என்பவை தத்துவ நிலைபாடுகளும் கூடத்தான். ஆகவே மெய்ஞான மரபு என்பதும் தத்துவ மரபு கூடத்தான். ஆனால் தத்துவத்திற்கு அப்பால் கற்பனையும் உள்ளுணர்வும் செல்லும் தூரம் வரை தரிசனங்கள் நீண்டு செல்கின்றன. மெய்ஞான மரபும் அப்படி நீண்டு செல்கிறது.

ஒரே வரியில் இப்படி கூறலாம். அறிவு என்பதற்கு ஞானம் என்பதற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தான்அது.//
பக்கம் 46 "இந்து ஞானமரபில்..."
----
தர்ககத்தையும் மீறி ஒரு அறிதல் நிகழ்கிறது என்றால் அது தர்ககத்தால் விளக்கபட முடியாது. அதே தரிசனத்தை நானும் அடைய வேண்டும். இதற்கான மொழி வேறு. இலக்கியத்தை இதற்கான மொழி என்று சொல்லலாமென நினைக்கிறேன். அதனால் தான் நம் மரபில் ஏராளமான கதைகளும் புராணங்களும் இருக்கிறது.

இங்கு தான் குரு நமக்கு கை கொடுப்பார்.குருவிடம் செல்லும் ஒரு மாணவனுக்கான முதல் விதி அவன் அது வரை அறிந்ததை எல்லாம் எடுத்து ஓரத்தில் வைத்து விட்டு குருவிடம் சரணடைவது. அதில் தர்ககமும் அடங்கும்.

இந்திய தரிசனங்களை தத்துவம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. தத்துவத்தை விட ஆழமானவை அவை. அதனால் தான் மெய்ஞானம் என்ற வார்த்தை உபயோகிக்கபடுகிறது. அது மெய்யியலில் இருந்து மாறுப்பட்டது என்று நினைக்கிறேன். தத்துவம் என்பது முழுக்க முழுக்க தர்க்கத்தை அடிப்படையாக கொண்டது. தத்துவத்தை தர்க்கமே வழிநடத்தி செல்கிறது. தர்க்கம் என்ற தண்டவாளத்தின் மேல் தத்துவம் ரயில் போல செல்கிறது.

கற்பனையாலோ உள்ளுணர்வாலோ கண்டுபிடித்த விஷயத்தை தர்க்கம் மூலம் விளக்கமுடிகிறது. தர்க்கத்தின் மூலம் விளக்கி அது நீருபனம் செய்யப்பட்ட தத்துவமாக ஆகிவிடுகிறது. இன்னொரு தர்க்க கட்டுமானத்தை கொண்டு நீருபிக்கப்பட்ட தத்துவம் விமர்சிக்கப்படுகிறது. ஒரு தத்துவத்தில் விமர்சித்து நிராகரிக்கப்பட்ட கருத்துகளை களைந்து ஏற்புடைய கருத்துகளை கொண்டு வேறு ஒரு தத்துவம் வளரக்கூடும்.

நமது இந்திய மெய்ஞானத்தில் தரிசனத்துக்கு பிரதான இடம் கொடுக்கப்பட்டு அதன் பின் அந்த தரிசனத்துக்கு தர்க்க ரீதியான விளக்கம் கொடுக்கப்பட்டு தத்துவமாக்கப்படுகிறது.
----

இந்திய ஞானத்தை மரபை பின்பற்றும் ஒருவர் முதலில் தெரிந்து கொள்ளவேண்டிய பாடமிது.

Monday, October 19, 2015

காந்தியும் இந்திய ஆன்மீகமும்

நவகாந்தியத்தை பற்றி மகரந்த் பரஞ்சபெயின் கட்டுரையை படித்தேன். அதன் தமிழ் மொழியாக்கம் இங்கு

காந்தியை இந்திய மெய்ஞான மரபின் ஒரு பகுதியாக வைத்து விளக்குமிடம் பிடித்திருந்தது. காந்தி அந்த மரபின் அடிப்படைகளுக்கு எப்படி தன் வழியில் விளக்கம் கொடுத்தார் அதிலிருந்து எப்படி ஒரு வாழ்வியல் வழிமுறையை வரையறுத்தார் என்று சிறப்பாக விளக்கியிருக்கிறார். நவ இந்தியர்கள் காந்தியை பின்பற்றுபவர்களாக, காந்தியவாதிகளாக இருக்க முயற்சிக்காமல் காந்தியை-போல் இருக்க முயற்சிக்க வேண்டும் என்கிறார்.

காந்தியை-போல் எப்படி இருப்பது? காந்தி எங்கிருந்து தனது வழிமுறையை எடுத்து கொண்டார்? இந்திய மெய்ஞான மரபிலிருந்து. அதற்கே திரும்ப செல்வோம். அந்த மெய்ஞானத்தின் அடிப்படைகளை கொண்டு நமது காலகட்டத்திற்கும் நமது உண்மை தேடலுக்கும் ஏற்றார் போல் ஒரு வாழ்க்கை முறையை வரையறுப்போம். மேலும் முக்கியமாக அந்த வாழ்க்கை முறையை நமது வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும், அனைத்து சமயங்களிலும் தொடர்ந்து பயன்படுத்துவோம்.

காந்தியை-போல் நாம் வாழ வேண்டுமென்றால் இரு முக்கியமான விஷயங்களை நாம் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
1. அகங்காரம்
2. புலன் இன்பம்

அகங்காரத்தை சிறிதாக்கி நமக்குள் இருக்கும்  ஆன்மாவிற்கு - spirit முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். புலன் இண்பமே வாழ்க்கை என்றில்லாமல் ஆன்ம இண்பத்தை மையபடுத்தவேண்டும். இந்த இரண்டையுமே நான் காந்தி தனது சிந்தனையின் செயல்பாட்டின் முக்கியமான அடிப்படையாக கொண்டார் என்று கருதுகிறேன். தாக்குபிடிக்கும் பொருளாதாரம், சுழலியல் என்று பல்வேறு தளங்களில் அவரின் சிந்தனை-செயல்முறைகளை போட்டு பார்த்தாலும் அனைத்துக்கும் வேர் இந்த ஆதார புள்ளிகளிலிருக்கிறது.   தனது ஆன்மாவின் குரலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.. தன் புலனடக்கம், உணவு பழக்கவழக்கங்கள் வழியாக அந்த ஆன்மாவை சுத்திகரிக்கிறார்.

அகங்கார மற்றும் புலன் இன்ப கட்டுபாடு என்ற இரு மாற்றங்களையும் நம்மில் நிகழ்த்த தொடங்கினால், சுயநலம்  என்பதற்கான அவசியம் குறைந்து போகிறது. சமூகத்தின் மீது அக்கரையும். உலகத்தின் மீது பொருப்புணர்வு தோன்றும். அங்கு ஆரம்பிக்கிறது நாம் செய்ய வேண்டிய சேவை. சுயநலமில்லாத, அறத்தின் அடிப்படையில், அஹிம்சையை வழிமுறையாக கொண்டு இந்த உலகத்திற்கு செய்ய வேண்டிய சேவை.

இங்கு தான் காந்தி மற்ற இந்திய மெய்ஞானிகளிடமிருந்து வெறுபடுகிறார். ஆன்ம தேடலால் முற்றிலும் தங்களுக்குள் ஆழ்ந்துவிடும் மற்ற ஆன்மீகவாதிகள் போலில்லாமல் ஆன்மாவையும் சமூகத்தையும் இணைத்து பார்க்கும் பார்வை கொண்டவர் காந்தி.

அகங்காரம், புலன் இன்பத்தை கட்டுபடுத்துதல் போன்ற விழுமியங்கள் எல்லாம் காந்தி மட்டும் முன்வைத்தது அல்ல. நம் பண்பாடே இதை வலியுறுத்துகிறது. அதனால் தான் புலன் இன்பத்தை சிற்றின்பம் என்கிறோம். அந்த கட்டுரையில் அவர் குறிப்பிடுவது போல் புருஷார்த்தம் என்பதை நம் மரபு வகுத்தளிக்கிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்பதை வாழ்க்கையின் பகுதிகளாக வரையறை செய்கிறது.

இதில் சில மகான்கள் நேரடியாக வீடுபேறு எனும் கடைசி நிலைக்கு சென்று விடுகிறார்கள். சிலர் மற்ற மூன்றையும் அனுபவித்து விட்டு கடைசியில் அங்கு வந்து சேருவார்கள். வராமல் செல்பவர்களும் உண்டு. காந்தி அந்த கடைசி நிலையில் இருந்து நம்மிடம் உரையாடுகிறார். அந்த நிலைக்கு நாம் செல்லவேண்டும். இல்லை என்றால் பிற மூன்று தளத்திலிருந்து அங்கு செல்ல முயற்சி செய்யவேண்டும்.

இன்பம் என்பதை விலக்கி வைப்பதாக நம் மரபு இருக்கவில்லை. அதை வாழ்வின் ஒரு பகுதியாக சொல்லி காம சுத்திரம் எழுதி வைத்தது தான் நம் மரபு. அதன்படி இன்பத்தை முற்றும் துறந்து செல்லவேண்டும் என்பது அனைவருக்கும் கட்டாயமில்லை. அளவான இன்பம் வேண்டுவோர் அடைந்து கொள்ளலாம். அந்த இன்பத்தில் கள்ளும் ஒரு பகுதியே.

காந்தியிடம் இருக்கும் அந்த விஷேச கலவை குணம் ஆன்ம விடுதலை + உலக நலம் என்பதில் இரண்டாம் பகுதியான உலக நலம் என்னும் கூறு காந்தியை-போல் வாழ நினைப்பவரின் அனைத்து வாழ்க்கை தளத்திலும் செயல்களிலும் தாக்கம் செலுத்தும். அதன்படி நாம் கள் குடித்தாலும் அந்த குடிக்கும் முறையும் அமைப்பும் உலக நலம் கருதுவதாக கட்டுப்பாடு உடையதாக இருக்கவேண்டும். நம் இண்பத்துக்காக எதையும் அழிப்பதாக இருக்ககூடாது. நமது இலக்கு காந்தி நின்று பேசும் அந்த தளத்தை சென்றடைவது என்ற உணர்வு எப்போதும் நமக்கிருக்கவேண்டும்.

கிழக்கு x மேற்கு மெய்யியல் - சில கேள்வி பதில்கள்

நண்பர்களுடன் நடந்த விவாதத்தில் கீழ்கண்டவை விவாதிக்கப்பட்டது.


மனிதனின் அறிவு எப்படி பெறப்படுகிறது?

நவீன அறிவியலிலும் மெய்யியலிலும் Tabula rasa என்றொரு கருத்து உண்டு. அது எழுதப்படாத பலகை என்று பொருள் தரும் லத்தின் வார்த்தை. இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் குழந்தைகளின் உள்ளம் அறிவு என்பது எழுதப்படாத கரும்பலகை போல. அவை வளர்கின்ற சூழலுக்கு ஏற்றார் போல் வடிவமைக்க பெறுகிறார்கள் என்று வாதிடுகிறது.

இதன் எதிர் தரப்பு குழந்தையின் பிறப்பதற்கு முன்பே அதன் குணாதிசயங்கள் தனிதன்மைகள் வரையறுக்கப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறது.

இதிரண்டுக்கும் அப்பால் மனிதர்கள் தங்களுக்குள் கூட்டு நனவிலி - collective unconscious என்பதை கொண்டிருக்கிறார்கள். அது மனித பரினாமத்தில் அறுபடாமல் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தொடர் சங்கிலியாக வந்து கொண்டே இருக்கிறது. இந்த collective unconscious என்பது உள்ளுணர்வுகளாலும், ஆழ்படிமங்களாலும் ஆனது. ஒரு உயிரினம் அதன் சூழலிருந்து பிரித்து வளர்க்கப்பட்டாலும் அது தன் இயற்கையான குணங்களை வெளிப்படுத்துவது இதனாலேயே.

கொற்றவை நாவலில் இதை கூறும் வகையில் ஓரிடம் வரும். கடலால் தமிழ் மக்களின் இடம் அழிந்து மிகச்சிலரே உயிர்தப்பி மேலே வந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களின் மொழி வளத்தை முற்றிலும் இழந்து வெறும் நடைமுறை பயன்பாட்டுக்கு மட்டும் என்ற அளவில் சுருங்கி விடும். அந்த சமயத்தில் ஒரு சிறுமிக்கு சன்னதம் வந்து பழைய செம்மொழி அவள் வாய்வழியாக சொற்களாக வந்து கொட்டும்.

----
கிழக்கு மதங்கள் உடலை மீறி நான் என்ற ஒரு இருப்பை அடையாளம் காட்டுகிறதே? மேற்கத்திய மெய்யியலின் நிலை என்ன?

மேற்கத்திய அறிதல் முறைகளிலும் உடலை மட்டுமே நாம் என்று சொல்லும் போக்கு இருக்கவில்லை. நவீன மெய்யியலின் தொடக்க புள்ளியான Descarteவே அந்த வித்தியாசத்தை உணர்த்துகிறார். Substance என்ற கருத்தை முன்வைக்கிறார். மெய்பொருள் என்று மொழி பெயர்க்கலாம். எது எந்த மாற்றத்திற்கும் ஆளாகாதோ, ஒரு பொருளின் சாராம்சமாக எது விளங்குகிறதோ அதுவே substance என்று கூறுகிறார்.  மனிதனின் சாரம்சம் அவனது சிந்தனை என்கிறார். I think therefore I am என்ற கருத்தை மனிதனின் இருப்புக்கு ஆதாரமாய் சொல்கிறார். அதையே தனது முதல் நிரூபனமாக கொண்டு மற்ற நிரூபனங்களை செய்கிறார். அவரே mind and matter என்ற முக்கியமான பாகுபாட்டை உருவாக்கி தந்தவர். அவரும் அவருக்கு பின்னால் வந்த பிற தத்துவவாதிகளும் Substance என்ற இந்த கருத்திலிருந்து கடவுள் என்ற கருத்திற்கு பல் வேறு வகையில் தொடர்பு கொடுக்கின்றனர்.

----

பேரியற்கையை பரப்பிரம்மம் என்று சொல்லலாமா?

பேரியற்க்கையே பரபிரம்மம் என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. நீங்கள் அத்வைதத்தை சார்ந்து எழுதியிருப்பதாக எடுத்துகொள்கிறேன். இம்மானுவல் காண்ட்டின் கூற்றுப்படி நமது அறிவு என்பது நமது புலன்களால் கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது. நம் புலன்களுக்கு எட்டும் அறிவையே நாம் காண்கிறோம். அது முழுமையான உண்மையல்ல. புலன்களால் நமக்கு வடிக்கட்டி தரப்படும் ஒரு உலகம். அதை அவர் Phenomenon என்கிறார். அப்படி பார்த்தால் இந்த பேரியர்க்கையும் உண்மையல்ல.

இதையே காண்டுக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆதி சங்கரர் தனது மாயாவாதத்தில் முன் வைக்கிறார். இந்த உலகம் என்பது மாயை. பொய்யல்ல, ஒரு மயக்க நிலை. நம் அறியாமையால் உண்மையை  உருமாற்றி நாம் அறிகிறோம் என்கிறார். அதன் படி பேரியற்கையும் மாயையே. இந்த மாயாதிரையை களைந்து பரப்பிரம்மம் எதுவோ அதை தரிசிப்பதே முக்தி.

Sunday, April 19, 2015

ஞான யோகமும் விவாதமும்

அன்புள்ள ஜெ,
ஞான யோகத்தை பின்பற்றுபவர்களுக்கு பிற தரிசனங்கள் உள்ளவர்களுடன் விவாதிப்பது அவசியம் இல்லையா? விவாதிப்பது அறிதலின் ஒரு வழியாக அது சொல்லவில்லையா?
அவசரமான கேள்வி. ஒரு வரி பதில் கூட போதும், இப்போதைக்கு.
நன்றி,
ஹரீஷ்

அன்புள்ள ஹரீஷ்,
ஞானநூல்களை தத்துவத்தை விவாதிப்பது வேறு ஞானத்தை விவாதிப்பது வேறு. ஞானநூல்களை விவாதிக்காமல் கற்கமுடியாது. நூல்களிலிருந்து மேலே சென்று அடையும் ஞானத்தை விவாதிப்பதன் மூலம் நிறுவவோ மறுக்கவோ முடியாது.
தத்துவப்பயிற்சியின் ஆரம்பநிலையில் இருக்கும் ஒருவர் ஒரு ஞானநூல்களை பயிலும்போது விவாதம் இன்றியமையாதது. இது எல்லா குருகுலங்களிலும் உள்ள ஒன்றுதான். இதன் மூலம் பலகோணங்கள் திறக்கின்றன. ஒரு கருத்தை ஐந்துபேர் அமர்ந்து விவாதித்தால் ஐந்துமடங்கு அறிவு அந்தக்கருத்தை ஆராயகுடிகிறது.

ஆனால் இந்த விவாதம் ஏறத்தாழ இணையான அறிவுத்திறனும் இணையான அறிதல் ஆர்வமும் கொண்டவர்கள் நடுவே நிகழவேண்டும். நோக்கம் அறிபடுபொருளை மேலும் கூர்மைப்படுத்துவதாக மட்டுமே இருக்கவேண்டும். ஆகவே உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் ஏதாவது ஒரு தரப்பைச் சார்ந்து நின்று விவாதிப்பது தீங்கிழைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அந்தவிவாதம் புறவயமான விவாதமுறைமையைச் சார்ந்ததாக மட்டுமே நிகழவேண்டும் என்று சொல்லப்படுவது த உணர்ச்சிகரமான விவாதம் நிகழாமலிருக்கும்பொருட்டு மட்டுமே. அதில் அகங்காரம் கலக்கலாகாது. வெற்றிதோல்வியல்ல உண்மை விளங்குவதே முதன்மையாக இருக்கவேண்டும். இல்லையேல் அது வீண்சொற்களாகவே முடியும்.

அந்தக் கல்விமூலம் தத்துவத்தை அறியும் ஒருவர் அதை கற்பனையாலும் உள்ளுணர்வாலும் முன்னெடுத்துச்சென்று தன் அந்தரங்க தரிசனத்தை அடைகிறார். அதையே ஞானம் என்கிறோம். அது கடல்போல, முகில் போல, மழைபோல, நிலத்தடி நீர் போல எங்குமுள்ள நீர். அதை அவர் தன் நிலத்தில் ஊற்றாக அடைகிறார். ஞானம் அவ்வகையில் முழுமையில் பொதுமையும் அறிதலில் அந்தரங்கத்தன்மையும் ஒருங்கே கொண்டதாகும்

அந்த ஞானத்தை அடைந்தவர்களில் குரு என்னும் நிலையை அடைந்தவர் அதை தகுதிகொண்ட மாணவர்களிடம் மட்டும் பகிரலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. குருநாதர்கள் பொதுவாக விவாதிப்பதில்லை.ஆனால் தன் மாணவர்களை வழிநடத்தவும் தன் ஞானத்தை முழுமைசெய்துகொள்ளவும் விவாதிக்கலாம்

அவர்களுக்கும் அப்பால் செல்பவர்கள் உலககுருநாதர்கள். மானுடத்தை நோக்கிப் பேசுபவர்கள். மகாவீரர் போல புத்தர் போல சங்கரர் போல.ஏசு போல. அவர்கள் ஞானத்தை அடைந்தவர்கள் மட்டும் அல்ல. ஞானமேயாக ஆனவர்கள். அதை சாக்‌ஷாத்காரம் என நம் மரபு சொல்கிறது. ஞானத்தை நிகழ்த்தியவர்கள். அவர்களில் விவாதிப்பவர்களும் விவாதிக்காதவர்களும் உண்டு. அவர்களின் வழியை அவர்களே கண்டடைகிறார்கள்

ஜெ

http://www.jeyamohan.in/74235#.VTRXE010z3g